1957இல் முதுகுளத்தூர் சாதிக் கலவரத்திற்குப் பிறகு நடந்த குறிப்பிடும்படியான சாதிய வன்முறையென்று, இராமநாதபுரம் கலவரத்தைக் குறிப்பிடலாம். முப்பதாண்டு கால இடைவெளியில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தலித்துகளுக்கு எதிரான கலவரங்களும் கொலைகளும் நிகழ்ந்தேறின. விழுப்புரம் படுகொலை, இராமநாதபுரம், மேலவளவு படுகொலை, தாமிரபரணி படுகொலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக உருவான தலித் எழுச்சி இதற்கொரு முக்கியக் காரணம்.
இத்தகைய சூழலில்தான் கலையும் சமூகமும் அரசியலும் வெவ்வேறல்ல என்றொரு பிரகடனம் எழுந்தது. கலை அமைதியோடு வண்ணங்களை ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைத் தூரிகையாகத் தீட்டியவர்களுக்கும் வேறுபாடு உருவான காலகட்டமென்றும் இதைச் சொல்லலாம். ஓவியர் சந்ரு தலைமையில் சென்னையிலிருந்து ஓவியக் கலைஞர்கள் குழு பல்வேறு கலவரப் பகுதிகளைப் பார்வையிட்டார்கள். தலித்துகளின் வாழ்வியலையும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டலையும் சாதியின் இறுக்கத்தையும் ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தார்கள். 1998ஆம் ஆண்டு ‘தலித் விடுதலையின் வண்ணங்கள்’ என்று அதற்குப் பெயரிடப்பட்டது.
அதே போல 2009ஆம் ஆண்டு ‘Hidden Feeling of Canvas’ என்றொரு கண்காட்சி நடத்தப்பட்டது, இந்த இரண்டு ஓவியக் கண்காட்சியிலும் இடம்பெற்ற ஓவியங்களை மேலவளவு 25ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவற்றில் சிலவற்றை இங்கு பதிவு செய்துள்ளோம். தலித் மக்களின் பிரச்சனைகளையும் விடுதலையையும் உள்ளடக்காமல் பேசப்படும் எந்த அரசியலும் அரசியலல்ல என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்றுக்கேற்ப தம் கலையை, தலித் மக்களின் பிரச்சனைகளுக்காகப் பிரகடனப்படுத்திய கலைஞர்கள் ஒருவகையில் இன்று நாம் பயணிக்கும் அரசியல் பாதையின் முன்னோடிகளாவர்.
குறிப்பு: ஓவியங்கள் கிடைக்கப்பெற்றாலும் ஓவியர்கள் மற்றும் அந்நிகழ்வு குறித்தான வேறு சில துல்லியமான தகவல்களைத் திரட்டுவதில் சில சவால்கள் உண்டு. எனவே, கிடைக்கப் பெற்றதைக் கொண்டு பிரசுரம் செய்துள்ளோம்.