22
சாதியமைப்பானது தோன்றிய நாள் முதல் இடம் சார்ந்து, காலம் சார்ந்து மாறிவந்திருக்கிறதே ஒழிய அது ஒரே மாதிரியாய் இருந்திருக்கவில்லை. ஆனால், அது காலந்தோறும் இன்று போல்தான் இருந்தது என்பதான விளக்கங்களே இன்றைக்குப் பெரும்பான்மையாய் இருக்கின்றன. சாதி பற்றிய இன்றைய வெகுஜன சொல்லாடலில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது மன்னர்களாய் இருந்த சாதி எது என்பதுதான். அதன்படி “நாங்கள்தான் ஆண்ட பரம்பரை” என்ற முழக்கம் கிட்டத்தட்ட எல்லாச் சாதிகளிடமும் உருவாகியிருக்கிறது. இது வரலாற்றிலிருந்து தங்களைக் கண்டுபிடித்துக்கொள்வது என்ற பாவனையோடு செய்யப்படும் அரைகுறை கோஷம். மேலும் இது தங்களை எவ்வாறு காட்டிக்கொண்டால் சமகால அதிகார தளத்தில் நலன் கிடைக்கும் என்ற யோசனைக்கேற்ப வரலாற்றை உருவகித்துக் காட்டும் போக்கு. இன்னும் சொல்லப்போனால் ஒரு சாதி, தனக்கு எதிரில் இருக்கும் சாதியிடம் தன்னை எவ்வாறு காட்டிக்கொள்ள வேண்டும், அந்த எதிர் சாதி தன்னை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று விரும்புகிறதோ அதற்கேற்பத் தன்னுடைய வரலாற்றைக் கற்பனை செய்து காட்டுகிறது. இந்த ‘ஆண்ட பரம்பரை’ கோஷத்தில் முதன்மை பெறுவது உடல் பலம்தான். சாதி சங்கப் பதாகைகளில் ஆண்ட மன்னர்களின் உடல் பலமிக்கதாகவும், கையில் வாள் ஏந்தியவாறும் வரையப்படுவதை இன்றைக்கும் பார்க்கலாம். போர், வீரம் என்பதற்காகத்தான் இந்த ஆண்ட மன்னர் கோஷத்திற்கே போகிறார்கள். இந்த வீரம் என்பது எதிரிலிருக்கும் சாதிக்கு எதிராக முன்வைக்கப்படும் வன்முறைக்கான அறைகூவல்தான். பெரும்பாலும் சூத்திரச் சாதிகளின் அணுகுமுறையாய் இருந்த இப்போக்கு, தற்காலத்தில் சாதியை எதிர்கொள்ளும் அனுபவத்தில் தலித் சாதிகளையும், எண்ணிக்கைச் சிறுபான்மை சாதிகளையும் மெல்ல மெல்ல பீடித்துவருகிறது.
எனில், இங்கிருப்போரில் ஆண்ட மன்னர்களின் சாதிகளைச் சேர்ந்தவர்களே இருக்க முடியாதா என்ற கேள்வி எழலாம். இருக்க முடியும். ஆனால், சமகாலத்தில் எதிரும் புதிருமாக முன்வைத்துக் காட்டுவதைப் போல சாராம்சப்படுத்த முடியாது. ஒரு சாதியைச் சேர்ந்தவர் ஓரிடத்தில் மன்னராக இருந்திருக்கலாம். இன்னோர் இடத்தில் மற்றொரு சாதியைச் சார்ந்தவர் மன்னராக இருந்திருக்கலாம். ஒருகாலத்தில் மன்னரை உருவாக்கிக்கொண்டிருந்த ஒரு குழு மற்றொரு காலத்தில் அதை இழந்து போயிருக்கலாம். பேரரசராக இருந்தவர் சிற்றரசராகவும், சிற்றரசராக இருந்தவர் பேரரசராகவும் மாறியிருக்கிறார். சில காலத்தில் அழிந்துபோன மரபுகளும், நீண்ட காலம் நீடித்த மரபுகளும் இருந்திருக்கின்றன. உண்மையில் வரலாறு இவ்வாறான சான்றுகளையே காட்டுகின்றன. மன்னர்களின் அரசியல் தேவை சார்ந்து திருமண உறவு, இடப்பெயர்ச்சி, அந்தரங்கம் போன்றவை சார்ந்து கலப்பு நடந்திருக்கிறது. இதையொட்டிப் போர்கள் நடந்து, அவற்றில் வென்றவர் அரசை எடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் ஓரிடத்தில், ஒருகாலத்தில் மன்னராக இருந்திருக்கிறார் என்றால், எல்லாக் காலத்திலும் அவ்வாறே இருந்திருக்கிறார் என்று கருத முடியாது. எல்லோரையும், எல்லாவற்றையும் அவை இயங்கிய குறிப்பிட்ட பின்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then