சென்னை, 1640ஆம் ஆண்டு முதல் 1820 வரையிலான காலகட்டத்தில் வர்த்தக நகரம் என்ற நிலையிலிருந்து காலனிய நகரமாக வளர்ச்சியடைந்திருந்தது. இவ்வளர்ச்சிக்கு ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தினரும், லூத்தரன் மதப்பரப்பாளர்களும் பெரும் பங்களிப்புச் செய்தனர்.
ராமசாமி இங்கிலாந்தில் திறமைகளை வெளிப்படுத்தியது, 1814 – 1817
சென்னையில் இருந்த மாயவித்தைக்காரர் ராமசாமியும் மற்றும் இரண்டு பேரும் குழுவாக 1809ஆம் ஆண்டு கொழும்பு அரசு இல்லத்தில் தங்கள் வித்தைகளைக் காட்டினர். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்ததும், கல்கத்தாவிற்குச் சென்றனர். லார்ட் கெய்த் என்ற கப்பலின் தலைவர் பீட்டர் கெம்பெல் இவர்களைச் சந்தித்தார். திடீர் எண்ணத்தினால் அவர் இவர்களை இங்கிலாந்து அழைத்துச் செல்ல விரும்பினார். ஒப்பந்த விதிமுறைகள் யாவும் வகுக்கப்பட்டன. கப்பல் தலைவரின் பெருந்தன்மையான வாய்ப்பால் மாயவித்தைக்காரர்கள் ஒப்புக்கொண்டனர். 1813ஆம் ஆண்டு கிளம்பி, தடைகளையெல்லாம் தாண்டி 1814ஆம் ஆண்டு இங்கிலாந்து வந்து சேர்ந்தனர்.
1813ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்பே இலண்டனில் விளம்பரச் சுவரொட்டிகள் மூலம் இந்திய வித்தைக்காரர்கள் குழு வரவிருப்பதாகப் பரப்புரை செய்யப்பட்டது. வாயின் உள்ளே வாள் விழுங்கப்படும் என்று தலைப்பிடப்பட்டது. இச்சிறு அறிவிப்புகளில், இந்நாட்டில் புதுமையான நிகழ்வை நிச்சயமாக நிகழ்த்திக்காட்டி, ஒவ்வொருவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சரியப்படுத்தும் எனக் கூறப்பட்டிருந்தது.1
வழக்கத்திற்கு மாறான மிகவும் ஆற்றல்வாய்ந்த திறமையைத் தன்னுடைய சாமர்த்தியத்தினால் பரவலாக விளம்பரம் செய்ததின் மூலம், கப்பல்தலைவர் கேம்ப்பெல் புகழடைந்தார். வித்தைக்காரர்களை முதலில் பொதுமக்கள் பார்ப்பதைவிட, இளவரசரிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் காண்பிக்க வேண்டும் என ஏற்பாடு செய்தார். நாட்டு நிர்வாகத்தினரிடம் முன்னமேயே காண்பிப்பதன் மூலம், வேற்று நாட்டுப் பாரம்பரியத்தைத் தெரிவித்தும், மாற்று கேளிக்கை நிகழ்ச்சிகளால் புகழ்பெற்ற திடல்களில் வித்தைக்காரர்களுக்கு மரியாதையும் கிடைத்தன.
இந்தக் குழுவிற்கு, ஒருநாளைக்கு நான்குமுறை நிகழ்ச்சி நடத்த, பால்மால் தெரு, எண் 37 என்ற வசதியான இடத்தை கேம்ப்பெல் குத்தகைக்கு எடுத்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அனுமதிச் சீட்டு மூன்று ஷில்லிங்குகள். சில வாரங்களிலேயே அதிகமான கூட்டத்தை இக்குழு ஈர்த்தது. இவர்கள் வித்தை நடத்தும் இந்த இடம், பிக்காடல்லி என்ற தெருவின் அருகே, காலை முதல் இரவு வரை உயர்குடியினரின், செல்வந்தர்களின் கோச் வண்டிகளால் நெருக்கடியாக இருந்தது. வித்தை நிகழ்ச்சி மூலம் ஒரு நாளுக்கு 150 ஷில்லிங் வருவாய் கிடைக்கும் என்று ஒரு செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது. டைம்ஸ் நாளிதழில், இலண்டனில் உள்ள அனைத்து உயர்தர குடும்பங்களும் இந்த இடத்திற்குச் சென்று வந்திருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டது. வாளை விழுங்குவது போன்ற புதிய வகையான வித்தை, பொதுமக்களைக் கவர்ந்து, அது பெருநகரத்தில் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
1813ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சட்டையரிஸ்ட் என்ற இதழ், வித்தைகளைப் பற்றி விரிவாகச் செய்தி வெளியிட்டது. இதனுடன் நிகழ்ச்சி குறித்த படத்தில், இரண்டு பேரும், ஓர் உதவியாளரும் உயரமான இடத்தில் ஒரே அளவான கால்சட்டை, வெள்ளை சட்டை, தலைப்பாகை அணிந்திருப்பது போன்று இருந்தது. முக்கியமான வித்தைக்காரர் தன் கால் விரலில் வளையத்தைச் சமநிலைப்படுத்திக்கொண்டு சுழற்றிக்கொண்டிருந்தார். மூக்கில் குடை வைத்திருப்பது போலவும் இருந்தார். இரண்டாவது வித்தைக்காரர் ஒரு வாளை விழுங்கிக்கொண்டிருந்தார். அடுத்த உதவியாள், சிறு மேளத்தை அடித்துக்கொண்டிருந்தார். இதுதான், தமிழர்களின் வித்தையை மேற்குலகத்தில் நடத்தியதைப் பற்றிய விரிவான செய்தி அறிக்கையாகும்.
மாயவித்தைக் காட்டும் நிகழ்ச்சியில், கிண்ணம் – பந்துகளை வைத்து தந்திரம் செய்வது ஆரம்பானது. இது ஐரோப்பியச் செப்பிடு வித்தைக்காரர்கள் செய்வதுபோல் இருந்தாலும், தமிழகத்திலிருந்து வந்தவர்கள் நன்கு திறமையாகச் செய்தனர். கிண்ணங்கள் மூலம் செய்யும் வித்தை அனைவரையும் கவர்ந்திழுத்தன. இது பற்றியும் சட்டையிரிஸ்ட் இதழில் எழுதப்படிருந்தது. அடுத்தது பாம்பு, தக்கை மூடி உருண்டையின் இடத்தைப் பிடித்து, அதன் மறைமுக மடிப்புகள், மெல்லிய பாத்திரத்தின் அடியில் இருந்து சுற்றிக்கொண்டது போல் சுழன்றது.
இரண்டாவது வித்தையானது, ஒரு நீளமான நூல் கயிற்றைத் துண்டு துண்டாக அறுத்து மீண்டும் அதை முழுமையான நீளத்திற்குக் கொண்டு வருவதாகும். இதற்கு அடுத்து, மண்ணின் நிறத்தை, இரண்டு விரல்களுக்கு நடுவே மாற்றுவது. பின்னர், காலியான நான்கு பித்தளைப் பந்துகளை ஆரஞ்சுபழ அளவில் மாற்றுவது. இந்த வித்தைகளில் அவர் வெளிப்படுத்தும் திறமை அபாராமானது. காலியான பித்தளைப் பந்துகளைக் கைகளில் ஏந்தி, வித்தைக்காரன் மேலும் கீழும் சுழற்றுவது, இடது வலது பக்கம் சுழற்றுவது, சாய்வாக குறுக்காகச் சுழற்றுவது, தன் கால்களைச் சுற்றி, கைகளுக்குக் கீழ் சுழற்றுவது, தலைக்கு மேல், இடது, வலது பக்கம் விரைவாக, வேகமாகச் சுழற்றுவது என ஒரே நேரத்தில் பந்துகளைச் சீராகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தார். அடுத்து குறிப்பிடும்படியான பல்வேறு வித்தைகளில், 14 பவுண்டு எடை வெண்ணெய் பந்தைச் சுண்டி, வித்தைக்காரன் உடலைச் சுற்றி, அது எந்த எடைக்கணமும் இல்லை என்பதைக் காண்பித்தார். இறுதியாக, வாயில் வாளை விழுங்கும் நிகழ்ச்சியுடன் நிறைவுபெற்றது. 1813ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து, அயர்லாந்தில் நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு கேம்ப்பெல், லிவர்பூல் என்ற ஊருக்குக் குழுவை அழைத்துச் சென்றார்.2
ஃபிலடெல்பியாவில் வித்தை நிகழ்ச்சிகள், 1817
ராமசாமி இங்கிலாந்திற்குச் சென்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1817ஆம் ஆண்டு கேம்ப்பெல்லிடமிருந்து பிரிந்து, மற்ற வித்தைக்காரர் குழுவினருடன், மோசஸ் பிரவுன் கப்பலில் நியூயார்க் சென்றார். 15.11.1817 அன்று ராமசாமி நியூயார்க் நகரத்திற்கு இரண்டு இரும்புப் பெட்டிகளில் உடைகள் உள்ளிட்ட சில பொருட்களுடன் சென்றார். அமெரிக்காவின் பொழுதுபோக்குப் பகுதிகளில் எப்படி நிகழ்ச்சிகளை நடத்துவது என யோசிக்கலானார். அவரின் நிகழ்ச்சிகளுக்குக் குறைந்த அளவே வரவேற்பு கிடைத்தது. நடத்துவதற்கான அனுபவமும் விளம்பரப்படுத்துவதற்கு ஆதரவும் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் ராமசாமியின் நிகழ்ச்சிகளை கவனித்த, வாஷிங்டன் ரிப்பளிக்கன் கிரானிக்கல் இதழில், ‘பிரிட்டன் இளவரசர், செல்வந்தர்கள், எழுத்தாளர்கள், படித்தோர் ஆகியோரை ஆச்சரியப்பட வைத்தாலும், இந்நாட்டில் கடினம்’ என எழுதியிருந்தார்.
நியூயார்க்கில் ஏமாற்றமடைந்ததால் ராமசாமி வாஷிங்டனுக்கும், ஃபிலடெல்பியாவிற்கும் சென்று, அங்கு சின்னசாமி என்று பெயரை மாற்றிக்கொண்டார். தன் செயற்திறமைகளையும் வளர்த்துக்கொண்டார். ஃபிலடெல்பியா பார்வையாளர்களுக்கு இதுவரைக் கண்டிராத பல சாதனைகளைக் காட்சிப்படுத்த முடியும் என உறுதியளித்தார். தன் நெற்றியில் ஒரு செயற்கை மரத்தை வைத்து, அதன் கிளைகளில் 11 பறவைகளை உட்காரவைத்து, தன் வாயிலிருந்து ஒரு குழாய் வழியாக ஊதி, அப்பறவைகளைச் சுடச்செய்து காட்சி நடத்தினார். தன் மூக்கின் மேல் சீனக்கோட்டையின் மூல அமைப்பைச் சமநிலைப்படுத்தி, எந்த உபகரணங்களும் இல்லாமல் வாயால் அந்தக் கோட்டையைக் கட்டி முடித்தார். இது வாய்மொழி உதவியுடன் வேலை செய்ததுபோல் தோன்றியது. பார்வையாளர்கள் அவரது அதீத திறமையை வியந்தனர். அவரின் காட்சிகளுக்கு மிதமிஞ்சிய கூட்டம் கூடியது.
விர்ஜினியாவில் வித்தை நிகழ்ச்சி, 1818
1818ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் ராமசாமி ஃபிலடெல்பியாவிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்து ரிச்மாண்ட், விர்ஜினியா சென்றடைந்து வித்தை நிகழ்ச்சிகள் நடத்தினார். உருவப்பட ஓவியர் ஜேம்ஸ் வார்ரல் அவரை ஓவியமாக வரைந்தார். ஓர் இந்திய வித்தைக்காரர் தன் ஒவியம் ரிச்மாண்ட் வேலண்டைன் அருங்காட்சியகத்தில் தொங்கிகொண்டிருந்ததைப் பார்த்தார். ராமசாமி தன் உருவம் ஒரு வித்தைக்காரன் போல் அல்லாமல், இளவரசர் போன்று காட்சியளித்தது என மகிழ்ச்சியடைந்தார். தோள்பட்டை வரை தொங்கும் முடி, ஒரு பென்சில் அளவிற்கு மெலிதாக அழுகுபடுத்தப்பட்ட மீசை, உதடுகளின் மேல் சுற்றிக்கொண்டு இருந்தது. அவர் வெள்ளை நிறத் தலைப்பாகை, சட்டை, சிவப்பு மேலங்கி, நீலச்சால்வை அணிந்திருந்தார். முத்து – ஆரம் தொங்கும் பதக்கத்தில் மாணிக்கக் கல்லைச் சுற்றி மரகதங்களும் வைரமும் பதிக்கப்பட்டிருந்தன.
இலண்டனுக்குத் திரும்பிய பின் ராமசாமி ஓர் ஆங்கிலப் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டது, 1821-1849
ராமசாமி 05.10.1819 அன்று சேலம், மசாசுசெட்ஸ் ஆகிய ஊர்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். 1820ஆம் ஆண்டு மீண்டும் இலண்டன் திரும்பினார். அங்கு, பின்வரும் இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
- 01.1821, ஒலிம்பிக் அரங்கம், இலண்டன்
- 01.1821, ஒலிம்பிக் அரங்கம், இலண்டன்
- 01.1821, ஒலிம்பிக் அரங்கம், இலண்டன்
- 02.1821, ஒலிம்பிக் அரங்கம், இலண்டன்
- 01.1822, ராயல்டி அரங்கம், இலண்டன்
- 01.1822, ராயல் கோபர்க் அரங்கம், இலண்டன்
- 08.1822, ராயல் கார்டன்ஸ், வாக்ஸ்ஹால் அரங்கம், இலண்டன்
- 08.1822, வாக்ஸ்ஹால் கார்டன்ஸ், இலண்டன்
- 11.1824, ராயல் கோபர்க் அரங்கம், இலண்டன்
- 02.1825, அடல்பி அரங்கம், இலண்டன்
- 04.1822, நீயு ஸ்டாரண்ட் சப்ஸ்கிரிப்ஷன் அரங்கம், இலண்டன்
- செப்டம்பர் – நவம்பர், 1834, ராயல் கோபர்க் அரங்கம், இலண்டன்
- 12.1835, ராயல் விக்டோரியா அரங்கம், இலண்டன்
- 01.1836, ராயல் விக்டோரியா அரங்கம், இலண்டன்
- 08.1836, ராயல் புயுலாஸ்பா, இலண்டன்
- 1840, கேரிக் அரங்கம், இலண்டன்
- ஆகஸ்ட், 1842, ராயல் அரங்கம், இலண்டன்
- 01.1849, ராபர்ட் பெர்ரி அருங்காட்சியகம், இலண்டன்
1822ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையப்பட்ட ஓர் ஓவியம், ராயல் கோபர்க் அரங்கத்தில் உயரமான மேடையில் அமைக்கப்பட்டிருந்தது. சமகால எழுத்தாளர்கள் அவரை அழகானவர், மிகச்சிறந்த ஆங்கில மொழி பேசுபவர் என்று எழுதினர். பார்வையாளர்களிடம் சிரிப்பலையை உண்டாக்கி, இரவு உணவாக தான் வாளை விழுங்குவதாகவும்; கறித்துண்டுகளைச் சாப்பிட விரும்புவதாகவும் ஆனால், கல்லை விழுங்குவதாகவும்; அது கல்தான், கூழாக்கிய உருளைக்கிழங்கு அல்ல எனவும் நகைச்சுவையாக கூறினார். அவர் ஓர் ஆங்கிலேயப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.3
1830ஆம் ஆண்டில் ராமசாமி தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள், அவரை அசல் கலைஞராகவும், புகழ்பெற்றவராகவும், உண்மையான இந்திய வித்தைக் காண்பிப்பவர் எனவும், செல்வந்தரையும், உயர்குடி மக்களையும், பொதுமக்களையும் பார்க்கவருமாறும் அழைப்பு விடுத்தன. ராமசாமியின் புகழ் எல்லையைத் தாண்டி, அவர் பங்கேற்ற பல்வேறு இடங்களில், தெளிவாகக் காணமுடிந்தது.
புகழ்பெற்ற கோபர்க், அடெல்பி, ஒலிம்பிக் அரங்குகளில் நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனபோது, அவர் உயர்குடியினர் நிறைந்த வேக்ஸ்ஹால் கார்டனில், புகழ்பெற்ற வித்தைக்காரர்கள், பல குரலில் பேசுபவர்கள், கழைக்கூத்தாடிகள், பொய்க்கால் ஆட்டக்காரர்கள், கயிறுமேல் நடப்பவர்கள் ஆகியோருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். மற்ற இந்திய வித்தைக்காரப் போட்டியாளர்களுடன், அவர் ஒருவாரத்திற்குப் பொதுவாக 25 பவுண்டுகள் முதல் 30 பவுண்டுகள் வரை சம்பாதித்தார். சாதாரண வித்தைக்காரர்கள் வாரம் ஒரு பவுண்டு மட்டுமே ஈட்டினார்கள்.
1833ஆம் ஆண்டு ஹல் நகரில் உண்மையான கடல் கன்னி, கடல் மனிதனுடன் ஆர்கனி தீவுகளில் உள்ள சாண்டித் தீவில், ஸ்காட்ச் மீனவன் போல் அவர் நேரடியாகத் தோன்றினார். அதே விளம்பர அறிக்கையைக் கொண்டு, இயற்கைக்கு மாறாக மூன்று அடி நீளம், சுருட்டு முடி, மீன் போன்ற செதில், செவுள், மீன்துடுப்பு ஆகிய தோற்றத்தில் குள்ளர்கள் நிகழ்த்தும் பெரிய நிகழ்ச்சி மற்றும் இத்தாலிய முகமூடியணிந்த சிரிப்புமூட்டும் கோமாளி என விளம்பரப்படுத்தப்பட்டது.
1841ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வாக்ஸ்ஹால் தோட்டத்தில் மாயவித்தை பந்துகளை வைத்தும், வாளை விழுங்கும் நிகழ்ச்சியையும், இரண்டு இசைநிகழ்ச்சிகளுக்கு இடையே நடத்தினார். 1841இல் ராமசாமியின் உடல்நலம் மோசமானது. அவரின் திறமை பாதிக்கப்பட்டு மெல்ல கடனில் மூழ்கினார். 1849ஆம் ஆண்டு வாளை விழுங்கும் வித்தையைச் செய்யும்போது, உடலின் உட்பகுதி பாதிக்கப்பட்டு அவரின் மகன் உயிரிழந்தார். அது ராமசாமியின் உடல்நிலையை மேலும் மோசமாக்கியது.
ராமசாமியின் இறப்பு, 1850
1850ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாரிஸில் ஒரு நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டார். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் இலண்டனுக்குத் திரும்பி, 21.08.1850 அன்று இறந்தார். சிலநாட்கள் கழித்து இலண்டன் பெல்ஸ் லைஃப் என்ற பத்திரிகை, அவரின் இறுதிச் சடங்குகளுக்கும், அவரது மனைவி எல்லன், இரண்டு மகள்கள் ஆகியோரின் பராமரிப்புக்காகவும் நன்கொடை அளிக்கக் கேட்டுக்கொண்டது. ஒரு நாளிதழில், தன் கணவருக்குச் சவப்பெட்டியைக் கூட வாங்கமுடியாமல் இருப்பதைத் தெரிவித்து, நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த மக்கள் சிறு தொகை அளித்து உதவி செய்யுமாறு எல்லன் வேண்டுகோள் விடுத்தார். தனது கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சமயத்தில் எந்த அரங்குகளிலும் நிகழ்ச்சி நடத்த முடியாமல், இருந்த தொகையையெல்லாம் அவரது சிகிச்சைக்கே செலவு செய்ததால், தற்போது இறுதிச் சடங்கு செய்வதற்குச் சிறு தொகை கூட இல்லாமல் தவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும் மெதுவாகவே நன்கொடைகள் கிடைத்தன. ராயல் சர்கஸின் வில்லியம் குக்கிடம் இருந்து ஒரு பவுண்டும், புரவலர் ஹை ஹால்பர்னிடமிருந்து 10 ஷல்லிங்கும், இரண்டு யூதர்களிடமிருந்து ஐந்து ஷில்லிங்கும், பேராயர் ஒருவரிடமிருந்து ஒரு ஷில்லிங்கும், செய்தித்தாள் நிறுவனம், தன் ஊழியர்களிடமிருந்து தொப்பியைக் காட்டி யாசகம் பெற்ற சிறுதொகையும் நன்கொடையாகக் கிடைத்தன. 01.09.1850 அன்று, இறுதிச் சடங்கு நடைபெற்று, புனித பங்கிராஸ் ஆலய வளாகத்தில் இராசாமி புதைக்கப்பட்டார். அரங்குகளின் மேலாளர்களும் நிர்வாகத்தினரும், இராமசாமயின் திறமைகள் மூலம் நன்மை அடைந்தவர்களும் கண்டிப்பாக அவரின் மரியாதைக்குரிய மனைவியை, தீவிர வறுமையிலிருந்து காப்பற்ற பங்களித்திருக்க வேண்டும். ஆனால் இந்த வேண்டுகோள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரானது.
ராமசாமி, ஐரோப்பியப் பார்வையாளர்களுக்காக ஜாலவித்தைகளும், கழைக்கூத்தும், செப்பிடுவித்தையும் என எண்ணிலடங்கா நிகழ்ச்சிகளையும் செய்துகாட்டினார். 25.11.1817 அன்று, அமெரிக்காவில் முதன்முதலாக, 22 அங்குல வாளை விழுங்கி சாகசம் செய்தவர்.
சென்னையைச் சேர்ந்த முத்துசாமியும் மாடசாமியும் லுத்துவேனியாவில் நடத்திய வித்தை நிகழ்ச்சிகள், 1822
முத்துசாமி தன் சகோதரர் மாடசாமியுடன் கடற்பயணம் செய்து லுத்துவேனியாவின் வில்லிநியஸ் (ரஷ்யாவின் போலந்தில் உள்ளது) நகரம் சென்றார். இவர்களின் பயணத்திற்கு யார் ஆதரவளித்தனர் என்பது தெரியவில்லை. 1822ஆம் ஆண்டு வில்லிநியஸில் வித்தை நிகழ்ச்சிகளை நடத்தினர். ரஷ்ய அதிகாரிகள், முத்துசாமி வேவு பார்த்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்தனர். இவ்வித்தைக்காரர்களிடம் சில தாள்களில் தமிழில் பயணத்திட்டம், சென்ற ஊர்கள், செலவுகளின் குறிப்புகள் ஆகியவை இருந்தன. இச்சம்பவம் குறித்த ஒரு தகவலை ரிச்சார்ட் நில் என்ற இலண்டன் மதப்பரப்பு அமைப்பின் புனித பீட்டர்ஸ்பர்க்கின் பிரதிநிதி தெரிவித்தார்.4 முத்துசாமி விடுதலை செய்யப்பட்டு, தன் சகோதரனுடன் ஜெர்மனியில் இருந்ததாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது.
ஜெர்மனியில் முத்துசாமி, மாடசாமியின் வித்தை நிகழ்ச்சிகள், 1823
முத்துசாமியும் மாடசாமியும் ஜெர்மனி ராயல் நேஷனல் அரங்கத்தில் தங்களின் வித்தை, வேடிக்கை விளையாட்டுகளை நடத்தியதாக, 27.12.1823 அன்று ஜெர்மன் செய்தித்தாள்களில் வெளியானது.5 மந்திரக்கோலை ஐரோப்பாவில் இவர்கள்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தினர்.
மாடசாமி பின்னர் ஸ்வீடன் சென்றார். முத்துசாமிக்கு என்ன ஆனது என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால், அந்நேரத்தில் முத்துசாமி இறந்திருக்கக்கூடும். மாடசாமி என்ற பெயர் மட்டும் ஸ்வீடனில் உள்ள பதிவுகளில் காணமுடிகிறது.
மாடசாமி ஸ்வீடனுக்கு வருகைபுரிந்ததும் எரிக்காவைக் காதலித்ததும், 1826
மாடசாமி 1797ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் என அவரே கூறியுள்ளார்.6 1826ஆம் ஆண்டு அவர் தெற்கு ஸ்வீடனில் உள்ள மல்மோ நகரம் வந்தார். அந்நாட்டில் மிக விரைவிலேயே அவர் வித்தைக் கலைஞராகப் புகழ்பெற்றார். தன் சிறப்பான, துணிச்சலான வித்தைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தினார்.
மாடசாமி தன் மனைவி எரிக்கா ஷயிட்டனரை (1801-1860) முதன்முதலில் எவ்வாறு சந்தித்தார் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருநாள் மாடசாமி சிறு பொருள் ஒன்றை வாங்க ஒரு கடைக்குச் சென்றார். அந்தக் கடைக்காரர் அப்பொருளின் விலையை மிக அதிகமாகக் கூறினார். அப்போது கடையில் வேலை செய்த ஒரு பெண், வெளிநாட்டவரிடம் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கிறது சரியில்லை எனச் சத்தமாகக் கூறினார். அந்தப் பெண் பேசியதை ஓரளவு மாடசாமி புரிந்துகொண்டு, அவளை அடுத்த நாள் மீண்டும் போய் சந்தித்தார். தொடர்ந்து சில நாட்கள் பார்த்தார். நன்றியுணர்விற்காகச் சந்தித்து அவளின் கரம்பிடித்து தன் காதல் விருப்பத்தைத் தெரிவித்தார். அப்பெண் ஒரு பாதிரியாரின் மகள். அவளுக்குப் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகவோ, மிட்டாய் தொழிற்சாலையில் பணிப்பெண்ணாகவோ வேலை செய்ய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாடசாமி எரிக்கா ஷயிட்டனரை அடிக்கடி சந்தித்துக் காதலித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிரியார் மகளான அவள், மாடசாமி லூத்தரன் மத நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு மதம் மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள்.7 அறிமுகமற்ற கருப்புநிற ஆளிடம் எரிக்கா தன் அன்பைப் பொழிந்தாள். இதன் விளைவாக இந்து மதத்திலிருந்து லூத்தரன் மதத்திற்கு மாடசாமி மாறிய பின், திருமணம் நடைபெற்றது.8
மாடசாமி திருமுழுக்குப் பெற்று கிருஸ்தவனாக மாறியது
மாடசாமி கிருஸ்தவத்திற்கு மாறி 13.11.1827 அன்று திருமுழுக்குப் பெற்றார். பிரான்ஸ் மடுவா என்று கிருஸ்தவப் பெயர் வழங்கப்பட்டது. ஸ்வீடனின் இளவரசர் முதலாம் ஆஸ்கார் இவரின் ஞானத் தந்தை. பிரான்ஸ் மைக்கேல் பிரான்சன் (1772 – 1847) என்ற பாதிரியார் திருமுழுக்குச் சடங்கைச் செய்தார். அதிக எண்ணிக்கையிலான மக்களின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. பின்னர் ஸ்டாக்ஹோமின் கிளாரா தேவாலயத்தில் எரிக்ரீன் ஹோல்ட் அடல்ஸ்வார்ட் என்ற பெருமகனின் முன்னிலையில் நற்கருணை திருவிருந்து என்ற புனித சடங்கு நடந்தது.9
ராமசாமி உயரமானவர் என்றும், கூர்ந்த பார்வையுடையவர் என்றும், காவி – கருப்பு நிறமான அவர் நீண்ட அங்கியும், கருப்புக் கம்பளி நூலால் ஆன தலைப்பாகையும் அணிந்திருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை வளையங்களை மேலே வீசுவது, பித்தளை வளையங்களைத் தன் நுனிமூக்கில் வைத்துச் சமநிலைப்படுத்துவது, மயில் இறகுகளைச் சமநிலைப்படுத்துவது, பீரங்கிக் குண்டுகளைத் தன் உடல் முழுவதும் சுற்றவைப்பது போன்ற வித்தைகளைச் செய்பவர் என்று செய்திதாள்களில் வெளியானது.10
திருமணத்திற்குப் பிறகு இத்தாலிக்குச் சென்றது, 1827 – 1841
பொன்னிறமான சுருள் முடியுடைய ஸ்வீடிஷ் பெண், காவி – கருப்பு நிறமான தன் கணவன், வித்தைகளை நிகழ்த்திக் காட்டும்போது, அவரைப் பார்த்துப் புன்னகைத்து ஆர்வமூட்டினாள். இவளிடம் ஒருவன், “நீ எப்படி இந்த நீக்ரோ போன்றவரிடம் திருமணம் செய்துகொள்ளத் தூண்டப்பட்டாய்” எனக் கேட்டான். அதற்கு அவள், “அவர் நிறத்தை மறைத்துவிட்டால், எவ்வளவு அழகாக இருக்கிறார் என எனக்குத் தெரியும்” எனப் பதிலளித்தாள். பிரான்ஸ் மடுவாவும் தன் மனைவியிடம் அன்பு பாராட்டி போற்றி மதித்தார்.11
மாடசாமி ஸ்வீடன் திரும்பியதும் இறப்பும், 1841-1852
மாடசாமி 1841ஆம் ஆண்டு எரிக்காவுடன் இத்தாலியில் வசித்தார். வித்தை நிகழ்த்த தனக்கு ஆதரவும் நிதியுதவியும் அளித்தவர் இத்தாலியில் கடனாளியாக ஆனதால், மாடசாமி நிலைகுலைந்து போனார். செய்தித்தாள்களில் உள்ள செய்திகளின்படி, 1846ஆம் ஆண்டு இத்தாலியிலிருந்து ஸ்வீடன் திரும்பிவந்தார். 1852ஆம் ஆண்டு கலைஞர் பிரான்ஸ் மடுவா இறந்தார். அவர் மனைவி எரிக்கா 01.01.1860 அன்று ஸ்டாக்ஹோமில் இறந்தார்.12
அக்காலகட்டத்தில் தமிழக வித்தைக் கலைஞர்களின் அரிதான, தனித்துவமான சிறப்பியல்புகளை ஸ்வீடனில் மாடசாமி வெளிப்படுத்தினார். அவர் முக்கியமாக கிருஸ்தவத்திற்கு மாறியதும், ஸ்வீடிஷ் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதும், அவர் தொடர்ந்து பிழைத்துக்கொள்ள வழிவகைச் செய்தது.
அடிக்குறிப்புகள்
- John Zubrzycki, Empire of Enchantment: The Story of Indian Magic, Oxford University Press, New York, 2018; S. Dadswell, ‘Jugglers, Fakirs, and Jaduwallahs: Indian Magicians and the British Stage’, New Theatre Quarterly, vol. 23 no. 1, 2007, pp. 3-24.
- ‘A Group of Indian Jugglers’, in The Penny Magazine, September 1813.
- ‘Brahmin of the Air, Madras’, in ‘Saturday Magazine’ 1832.
- Richard Knill, ‘India’, in The Evangelical Magazine and Missionary Chronicle, London, Thomas Ward & Co., 1838, p. 190.
- ‘Correspendens-Nachricht Aus Pressburg’ Allgemeine Theaterzeitung und Unterbaltungsblatt 28 February 1824, p. 4; ‘Königl. städtisches National-Theatre’, Brünner Zeitung 27 December 1823, p. 4.
- Riksarkivet, Stockholm (hereafter RAS), Digital Records of Hedvig Eleonora Kyrkoarkiv (hereafter HEK), Vigselböcker, SE/SSA/0006/E II/5 (1825-1839).
- Kungliga Biblioteket, Stockholm (hereafter KBS), Svenska Dagstidningar, Norrlandsposten 15 December 1843, p. 3.
- KBS, Svenska Dagstidningar, ‘En skiftesrik lefnad. Stockholmska gift med en hindu’, Aftontidningen, 22 January 1890.
- HEK, Lysningshandlingar, SE/SSA/0006/H V a/57 (1824-1829).
- KBS, Svenska Dagstidningar, Norrlandsposten 15 December 1843, p. 3; Correspondenten 23 December 1843, pp. 2-3.
- KBS, Svenska Dagstidningar, Norrlandsposten 15 December 1843, p. 3.
- ‘En skiftesrik lefnad’ Stockholmstidningen 23 January 1890, p. 2; HEK, Död- och begravningsböcker, SE/SSA/0006/F I/14 (1890-1893).
] stephenjey@gmail.com






