அப்பா புது வீடு கட்டியிருக்கிறார்
மதில்கள் பளீர் பீங்கானில்
தோற்றம் தாஜ்மஹால்
கோட்டை போல் கதவைத் திறந்து
உள் நுழைகிறேன் பிரமாண்டம்
அப்பா பணியாட்களுடன் பேசுகிறார்
தினையும் கவுனியும் போல் இணைந்திருக்கும்
அம்மா தென்படவில்லை
வேலை இன்னும் பூர்த்தியாகவில்லை
திரும்ப வாசல் வந்தால்
ஆளுயர ஈரக்களிமண் முற்றம்
சறுக்கி விழுகிறேன்
பிடிமானமில்லாப் படிகள்
ஏற முடியவில்லை மீண்டும்
தரை ஏன் கூழா
அப்பா முழுசா முடிக்கும் வரை சொல்லல
கோபிக்கிறேன் தங்கைகளிடம்
பேய்மழை வேறு பதிலில்லை
இல்லாத தந்தை எனக்காக
எங்கோ வீட்டை முடிக்கிறார்
மண்டைக்குள் ஊரும் மூரி
ஸ்டீராய்டு குளிகைகள்.
புதுமனை புகல்
மாலதி மைத்ரி