என் கைகள் கைகளாக இருப்பதைப் போலவே
என் முலைகளும் சாதாரண முலைகளே.
என் கைகளால் காய் நறுக்குகிறேன்,
சமைக்கிறேன், எழுதுகிறேன், அடுப்பை மூட்டுகிறேன்;
அதுபோலவே,
என் முலைக்காம்புகளால் பாலூட்டுகிறேன்.
என் கைகளால் ஓங்கி அறையவும் முடியும்
சில நேரங்களில்,
நான் அதைத் தீவிரமாக விரும்புகிறேன்.
ஆனால், எதிர்ப்பைக் காட்டக்கூடாதென
எனக்குப் போதிக்கப்பட்டுள்ளது,
அதனால் என்னை நானே அடக்கிக்கொள்கிறேன்.
ஆனால், என் படுக்கையின் தனிமையில்
விபரீதங்களை எழுதுகிறேன்,
என் விருப்பத்தையும் என் உடலையும்
அத்துமீறும் ஒவ்வொருவரையும்
இறுதியில் என் எழுத்தால் அறைந்தும் விடுகிறேன்.
நாள் முழுவதும் நடந்து நடந்து
களைத்துச் சோர்ந்து படுக்கையை அடையும்
என் கால்களைப் போலவே
என் முலைகளும் வழக்கமான ஒன்றே.
உங்கள் மீசையைப் போல,
துருத்திக்கொண்டிருக்கும் உங்கள் தொப்பையைப் போல,
புகையிலைக் கறைபடிந்த உங்கள் பற்களைப் போலத்தான்
என் முலைகளும்.
உங்கள் உடல் குறித்து நீங்கள் வெட்கப்படாதது போலவே
என் முலைகள் குறித்து நானும் வெட்கப்படவில்லை.
என் முலைகளை முலைகள் என்றே அழையுங்கள்
‘ஆரஞ்சுப் பழங்கள்’ என்றோ ‘பலூன்கள்’ என்றோ அல்ல.
என் முலைக்காம்புகள் கறுப்போ, பழுப்போ, வெள்ளையோ,
வேறெதுவோ இருக்கட்டும்.
எனினும் என் சிறிய முலைகளை எண்ணி
நான் பெருமை கொள்கிறேன்,
உங்கள் ஆண்குறியையும் உங்கள் விரைப்பைகளையும்
நீங்கள் சரிபார்ப்பது போலவே
என் முலைகளை என்னால் சரிபார்க்க முடியும்.
என் முலைகளை முலைகள் என்றே அழையுங்கள்
‘ஆரஞ்சுப் பழங்களோ’, வேறெந்தப் பெயர்களோ வேண்டாம்.
குறிப்பு: டெல்லி மெட்ரோ ரயிலில் ‘YouWeCan’ என்ற அறக்கட்டளை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக வைத்திருந்த விளம்பரத்தில், ‘மார்பகங்கள்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக “உங்கள் ஆரஞ்சுகளைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்” என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டது. பெண்களின் உடலுறுப்பைப் பழங்களோடு ஒப்பிட்டு மறைமுகமாகச் சித்திரித்த அந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பாகவும், பெண்களின் மார்பகங்களைப் பாலியல் கண்ணோட்டமின்றி இயல்பான உடல் உறுப்பாகப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இக்கவிதை எழுதப்பட்டது.
l goodbadeditor@gmail.com





