மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

28

ந்தன் எந்தப் பகுதியில், எந்தக் காலத்தில் ஆண்டான் என்பது முக்கியமான கேள்வி. தமிழ் வரலாறு முழுவதும் மன்னன் என்ற பொருளில் நந்தனின் பெயர் ஊடாடி வந்திருக்கிறது. நந்தன் மன்னன் என்ற தகவல் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் பரவலாகவும் வலுவாகவும் வேரூன்றியுள்ளது. மேலும், அப்பெயர் இந்திய அளவிலும் தொடர்பு பெற்றிருக்கிறது. அவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி வாசிக்கும்போது அவை தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றின் சொல்லப்படாத திசைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால், இங்கிருக்கும் நிலைமை என்ன? புலப்படாத சான்றுகளைக் கொண்ட பண்பாட்டு வரலாற்றை அறிய முடியவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், புலப்படும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டிய அரசியல் வரலாறும் முழுமையாக எழுதப்படவில்லை. சான்றுகள் கிடைக்கவில்லை என்கிற காரணங்கள் ஒருபுறமிருந்தாலும் கிடைத்தவற்றைப் பல்தரப்புப் பார்வையோடு வாசித்து எழுதும் போக்கு எழவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிடைத்த ஆரம்ப நிலை குறிப்புகளைக் கொண்டு எழுதப்பட்ட வரலாறும், வரலாற்று வரிசையும்தான் இன்றுவரை செல்வாக்கு செலுத்திவருகின்றன. ஒருசில மன்னர்கள், மன்னர் பரம்பரைகள் பற்றி மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வரலாறு ஆக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் புனைவுகளிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் கூட திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட காரணத்தால் வரலாறு ஆகியிருக்கிறது. இல்லாதிருந்தது இருப்பதும், இருந்தது இல்லாதிருப்பதும் வரலாற்றின் நிலையாகியிருக்கிறது. மேலும், சிறுசெய்தி பெருவரலாறு ஆகியிருப்பதும், பெருசம்பவம் சிறிய தகவலாகியிருப்பதும் நடந்திருக்கிறது. மொத்தத்தில் எதைச் சொல்லியிருக்கிறார்கள், எத்தனை முறை – எந்தெந்த வடிவங்களில் சொல்லியிருக்கிறார்கள், எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்கள், யார் யாரெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்பவற்றைப் பொறுத்தே இன்றைய வரலாறு உருவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டு வரலாற்றில் நிறைய குடிகளும், சிற்றரசுகளும், அரசுகளும் இருந்திருக்கின்றன. அரச பரம்பரைகளுக்கு இணையாகவோ, குறைவாகவோ சிற்றரசுகளும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. சிற்றரசுகளோடு இணங்கியே பெருமரபு தொடர்ந்திருக்கிறது. சிற்றரசு, பேரரசு ஆகியவை தனித்தும் சேர்ந்தும் இயங்கிவந்த விதம் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைப்பதில்லை. மேலும், அரசு என்ற பதத்தை நாம் பயன்படுத்தினாலும் அந்தந்தக் காலத்தில் அவை எவ்வாறு பொருள் பெற்றிருந்தன என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வாறு வரலாறு கிடைக்காத நிலையில் அவர்களைப் பற்றிப் புனைவுகள் இருந்திருக்குமானால் அவை சான்றுகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதேபோல புனைவுக்குள் வராதவர்களுக்கும், ஒருவேளை எழுதப்பட்டுக் கிடைக்காமல் போனவர்களுக்கும் அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது. இந்தப் பின்புலத்திலேயே நந்தன் பற்றியும், அவர் தொடர்பில் கிடைக்கும் தகவல்களையும் இணைத்துப் பொருள்படுத்திப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும்போது நந்தன் பற்றி மட்டுமல்ல அவர் பற்றிக் கிடைக்கும் பிம்பத்திற்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

இலக்கியத்தின் அடிப்படை புனைவு. அவற்றிலிருப்பதை நேரடி வரலாறு என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், தமிழில் இலக்கியத்தை முழு வரலாறாகவே வரித்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. குறிப்பாக, தமிழில் கிடைத்திருக்கும் பண்டை இலக்கியமான சங்க இலக்கியத்தை அவ்வாறு விளக்கும் நிலை இருக்கிறது. பண்டைத் தமிழர் வரலாற்றை எழுத பிற சான்றுகள் கிடைத்திராத நிலையில் இலக்கியப் பிரதிகளில் இருப்பவற்றை ஆரம்பக் கால வரலாற்று ஆசிரியர்கள் அப்படியே பொருள்படுத்திக்கொண்டனர். அவை நீண்டகாலம் வரை அப்படியே தொடர்ந்தன. இலக்கியத்தின் வழியே சமூகத்தை வாசிக்க முயற்சிக்கும்போது அது புனைவு என்பதையும் நினைவில் கொண்டே வாசிக்க வேண்டும். வரலாறு எங்கே நேரடியாக வெளிப்படுகிறது, எங்கே புனைவின் பண்பில் நிலை கொண்டிருக்கிறது என்பவற்றைப் பல்வேறு வாசிப்புகள் வழியே கண்டறிய வேண்டும். அது மட்டுமல்லாமல் நாம் வாழும் காலத்திற்கு வெகு நாட்கள் முந்தையது அவை என்பதையும், இடையில் பல்வேறு அர்த்தங்களேறியே நம்மிடம் வந்தடைந்திருக்கின்றன என்பதையும் மனதில் வைத்தே அவற்றை வாசிக்க முடியும். சங்கப் பாடல்களில் சிரமண மரபுகளின் நேரடியான அடையாளங்கள் குறைவு. ஆனால், சங்கப் பாடல்கள் பிறந்த சமகாலத்தில் சிரமண மரபு குகைகளும், எழுத்துப் பொறிப்புகளும் பரவலாகக் கிடைத்திருக்கின்றன. இவ்வாறெல்லாம் பார்க்கும்போது சங்கப் பிரதிகளைக் கவனமுடன் பொருள் கொள்ள வேண்டும் என்ற செய்தியைப் பெறுகிறோம்.

நமக்குக் கிடைத்திருக்கும் பழம் பிரதிகள் சங்கப் பாடல்களே என்ற முறையில் அவற்றில் கிடைக்கும் தகவல்களைப் பல்வேறு வாசிப்புகளின் துணையுடன் பொருள்கொள்ள வேண்டியுள்ளது. மக்கள், அரசன், தெய்வம் பற்றிய தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. மன்னன் என்ற நிலைபாட்டை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது ஏற்கெனவே அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் பல மன்னர்களின் பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் வரலாற்றுப்பூர்வமான பெயர்களும், புனைவு சார்ந்த பெயர்களும் இருக்கலாம். இதனை உரிய பின்புலத்தில் வைத்து விரிவாக ஆராயும்போதே அறிய முடியும். இவற்றில் நந்தன் மன்னன் என்பதற்கு வேரிடும் பெயர்களை மட்டும் அணுகலாம். எல்லா மரபுகளின் ஊடாகவும் நந்தனை நினைவுப்படுத்தும் குறியீடுகளும் சொல்லாடல்களும் நிலவியிருப்பதைத் தொகுத்துப் புரிந்துகொள்ள முடிகிறது.

சங்கப் பாடல்கள் வழி அலைகுடிகளும் நிலைகுடிகளும் பதிவாகியுள்ளனர். ஒரு குடி ஒரு நிலையிலிருந்து (அலைகுடி) மற்றொரு நிலைக்குச் (நிலை குடி) செல்லும்போது நடந்த மாற்றங்கள் அறியப்பட வேண்டும். அவ்வாறு மாறும்போது புதிய குழுவோடு கலந்துவிடுகிறதா? பழைய பெயர் என்னவாகிறது? புதிதாக எவையெல்லாம் நடக்கின்றன? குடி அமைப்பு முறை இருந்தது என்றால் அதன் தலைவர்களாக இருந்தவர்கள் யார்? சமூக மாறுதல்களின்போது என்னென்ன வகையான மாறுதல்களை அவர்கள் சந்தித்தார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. பாண் சமூகத்தைச் சேர்ந்த 25 வகையான குடிகள் இருந்ததாக அறிகிறோம். இத்தகையோரையெல்லாம் பழங்குடி மரபினராகக் கருதலாம். கிடைத்திருக்கும் சங்கப் பாடல்கள் வேளிர், ஆய் ஆகிய மரபினர் பரம்பரையாகவும் கிளைகளாகவும் தொடர்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன. கடையெழு வள்ளல்களில் அதியமான் இருக்கிறார். அந்த மரபிற்குள் பிறந்த பெருமாள், விடுகாதழகிய பெருமாள், ராஜராஜ அதியமான், அதியமான் பொகுட்டெழினி போன்ற கிளை மரபினர் வருகின்றனர். சங்க இலக்கியங்களில் இடம்பெறும் மரபினரின் பெயர்களில் பிற்காலம் வரையிலும் மன்னர்கள் இருக்கிறார்கள். இம்மரபினர் அதே தொடர்ச்சியில் வந்தவர்களா, அல்லது அவர்கள் பெயர்களுக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டு அவை பொதுப்பெயர்களாக மாறி அவற்றைச் சூட்டிக்கொண்ட பிற்காலத்தவர்களா என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது. இந்த வகையில் வேளிர், ஆய், வாணர், மலையமான்கள் போன்ற மரபைச் சேர்ந்த சிற்றரசர்கள் சங்க இலக்கியப் பிரதிகள் தொடங்கி பிற்காலம் வரையிலும் அறியப்படுகின்றனர்.

சங்கப் பாடல்களிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட நன்னன்கள் இருக்கிறார்கள். பாழியில் பொன்னைச் சேர்த்து வைத்திருந்தவன் ஒரு நன்னன் (அகநானூறு 258) என்றால், பெண் கொலை புரிந்து பழிக்கு ஆளானவன் வேறொரு நன்னன். நன்னன் உதியன் ஒருவன் என்றால், நன்னன் ஆய் மற்றொருவன். இவர்கள் குடிகளின், சிற்றரசுகளின் தலைவர்களாக இருந்திருக்கலாம். ஆனால், இவர்கள் பற்றிய நினைவுகள் வலுவாகவும் நீண்டகாலமாகவும் நிலைத்திருந்திருக்கின்றன. வேந்தர்கள் பற்றிய இல்லாத நினைவும், அதையொட்டிய தொன்ம பண்பும் இவர்களுக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு முக்கியமானவர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் அழிக்கப்பட்டமை பற்றிய ‘அழிவு’ நினைவுகள் நிலைத்து நின்றதோடு, தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் தொடரவும் செய்திருக்கின்றன. அதியமான், பாரி ஆகியோரின் மரணங்கள் சங்கப் பாடல்களில் ஒப்பாரி ஓவியங்களாக மாறியிருக்கின்றன. அதையொட்டிய பிற்கால கதைகளும் உருவாகியிருக்கின்றன. அவை புராணத் தொடர்பைப் பெற்றிருக்காமல், பழங்குடியினத் தொன்மத் தொடர்பைப் பெற்றவையாக இருக்கின்றன. சங்க இலக்கியங்களை அடுத்து கிடைக்கிற கல்வெட்டுகளில் கங்க நாடு, புற மலைநாடு, கோவூர் நாடு, வேள்கலி நாடு, ஏயில் நாடு, மீகுன்றை நாடு, கீழ் வேணாடு, மீ வேணாடு, வேணாடு, கோயினூர் நாடு, சிறுபாழ் நாடு, பங்கள நாடு, தாயனூர் நாடு போன்றவை இருந்ததாக ர.பூங்குன்றன் குறிப்பிடுகிறார். பிறரின் கீழிருந்த நாடுகளாக இவை தெரியவில்லை. இக்காலக்கட்டத்திலிருந்தே நந்தனுக்கான வேர் இருக்கிறது.

வேள் என்னும் சிற்றரசு இனத்தைச் சேர்ந்த பெயர் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருந்தது. அனைத்துக் குடிமுறை தலைவர்களையும் குறிப்பிடுவதற்கான பொதுப்பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல்தான் நந்தன் இனத்தைக் குறிக்கும் பெயரும் இருக்கிறது. சங்கப் பாடல்களில் மகத தேசத்து நத்தர்கள் பற்றித் தனியாகவும் நன்னன்கள் பற்றித் தனியாகவும் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், பிற்காலத்தில் நன்னன் நினைவுகளும், நந்தன் நினைவுகளும் பிணைந்து வழக்காறுகளாக மாறியுள்ளன. இரண்டு தரப்பு கதைகளிலும் பொதுத்தன்மை இருக்கின்றன அல்லது ஏதோவொன்று மற்றொன்றோடு கலந்திருக்கிறது. இது ஏன், எப்படி நடந்தது என்று ஆராயப்பட வேண்டும். மாமூலனார், மோசிகீரனார், பரணர் ஆகிய சங்க இலக்கியப் புலவர்கள் வடபகுதி கதைகளை உள்வாங்கியிருக்கிறார்கள். இங்கு தரவுகளை விட கதைகள் வழியான ஊடாட்டங்களே வரலாற்றைத் தீர்மானித்திருக்கின்றன. வேந்தர்கள் பற்றிய தகவல்கள் அவர்கள் கட்டிய கட்டடங்கள், கல்வெட்டுகள் வழியாகவே நமக்குக் கிடைக்கின்றன. தஞ்சை பெரியகோயில் இன்றைக்கு நிலைத்து நின்றாலும் அதைக் கட்டியவர் பெயர் ராஜராஜன் என்று கல்வெட்டுகளை வாசித்துச் சொன்னவர் ஹல்ட்ஸ் (E.Hultzsch) என்ற ஐரோப்பியர்தான். இவ்வாறு சொல்லப்படவில்லையெனில் அவர் பெயரே தெரிந்திருக்காது. ஏனெனில், அவர் பற்றிய வேறு கதைகளும் இங்கு உலவி வரவில்லை. ஆனால், இத்தகைய கட்டடங்களுக்குச் சொந்தமில்லாத சிற்றரசர்கள் பற்றிய நினைவுகள் பரவலாக உலவுகின்றன.

சமூகவியல் ஆய்வுகளில் பெயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெயர்கள் தனித்தவை அல்ல. தனித்தும் மற்றொரு பெயரோடு சேர்ந்தும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணமும் அர்த்தமும் இருக்கின்றன. பெயர்களில் ஒற்றுமை இருக்கலாம், திரிபுகள் இருக்கலாம். அவற்றிற்கு இட, கால, குழு, மெய்யியல் பின்புலங்கள் இருந்திருக்கின்றன. பெயர்கள் இடம்பெயர்ந்திருக்கின்றன. பிறந்த இடத்தைவிட சென்றடைந்த இடங்களில் நிலைத்த பெயர்கள் இருக்கின்றன. சில பெயர்கள் எல்லாக் காலத்திலும் ஒரு குழுவையே குறித்திருக்கின்றன. வேறொரு குழுவிற்கு ஆகியும் வந்திருக்கின்றன. எனவே, பெயர்களை நேரடிப் பொருள் கொள்வதைக் காட்டிலும் அவற்றை அதனதன் பின்புலத்தில்  வைத்து வாசிக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெயர் வழங்கப்படும் இடம் மட்டுமல்ல, அதற்கு எதிரிலும் அருகிலும் வழங்கப்படும் பெயர்களும் இடங்களும் கூட முக்கியமாகின்றன. நன்னனும் நந்தனும் உச்சரிப்பில் தொடர்புடைய பெயர்கள். இந்த ஒற்றுமை காரணமாகவோ, வேறு காரணமாகவோ இரண்டிற்கும் தொடர்பு ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இத்தொடர்பில் பெயர் ஒற்றுமை முக்கியக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

களப்பிரர் காலத்தில் நந்தன் பெயர் மன்னர் பெயருக்குள் ஊடாடுகிறது. களப்பிரர் காலத்தில் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் புத்ததத்தர் என்ற பௌத்தத் துறவி வாழ்ந்தார். உறையூரில் பிறந்து காவிரிபூம்பட்டினம், பூதமங்கலம், இலங்கை போன்ற ஊர்களில் வாழ்ந்தார். புத்த கோசர் என்ற மற்றொரு பௌத்த அறிஞர் இவரின் சமகாலத்தவர். தமிழிலும் பாலியிலும் வல்லவரான இவர், பௌத்த அறிஞராகத் திகழ்ந்தார். இவர் பாலி மொழியில் எழுதிய ‘அபிதம்ம அவதாரம்’ குறிப்பிடத்தக்க நூலாக அறியப்படுகிறது. களப்பிரர்கள் சோழ பகுதியில் ஆண்டார்கள் என்பதைக் கூறும் ஒரே சான்று இந்த நூல்தான். இவர் களப்பிர மன்னன் அச்சுத விக்கிரா-ந்தன் பற்றிக் கூறுவதோடு, அவர் ஆதரவை தாம் பெற்றிருந்ததாகவும் கூறுகிறார். இந்த மன்னனுக்கு மட்டுமல்ல, களப்பிரர் அரசர்களையே நந்தன் என்னும் பெயரோடு சேர்த்துக் கூறும் போக்கு இருக்கிறது. “புத்ததத்தர் தம் பாலி நூலில் களப்பிரர் பற்றிக் கூறும்போது, களபகுல நந்தன் எனக் கூறியிருக்க, வேள்விக்குடி செப்பேடு அதன் சமஸ்கிருத பகுதியில் களப்ரர் என்று குறிப்பிடுகிறது” என்கிறார் ஆ.பத்மாவதி (ப. 64). மேலும், அச்சுதன் என்ற பெயரும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. இப்பெயர் ஆரம்பத்தில் அருகனையும் பின்னர் விஷ்ணுவையும் குறிக்கக் கையாளப்பட்டது. இந்தப் பெயரில் பெரும்பாலான களப்பிர அரசர்கள் அழைக்கப்பட்டனர். களப்பிரர் ஆண்ட மலையின் பெயர் நந்தி மலை. “நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி” என்று குறிப்பிடப்படுகிறது. இன்றைய கர்நாடகாவின் கோலார் பகுதியில் இம்மலை இருக்கிறது. அச்சுத விக்கிரா – ந்தன் நந்தி மலை அரசன் என்ற முறையில், பல பாடல்கள் அவனைப் பற்றி பாடப்பட்டன. பத்தாம் நூற்றாண்டின் இலக்கண ஆசிரியரான அமிதசாகரர் இப்பாடல்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். அவன் பௌத்த மன்னன் என்றும், நீதி பொறுப்பு கொண்டு ஆண்டான் என்றும் கூறப்பட்டிருக்கிறான்.

விக்கிராந்தன், புத்ததத்தர் போன்ற பெயர்களைப் பார்க்கிறோம். நந்(த்)தர், தத்தர், சேந்தன் போன்ற பெயர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களாக இருக்கின்றன. தமிழில் திவாகரம் என்ற நிகண்டு நூலுண்டு. திவாகர முனிவர் எழுதியதால் இப்பெயர். அவர் சிரமண மரபினர் (ஜைனர்) என்பது குறிப்பிடத்தக்கது. அந்நூலுக்கு சேந்தன் திவாகரம் என்கிற பெயரும் உண்டு. அம்முனிவரை ஆதரித்த அம்பர் சேந்தன் என்ற மன்னனால் வேண்டப்பட்டு எழுதப்பட்டதால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். களப்பிரர் வரலாற்றைத் தரும் ஆதாரமான பூலாங்குறிச்சி கல்வெட்டின் மூன்றாம் பகுதி கோச்சேந்தன் கூற்றற்கு என்ற மன்னன் பெயருடன் தொடங்குகிறது. இப்பெயர் கூற்றன் சேந்தன் என்பதாக இருக்கலாம் என்று கூறும் ஆ.பத்மாவதி, தமிழ்நாட்டை ஆண்ட அரச மரபினரில் எவரும் இப்பெயரைத் தாங்கியிருக்கவில்லை. சீவக சிந்தாமணியில் சீவகனின் தம்பி பெயர் நந்தட்டன் (நந் + அட்டன்). இங்கு அட்டன் என்பது புத்தரைக் குறிக்கும். யசோதர காவியத்தில் அட்டபங்கன் இழிவான பாத்திரமாகக் கட்டமைக்கப்படுகிறான்.

களப்பிரர்கள் கன்னட நாட்டுப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்றும் பழங்குடி மரபினராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், பெரும்பாலான ஆதாரங்களும் விளக்கங்களும் அவர்களைச் சிரமண மரபினராகவே காட்டுகின்றன. பூலாங்குறிச்சி கல்வெட்டு, புத்ததத்தர் நூல்கள் ஆகியவை  அவர்களின் பௌத்தத் தொடர்பையும், கன்னட நாட்டுத் தொடர்பு அதன் வழியிலான ஜைனத் தொடர்பையும் காட்டுகின்றன. கல்லாடத்தில் இடம்பெற்றுள்ள “படைநான் குடன்று பஞ்சவற் றுரந்து / மதுரை வவ்விய கருநடர் வேந்தன் / அருகர்ச் சார்ந்துநின் றரன்பணி அடைப்ப” என்கிற வரிகள் வழியாகக் களப்பிரர்கள் மதுரையைப் பிடித்தவர்கள், கருநாடகர், சிரமண மரபினர் (அருகர்) என்பன போன்ற தகவல்களை அறிகிறோம். களப்பிரர்கள் காலத்தில் பிராமணர் செல்வாக்கு குறைக்கப்பட்டதை வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது. இவ்வாறு பிராமணர் செல்வாக்கு குறைப்பு, சிரமண மரபு ஆதரவு ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது இவர்களை வடபுல நந்த மன்னர்களின் மரபோடு சேர்த்து வாசிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. குறிப்பாக, வேள்விக்குடிச் செப்பேட்டின் செய்தி நந்த மன்னர்களின் வரலாற்றோடு ஒத்துப்போகிறது. களப்பிரர் அரசர்களின் நினைவுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிலவிவந்து மறுவியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஐந்தாம் நூற்றாண்டோடு முடிந்து போனதாகக் கூறப்படும் களப்பிரர்கள் பற்றி ஒன்பதாம் நூற்றாண்டில் வேள்விக்குடிச் செப்பேடு கூறும் அளவிற்கு அவர்களின் நினைவு தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. அச்சுத விக்கந்தன் மூவேந்தர்களைத் தோற்கடித்து மூவரையும் தமிழில் பாடி வாழ்த்துமாறு செய்தான் என்று பிற்கால நூலான தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது. இந்த விதத்தில் இதே காலத்தில் இதே போன்ற கதையில் ஔவை, பாரி, கபிலர் ஆகியோரைத் தொடர்புறுத்தும் கதைகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர் ஆட்சி முடிந்து பாண்டியர்களின் ஆட்சி கடுங்கோன் தலைமையில் ஆரம்பித்து 270 ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறது. மாறவர்மன் அவனி சூளாமணி, செழியன் சேந்தன், மாறவர்மன் அரிகேசரி, கோச்சடையான் இரணதீரன், முதலாம் ராஜசிம்மன், பராந்தக நெடுஞ்சடையன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், இரண்டாம் வரகுணன், பராந்தக வீரநாராயணன், இரண்டாம் ராஜசிம்மன், சோழன் தலைகொண்ட வீரபாண்டியன், சடையன் மாறன் போன்றவர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவற்றின் தாக்கம், இயங்குநிலை பற்றி விரிவாக அறிய முடியவில்லை.

ஆய் வம்சத்தின் புகழ்பெற்ற மன்னனாக இருந்தவன் பெயர் கோகருநந்தடக்கன் (கோ+கரு+நந்தன்+அடக்கன்). இவனுடைய தந்தையின் பெயர் கருநந்தன். வேணாடு, தென் திருவிதாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளை ஆண்டான். தன்னை ஸ்ரீவல்லப பார்த்திபசேகரன் என்றழைத்துக்கொண்ட இவன் பாண்டியர் மேலாண்மையை ஏற்றவனாக இருந்தான். இங்கே சங்க இலக்கியத்தில் கூறப்படும் ஆய் மரபினரோடு நந்தன் என்ற பெயர் தொடர்பைப் பெறுகிறது. சங்க இலக்கிய நன்னனும் ஆய் மரபினனாகக் கூறப்படுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய் மரபினர் ஆண்டதாகக் கருதப்படும் திருவிதாங்கூர் பகுதியில் இன்றைக்கும் இரண்டு இடங்கள் நந்தன் பெயரால் அழைக்கப்படுகின்றன. ஒன்று கேரளா திருவனந்தபுரம் நகரத்திற்குள்ளிருக்கும் நந்தன் கோடு என்றழைக்கப்படும் இடம். மற்றொன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியிலிருக்கும் நந்தன் கோடு என்ற இடம். முற்காலத்தில் நன்னன் ஆய் இருந்ததாகக் கருதப்படும் பகுதியில் பிற்காலத்தில் நந்தன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்க ஒற்றுமை. இரண்டு காலத்திலும் அப்பெயர் மன்னர் என்ற பொருளிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. கோடு என்றால் மலை / குன்று / மேடு என்று பொருள். இதன்படி நந்தன் கோடு என்றால் நந்தன் மலை என்ற பொருளாகிறது.

களப்பிரர் காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் மைய வரலாற்றில் இடம்பெறுகின்றனர். யுவான் சுவாங் தென்னிந்தியாவில் கி.பி. 641, 642 ஆண்டுகளில் பயணம் செய்திருக்கிறார். அக்காலத்தில் தமிழ்ப் பகுதியில் ஜைனம் செழித்திருந்ததாகக் கூறுகிறார். அவர்கள் தொடர்பில் களப்பிரர் பல்லவர் காலங்களில் நந்தி என்ற பெயர் அழுத்தம் பெற்றிருக்கிறது. பல்லவர்களில் நந்திவர்மன், இரண்டாம் நந்தி வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் ஆகிய பெயர்களில் மன்னர்கள் ஆண்டனர். நன்னன் மரபில் வர்மன் என்னும் பெயரில் சிலர் உள்ளனர். இந்தப் பெயரைப் பல்லவர்கள் ஏற்றிருக்கலாம். நந்தி வர்மன் களப்பிரர்களையும் வென்றான். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் மீது நந்திக் கலம்பகம் பாடப்பெற்றிருக்கிறது. அந்நூல் பாடப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படும் கதையும் நந்த மன்னன் கதையும் ஒத்திருப்பதை ஏற்கெனவே கண்டோம்.

சோழர் வரலாற்றில் நந்த மன்னன் பற்றி நேரடிச் சான்றுகள் இல்லை. ஆனால், நந்த மன்னன் பற்றிய பிற்கால வழக்காறுகளில் அவன் சோழ சிற்றரசன் என்றே குறிப்பிடப்படுகிறான். அவனைப் பற்றிய தகவல்களும் சோழர் காலத்தின் பிற அம்சங்களோடுதான் ஒத்துப் போகின்றன. நந்த சோழன் என்பவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட தர்மவர்மாவின் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் வைணவ மரபினனாகக் கூறப்படுகிறான். நந்த சோழன் பற்றிய துல்லியமான வரலாறு விவாதத்திற்குரியதாக இருக்கிறது. உறையூர் அழகிய மணவாளர் கோயிலின் தலபுராணக் கதை மூலம் மட்டுமே இப்படியான பெயரை அறிகிறோம். நந்தன் என்பதற்கும் நாதன் என்பதற்கும் இடையே தொடர்பு இருப்பதைப் பார்க்கிறோம். கும்பகோணம் அருகே அமைந்துள்ள 108 வைணவத் தலங்களில் ஒன்று நாதன் கோயில். இங்கிருக்கும் தெய்வத்தின் பெயர் ஜெகந்நாதப் பெருமாள். நாதன் கோயில் திருநந்திபுர விண்ணகரம் எனப்படுகிறது. நந்திதேவர் வழிபட்டதால் இப்பெயர் வந்ததாகக் கூறுவர். ஆனால், இப்பெயரைப் பிரிக்கும்போது நந்தி, அகரம் போன்ற சொற்கள் உள்ளிருப்பதைப் பார்க்கிறோம். ஆங்குல மன்னர்களில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நந்தன் என்னும் பெயரில் சில மன்னர்கள் வாழ்ந்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை குறுநில ஆய் மன்னர்கள் நந்தன் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

m

நந்தன் என்ற பெயர் இன்றைக்குக் குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இருக்கிறது. சங்க இலக்கியம் தொடங்கி பிந்தைய காலங்கள் வரை அது எவ்வாறு இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைக்குத் தத்தம் சாதிகளைத் தொன்மையானவையாகக் காட்ட விரும்பும் எல்லோரும் சங்க இலக்கியங்களையே நாடுகின்றனர். நாங்கள் அக்காலத்திலேயே இருந்தோம், அதிலும் பெருமையோடு இருந்தோம் என்று சொல்வதற்குச் சங்க இலக்கியப் பிரதிகளையே எடுத்தாள்கின்றனர். ஆனால், சங்கக் குடிகளையோ, சிற்றரசுகளையோ, வேந்தர்களையோ இன்றைய சாதி அமைப்போடு இணைத்து சாதியமைப்பு என்றென்றைக்கும் மாறாமல் இருந்துவருகிறது என்பது போல் காட்ட முனைவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை. அதேவேளையில் சங்க இலக்கியங்கள் காட்டும் சமூகத்தில் வேறுபாடுகள் இருந்தன. அவற்றை இன்றைய சாதியமைப்புக்கு இணையானவையாகச் சொல்ல முடியுமா என்பது கேள்விதான். ஆனால், பின்னாட்களில் வலுப்பெற்ற சாதியமைப்புக்கு இக்காலக்கட்ட சமூக வேறுபாடுகளும் தொடக்கமாக அமைந்திருக்கலாம் என்பதே அறிஞர்கள் பலரின் கருத்தாகும். குறிப்பாக, சங்கப் பாடல்களின் மலை, காடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு சேகரிப்பு, பழங்குடித் தன்மை, குடித் தலைவர்கள் / சிறு அரசர்கள் ஆகியவற்றைத் தொல்குடி மக்கள் அடையாளமாகக் கொள்கின்றனர். அதே காலத்தில் இந்தச் சூழலை அழித்து உணவு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட உடைமைச் சமூகமும், பெருவேந்தர் மரபும் உருவானது என்பதையும் குறிப்பிடுகின்றனர். இவ்விரு போக்குகளின் முரண்பாட்டின் முடிவில் சிறுகுடி மரபினரும், சிறுகுடி அரசும் வீழ்த்தப்பட்டனர். அவர்களைப் பூர்வீகக் குடிகளாகக் கொள்வதோடு இன்றைய தாழ்த்தப்பட்டிருக்கும் சமூகங்களின் முன்னோடிகளாகக் கருதும் வாசிப்புகள் இங்கிருக்கின்றன. இவற்றில் மிகையும் குறையும் இருக்கலாம். ஆனால், அவை பொருட்படுத்தும் பார்வை என்பதில் சந்தேகமில்லை. ராஜ் கௌதமன் தன்னுடைய சங்க இலக்கியம் பற்றிய பார்வைகளில், சிறுகுடி வாழ்வைப் பேரரசும் பெரும் வைதீக மரபும் இணைந்து விளிம்புக்குத் தள்ளியதை விரிவாக விளக்கியுள்ளார். இதன்படி பார்த்தால் சிறுகுடி, சிற்றரசு என்பவற்றை இன்றைய தலித்துகள் உள்ளிட்ட விளிம்புநிலையினரின் வாழ்வோடு ஒப்பிடத் தோன்றுகிறது. கேப்டன் எஸ்.கலியபெருமாள் தன்னுடைய ‘நாடாளும் பழங்குடி’ என்ற நூலில், நம் இலக்கியங்களில் அரசர்களாகப் பார்க்கும் பலரும் பழங்குடித் தலைவர்களே என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகளின் வழி விளக்குகிறார். ஒரு குடியிலிருந்தே பிற குடிகள் பரவியிருக்க முடியும் என்றும் கருதுகிறார். வேணாடு சார்ந்து எயினப் பறையர் என்றழைக்கப்பட்ட குடிகள் இருந்ததாக அவர் கூறுகிறார். எயினப் பறையர் என்ற வார்த்தையை கே.ராஜய்யனும் கையாள்கிறார்.

சங்கப் பாடல்களில் மூவேந்தர்களை விட சிற்றரசர்களே அதிகம் பாடப்பட்டுள்ளனர். கடையெழு வள்ளல்கள் யாவரும் பழங்குடியினச் சிற்றரசர்களே. எழுவரில் ஒருவரும் பெருவேந்தர்கள் இல்லை. இந்த வள்ளல்கள் பெரும்பாலும் மலைகளில் வாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டதாகக் கூறப்படும் பகுதிகள் யாவும் இன்றைக்கும் காடுகளாகவும் மலைகளாகவும் இருக்கின்றன. பிற மன்னர்களுக்கு இல்லாத மாண்ட கதைகள், பாடல்கள், நினைவுகள் இவர்களுக்கே இருக்கின்றன. பொதுவாக, சங்க இலக்கியத்தைத் தங்கள் சாதிக்கான ஆதாரமாக எடுத்துக்கொள்பவர்கள் வளமான திணையையோ பேரரசர்களையோ தான் தங்களுடையதாகக் காட்ட விரும்புகின்றனர். சிறு மரபினரைக் காட்டுவதில்லை. ஆனால், அங்கு சிறு மரபினரின் எச்சங்களைக் கொண்ட சிறு சமூகக் குழுக்கள் பரவலாக இருப்பதைப் பார்க்கிறோம். அதியன், பாரி, நன்னன் போன்ற சிறுகுடி மரபினர் மலைகளையே ஆண்டனர். நன்னன் ஆண்டதும், அவரோடு நந்தன் மரபின் கதை இணைந்ததையும் இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ளலாம். நன்னன் பாரம் நாட்டை ஆண்டார். பாரம் என்றால் மலை / பாறை என்று பொருள். ப.மு.மதுரையார் எழுதிய ‘அகப்புறச் சமயங்கள்’ என்ற நூலில் பறையர் என்ற பெயரைப் பாறைகளைக் கொண்ட மலைகளோடு இணைக்கிறார். பாரம் என்ற சொல்லை வைத்தே மல+பாரம் = மலபார் என்ற சொல் உருவாகியிருக்கிறது. இன்றைக்கும் கேரளாவில் மலையைக் குறிக்கக் கூடிய கோடு என்பதைக் கொண்ட நிறைய ஊர்ப்பெயர்கள் உண்டு. காசர் கோடு வட்டாரத்தில்தான் நன்னனைப் பற்றிய நினைவுகள் உலகின்றன. நன்னனைப் பற்றிய நினைவுகள் அவனை இன்றைக்கு மடிகர் என்கிற தோல் பணியிலீடுபடும் தலித் சாதியோடு இணைத்துப் புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். திருவனந்தபுரம் நந்தன் கோடு என்ற இடப்பெயர் மலையை நந்தனோடு தொடர்புப்படுத்துகிறது. மலைபடுகடாமில் நன்னன் மலையரசனாகவே சொல்லப்படுகிறான்.

புறநானூற்றில் (பாடல் 335) இடம்பெறும் பாணன், பறையன், துடியன், கடம்பன் என்னும் வரிகளில் இடம்பெறுவோரை அன்றைய சாதிகள் என்று முழுமையாகக் கொள்ள முடியாவிட்டாலும் குழுக்கள் என்ற முறையில் தொல்குடிகள் என்று கருதலாம். சங்கப் பாடல்களில் இவ்வாறு நிறைய குடிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் இசையோடு தொடர்புடைய பெயர்களைப் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது தொல்குடிகள் பாணர் மரபினர்களாக இருந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களுக்குப் பெரும் சமூக மதிப்பு இருந்ததையும் பின்னர் சமூக மதிப்பு இழந்ததையும் பாணர் ஙீ புலவர் என்ற எதிர்மறையில் வைத்து அறிஞர்கள் விளக்கியிருக்கின்றனர். பாணர்கள் மலைகளில் வாழ்ந்த சிற்றரசர்களைச் சார்ந்தவர்களாக இருந்திருப்பதைப் பார்க்கிறோம். சங்கப் பாடல்களில் இவ்வாறு குறிப்பிடப்படும் குடிகள் இன்றைக்கும் கேரளாவில் தலித் சாதிகளாகக் குறிப்பிடப்படுவதையும், தொன்மையான கோயில்களில் பூசாரிகளாக இருப்பதையும் பார்க்கிறோம். புறநானூற்றுப் பாடலில் இடம்பெறும் கடம்பர் என்னும் பெயரிலேயே கேரளாவில் ஒரு தலித் சாதி பூசக மரபோடு தொடர்புடையதாக இருக்கிறது. பதிற்றுப்பத்தில் “கடம்பின் பெருவாயில் நன்னன்” என்று குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் கடம்போடு தொடர்புடைய ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் நத்த மேடுகளுக்கு அருகில் உள்ளன. சோழ நாட்டில் கடம்பன்குடி, கடம்பூர், செரு கடம்பூர் போன்ற பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. ஆதனூர் அருகே மேல் கடம்பூர் என்ற ஊர் உள்ளது.

இதேபோல குறுநில மன்னர்கள் பலரும் பறவைகளோடு தொடர்புப்படுத்தப்படுகின்றனர். பறம்பு நாடு பாரியுடையதாகப் படிக்கிறோம். பறவைகளைப் பேணி வளர்த்ததால் அப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. யாப்பருங்கலப் பாடலொன்று பாரியின் நாட்டைப் பறநாடு (பறவை நாடு) என்றே அடையாளப்படுத்துகிறது. பறையர் என்பதற்கு இவ்வாறு பாறை, பறவை போன்ற சொற்கள் காரணமாக இருந்திருக்குமா என்பது யோசிக்க வேண்டியதாகும். நன்னனின் பார நாடு என்பதோடும் இச்சொல் தொடர்பு பெறுகிறது. அகநானூறு (356) “நன்னன் பறம்பில்” என்று குறிப்பிடுகிறது. நன்னனின் பறம்பு என்பதற்குக் காரணமாகப் பறவைகள் அல்லது பாரம் நாடு என்று எதுவும் காரணமாக இருக்கலாம். அகநானூற்றின்படி பார்க்கும்போது பாரியின் பறம்பு மலையை நன்னன்களில் ஒருவனே கூட ஆண்டிருக்கலாம் என்று கருத முடிகிறது. கபிலர் பாரி மகளிரை நன்னன் மருகனிடம் மணம் செய்துகொள்ள வேண்டினார் என்ற தகவலை இங்கு நினைவுப்படுத்திக்கொள்ளலாம். நன்னனும் பாரியும் ஒரு குடியாக இருந்தது கூட கபிலரின் இந்த வேண்டுகோளுக்குக் காரணமாக இருக்கலாம். கேரளாவில் இன்றைய ஏழில் மலைக்கு அருகில் பாரம் என்ற ஊர் உள்ளது. பாரத்தைச் சுற்றி முரம்பு மேட்டிடம் இருக்கிறது. அவ்விடம் கோட்டப்பாறா (கோட்டை + பாறை) என்றழைக்கப்படுகிறது. பறம்பிலுள்ள முரம்பு நிலத்தில் இரும்பு ஆயுதங்களுக்குச் சாணை பிடிக்கப் பயன்படும் குருந்தக் கல் கிடைக்கிறது. இதைத் தொழிலாகச் செய்யும் காரோடன்மார் நன்னன் பறம்பில் இருந்ததாக அகநானூறு (356) காட்டுகிறது. இச்செய்திகளை எடுத்துக்காட்டும் பி.எல்.சாமி இந்தக் காரோடர்களே பிற்காலத்தில் பறம்பர் மற்றும் உறைகாரர் என்று அழைக்கப்பட்டனர் என்கிறார். இந்தச் சாணைக்கல் தீட்டும் வேலை பின்னாட்களில் தோல் உறை தைக்கும் பணிக்கும் நகர்ந்ததாக அவர் கருதுகிறார். இன்றைக்கு அப்பகுதியில் வாழும் மடிகர் அல்லது பறம்பர் சாதியினர் நன்னன் வழியினராக அறியப்படுகின்றனர். நன்னன் மரபினர் தோல் தொழிலோடு தொடர்பு பெற்றிருந்ததால் பின்னாட்களின் சாதிய அமைப்புப்படி தோல் தொழில் செய்யும் இழிசாதியினர் என்றாக்கப்பட்டனர். அதோடு நில்லாமல் பறம்புக்கு உரியவனாக இருந்த நன்னனையும் அக்குலத்தவன் என்றும், நன்னன் பாதுகாத்த பொன்னைத் தோல் நாணயங்கள் என்றும் கதை கட்டியிருக்கின்றனர். இவ்வாறு நந்தர்களின் கதையும் நன்னன் கதையும் இணைக்கப்பட்டிருக்கிறது. பழைய சேர நாடாகிய கேரளாவில் வழங்கப்பட்ட கதை தமிழ்ப் பகுதியின் சோழ பகுதியில் நந்த மன்னனின் கதையாக உலவுகிறது. இக்கதை எப்பகுதியிலிருந்து எவ்வாறு சென்றிருக்கும் என்பதை அறியும்போது நந்த மன்னன் கதையின் மற்றொரு பரிணாமத்தை அறிய முடியும்.

பாரி, நன்னன் மட்டுமல்ல ஆய் அதிகனும் பறவையோடு தொடர்பு பெறுகிறான். ஆய்குடி ஊரில் தோன்றியவனான இம்மன்னனும் பறவைகளைப் பேணிக் காத்தவன் என்று கூறப்படுகிறான். பறவைகளை வளர்த்தவன் என்பதால் பறந்தலை என்ற பெயர் பெறுகிறான். நன்னனின் பாழி மீது ஆய் அதிகன் படையெடுத்தான். நன்னன் பாழிக்காகப் போராடி வென்றான். ஆய் எயினன் இறந்தான். இறந்த ஆய் எயினனை அவன் வளர்த்த பறவைகள் காத்தன என்று சொல்லப்படுகிறது. மரங்கள் குலக்குறியாக இருந்ததுபோல் பறவைகளும் இருந்திருக்கின்றன. சிறுகுடி மரபுகளின் பறவை பேணும் போக்கிற்கும், பௌத்தக் கதைகளில் புறாவிற்குத் தன் தசையை அளித்த மன்னன் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. பழங்குடி மரபுகளுக்கும் சிரமண மரபிலான பௌத்தத்திற்கும் இடையேயான தொடர்பு விரிவானது. அதே வேளையில் அவை புலப்படும் வடிவில் இல்லாமல் சூக்கும வடிவில் இருக்கின்றன. விரிவான ஆய்வுக்கான களம் அது. இன்றைய கேரளாவின் பண்பாட்டு மரபுகளில் பௌத்தம் ஆழமாக வேரோடி கிடக்கிறது. அது சேரர்களின் வரலாற்றிற்கும் இட்டுச் செல்கிறது. சேரர்களின் இனக்குழு தடங்களில் பௌத்தத்தின் தொடர்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது. மற்ற வேந்தர்களோடு ஒப்பிடுகையில் சேரர்களின் மரபு பழங்குடித் தன்மையோடும், வைதீக மயத்திற்கு வெளியிலும் இருப்பதைக் கூட இவற்றோடு சேர்த்துப் பார்க்கலாம். இந்தத் தேடல் வழியாக நன்னன் மரபிற்குப் பௌத்தத் தொடர்பு இருந்ததா என்று பார்க்க வாய்ப்பிருக்கிறது. கேரளக் கல்வெட்டுகளில் உதியனோடும், சேரனோடும் நன்னனைத் தொடர்புபடுத்துகின்றனர். நன்னன் பகுதியாகிய ஏழில் மலை என்பது மூலிகை நிரம்பிய மலை. ஏழில் மலையில் உள்ள மடாயு கோயில் ஆரம்பத்தில் பௌத்தத் தலமாக இருந்தது என்று கூறப்படுகிறது. இங்கு புத்தர் வந்து சென்றார் என்று நம்பப்படுகிறது. கேரளாவில் புகழ்பெற்றிருக்கும் ஆயுர்வேத வைத்தியம் பௌத்த மரபின் தாக்கம் என்று கூறப்படுகிறது. ஏழில் மலைவுக்குப் பக்கத்தில் பௌத்தத் தடயத்தைக் குறிக்கும் தர்மபட்டணம் இருக்கிறது.

பண்டைய கேரளாவின் வடக்குப் பகுதியில் மூஷிக என்ற அரச மரபு இருந்தது. ஏலி மலையை மையமாக வைத்து அவர்கள் ஆண்டனர். எலியைக் குறிப்பிடக் கூடிய வகையில் மூஷிக எனத் தோன்றியது என்றும் கருதுகின்றனர். மூஷிக என்பதற்கும் மூரிய (மௌரிய) என்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்று கருதுவோரும் உண்டு. மூஷிக மரபின் முதல் ஆட்சியாளர் பெயர் நந்தனன். இவர்களை இராமாயணத்தோடு தொடர்புப்படுத்திய கதைகள் பின்னாட்களில் தோன்றின. இதே பகுதியில் நன்னன் நினைவுகளும் இருக்கின்றன. மூஷிக வம்சம் என்ற வடமொழி நூலில் பிற்காலத்தில் ஆண்ட அரசர் பெயர் வரிசையில் நன்னன் பெயரும் அதோடு மூவன் என்ற பெயரும் இருப்பதாக பி.எல்.சாமி குறிப்பிடுகிறார். மூவன் என்ற பெயர் மூத்த, முதல் போன்ற பெயர்களோடு தொடர்பைப் பெறுகிறது. அரசன், தலைவன், இறைவன், துறவி போன்றோரை இப்பொருளில் பார்க்கலாம். கேரளாவில் முதுவான் என்ற தொல்குடியினர் இன்றும் இருக்கின்றனர். மூவன் என்ற பெயர் புறநானூற்றில் (209) வருகிறது. மூவன் என்ற பெயரோடு மூவன் சேய் என்ற தலைவனின் பெயரும் சேர்த்தே அறியப்படுகிறது. இவற்றை மூத்த, இளைய என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம். நன்னன் மரபிலும் நன்னன் என்ற பெயரும் நன்னன் சேய் என்ற பெயரும் இடம்பெறுகிறது. கேரளாவிலுள்ள மூலவாசம் என்ற பௌத்தக் கோயிலுக்குக் கருநந்தன் என்ற அரசன் நிலதானம் அளித்திருக்கின்றான். இடைக்கால தமிழக கேரள வரலாறுகளில் கருநந்தன் அவர் மகன் நந்தட்டன் ஆகியோர் காணப்படுகின்றனர். கேரளாவில் நந்த மங்கலம் என்ற ஊரும் உள்ளது. ஆதனூரும் இருக்கிறது. அதேபோல ஆனைமலையும் இருக்கிறது. ஆனைமலையில் நன்னன் வாழ்ந்தான் என்று கருதப்படுகிறது. ஆனைமலையின் பழைய பெயர் நன்னனூர்.

பௌத்த ஜாதகக் கதைகளைத் தழுவி சோழப் பகுதியில் அரசர்களின் கதைகள் இருக்கின்றன. காந்தமன், முசுகுந்தன், சிபி, மாவலி, மனுநீதி என்று புத்த ஜாதகக் கதைகளில் குறிப்பிடப்படும் மன்னர்கள் சோழ அரசர்களின் முன்னோர்களாக இம்மன்னர்கள் குறிப்பிடப்படுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். அந்த வரிசையில் இடங்கை வலங்கை சரித்திரத்தில் ராவணனும் நந்தனும் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது. நன்னன் நந்தன் என்கிற இரண்டு மரபுகள் ஊடாடிக்கொள்கின்றன. இதனை சேர நாடு, சோழநாடு என்கிற நிலப் பகுதிகளின் சந்திப்பாகவும் பார்க்கலாம். சேர நிலத்தில் நன்னன். சோழ நிலத்தில் நந்தன். பொறையர், ஆதனூர் போன்ற பெயர்கள் சோழ நிலப் பகுதியில் மிகுந்திருப்பதற்கு இந்தத் தொடர்பும் காரணமாக இருக்கலாம்.

சங்க இலக்கிய சிறுகுடிகள் ஆண்டதாக / வாழ்ந்ததாகக் கூறப்படும் பகுதிகள் மலைகளும் காடுகளும் சார்ந்ததாக இருப்பதை மேலே குறிப்பிட்டோம். தகடூர் என்ற இன்றைய தர்மபுரி தொடங்கி திருக்கோவிலூர் வரையிலான பரப்பு இந்த வகையில் முக்கியத்துவமுடைய பகுதிகளாக விளங்குகின்றன. வடக்கே வேலூர் வரையிலும் இவற்றை அடக்கலாம். சங்கப் பாடல்களில் இடம்பெறும் அதியமானை அறிவோம். நன்னன் போல அதியமான் பரம்பரையும் வளர்ந்திருக்கிறது அல்லது அவர் பெயரைப் பொதுப்பெயராகச் சூடி வந்திருக்கிறார்கள். அதியமானின் வழக்கு பெயர் அதிகமான். அதிகமான்களின் பெயர் வரலாற்றில் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரையில் காணப்படுகிறது. அவனையும் ஔவையையும் தொடர்புபடுத்தும் வழக்காற்றுக் கதைகள் பிற்காலத்தில் தோன்றியவை. 13ஆம் நூற்றாண்டு வரையில் அப்பெயருடையோர் தனித்தும், சோழ சிற்றரசராகவும் ஆண்டுள்ளனர். தருமபுரி, நாமக்கல் தொடங்கி போளூர் வரையிலும் ஆண்டுள்ளனர். போளூர் வட்டாரத்தில் நன்னனின் நவிரமலை முடிகிறது. நந்தன் கதை அங்குள்ள படவேட்டில் வேரூன்றியுள்ளது. திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள ஜம்பை கல்வெட்டில் சத்யபுத்திரர் என்று சொல்லப்பட்டிருப்பது அதியமான்தான் என்று அறுதியிட்டுள்ளனர். அதியமானோடு தொடர்புடைய ஔவைக்கு இங்கிருக்கும் ஆத்தூர் பகுதியில் (முக்குடி) கோயில் இருக்கிறது. பாரி மகளிருக்கு ஒரே பந்தலின்கீழ் திருமணம் செய்து வைத்தபோது மூவேந்தர்களும் வந்து வாழ்த்தியது இங்குதான் என்று நம்பப்படுகிறது. அதிகமான்கள் சைவம் வைணவம் ஆகிய இரண்டிற்கும் உதவியவர்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களின் சிரமணத் தொடர்புக்கான பதிவுகள் விரிவாகக் கிடைக்கின்றன. தருமபுரி, அதமன் கோட்டை (அதியமான் கோட்டை) பஸ்திபுரம் ஆகிய இடங்களில் ஜைன உருவங்கள் கிடைத்தன என்பதையும், தருமபுரியில் ஜைனப் பள்ளி அமைந்திருந்தது என்பதையும் கே.கே.பிள்ளை குறிப்பிடுகிறார் (தமிழக வரலாறும் பண்பாடும்). சத்யபுத்திரர் என்று குறிப்பிடும் மற்றொரு சான்று அசோகனின் கல்வெட்டாகும். போளூர் திருமலை ஜைனக் கல்வெட்டிலும் அதிகமான் குறிப்பிடப்படுகிறார். இக்கல்வெட்டில் அதிகமான்களின் கேரளத் தொடர்பு கூறப்படுகிறது. அதியமான் மரபினரோடு ஜைன மரபின் தொடர்பைக் காண்கிறபோது கன்னடத் தொடர்பை அறிய முடிகிறது. இதன் மூலம் நன்னன் போலவே அதியமானுக்கும் தமிழக – கேரள – கன்னடத் தொடர்பு கிடைக்கிறது.

பாரி மகளிர் திருமணத்தை ஔவையோடு தொடர்புபடுத்திக் கூறும் இப்பகுதியில் கபிலர் தொடர்பும் வந்துவிடுகிறது. அதாவது, பாரி மகளிரை மலையமான் அரச மரபினரிடம் ஒப்படைத்த கபிலர் அதன் பின் கனல் புகுந்து உயிர் துறந்தார் என்ற பிற்கால கதை நிலவிவருகிறது. அவர் வடக்கிருந்து உயிர் துறந்ததாகவும் கூறப்படுகிறது. வடக்கிருத்தல் ஒரு சிரமண மரபு என்பது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கதாகும். இறந்தோரைக் கல்லால் மேடுபடுத்தி வணங்குவது பழம் மரபு. திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் பெரும் பாறை ஒன்று இன்றும் இருக்கிறது. அந்தப் பாறையின் மீதே கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்று நம்பப்படுகிறது. அந்தக் கல்லின் மீது பிற்காலத்தில் லிங்கம் வைக்கப்பட்டு அதனைச் சுற்றிச் சிறு கோயிலும் கட்டப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. அந்தக் கல் கபிலக்கல் அல்லது கபிலர் குன்று என்று அழைக்கப்படுகிறது. அது மக்களால் இருளன் கல் என்று வழங்கப்பட்டு, பிரதிவழி கதையின் செல்வாக்கால் கபிலக் கல் என்ற பெயராகவே தற்காலத்தில் நிலைத்துவிட்டது. இருளர்கள் அந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மரபினராவர். அவர்களுடைய நினைவுக்கல் மீது கபிலர் உயிர் துறந்த நினைவின் கதை ஏற்றப்பட்டிருக்கலாம் அல்லது கபிலரின் பழங்குடி பண்புத் தொடர்பைக் காட்டுவதாகவும் கொள்ளலாம். இப்பகுதியில் மலையமான்கள் என்ற மரபினர் ஆண்டனர். சங்கப் பாடல்களில் காணப்படும் இவர்கள் பெயரில் நன்னன் அதியமான் போல பிற்காலம் வரையிலும் மன்னர்கள் (சிற்றரசர்கள்) இருந்திருக்கிறார்கள். மலையமான்கள் சோழர்களோடு உறவு ஏற்படுத்திக்கொண்டனர். சங்கப் பாடல்களில் மலையமான் திருமுடிக்காரி பற்றி கபிலர் பாடல்கள் (புறநானூறு 121, 122, 123, 124) பாடியிருக்கிறார். பிற்கால மலையமான்கள் மலைமான், சுருதிமான், நத்தமன் என்ற மூன்று பிரிவினராக விளங்கினர். இதில் நத்தமன் பிரிவினர் நத்த மலையமான் எனப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் நத்த மன்னர் இருந்ததாகத் தெரிகிறது. மலையமான் மரபினர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் குழுவினர் நத்த மன்னர் நினைவுகளை இன்றைக்கும் பார்க்கிறோம். திருவண்ணாமலை திருவூடல் வீதியில் பார்க்கவகுல நத்த மன்னர் மடம்  இருப்பதை இன்றைக்கும் பார்க்கலாம். இம்மன்னர்களின் நகரம் மலாடு அல்லது மலையமான் நாடு என்றழைக்கப்பட்டது. அயோத்திதாசர் மடாலபுரம் என்ற பௌத்தர்களின் ஊர்ப்பெயரொன்றைக் குறிப்பிடுகிறார்.

(தொடரும்…)

l stalinrajangam@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger