அழகிய பெண்கள் என் ரகசியம் எதிலிருக்கிறதென அதிசயிக்கின்றனர்
விளம்பரக் கலைஞர்போல் அழகோ உடல்வாகோ கொண்டவள் இல்லை நான்
ஆனால், அவர்களோ
நான் பொய் சொல்வதாக நினைக்கிறார்கள்.
நான் சொல்கிறேன்,
நீண்ட என் கையசைவில்
இடையளவில்
நடையின் துள்ளலில்
உதட்டுச் சுழிப்பில்
(இருக்கிறதென)
நான் அற்புதமானவள்
தனித்துவமிக்கவள்
அவள் நானே!
ஓர் அறைக்குள் இயல்பாக நுழைகிறேன்
உங்கள் விருப்பத்துக்கேற்ப
ஓர் ஆணிடம் செல்கிறேன்
அவர்கள் எழுந்து நிற்கிறார்கள் அல்லது
மண்டியிட்டுப் பணிகிறார்கள்
அவர்கள்,
என்னைச் சுற்றி மொய்க்கும்
தேனீக்கள்
நான் சொல்கிறேன்,
அது,
என் கண்களின் நெருப்பில்
பற்களின் பளிச்சிடலில்
இடுப்பின் நளினத்தில்
கால்களின் நடனத்தில்
(இருக்கிறதென)
நான் அற்புதமானவள்
தனித்துவமிக்கவள்
அவள் நானே!
என்னிடம் என்ன இருக்கிறதென்று
வியந்தனர் ஆண்கள்
அவர்கள் எவ்வளவு முயன்றாலும்
தொட முடியாதது
என் உள்ளிருக்கும் ரகசியம்
நான் உணர்த்த முயன்றாலும்
அவர்களால் அறிய முடியவில்லை
நான் சொல்கிறேன்,
பின்னழகின் வளைவில்
புன்னகையின் ஒளியில்
முலைகளின் துள்ளலில்
என் நேர்த்தியான ஒயிலில்
(இருக்கிறதென)
நான் அற்புதமானவள்
தனித்துவமிக்கவள்
அவள் நானே!
இப்போது உங்களுக்குப் புரியும்
என் தலை ஏன் வணங்குவதில்லையென
நான் கூச்சலிடவோ, குதிக்கவோ
அல்லது சத்தமாகவோ பேசுவதில்லை
நான் உங்களைக் கடந்து செல்வதைப் பார்க்கையில்
அது உங்களைப் பெருமைகொள்ள வைக்கும்
நான் சொல்கிறேன்,
என் குதிகால் உரசலில்
அலைகூந்தலில்
உள்ளங்கையில்
என் அக்கறையான ஒப்பனையில்
(இருக்கிறதென)
ஏனெனில்,
நான் அற்புதமானவள்
தனித்துவமிக்கவள்
அவள் நானே!