தக்கையாய் மிதக்கும் சொற்கள்

மருத்துவர் மந்திரிகுமார்

முருகன் சுவரில் முட்டிக்கொண்டிருந்தான். வலித்தது. வலிக்க வலிக்க இன்னும் தீவிரமாக முட்டினான். வலியில் உணர்விழந்திருப்பதைப் போலிருந்தது. உடல் மெலிந்திருந்தான். ஆடைகளும் தளர்ந்திருந்தன. குளிப்பதற்குக்கூட ஆர்வமற்றிருந்தான். துர்நாற்றம்கூட அவனுக்குப் பொருட்டாயில்லை. பதினாறு வயதை மீறிய முகத்தை அவன் ஏற்றுக்கொண்டிருந்தான். முகத்தில் அவ்வளவு சுருக்கங்கள் கோடிட்டிருந்தன. கண்கள் பழுப்பேறி குழியிட்டிருந்தன. நீண்ட காலம் தூக்கத்தைக் காணாத கண்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தன.

“அம்மா.. அம்மா.. துட்டு குடு.. ஒரேயொரு தடவைம்மா.. பொட்டலம் வேணும்மா.. வாங்கித் தாம்மா..”

இருளாயி சலனமற்றுக் கிடந்தாள். அவள் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் அல்லாடிக்கொண்டிருந்தாள். கனவிற்கும் நனவிற்கும் அலைச்சல்பட்டுக்கொண்டிருந்தாள். கணவரிடமிருந்து மகனுக்கு, மகனிடமிருந்து கணவருக்கு என்று வாழ்க்கை இடம்மாறின. அவள் வாழ்க்கை கனவிலும் நனவிலும் ஒன்றுபோலிருந்தது. எதுவும் மாறவில்லை.

“அம்மா.. அம்மா.. துட்டுக் கேட்டா தரமாட்டேங்குற. எவங்கிட்ட படுத்து என்னைப் பெத்தியோ… அப்படி படுத்து ஒரு கஞ்சா வாங்கித் தர துப்பில்ல உனக்கு”

தூக்கத்தில் அவளது அழுகை கண்ணீராய் வழிந்து கொண்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் மகனைப் போதையிலிருந்து அவளால் மீட்க முடியவில்லை. இப்போதெல்லாம் தன்னையே மீட்க முடியாமல் முடங்கிப் போய் படுத்தேயிருக்கிறாள். கனவுகள் கலையாமல் படுக்கையில் கிடந்தாள். எழுந்தாலும் என்ன மாறிவிடப்போகிறது? கிட்டத்தட்ட அவளும் சரிக்குச் சமமாய் இளைத்துப் போயிருந்தாள். குடிக்குக் கணவனை இழந்துவிட்டு மகனையும் காவு கொடுக்கக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை அவளுக்கு. அவளால் மகனைக் கொல்ல முடிந்திருந்தால், முன்னமே இறப்பதற்கு விரும்பியிருப்பாள். இடுப்பெலும்பு முறிவதுபோல் வலி. முருகன் ஆங்காரமாய் எட்டி உதைத்திருந்தான். துள்ளிக்கொண்டு உடம்பை இழுத்து ஓரமாய் போய் நிமிர்ந்து பார்த்தாள். அவளது உடல் எல்லாவற்றிற்கும் பழகிப் போயிருந்தது. இருளுக்குள் நிழல் போல் முருகனின் முகம் இன்னும் தீவிரமாய் கருத்திருந்தது. பொட்டலத்தைத் தேடியலைந்து இல்லையென்றவுடன் மூர்க்கத்தைக் காட்ட தன்னிடம் வந்துவிட்டான் என்று அவளுக்குப் புரிந்தது.

“சொல்லு, பொட்டலத்தை எங்க ஒளிச்சு வச்சிருக்க. சேத்து வச்சதைத் தூக்கிப் போட்டுட்டல, த்தூ… இப்பவே போயி ராத்திரி எவன் வீட்லயாச்சும் வாங்கிட்டு வா. பொட்டலம் இல்லாம வாசலுக்கு வந்தீன்னா கொன்னேபுடுவேன். ஓடிப்போ..”

அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கோபித்துக்கொண்டு செல்வதற்கும் யாருமில்லை. அடி உதையை வாங்குமளவுக்கு உடம்பில் தெம்புமில்லை. அதற்குத் தெருவில் படுத்துக்கொள்ளலாம்.

ஏதும் பேசாமல் அவசர அவசரமாக வெளியே சென்றதும் கதவை மூடிக் கொண்டான் முருகன். அவனுக்கு அழுகை வருவது போலிருந்தது. இருள் இன்னும் அடர்த்தியாக மாறியிருந்தது. கதவின் இருபுறமும் தாயும் பிள்ளையும் கிடந்தார்கள். இருவரிடமும் அழுவதற்கு எவ்வளவோ இருந்தன. ஆறுதல் சொல்ல வார்த்தைகளிருந்தன. ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்ள காரணமிருந்தது, எப்படியென்றுதான் தெரியவில்லை.

எப்போதும் போல முருகனின் தலைக்குள் சொற்கள் மலத்தின் மேல் ஈக்கள் போல மொய்க்கத் துவங்கிவிட்டன. எங்கிருந்து மோசமான சிந்தனைகள் முளைக்கின்றன என்று அவனுக்கே தெரியவில்லை. தெரிந்தால் மட்டும் என்ன செய்ய முடியும்? அம்மாவைப் பற்றிய தவறான சிந்தனைகள் எழும்போதெல்லாம் சுவரில் முட்டிக்கொள்ள மட்டுமே முடிந்திருக்கிறது. கையில் கிடைப்பதை வைத்துக் காயப்படுத்த முடிந்திருக்கிறது. அலறித்துடித்து ஓடிவரும் அம்மாவைத் தொடக்கூட முடியாமல் அருவருப்பாகி விலகி ஓடி தன்னைத்தானே வெறுக்க முடிந்திருக்கிறது.

“கஞ்சாவை குடிச்சுப் பாருடா முருகாஞ் ஒனக்கு எது ஒசத்தின்னு படுதோ, அதுல உச்சத்துக்குப் போயி நிக்கும், புரிஞ்சுதா!” முருகானந்தம் அண்ணன் நீட்டிய சிகரெட் துண்டை வாங்கிப் பிடித்தபோது முதலில் இருமல் வந்தது. தொண்டை எரிவதுபோல் ஆரம்பித்துப் பின் நெஞ்சுக்குள்ளிருந்து காடே பற்றிக்கொண்டு சடசடவென எழுவது போலிருந்தது. உடலில் எங்கிருந்து வெம்மை கிளர்ந்தெழுகிறது என்று உடலுக்குள் தேடித்தேடி குழம்பினான். அந்தக் குழப்பமே அலாதியாருந்தது அவனுக்கு. முதலில் தண்ணீர் குடித்துப் பார்த்தான். பிறகு, கையில் கிடைக்கிற நொறுக்குத்தீனிகளை; பின் தன் கைகளையே கடித்து அதற்கு வலிநிவாரணி ஆக்கினான். அவனுக்குள் தவித்த சுகத்தை அது இன்னும் தீவிரப்படுத்தியது. கதகதவென்று மூளும் நெருப்பை எப்படி அணைப்பதென்று தெரியாமல் உடல் கூசியது. உடலெல்லாம் தழுவிக்கொண்டான். அருகில் இருந்தவரை கட்டிக்கொண்டான். அவனுக்குள் கொண்டாட்டமாயிருந்தது. ஏதோ ஒன்றை நெருங்க நெருங்க அந்தத் தீ அணைவது போலவும், மீண்டும் கொதிப்பது போலவும் வித்தை காட்டி அலைக்கழித்தது. அந்த விளையாட்டில் தவித்தான். அந்தத் தவிப்பே அவனை இயக்கியது. தவிப்பிற்குள் மூழ்கி நீந்தினான். அதில் சொற்களோ மிதந்தலைந்தன. அவற்றுக்கு விடைதேடி இன்னும் மூர்க்கமாக நீந்தினான். பொட்டலம்.. பொட்டலம்.. ஹாஹா..ஹா.. ஆனந்தம்.. ஆனந்தம்.. ஹாஹா..ஹா.. பொட்டலம் பொட்டலம்.. அவனது சொற்கள் பொட்டலமாய் மிதந்தன. தக்கை போல் மூழ்கி போக்குக் காட்டின. தான் இரையானதே தெரியாமல் பொட்டலத்தைப் பிடித்தான். அதை ஆவலாய் பிரிக்கப் பிரிக்க இன்னும் சொற்கள் வெளியேறி மிதக்கத் துவங்கின. எல்லாம் சொற்கள்.. சொற்கள்.. சொஞ்ற்ஞ்கஞ்ள்.. கூடிக்கூடி பிரிந்தன.. பிரிந்து கூடிக்கலைந்தன.. அது விண்மீண் கூட்டத்தைப் போல சொற்கூட்டத்தைக் கட்டியெழுப்பின. அந்தக் கூட்டத்தில் அர்த்தமேற்றின. அந்த அர்த்தத்திற்கு உணர்வுகளைச் சூட்டின.

எப்போதோ அவன் பார்த்த, கேட்ட போர்னோ கதைகளின் சுவாரசியங்கள் அவனுக்குள் திமிறின. முன்பு சுவைத்த அதே உற்சவத்தைச் சுவைத்துப் பார்க்க அவை மீண்டும் மீண்டும் துளிர்த்தன. கஞ்சாவின் கால்களை அவை கட்டிப்புரண்டன. கஞ்சா மூட்டிய நெருப்பில் காமத்தீ கிளர்ந்தது. கிளர்ச்சியில் அவனது உணர்ச்சிகள் கரைபுரண்டன. அதற்குள் முக்குளித்தான், மூழ்கித்திளைத்தான், கரைமட்டும் மீளவேயில்லை.

இப்போது சொற்கள் அவனை விட்டு விலகியோடின. அவன் அவற்றை வார்த்தைகளைத் துரத்தினான். அவன் துரத்த துரத்த அவனை விட்டு ஓடின. அவனிடமிருந்தே அவனது சொற்கள் அந்நியமாகின. அவை அந்நியமாவதை அறிய அறிய பதற்றமாகினான். அந்தப் பதற்றத்தில் துடுப்பைக் கைவிட்டு நீருக்குள் மூழ்கினான். மூழ்கி எழும்போது சொற்கள் அவனிடமிருந்து தொலைந்திருந்தன.

“முருவா.. என்னடா கஞ்சா பிடிக்கிறியாமே. முருகானந்தங்கிட்ட போவாதடா. கெட்ட புத்தி வந்திருமுடா முருவா. உன் அப்பனாட்டம் ஆகி அம்மாவ ஏமாத்திடாதடா, முருவா.. முருவா.. ஏலே சொன்ன சொல்லு கேக்காம எங்கடா போற”

Illustration : Robinho Santana

அம்மாவின் உணர்ச்சிகள் வட்டமடித்தன. கஞ்சாவின் வீரியத்திற்கு முன்னால் அம்மாவின் வார்த்தைகள் மருந்திடவில்லை, நஞ்சாகின. கஞ்சாவிலிருந்து துளிர்த்து தனித்து சிறகடித்த சொற்கள் மூளைக்குள் அர்த்தம் தேடி வலசை போயின. இன்பம்.. பேரின்பம்.. என்று காமத்தின் வாசலை அடைந்தன. கண் தெரியாமல் காற்றில் துழாவிக் கொண்டிருந்த சொற்களுக்கு அம்மாவின் உருவத்தை வரைந்தது மூளை. சொற்கள் அம்மாவைச் சுற்றி மொய்த்தன. அவளது உருவம் அவனுக்குள் காம உணர்ச்சிகளைப் பெருக்கும் எந்திரமானது.

சீச்சீ..சீச்சீ..சீச்சீ..

அவனுக்கு அம்மாவைப் பற்றித் தவறாக நினைப்பதற்குக் கூசின. அருவருப்பாயிருந்தது. ஆனால் அவன் யோசிக்கவில்லை. அந்தச் சிந்தனை அவனுள்ளிருந்து கூரான அம்புகளை எய்துகொண்டே இருந்தது. அவன் பலம் பார்த்தது. இதயத்தை நேரடியாகத் தாக்கியது. குருதி வடிந்ததில் காயம்பட்டு அழுதான். சொற்கள் குருதியிலும் கண்ணீரிலும் மிதந்தன. காயம்பட்ட இடத்திலேயே மீண்டும் மீண்டும் காயம்பட்டது. அவன் துடிதுடித்துப் போனான். அவனால் அவனுக்குள் நேர்வதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் நடக்கிற சிந்தனையின் தீவிரத்தை விளங்காமல் அலறினான், அச்சம் கொள்ளத் துவங்கினான்.

“அம்மா.. அம்மா.. நான் அப்படி நெனைக்கலமா. பிளீஸ்மா.. தப்பா நெனைக்கலமா. என்னை வெறுத்துறாதமா. நான் எதுமே பண்ணலமா. அதுவா தோணுதுமா. என்ன செய்யுறதுனே தெரியலமா. அவமானமா இருக்குமா.”

சட்டென்று இருளாயிக்கு முழிப்பு தட்டியது. அவன் தலையில் அடித்து கதவில் முட்டி முட்டி அழுகிற சத்தம் கேட்டுப் பதறியடித்து, கதவில் காது வைத்து ஒருக்களித்து உட்கார்ந்தாள். அழுதழுது வற்றிப்போன கண்களில் இன்னும் எஞ்சியிருந்த துக்கத்தை இறைத்து அழுதாள்.

“முருவா.. முருவா.. அழாதடா ராசா.. அம்மா ஒனக்குப் பொட்டலம் வாங்கித் தரேண்டா. ராத்திரி மட்டும் பொறுத்துகோயா. என் ராசால்ல.. அழாதடா. என் கண்ணுல, கதவைத் தெறயா”

கதவிடுக்கின் வழியே அவள் வாழ்க்கையைப் பார்த்தாள். இருளாயிருந்தது, இருட்டாயிருந்தது. மகனைத் தேடினாள், நிழலாய் மாறியிருந்தான். ஊர் உறங்கியிருந்தது. முருகனும் இருளாயியும் சற்று அமைதியாகியிருந்தனர். கதவு இரண்டு ஜீவன்களையும் ஆதரவாய் தாங்கியிருந்து.

அம்மாவின் பேச்சைக் கேட்டுச் சிரித்தான், ஹா..ஹா..ஹா.. மறுகணமே அழுதான், அம்ம்மா.. பின், கத்தினான்.. ஆஆஆஆ..

அவனுக்குள் எழும் உணர்ச்சியின் அலையில் கரைமோதி உள்ளுக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தான். விடிந்தால் எப்படியாவது அம்மாவும் பொட்டலத்தை வாங்கி வந்துவிடுவாள். அதுவரை தாக்குப் பிடிக்க வேண்டும். முருகானந்தம் அண்ணா எங்கிருந்தாவது வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்துவிடுவார். அவருக்கு எல்லா இடங்களும் கச்சிதம். அவரே கூட செடியை வளர்த்து கஞ்சா ஆக்கிவிடுவார். முருகானந்தம் மீது எரிச்சலாக வந்தது. எரிச்சல் கோபமாகியது. கோபம் வன்மமாகி அவரை ஏதாவது செய்துவிட மனம் கோரியது. கஞ்சாவைச் சுவைத்த கணத்திலிருந்து மூளைக்குள் எங்கிருந்தோ முழித்துக்கொண்ட காம பூதத்தை அடக்க வழி தெறியாமல் துடித்துக் கொண்டிருந்தான். பெண்ணுடல் தருகிற காமபோதையைவிட பெண்ணுடல் பற்றிய சிந்தனையைத் தூண்டிவிட்டு வரும் போதையை அவன் இரசித்தான், திளைத்தான். அதற்காகவே கஞ்சாவைத் தேடிப்போனான். பின் கஞ்சா இவனைத் தேடியது. இவனே கஞ்சா செடியாகவும், தண்டாகவும், இலையாகவும், பூவாகவும், காயாகவும் மாறினான். அவனையே அவன் சுவைத்தான். கஞ்சாவிற்கு முன் மண்டியிட்டுத் தன்னைத்தானே பலியிட்டான். கஞ்சா அவனை ஏற்றுக்கொண்டது. அவனுக்குக் கஞ்சா மறுபிறவி அளித்தது. சாகாவரம் பெற்றான். தேவலோக சுகத்தைச் சுகித்தான். அவனுக்குள் இன்பத்தின் ஊற்று பெருக்கெடுத்துக்கொண்டே இருந்தது. பின் அது வற்றவே இல்லை.

ஒருநாள் முருகன் போதையில் திளைத்து, கனவில் இலயித்திருக்கும்போது காமத்தின் போதைக்கு, பெண்ணுடலின் மோகத்திற்கு மூளை அவனது அம்மாவையே இரையாக்கியபோதுதான், இது நஞ்சு என்பதையே உணரத் துவங்கினான். அது அவனை மீட்பதற்கு வழியில்லாத ஆழத்தில் தள்ளியிருந்தது. அதுவொரு புதைகுழி என்பதைக் கண்டுகொண்டான். அந்தப் புதைகுழிக்குள் அவன் கண்டதெல்லாம் சொற்கள், காமத்தின் சொற்கள். அவன் பார்த்து, கேட்டுச் சுகித்த காமத்தின் சொற்கள். அவனை இடைவிடாமல் துரத்தின, கரையான் போல் அரித்தன. அம்மாவைப் பற்றிய தவறான சிந்தனைகள் எழுகிறபோதெல்லாம் பதறித்துடித்து எழுவான். கனவென்று நினைத்து உடம்பெங்கும் கூசி அருவருப்பாகி மூச்சுத் திணறும்போது விழிப்பு நிலையிலும் அந்தத் தீவிரமான சிந்தனைகள் எழும். மெல்ல மெல்ல புகைபோல கசிகிற சொற்கள் தீவிரமாகி காட்டுத்தீ போல பரவி அவனை முழுவதுமாக ஆட்கொள்ளும். அந்தக் காமத்தீயில் மூச்சுத் திணறி, தொண்டை வறண்டு, இருமலாகி நெஞ்சை அடைத்துக் கொள்ளும். எழுந்து தண்ணீர் குடிப்பான். காமத்தீயோ அணைவதேயில்லை.

“இல்ல.. இல்ல.. சீச்சீ.. சீச்சீ.. வேணாம். வேணாம்.. போயிடு.. நான் இதை நெனைக்கல. வராத, போயிடு.. பிளீஸ்..”

அவனுக்குள் எழுகிற சிந்தனைக்கு அவனே மனதிற்குள் பதில் சொல்லிக்கொள்வான். அப்படியும் மனசாட்சியின் குரலை மீறி அவனுக்குள்ளாக எண்ணம் வந்துவிடும். எண்களை எண்ணுவான், சினிமா பாடலைப் பாடுவான், சிவ சிவா.. சிவ சிவா.. என்று கடவுள் நாமம் துதிப்பான். சட்டென்று சிவபானம் ஞாபகம் வந்துவிடும். அவனுக்குள் கஞ்சாவைக் குடித்தே ஆகவேண்டும் என்கிற தீவிரமும் அம்மாவைப் பற்றிய தவறான சிந்தனைகள் எழுகிறதே என்ற ஐயமும் திமிறிக்கொண்டே இருக்கும். கஞ்சாவைத் தொட்டபின் நேர்ந்த சிந்தனைக் குழப்பத்தை எண்ணி பயந்து கொண்டிருந்தான். எப்படியாவது குடித்தே தீர வேண்டுமென்கிற உந்துதலை மூளையும் உடம்பிற்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். இனி எதுவுமே செய்ய முடியாது என்ற கையறு நிலையில்தான் அவன் மீண்டும் கஞ்சாவிற்கே திரும்ப வேண்டியதாயிற்று. அவன் எதை இன்பமாகப் பருகினானோ அதனால் இறக்கத் துணிந்தபோதுதான் அம்மா அவனைக் கண்டுபிடிக்க நேர்ந்தது. அம்மா பேச வரும்போதும், தொடுவதற்கு முற்படும்போதும் முட்கள் அவனுக்குள் ஆழமாய் துளைத்துக்கொண்டிருக்கும். குருதியும் கண்ணீரும் வழிகையில் எத்தனையோ முறை அம்மாவிடமிருந்து விலகியிருக்கிறான். நீண்ட நாட்கள் வீட்டிற்கே வராமல் வெளியே தூங்கியிருக்கிறான். அங்கெல்லாம் தேடிவந்து அம்மா சாப்பாடு கொடுத்துவிடுவாள். அக்கறையோடு நாலு வார்த்தைப் பேசாவிட்டால் அவளுக்குப் பொழுதுவிடியாது. அவனது வாழ்க்கைப் பற்றிய யோசனைக்குள் தீவிரமாகிக் கொண்டிருந்தான்.

யாரோ கதவை ஓங்கித் தட்டும் சத்தம் கேட்டது. டம்.. டம்.. டம்.. முதலில் அம்மாவின் குரல். அடுத்து டம்.. டம்.. டம் இன்னும் யார்!.. யாரோ?..கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். ஊர் விழித்துக்கொண்டதாகத் தோன்றியது. அம்மாவின் குரல்தான் ஊரை எழுப்பியிருக்கும். எவ்வளவு நாள்தான் அம்மாவைத் துன்பப்படுத்துவது. என்னை நானே துன்புறுத்திக்கொள்வதைவிட அவளது துன்பம் பெரிதுதான். அவனது கண்ணில் கண்ணீர் நிரம்பியது. அவன் தன்னைத் தானே காயப்படுத்திச் சுகிக்கும் சுகத்தை நினைத்துக்கொண்டான். கதவை உடைக்கும் சத்தம் இன்னும் தீவிரமாகியது. மரக்கதவுகளை உற்றுப் பார்த்தான். கதவைத் தாண்டிய அம்மாவையும் அவனால் பார்க்க முடிந்தது. சட்டென்று தலைக்குள் வண்டு ரீங்காரமிட வீட்டின் மேற்கூரையை அண்ணாந்து பார்த்தான். அதற்கும் மேலே வானத்தையும்கூட. நிலைக்கதவும், உத்திரமும் ஒரே மரத்தின் இரண்டு பிரதியாகக் கண்டான். பூமிக்குத் திரும்புவதா, ஆகாசத்திற்குச் செல்வதா என்று சரியாக அவனால் முடிவெடுக்க முடியவில்லை..

] man3cmc@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger