கூடையின் பின்
குத்துகாலிட்டுக் கழுத்தை நீட்டி
குந்தியிருக்கும் பாலாமை ஆயா
நீளம் சதுரம் வட்டம்
முண்டாசு துண்டளவு சுளகில்
பரப்பியக் கருவாடுகள் வடிவாய்
புகையிலைச் சருகென மெலிந்த கை
கூறுகளை அடிக்கடி அடுக்கும் திருப்தியில்
மின்னியடங்கும் கெம்புக்கல் மூக்குத்தி
மடக்கிய தாழைமடலொத்த உப்புவாளை
விற்றுக் கொட்டாங்குச்சிக் கிண்ணத்திலிட
சில்லறைகள் சிணுங்குமொலி
ஓட்டில் குதுகுதுக்கும் புறாக்கள்
குற்றுமரயுயரம் எழும்பி இறக்கையடித்தமரும்
புது மீன்சட்டியில் படரும் கரியாய்
குபுகுபுவென இருளடரும் அங்காடி
பகலெல்லாம் அறுத்துக்கொட்டி
பிந்திய பரபரப்பில்
கையாட்டையோ பேரனையோ
பிடித்தபடி சின்னம்மா எனும்
உருவையாறு ஆயாவின் பூனைக்குரல்
அன்றையப் பாடுகளை
உரலில் இடித்து மெல்ல வாய் சிவக்கும்
காலத்தின் முகத்திலெறிந்த வெற்றிலைக்காம்பு
இரு சின்னம்மைகளின் முதுமை
காகிதப் பொட்டலத்தை
வெற்றிக்கோப்பையென உயர்த்தி
அந்நாளை அன்பில் முகர்வார்
நிழல் சாக்குப் பைபோல் பின்தொடர
கனவுக்குக் கச்சக்கருவாடு மணம்.




