காமம் நிறைவடைய எப்போதும்
இரு உடல்கள் தேவையென்று
எனக்குக் கற்பிக்கப்பட்டது.
நானோ அதை இரண்டு ஆன்மாக்கள் எனத்
தவறாக எண்ணினேன்.
அதன் பின்னே அறிந்தேன்
அங்கே ஆன்மா என்பதே இல்லை
இரு உடல்களும் கூட இருக்கவில்லை.
தன் இரையை வேகமாய் புசிக்கும் மிருகத்தின்
இன்பம் மட்டுமே அங்கிருந்தது.
அந்தக் கற்பிதங்களை நான் மீறினேன்
என்னுள் பல ஆன்மாக்கள்
நடனமிடுவதைக் கண்டேன்.
என் கைகள்,
கலையழகோடு என் மார்பகங்களைத்
தீண்டும் தென்றலாகும்.
என் கால்கள்,
தன் காதலின் தாளத்திற்கேற்ப ஆடும்
தேர்ந்த கம்பக்கூத்தாடி மங்கைகளாகும்.
என் உடல்,
கிழிந்த மேகங்களை
என் மென்விரல் நுனிகளின் தூறலால்
தைக்கும் ஒரு கலைஞராகும்.
என் மேலுதடு,
கூடலில் விளையாடும் ஈரிதழ்களைப் போல்
கீழுதட்டைக் கடிக்கும்.
காது மடல்கள் சிவந்து ஒளிர,
வியர்வைத்துளிகள் முத்தமிட்டன
என் பிடரியை.
நெடுங்கால அடக்குமுறையை
நான் உதறித் தள்ளினேன்.
இறுதியில், என் உடலை
நானே சொந்தமாக்கிக்கொண்டேன்.



