மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

5

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ அச்சில் வெளியாகி பரவலான பின்னால் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. இதற்கான புலப்படும்படியான சான்றுகள் அதிகம் கிடைக்கவில்லை. எனினும், சில குறிப்புகளை உவேசா எழுதிய ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து பெற முடிகிறது. அவற்றை வரிசையாகப் பார்க்கலாம்.

“அக்காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தன’த்தை இயற்றிப் புகழ் படைத்திருந்தார். பல இடங்களில் அந்தச் சரித்திரத்தைப் பிரசங்கம் செய்துவந்தார். தமிழ்நாடு முழுவதும் நந்தன் சரித்திரத்திற்கு ஒரு பிரசித்தி உண்டாகியிருந்தது” (ப.82) என்று கூறும் உவேசா, கீர்த்தனை வித்வான்களை எவ்வாறு பாதித்திருந்தது என்பதைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதாவது, உடையார் பாளையத்திற்கு அருகிலுள்ள பெரிய திருக்குன்றத்தில் உவேசாவின் அத்தை மகனுக்கு உபநயனம் நடந்தது. “அந்த விசேஷத்தில் ஒரு சங்கீத வித்வான் வினிகை நடத்தினார். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய கீர்த்தனைகளையும் தமிழ்நாடு முழுவதும் பரவிவந்த நந்தனார் சரித்திரத்திலிருந்தும் சில உருப்படிகளையும் பாடினார். கானடா ராகத்தில் உள்ள,

தீயினில் முழுகினார் – திருநாளைப் போவார்
தீயினில் முழுகினார்

என்ற கீர்த்தனத்தை மிக அழகாகப் பாடினார் (ப.103) என்கிறார்.

உவேசாவின் தந்தை:

உவேசாவின் தந்தை வேங்கடசுப்பையர், இராமாயணப் பிரசங்கியாகத் திகழ்ந்தவர். பிரசங்கத்தில் கீர்த்தனைகளை ராகத்தோடு பாடி விளக்கியவர். அவரின் இந்த அனுபவங்களை உவேசா விளக்கும்போதே அக்காலத்தில் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ பரவியிருந்தமைக்கான சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன.

“இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் பலர் நந்தனார் சரித்திரம் சொல்லும்படி என் தந்தையாரைக் கேட்டுக்கொண்டனர். அக்காலத்தில் நந்தனார் சரித்திரம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அதன் ஆசிரியராகிய கோபாலகிருஷ்ண பாரதியார் என் தந்தையாருடைய நண்பராதலின் அந்தச் சரித்திரத்தைச் என் தந்தையார் நன்றாகச் சொல்வாரென்பதை யாவரும் தெரிந்து கொண்டிருந்தனர். அதிலுள்ள கீர்த்தனங்களை அதன் ஆசிரியர் அமைத்த சங்கீத அமைப்புப் படியே எந்தையார் பாடுவார்.

பாரதியார் நந்தனார் சரித்திரத்தை இயற்றுவதற்குக் காரணம் இன்னதென்பது, அதனை இயற்றிய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் முதலியவற்றை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதும், இராமாயணப் பிரசங்கத்தின்போது அச்சரித்திரக் கீர்த்தனங்களைச் சொல்லிக் காட்டுவதும் உண்டு. பாரதியார் என் தந்தையாருக்கு அச்சரித்திரத்தின் அச்சுப்பிரதி ஒன்றை அளித்திருந்தார். அதை அவர் மிகவும் ஜாக்கிரதையாக வைத்துப் பாதுகாத்து வந்தார். அப்பிரதி இன்னும் என்னிடத்தில் உள்ளது. அன்பர்களது விருப்பப்படியே நந்தனார் சரித்திரம் ஆரம்பிக்கப் பெற்றது. என் தந்தையார் சிவபக்தியில் ஊறினவராதலின் அந்தச் சரித்திரத்திலே செறிந்து கிடக்கும் பக்திச் சுவையை நன்றாக வெளிப்படுத்தினார். இளம் பருவமுடையவர்களையும் உருக்கும் அமைப்பையுடையது அச்சரித்திரம். அதில் ஜனங்கள் அதிகமாக ஈடுபட்டனர். வர வரக் கூட்டம் மிகுதியாயிற்று. இந்தப் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களில் ஒன்றையேனும் பலவற்றையேனும் பாடம் பண்ணிக்கொண்டு பாடி உருகலாயினர். சங்கீதத்தின் வாசனையே அறியாதவர்களும் அவற்றை வாய்விட்டுச் சொல்வதில் ஓர் இன்பத்தை அடைந்தனர்.

நான் எங்கேயாவது போய்க்கொண்டிருப்பேன்; எங்கிருந்தோ, ‘பித்தந் தெளிய மருந்தொன் றிருக்குது’ என்று ஒரு தொனி உண்டாகும். மற்றோரிடத்தில் அபஸ்வரத்தில் ‘சிவலோக நாதனைக் கண்டு’ என்று ஒரு குரல் எழும்பும். கிழவர்களைக் காணும்போது சில இளைஞர்கள், ‘மீசை நரைத்து போச்சே கிழவா –  ஆசை நரைக்கலாச்சோ’ என்று பாடத் தொடங்கிவிடுவார்கள். சில இளம்பிள்ளைகள், ‘மார்கழி மாதந் திருவாதிரைநாள் வரப்போகுதையே’ என்று சொல்லிக்கொண்டு ஆடுவார்கள். வேதாந்த சாஸ்திரப் பரிச்சயமுள்ளவர்கள், ‘வாசியாலே மூலக் கனல் வீசியே சுழன்றுவர’ என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். இப்படி இளம்பிள்ளைகள், காளைப் பருவமுடையவர்கள், வயசு வந்தவர்கள், கிழவர்கள் ஆகிய எல்லோருடைய மனத்திலும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்கள் புகுந்து விளையாடின. ஒன்றும் அறியாத பெண் பிள்ளைகள், ‘நந்தன் சரித்திரம் நடக்குது’ என்று சொல்லிக்கொண்டு வந்து கேட்பார்கள். களத்தூரைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பலர் தினந்தோறும் வந்து கேட்டுச் செல்வார்கள்” (பக். 149, 150) என்று உவேசா எழுதியிருப்பதைக் காணலாம்.

உவேசா இன்றைக்கு மயிலாடுதுறை என்றழைக்கப்படும் மாயூரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ்க் கற்றபோது கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் சங்கீதமும் கற்றார். எனவே, பாரதியார் இயற்றிய நந்தனார் கீர்த்தனையில் உவேசாவுக்கு நல்ல பாடம் இருந்தது. கீர்த்தனையில் அவர் கொண்ட ஈடுபாடு பற்றியும் எழுதியுள்ளார். உவேசாவுடைய அத்தை மகன் உபநயன விழாவில் ஒரு சங்கீத வித்வான், நந்தனார் கீர்த்தனையிலிருந்து சில உருப்படிகளைப் பாடினார் என்று மேலே கண்டோம். அவர் பாடியது பற்றி உவேசா “அவர் பாடும் முறை என் மனத்தில் நன்றாகப் பதிந்தது. அக்கீர்த்தனமும் எனக்குப் பாடம் ஆகிவிட்டது. என் தகப்பனார் கற்றுத் தராமல் சில உருப்படிகளை இவ்வாறு கேள்வியினாலேயே நான் அறிந்து கொண்டதுண்டு. அவற்றை நானே பாடிக் கொண்டிருப்பேன். வேறு யாரிடமேனும் பாடிக் காட்டுவேன். என் தகப்பனார் முன்னிலையில் மட்டும் பாடுவதற்கு அஞ்சுவேன். ‘சிறு பையன் பாடுகிறான்’ என்று சொல்லி மற்றவர்கள் என்னைப் பாராட்டி ஊக்கம் அளிப்பார்கள். ஒரு நாள் அந்த உபநயனத்திற்கு வந்திருந்த சிலரிடம் என்னுடைய ‘சங்கீதத் திறமை’யைக் காட்டிக் கொண்டிருந்தேன். ‘எங்கே தீயினில் முழுகினார் என்பதைப் பாடு’ என்றார் ஒருவர். எனக்கு அந்தக் கீர்த்தனத்தைப் பாடுவதென்றால் அதிக உத்ஸாகம் உண்டு. ஆதலின் அதைக் கூடிய வரையில் நன்றாகப் பாடினேன்……” என்கிறார்.

நந்தனார் கீர்த்தனையோடு தொடர்புடைய மற்றொரு சம்பவமும் இருக்கிறது. உவேசாவின் மாணவரான கிவாஜவுக்குப் பெண் பார்க்கச் செல்கிறார்கள் உவேசாவும் கிவாஜவும். அதனை, “அப்பெண் ஆசிரியருக்குப் (உவேசா) பிரியமான கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் ஒன்றைப் பாடினாள். எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்தது. ஆகவே, என் சம்மதத்தைத் தெரிவித்தேன்” என்கிறார் கிவாஜ. அந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பாடத் தெரிந்திருக்கும் பட்சத்தில் வேறெந்தப் பாடலுக்கும் கூட இதே ‘விருப்பத்தை’ பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஆசிரியருக்குப் பிரியமான பாடலைப் பாடும்போது சம்மந்தம் உறுதி பெற்றது எனலாம்.

எதிர்ப்பு:

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ ஆதரவைப் பெற்றுவந்த அதேவேளையில், ஆரம்பத்தில் சில எதிர்ப்புகளையும் பெற்றுதான் நிலைபேறு அடைந்தது. இதற்குப் பொறாமை, புலமை மறுப்பு போன்ற பல காரணங்கள் இருந்திருக்கின்றன. மாயூரம் கூறைநாட்டைச் சேர்ந்த கவிராயர் ஒருவருக்கு இருந்த பொறாமை பற்றி உவேசா குறிப்பிட்டுள்ளார். பாரதியார் மீது வசை கவிதைகள் பாடி தாக்குமளவிற்கு அவரின் பொறாமை தீ இருந்திருக்கிறது.

கோபாலகிருஷ்ண பாரதியார் சந்தித்த மறுப்பு ஒன்று இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யை இயற்றியதும் அவரின் நண்பரும், திருவாவடுதுறை ஆதீனத்தின் தமிழ் ஆசிரியராயும் புலவராயும் விளங்கிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாயிரம் கேட்டார். ஆனால், கீர்த்தனையிலிருந்த பிழைகளைக் கூறி அவர் பாயிரம் கொடுக்க மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குச் சங்கீதத்தில் நாட்டமில்லை. இன்னொன்று,. பெரிய புராணத்திலிருந்த கதைப்பகுதியை பாரதியார் மாற்றியது. பிள்ளைக்குச் சங்கீதத்தில் விருப்பமில்லை என்பதை உவேசாவே தன் அனுபவத்திலிருந்து கூறியிருக்கிறார்.

உவேசா, பாடம் கற்பிக்கும் ஆசிரியரான பிள்ளைக்குச் சொல்லாமலேதான் பாரதியார் சங்கீதம் பயில்கிறார். பிள்ளைக்குத் தெரியவரும்போது, இசையில் அதிகப் பழக்கம் கொண்டால் இலக்கண இலக்கியங்களில் தீவிரமாகப் புத்தி செல்லாது என்று ‘நயமாக’ சொல்கிறார். பிறகு, சங்கீதப் பயிற்சிக்கு உவேசா செல்லவில்லை என்பது பிள்ளையின் உள்ளக்கிடக்கையை அவர் புரிந்துகொண்டார் என்றே சொல்ல வேண்டியுள்ளது. இதைவிட பிள்ளை சங்கீத விரோதி என்று பாரதியாரே ஓரிடத்தில் சொல்லி, அதனையும் தெரிந்து வைத்திருக்கிறார். இதையெல்லாம் மீறி கீர்த்தனையில் இருந்த பாடலைக் கேட்கும் தருணமொன்றில் அதன் ராகம், தாளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுச் சிறப்புப் பாயிரம் தந்தார் பிள்ளை என்று சொல்லப்படுகிறது. இப்போதும் அதைப் பார்க்கலாம். பாயிரத்தில் நூல் இயற்றப்பட்டமைக்கும் நூலாசிரியருக்கும் வாழ்த்துக் கூறப்பட்டுள்ளதே தவிர, கதை பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. இவற்றைத் தவிர கீர்த்தனையை எதிர்த்துப் பாடல் இருப்பதை க.கைலாசபதி எடுத்துக் காட்டியுள்ளார்.

“நந்தன் சரித்திரத்தை கேளாதே – நாளும்
வந்த தரித்திரந்தான் மாளாதே
……………..     ………. ……….
பெரிய புராணத்திலே இருப்பதை விட்டுப்
பேய்தன மாகஇவன் சொன்னதைத் தொட்டு
அரிய புலவர்க்கு வந்ததே சொட்டு
ஐயையோ அத்தனை யுங்கதைக் கட்டு”

என்பதே அப்பாட்டு.

காஞ்சி பெரியவரின் கணிப்பு:

இதைவிட கீர்த்தனைப் பற்றி காஞ்சி காமகோடி பெரியவர் கூறிய கருத்துதான் முக்கியமானது. ‘தெய்வத்தின் குரல்’ நூலின் ஆறாம் பகுதியில் இதற்கு அவர் இட்டிருக்கும் தலைப்பு ‘உண்மையை வென்ற கற்பனை’. அதாவது, நந்தனார் கதை இன்றைக்கு உண்மை என்று கருதப்பட்டாலும் அது கற்பனை என்பதுதான் அவரின் கருத்து.

அவர் இம்முடிவை எடுப்பதற்குக் காரணம் அது பிராமணர் ஒருவரை மோசமாகக் காட்டியிருப்பதால்தான். பிராமணரை மோசமாகக் காட்டாத, ஆனால் நந்தனார் கீர்த்தனையைவிட மிகுகற்பனை கொண்ட நூல்கள் எவற்றையும் இவர் இவ்வாறு மறுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கதாகலாசேபக்காரர்கள், காந்தியத் தேசாபிமானிகள் இக்கதையைப் பெரிது பண்ணிவிட்டார்கள் என்று சொல்வதன் மூலம் இக்கதை பரவக் காரணமானவர்களை ஒருவாறு குறிப்பிட்டுவிடுகிறார். இவர் விசனப்படுவது போல் பிராமணரை மோசமாகக் காட்டியிருந்தாலும் கடைசியில் மனம் திருந்துபவர்களாக – நந்தனாருக்கு வழிகாட்டுபவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மேன்மை பழுதாகவில்லை. பண்ணைக்காரரைக் கண்டனம் செய்வதில் பாரதியாரைவிட நொண்டி நாடக ஆசிரியர்களே சாதித்திருக்கிறார்கள் என்று க.கைலாசபதி கூறியிருப்பதையும் இங்கு ஒப்பிட்டுக்கொள்ளலாம். எனவே, பண்ணையார்களை மோசமாகச் சித்திரிப்பது பாரதியாருக்கு முன்னமே இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம். ஆனாலும் காஞ்சி பெரியவர் கீர்த்தனையின் கலையழகை ஒத்துக்கொண்டு, கதையில் மட்டுமே மாறுபாடு கூறியுள்ளார்.

எது எப்படியிருப்பினும் ஆதரவாகவோ மறுப்பாகவோ நந்தனார் கதைக்கு ஒரு ஏற்றம் கிடைத்தது என்பது மட்டும் உண்மை. பெரியபுராணத்தில் இருந்த நந்தனார் கதை மறு நினைவுக்குக் கொணரப்படக் காரணமானது கோபாலகிருஷ்ண பாரதியாரின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’தான். இன்னும் சொல்லப்போனால் பெரியபுராணத்தில் இப்படியான கதை இருந்ததென்று தெரிவதற்கே ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’தான் காரணம். பெரியபுராணத்திலிருந்து வேறெந்தக் கதையும் இவ்வாறு எடுத்தெழுதப்படவில்லை; புகழ் பெறவும் இல்லை.

பா வடிவில் நூல்கள்:

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ பல்வேறு வடிவங்களில் பரவிக்கொண்டிருந்தபோது அதன் அச்சுப் பதிப்புகளும் பெருகிவந்தன. மறுபுறம் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் கதையைப் பகுதியாகவோ, முழுமையாகவோ தழுவி சிற்சில மாற்றங்களோடு நூல்கள் வெளியாயின. அவற்றுள் மரபான பாடல் வடிவில் வெளியான சில நூல்களைக் கூற முடியும்.

ஏலச் செய்யுளாக அமைந்த ‘திருநாளைப் போவாரென்னும் நந்தனாரேலப்பாட்டு’ என்னும் நூல் 1900ஆம் ஆண்டு வெளியானது. ஓ.சி.சோணாசல முதலியார் எழுதி பு.கனகசபை நாயகர் பார்வையிட்டு இந்நூல் வெளியானது. அடுத்ததாக சிந்து வடிவிலான நூல் 1917ஆம் ஆண்டு கும்பகோணம் கே.வி.கதிர்வேல் பிள்ளை எழுதி ‘நாயன்மார்களில் ஒருவராகிய திருநாளைப்போவாரென்னும் நந்தனார் சரித்திரத் திருப்புகழ்ச் சிந்து’ (முரஹரி அச்சுக் கூடம்) வெளியானது. 1918ஆம் ஆண்டு ராஜவடிவேல் தாஸர் எழுதிய ‘அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சரித்திரக் காவடிச் சிந்து திருப்புகழ்’ வெளியானது. இவற்றுள் ‘நந்தனாரேலப் பாட்டு’ நூல் மட்டுமே படிக்கக் கிடைத்தது. இந்நூல்கள் அனைத்தும் பெரியபுராணத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டவையாக இருக்கின்றன. பெரியபுராணம் தரும் ‘நாயன்மார்’ என்னும் தகுதியைத் தலைப்பிலேயே கொண்டிருந்தன.

அதேவேளையில் பாரதியாரின் நந்தனார் கீர்த்தனை கதையாடலையும் உட்கொண்டிருந்ததை அறிய முடிகிறது. மொத்தத்தில் பெரியபுராண திருநாளைப் போவாரையே பாரதியாரின் நந்தனார்தான் மறுநினைவுக்குக் கொணர்ந்தார் என்று கருதுவதில் பிழையில்லை. இதே காலத்தில் ‘திருநாளைப் போவார் என்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, சிதம்பரக் கும்மி’ (ஐதீகப் படங்களுடன்) என்ற பதிப்பு வெளியானது (1926). பி.நா.சிதம்பர முதலியார் பிரதர்ஸ் பதிப்பித்த இந்நூலை வித்தியாரத்நாகர அச்சுக்கூடம் வெளியிட்டது. நூலின் இடையிடையே கதையை விளக்கும் சித்திரப் படங்கள் இடம்பெற்றிருந்தன. நூலின் பின்னட்டையில் “இதில் ஆங்காங்கு ஐதீகப்படி போட்டோ படங்களும், சுவாமி அம்மன் திருவுருவப் படமும் நந்தனார் யாகக் குண்டத்தில் முக்கியடையும் ஆப்டோன் படமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் நந்தனார் கதை அடுத்த பரிமாணத்தை அடைந்தது எனலாம். அதாவது, கதை என்ற வடிவம் மெல்ல மெல்ல வரலாறு என்ற நிலையை அடையத் தொடங்கியது.

கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் கதையை மட்டும் எழுதவில்லை. ‘நடந்தவை’ என்பதைக் குறிப்பதற்காக அப்போது துலங்கிவந்த ‘சரித்திரம்’ என்ற சொல்லையும் தலைப்பில் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப் பின்பற்றி எல்லாப் பிரதிகளும் சரித்திரம் என்ற சொல்லை மறக்காமல் இணைத்துக் கையாண்டன. இப்பிரதிகளில் நந்தனார் பிறந்த ஊரைக் குறிப்பிடும்போது “காவிரி பாயும் கொள்ளிடம் அருகே உள்ள ஆதனூர் என்னும் ஊரின் புலைச்சேரியில்” என்று கால – இடக் குறிப்புகள் இயைய சொல்லப்பட்டபோது நந்தனாருடைய இருப்பு வரலாற்று உண்மையாகவே பொருள் தந்தது.

உரைநடையில் நந்தனார் கதை:

மரபான புலவர்களால் மட்டுமல்லாது செல்வாக்கு பெற்றுவந்த உரைநடை வடிவிலும் நந்தனார் கதை எழுதப்பட்டது. நாவல், நடைச் சித்திரம், கட்டுரை என்னும் வடிவங்களில் இக்கதை எழுதப்பட்டது.

1917இல் ‘நந்தன்’ என்னும் பெயரில் 129 பக்கங்கள் கொண்ட நூல் வெளியானது. இதை நாவல் என்றும் கூறலாம். திருச்சேறை குடிக்கந்தாடை ஆ.கோபாலஸ்வாமி ஐயங்கார், கோ.ஆராவமுத ஐயங்கார் எம்.ஏ ஆகிய இருவரும் சேர்ந்து எழுதி சீனிவாச வரதாச்சாரி அண்ட் கோ வெளியிட்டிருக்கிறது. உரைநடை வடிவில், 8 அத்தியாயங்களில் அமைந்த கதைப் புத்தகம் இது. கோபாலகிருஷ்ண பாரதியாரின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ கதையை அடிப்படையாக வைத்துக் கூடுதலாகச் சிலவற்றைச் சேர்த்தும் விளக்கியும் எழுதியுள்ளனர். நந்தனார் கதையில் எழும் கேள்விகளைக் கணக்கெடுத்துக்கொண்டு நவீன காலத்தின் பின்புலத்தில் அவற்றிற்கு விடை தேடியும் இந்நூல் விரிந்துள்ளது. கீர்த்தனையில் இல்லாத பாத்திரங்கள், உரையாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

llustration : Ravi palette

நந்தன் (1917):

கதையின் தொடக்கத்திலேயே சிவ பக்தியில் மூழ்கியவராய் நந்தனார் அறிமுகமாகிறார். பறையர் ஒருவர் அவருக்கான சாமிகளை விடுத்துச் சிவபெருமானை வணங்குவது புதுமையாகப் பார்க்கப்படுகிறது. அதனால் அவரை ஊரார் பிரமை பிடித்தவன் என்றெண்ணி நெருங்கப்  பயப்படுகிறார்கள். பிராமணர் ஒருவர் ஜோசியம் பார்த்துவிட்டு மந்திரவாதியை அழைத்துவரச் சொல்கிறார். மந்திரவாதி வராததால் பக்கத்து ஊர் வைத்தியனை அழைத்து வருகிறார்கள். நந்தனார் இவற்றுக்கெல்லாம் மசிவதேயில்லை. இத்தகைய பக்திக் கொண்டவராய் இருந்தும், பிறப்பு காரணமாக ஆலயங்களுக்குள் செல்ல முடியாமல் இருக்கிறார். வார், தோல் கொண்டு வீதியில் கூவி வரலானார். நந்தனாருக்கு இரண்டு வித அடிமைத்தனம் என்கிறது நூல். அவர் உடல் பண்ணையாரான அந்தணருக்கு அடிமை, ஆத்மாவோ பரமசிவனுக்கு அடிமை. மெல்ல மெல்ல ஊர்ப் பறையர்களில் சிலர் நந்தனார் வழி சேர்கின்றனர். நந்தி விலகல், குளம் வெட்டல் போன்றவை நடக்கின்றன. இந்நிலையில் ஆதனூர் வேளாளர் வீட்டுத் திண்ணையில் சிதம்பரத்துத் தீட்சிதர் ‘சிதம்பர ஸ்தல புராணக் கதை’ சொன்னதைக் கேட்டுச் சிதம்பர தரிசன ஆசை நந்தனாருக்கு உருவாகிறது. பண்ணையாரிடம் சிதம்பரம் செல்ல அனுமதி கேட்கும்போது, உனக்குரிய தெய்வங்களை வணங்கு என்று கூறி மறுத்துவிடுகிறார். பிறகு ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் வருவது போல கதை முடிகிறது.

நூலில் மூன்று இடங்களில் புதிய விரிவான விவாத பகுதிகள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஆத்மா, பிராமணர்களின் நிலை, சைவ – வைணவ மோதல் போன்றவை குறித்த கருத்துகள் இடம்பெறுகின்றன. முதல் உரையாடல் ஆதனூரில் பிள்ளைமார் ஒருவருக்கும், பண்டாரம் ஒருவருக்கும் இடையே நடக்கிறது. “பறையரின் ஆன்மாவைப் பரமசிவன் அறிவானா?” என்கிறது உரையாடல். இரண்டாவது விவாதம், நந்தனார் சிதம்பரம் செல்ல பண்ணையாரிடம் அனுமதி கோரும்போது எழுகிறது. “நந்தனார் அவருக்கான கடவுள்களுக்குப் பலியிட்டு வணங்க வேண்டும்“ என்கிறான் பண்ணை. “பறையர் ஒருவர் பலி நீக்கி சன்மார்க்கம் பெறுவது நல்லதுதானே” என்கிறது அங்கிருக்கும் மற்றொரு குரல். மூன்றாவது விவாதம் மிக விரிவாகச் சிதம்பரத்தில் நடக்கிறது. பிராமணர்களுக்கிடையே – ஊரார்களுக்கிடையே என்று பல குரல்கள் ஒலிக்கின்றன. மூன்று விவாதங்களையும் நந்தனாருக்கு எதிர்ப்பாக ஒரு தரப்பு, ஆதரவாக ஒரு தரப்பு என்றமைத்து இது தொடர்பான கேள்விகள் பலவற்றையும் உட்கொணர்ந்து இந்நூல் பின்னப்பட்டுள்ளது. இதேபோல, கள்வன் ஒருவன் மனம் மாறி சிவ பக்தனான கதை புதிதாகச் சொல்லப்பட்டுள்ளது. கதையின் இடையிலும் இறுதியிலும் நந்தன் சரித்திரக் கீர்த்தனையிலிருந்து பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

நந்தனார் (1927) :

கிட்டத்தட்ட இதே தன்மையில் 1927ஆம் ஆண்டு சேலை.சகதேவ முதலியார் ‘நந்தனார்’ என்னும் தலைப்பில் உரைநடை நூல் ஒன்றை எழுதினார் (குமாரசாமி நாயுடு சன்ஸ் வெளியீடு). 84 பக்கங்களில், 7 தலைப்புகளாக இந்நூல் அமைந்துள்ளது. கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கதையை எடுத்துக்கொண்டு பல மாற்றங்களோடு நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் அத்தியாயத்திலும் பாத்திரங்களின் உரையாடல்கள் தனித்தனியே பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.

கதையில் ஊர்ப் பகுதி சார்பாக ஒரு முதலியாரும் ஒரு அந்தணரும் அறிமுகமாகிறார்கள். அதேபோல தலித் பகுதி சார்பாக நந்தனாரும் நந்தனாரின் வயோதிக தந்தையும் காட்டப்படுகிறார்கள். சேரிக்காரர்களுக்கு இல்லாத சுத்தம், பக்தி போன்றவை நந்தனாருக்கு இருப்பதைப் பார்த்து அதைக் கலக மனமாக பாவிக்கிறார்கள். ஆனால், பள்ளிக்கூட படிப்பை ஒளிந்து நின்று கேட்கும் ஆர்வமுடையவராக இருக்கிறார் நந்தனார். இது பிடிக்காத முதலியார், முதலில் அந்தணரிடம் முறையிடுகிறார். தொடக்கத்தில் நந்தனாரை அங்கீகரிக்கும் அந்தணர், அவருடைய பக்தியால் பண்ணை வேலை கெடும் என்றும், சாதி கட்டுப்பாடு போய்விடும் என்றும் எண்ணும்போது மறுக்கிறார். முதலில் எதிர்த்த முதலியார் நந்தனாரின் உறுதியைப் பார்த்துப் பின்னர் பாராட்டுபவராக மாறுகிறார்.

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் ‘அற்புதமாக’ கூறப்படும் சம்பவங்கள் இதில் சற்றே காரண காரிய பண்போடு விவரிக்கப்பட்டுள்ளன. திருப்புன்கூர் செல்ல அந்தணரிடம் அனுமதி கேட்கிறார் நந்தனார். அறுவடை முடித்துதான் செல்ல வேண்டுமெனக் கூறும்போது கூடி உழைத்து வேலையை முடிக்கிறார்கள். நந்தனார் கீர்த்தனையில் பிள்ளையார் வெட்டியதாகக் கூறப்படும் திருப்புன்கூர் குளத்தை, கூடி உழைத்து வெட்டியதாக இந்நூல் கூறுகிறது. அதேபோல நந்தி விலகியதா என்று கேட்கும்போது கனவு போல இருந்ததாகத்தான் நந்தனாருடன் சென்றவர்கள் கூறுகிறார்கள். அந்தணர் நந்தனாரைச் சிறந்த சிவ பக்தராகவே கருதுகிறார். பிறகு, ஊரில் சிதம்பர மான்மியம் பற்றிய பிரசங்கம் நடக்கிறது. அதில் வரும் சிதம்பர வர்ணனையைக் கேட்டுச் சிதம்பர தரிசனம் மீது பித்துக் கொள்கிறார் நந்தனார். அதனால் பண்ணை வேலையில் பின்னடைவு உண்டாகிறது. நந்தனார் மீது பண்ணையார் பரிவு கொண்டாலும், அவருக்குப் பயிர் முக்கியமாக இருக்கிறது. எனவே, பயிரை விளைவிக்க வேண்டுமென்று கட்டளையிடுகிறார். கண் விழித்துப் பார்த்தபோது ஓர் இரவுக்குள் பயிர் நடவாகி இருக்கிறது. பிறகு சிதம்பரம் சென்றதும் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் இருப்பது போலவே சம்பவங்கள் நடந்து முடிகின்றன.

பாடல்களுக்கும் உரைநடைக்கும் வேறுபாடு:

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’க்குப் பின் வந்த நந்தனார் பற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்க அளவில் ஒற்றுமையும் வேறுபாடும் இருக்கின்றன. அதாவது மரபான செய்யுள்களிலும், சிந்து போன்ற பாடல் வடிவங்களிலும் நந்தனார் கீர்த்தனையின் கதை பெருமளவு பிரதிபலிக்கப்பட்டன. குறிப்பாக, அற்புத நிகழ்ச்சிகள் அப்படியே பிரதிபலித்தன. ஆனால், உரைநடை நூல்களில் கதைப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அவற்றில் அற்புத நிகழ்ச்சிகளின் சுருதியைக் குறைத்து, சற்றே காரண காரிய பண்பு சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல உரைநடை நூல்கள் இரண்டிலும் அந்தணர் மட்டுமல்லாது வேளாளர், முதலியார், ஊரார், பண்டாரம் முதலியோர் இடம்பெறுகின்றனர். ‘சரித்திரக் கீர்த்தனை’யில் அந்தணரையொட்டி நிலவும் கடுமை இவற்றில் குறைக்கப்பட்டுள்ளன. மற்ற சாதியினரும் ஊடாடுகிறார்கள். இவை ஏன் நடந்தன என்பதை இந்நூல்கள் எழுதப்பட்ட சூழல்களைத் தேடினால்தான் புரிந்துகொள்ள முடியும். இப்போதைக்கு மேற்கண்ட விசயங்களை மட்டும் புரிந்துகொள்ளலாம். இதற்கிடையில் 1928ஆம் ஆண்டு வே.வெங்கடாசல ஐயர் என்பவர் ‘நந்தன் சரித்திரம்’ என்னும் பெயரில் நாடகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்தக் காலத்தில் நடத்தப்பட்ட நாடகங்களில், கூத்துகளில், பாடல்களில், கதைகளில் எவை அச்சேறியதோ அவற்றில் அழிந்தவை போக சில நமக்குக் கிடைக்கின்றன. அச்சேறாமல் நிகழ்த்துதலாக மட்டும் இருந்தவை காணாமல் போயிருக்கலாம் என்பதை மனதில் வைத்தே கிடைத்திருப்பவற்றைப் புரிந்துள்ள வேண்டும்.

திரைப்படங்கள்:

நந்தனார் கதை பிரபலமாகியிருந்த சூழ்நிலையில் நாடகங்களிலிருந்து திரைப்படங்கள் உருவானபோது நந்தனார் கதையும் படமானது. தமிழில் 1931ஆம் ஆண்டு தொடங்கி பேசும் படங்கள் வெளியாயின. நாமறிந்து தமிழில் ‘நந்தனார்’ எனும் பெயரில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. முதல் படம் 1933ஆம் ஆண்டு வெளியானதாகத் தெரிகிறது. இப்படம் இப்போது கிடைக்கவில்லை. இதில் அநேகமாக கிட்டப்பா நந்தனாராக நடித்திருக்கலாம் என்று தெரிகிறது. இரண்டாவது படம் 1935ஆம் ஆண்டு வெளியான ‘பக்த நந்தனார்’. இந்தப் படம் மணிக்லால் டாண்டன் என்பவரால் இயக்கப்பட்டது; கே.பி.சுந்தராம்பாள் நந்தனாராக நடித்தார். படம் வெற்றிப் பெற்றதாகத் தெரியவில்லை. படமும் தீ விபத்தொன்றில் சிக்கி கிடைக்காமல் போய்விட்டது. 1942ஆம் ஆண்டில் ‘நந்தனார்’ என்னும் பெயரிலேயே ஒரு படம் வெளியானது. இது வெற்றிப் படமாக அமைந்திருந்ததோடு இன்றளவும் பார்க்கக் கிடைக்கிறது. படத்தை ஜெமினி ஸ்டூடியோ தயாரிக்க, முருகதாசா என்கிற ஏ.முத்துசாமி ஐயர் இயக்கியிருந்தார். எம்.எம்.தண்டபாணி தேசிகர் நந்தனாராகவும் செருக்களத்தூர் சாமா அந்தணராகவும் நடித்திருந்தனர். இம்மூன்று படங்களும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கதையிலிருந்து உருவானவையாகும். கீர்த்தனை வடிவிலான பாடல்கள் முக்கியக் காரணமாகும். படங்களில் நடித்தவர்களும் அதற்கேற்ப சிறந்த பாடகர்களாய் இருந்தனர். ‘பக்த நந்தனார்’ படத்தில் மொத்தம் 41 பாடல்கள் இருந்தன. அவற்றில் 19 பாடல்கள் கே.பி.சுந்தராம்பாள் பாடியவையாகும். ‘நந்தனார்’ (1942) படத்தில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நூலில் இருந்த கீர்த்தனைகளும், பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களும் இடம்பெற்றன. ஜெமினி நிறுவனம், பாடல்களை ஒட்டி ரசிகர்களுக்காக 1000 ரூபாய் பரிசுப் போட்டிகளை அறிவித்திருந்தது. அவை யாவும் இந்தக் கதையைப் பரவலாக்குவதிலும் பங்குவகித்திருக்கும் என்று தடையின்றி நம்பலாம். ஒரே கதை என்றாலும் உரைநடை நூல்களுக்கும் இப்படங்களுக்கும் வேறுபாடு இருந்தது. உரைநடை நூல்களில் கதையில் சில மாற்றங்கள் இருந்தன. ஆனால், படங்களில் மாற்றங்கள் இல்லை. மாறாக, சொல்ல வருவதை அழுத்தமாகக் காட்சிப்படுத்தினால் பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றவைக்க முடியும் என்பதால் மூலக்கதையில் இருப்பதைக் காட்சி மொழியில் இன்னும் அழுத்தமாகவும் உறுதியாகவும் படமாக்கினர். கே.பி.சுந்தராம்பாள் நடித்த ‘பக்த நந்தனார்’ படத்திற்கு விமர்சனம் எழுதிய கல்கி, காட்சியில் அழுத்தமில்லை என்ற பொருளில் விமர்சித்திருந்ததாகக் கூறுவர். ஆனால், அது நந்தனார் உள்ளிட்ட பாத்திரங்கள் மீதான அடையாளத்தைத் தத்ரூபப்படுத்தவில்லை என்ற பொருளிலான விமர்சனமே ஆகும். சாதியடையாள இருமைகளை இப்படங்கள், மேலும் உறுதிப்படுத்தின என்றே சொல்ல வேண்டும்.

மேற்கண்ட மரபான மற்றும் உரைநடை நூல்களில் கதைப் பகுதிகளில் மாற்றம் நடந்திருந்தாலும் பறையர் – பிராமணர் ஆகியோரை வைத்துக் கட்டப்படும் இழிவு X பெருமை என்னும் சட்டகம் மாறவில்லை. வேறு வேறு விதங்களில் அந்த இருமை நினைவுப்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்தன. உரைநடைப் பிரதிகள் நந்தனின் பக்தியை மெச்சினாலும் – அதனாலேயே சில இடங்களில் அவரை இழிவிலிருந்து விலக்கினாலும் சாதி, சேரி, பறையர் போன்ற விசயங்களில் நேரடியாகவும் மொழியிலும் இழிவேற்றத் தவறவில்லை. 1900ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி டிசம்பர் இதழில் தி.நா.சரவணப் பிள்ளை ‘ஆலயந் தொழுவது சாலவுநன்று’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஆலயம் தொழுதால் முக்தி பெறலாம் என்று கூறவரும் கட்டுரை, அதற்கு உதாரணமாக நந்தனார் கதையை விவரிக்கிறது. நந்தனின் பக்தியை மெச்சினாலும் “பறச்சேரியில் நீசர் குலத்தில் சிப்பியில் முத்துண்டான துபோலும் சேற்றிற் செந்தாமரை உற்பவித்ததுபோலும் நந்தனார் என்பவர் பிறந்தார்” என்கிறது. ‘நந்தனார்’ (1927) நூலில் “எல்லாச் சாதியினும் பொல்லாச் சாதியேன் ஆயினேனே” என்று நந்தனார் புலம்பத் தவறவில்லை. ‘நந்தன்’ நூலில் பிராமணரைக் குறிப்பிடும்போது ‘அர்’ விகுதி இடும் நூல், பறையரைக் குறிப்பிடும்போது ‘அன்’ விகுதிதான் இடுகிறது. இதுதான் மொழிக்குள் செயல்படும் அரசியல். ‘நந்தனார்’ படத்தில் அவர் காட்சிக்குக் காட்சி தன் சாதியை நொந்துக்கொள்வதாகவும், தன் பிறப்பை எண்ணித் தாழ்வுணர்ச்சி கொள்பவராகவும் காட்டப்படுகிறார். “பாவி பறையன் நான்” என்று பாடுகிறார். ஜாதியினும் கடையேன், மறைஞானம் அறியேன் என்று கூறிக்கொள்கிறார். “சீ பறப்பயலே”, “என்னடா பறப்பயலே”,  “சாதியில் பறையன்” என்று திட்டப்படுகிறார். நந்தனாரின் ‘ஒழுங்கை’ பாராட்டும் அந்தணர்,  “தப்பிப்போய் பறையனாகப் பிறந்துவிட்டான்” என்கிறார். தில்லை செல்ல அனுமதி மறுக்கும் அந்தணரிடம் “தில்லை செல்வேன், இல்லையேல் அடிபட்டு அவர் காலடியில் சாவேன்” எனும்போது தன்னை அடிக்க வரும் அந்தணரை நோக்கி, “தாங்கள் அடிக்கலாம். ஆனால் தங்கள் கை நோகுமே” என்று அவருக்காகவே விசனம் கொள்கிறார்.

நவீன எழுத்தாளர்கள்:

இத்தகைய பரவலாக்கத்திற்கிடையே மற்ற இருவர் எழுதிய நந்தனார் கதைகளையும் இங்கு சொல்ல வேண்டும். பி.ஆர்.ராஜமய்யர், அ.மாதவையா என்ற தமிழின் இரண்டு முன்னோடி நாவலாசிரியர்கள் நந்தனார் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்பது தமிழுலகம் இதுவரை அறியாத செய்தியாகும். இருவருமே ஆங்கிலத்தில் எழுதினார்கள் என்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.

தமிழின் இரண்டாவது நாவலாக அறியப்படும் ‘கமலாம்மாள் சரித்திர’த்தை எழுதிய பி.ஆர்.ராஜமைய்யர் (1872 – 1898) பத்திரிகையாளராகவும் விளங்கினார். வேதாந்த கருத்தியலில் புலமை கொண்டவர். பிரபுத்த பாரதா என்ற இதழில் 1896 முதல் 1898 வரை ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதிவந்தார். பின்னாட்களில் அந்தக் கட்டுரைகள் Rambles in Vedanta என்ற தலைப்பில் நூலாக வெளியானது. வேதாந்த சஞ்சாரம் என்பது இதன் பொருள். இந்த நூலில் 40 பக்கங்களில் (499 – 539) நந்தனார் பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. Nanda, The Pariah Saint என்பது அதன் தலைப்பு. அநேகமாக நந்தனாரைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் பதிவாக இருக்கலாம்.

இதற்கடுத்து முன்னோடி நாவலாசிரியரும், சீர்திருத்தக் கருத்துகளின் ஆதரவாளருமான அ.மாதவையா (1872 – 1925) 1923ஆம் ஆண்டு 88 பக்கங்களில் படங்களோடு Nanda -The Pariah who overcame caste எனும் தலைப்பில் எழுதினார். இரண்டு நூல்களுக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கதை வடிவமே அடிப்படை. ஆனால், பி.ஆர்.ராஜமய்யரின் கட்டுரையும் மாதவையாவிற்கு உந்துதலாக இருந்திருக்கிறது. அதனை நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நந்தனார் கதை அச்சில் வெளியானது முதல் திரும்பத் திரும்பப் பலராலும் எடுத்தாளப்பட்டமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் புரிந்துகொள்ளாமல் இல்லை. ஆனால், அவ்வாறு எடுத்தாளப்பட்டபோது மொழியின் வழியே கண்ணுக்குப் புலப்படாத வகையில் சமூக நினைவுக்குள் ஊடுருவுவதை நாம் கவனப்படுத்துகிறோம். இக்கதையை புலமை நோக்கில் எடுத்தாண்டவர்கள், புதிய கதை என்று எடுத்தாண்டவர்கள், சீர்திருத்த நோக்கில் எடுத்தாண்டவர்கள் என்று பல தரப்பினர் இங்குண்டு. அது நவீன எழுத்தாளர்களையும் ஈர்த்தது. இழிவுபடுத்துவது மட்டுமே எல்லோருடைய நோக்கமாக இருந்தது என்று நாம் சொல்லவில்லை.

நந்தனார் கதையின் கதையாடல் அம்சம் பலரை ஈர்த்திருக்கிறது. கதையில் இரண்டு எதிர்மறைகள் இருக்கின்றன. ஒன்று அழுத்துகிறது, மற்றொன்று அதிலிருந்து திமிறுகிறது. இரண்டிற்குமிடையேயான மோதலாலும் விவாதங்களாலும் கதை நகருகிறது; கதையை சுவாரஸ்யப்படுத்துகின்றன. கதையில் நடக்கும் வாதப் பகுதி முக்கியமானது. அதிலும் பாதிப்பு, இழப்பு போன்றவை வரும்போது படைப்புக் குணம் அவற்றோடு இணைய விரும்புகிறது. ஆனால், இந்த இரட்டை எதிர்மறை வெறும் கதையாடல் மட்டுமல்ல அதற்குப் பின்னால் மாபெரும் சமூக உளவியல் இருக்கிறது என்பதைத்தான் இந்த எழுத்தாளர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

பார்ப்பார சாமி x பறை சாமி:

நந்தனார் பற்றிய எல்லாப் பிரதிகளிலும் இரண்டு அம்சங்கள் செயற்பட்டிருக்கின்றன. ஒன்று, பறையர்க்கான தெய்வங்கள் வேறு, பார்ப்பாருக்கான தெய்வங்கள் வேறு. பறையரான நந்தனார் அவருக்கான தெய்வங்களை விடுத்துப் பார்ப்பாருக்கான தெய்வங்கள்பால் வர விரும்புகிறார். இதனை அந்தணத் தரப்பு மறுக்கிறது. தலித் தரப்பு இதற்காக தம் தரப்பை எச்சரிக்கை செய்கிறது. இரண்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுவது. குறிப்பிட்ட தெய்வ வணக்கத்திலிருந்து மற்றொரு தெய்வ வணக்கத்திற்கு மாறுவது மட்டுமல்ல, பறையர் இறுதியில் பார்ப்பாராக மாறுகிறார்.

முதலாவது அம்சத்தைப் பார்ப்போம். சைவ – வைணவத் தெய்வங்கள் உயர்சாதியினருக்கு உரியது, உள்ளூர்த் தெய்வங்களே – இன்றைய பொருளில் நாட்டார் தெய்வங்களே பறையர்கள் உள்ளிட்ட அடிநிலை சாதியினருக்கு உரியவை என்பது கோபாலகிருஷ்ண பாரதியாரின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் வலிமையாக முன்வைக்கப்படுகிறது. அதை வலியுறுத்துவதற்காகதான் இக்கதை எழுதப்பட்டதோ என்று கருதும் அளவிற்கு அழுத்தமாகப் பயின்றுள்ளது. கருப்பன், வீரன், மாடன், பாவாடை ராயன், சின்னான் போன்ற தெய்வங்களைக் கூறுகிறது பாரதியின் சரித்திரக் கீர்த்தனை. பிந்தைய நாடகங்களிலும் உரைநடை நூல்களிலும் இந்த அம்சம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘நந்தன்’ (1917) நாவலில் “பறையன் பரமசிவனை அறிந்துவிட்டானா? அவனுக்கு கருப்பண்ணன், காட்டேரி, சங்கிலிப் பிரியன் முதலியது அல்லவோ சாமி”, “பாப்பார சாமியின் பைத்தியம் யார் மூலமாக அவனுக்கு பிடித்தது? பாப்பார சாமியை ஒருநாளும் கும்பிடாதவர்களையும் கும்பிட இடங் கொடுத்தது யார்?”, “காட்டேறியையும் வீராயியையும் விட்டுவிட்டு கோழிக்குஞ்சு காவு, ஆட்டுக்கடா பலி எல்லாவற்றையும் நீக்கிவிட்டு நல்ல புத்தி வந்து சன்மார்க்கத்திற்கு வருகிறானே” என்றெல்லாம் பேசப்படுகின்றன. ‘நந்தனார்’ படத்தில் சிவனைப் பாப்பாரச் சாமி என்கிறார்கள். இந்தப் பிரிவினை எப்போது தோன்றியது, ஏன் தோன்றியது, இவற்றை வலிமையாக வலியுறுத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகளோடு சேர்த்து இவற்றைப் பார்க்க வேண்டும்.

சைவ – வைணவத் தெய்வங்களில் பலவும் பல்வேறு மாறுதல்களுக்குப் பிறகே இன்றைய ‘தகுதி’யைப் பெற்றுள்ளன. அவற்றுள் பலவும் ஒருகாலத்தில் அடிநிலைச் சமூகங்களால் வணங்கப்பட்டவையாக இருக்கின்றன. அதனாலேயே இன்றைக்கும் அடித்தட்டு மக்கள் தங்கள் தெய்வங்களை வணங்குவதோடு சைவ – வைணவத் தெய்வங்களையும் வணங்குகின்றனர்; பல கோயில்களில் உரிமைகளையும் பூண்டிருக்கின்றனர். ஆனால், ஏதோவொரு கட்டத்தில் இவற்றைப் பிரித்து அணுக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவற்றைக் கற்பிக்கும் பொருட்டே இத்தகைய கதைகளில் அவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளன என்று தெரிகிறது.

இது கதையில் வருவது மட்டுமல்ல. ‘வரலாறாகவே’ மாறியது. 1892 ஏப்ரலில் சென்னை விக்டோரியா டவுன்ஹாலில் தேசியவாதக் கண்ணோட்டம் கொண்டவர்கள் நடத்திவந்த சென்னை மகாஜன சபையின் கூட்டம் நடந்தது. பல்வேறு வகுப்பினரின் குறைகளையும் நிர்வாகத் தேவைகளையும் அவ்வப்போது தொகுத்து விவாதித்து அரசாங்கத்தின் பார்வைக்கு அனுப்புவது அக்கூட்டத்தின் நோக்கம். அன்றைய கூட்டத்திற்கு பி.அரங்கைய நாயுடு தலைமை வகித்திருந்தார். விவாதிக்கவிருந்த கருப்பொருட்களின் பட்டியலை வாசித்து எவை தேவை, எவை தேவையில்லை என்று அறிவித்துக்கொண்டிருந்தார். இடையில் வாசிப்பதை நிறுத்திவிட்டு விவாதிக்கத் தேவையில்லாதது என்று  ‘பறையர் பிராப்ளம்’ என்பதை பென்சிலால் அடித்தார். அம்மக்களின் குறைகளைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அவற்றை எடுத்துக் கூற அதுவரை எந்தப் பிரதிநிதியும் வந்ததில்லை என்பதனால் அவர் அவ்வாறு செய்தார். ஆனால், அம்முறை நீலகிரியில் தொடங்கப்பட்டிருந்த திராவிட மகாஜன சபையின் பிரதிநிதியாக அயோத்திதாசர் கூட்டத்திற்கு வந்திருந்தார்.

எழுந்து பேசத் தொடங்கிய அயோத்திதாசரின் கோரிக்கைகள் நீண்டதாக இருந்தன. அவர் பேசப் பேசக் கூட்டத்தில் முணுமுணுப்பும் மறுப்பும் எழுந்தவாறிருந்தன.  “உலகத்திலுள்ள சகல சாதியோருக்கும் தெய்வம் பொதுவென்றும், கோயில் பொதுவென்றும், சொல்லக் கேட்டிருக்கின்றேன். அங்ஙனம் இருக்க, இக்குலத்தோரிலுள்ள வைணவ மதத்தவர்களை விஷ்ணுவின் கோயில்களுக்குள்ளும் சைவ மதத்தவரை சிவன் கோயிலுக்குள்ளும் ஏன் சேர்ப்பதில்லை? அப்படிச் சேர்ப்பதனால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடைய மாட்டார்களா? மதங்களும் பிரபலம் அடையாதா?” என்று கேட்டார். அதுவரை இருந்த சத்தம் இப்போது அதிகரித்தது. யாராலும் இந்தக்  கோரிக்கையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் எதிர்த்துக் கூச்சலிட்டனர்.

தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த சிவராம சாஸ்திரி கூச்சலிட்டோரை அடக்கிவிட்டு அயோத்திதாசரை நோக்கி, “உங்களுக்கான மதுரை வீரன், காட்டேரி, கருப்பண்ணசாமி இருக்கிறது. சிவனோ விஷ்ணுவோ உங்களுக்கான தெய்வங்கள் இல்லை” என்றார். விவாதத்தின் முடிவில் “அவ்வாறெனில் உங்கள் சாமிகளே எமக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டு அடுத்த கோரிக்கைகளுக்குச் சென்றுவிட்டார் அயோத்திதாசர். இந்தக் கூற்று அயோத்திதாசரின் பிற்கால முடிவுகளில் பெருந்தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இங்கு நாம் பார்க்கப் போவது தஞ்சாவூர் சிவராம சாஸ்திரியின் கூற்றைத்தான். அவர் ஏன் அவ்வாறு கூறினார்? இதற்கான சான்றுகள் எங்கிருக்கின்றன? இந்தக் கருத்துகள் எவ்வாறு பிறந்தன?

இதற்கு நமக்கிருக்கும் பிரதி ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’தான். இக்கருத்தை அது பரவலாக்கியிருக்கிறது. சிவராம சாஸ்திரி நந்தனார் கீர்த்தனை எழுதப்பட்ட தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் கதைகளைக் கதைகளாக மட்டும் பார்க்க முடியாது என்று கூறுகிறோம். அது சமூக உண்மைகளாக மாறும் தருணங்களை எதிர்கொள்ள விரும்புகிறோம்.

(தொடரும்)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger