நான் தலைமைப் பண்புடைய ஒருவன்
மேலாதிக்கத்தை மறுப்பவன்
அதிகம் வெறுக்கப்படுபவன்
என் செயல்கள் அறிவார்ந்தவை
ஆகையால் அச்சமூட்டுபவை
நான்
அதிகம் படித்த ஓர் அந்த்யாஜா…
குரு சாஸ்திர விதிகளை மீறும்
தைரியம் கொண்டவர்களின்
குறிக்கோள் மீது
ஏற்புடையவன் என்பதால்
துன்பம் நிறைந்த பாதையில்
ஓர் ஒளியாக
முன் செல்ல துணிந்தேன்…
ஆம்,
அவர்களின் மேடையில்
தலைவனாக இருக்க சம்மதித்தேன்
தலைவனற்ற கூட்டம்
பாதையைத் தவறவிடும் என்பதால்
வழி நடத்த ஒப்புக்கொண்டேன்.
m
இரண்டு பகை முகாம்கள் பற்றிய
ஒரு கதையை
அவர்களிடம் சொன்னேன்.
ஒரே பந்தலில்
அந்தப் பங்காளிகள் நடத்திய கூட்டங்கள்
கால ஓட்டம் முட்டித் தூக்கியபோது
எப்படிச் சிதறிப் போயின என்று கூறினேன்.
ஒரே நேரத்தில் எழுப்பப்பட்ட
இரண்டு சுவர்களில் ஒன்று
எப்படித் தரைமட்டமாக்கப்பட்டது என்பதை
எடுத்துரைத்தேன்.
இந்தியாவில்
சமுதாய சீர்திருத்தம் என்பது
சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையைப் போல்
கரடுமுரடானது என்று தெளிவுப்படுத்தினேன்.
சக மனிதனின் நிழலை
அவனது காலடித் தடத்தை
அவனது இருப்பை
தீட்டாகப் பார்ப்பவர்களின்
குருதி உறவுகளாகிய நீங்கள்
சோசியல் கான்பெரன்சின் சாவுக்கு
வாசிக்கப்பட்ட இரங்கல் அறிக்கையை
ஒருமுறை வாசித்துவிடுங்கள் என்றேன்.
அவர்கள் மௌனமாக இருந்தார்கள்
அந்த மௌனத்தை
என்னால் புரிந்துகொள்ள முடிந்தது
அது
தெளிவுக்கும் தெளிவின்மைக்கும்
நடுவில் இருப்பவர்களின் தந்திரம்.
m
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்பியதற்காக
உலோகக் குடங்களைப் பயன்படுத்தியதற்காக
உணவில் நெய் சேர்த்ததற்காக
உடையில் தங்கச் சரிகை இருந்ததற்காக
ரவிக்கை அணிந்ததற்காக
நீங்கள் உதைப் பட்டதுண்டா?
ஓட ஓட விரட்டப் பட்டதுண்டா?
குடிசையில் வைத்துக் கொளுத்தப்பட்டதுண்டா?
துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டதுண்டா?
சொந்த மண்ணை விட்டு
துரத்தப் பட்டதுண்டா?
இக்கேள்விகளுக்கு அவர்களிடம்
பதில் இல்லை
ஆனால், அவர்கள் சொன்னார்கள்:
“இதைத்தான்
நாங்கள் சீர்திருத்த விரும்புகிறோம்”
m
இங்கு
தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும்
அநேக வார்த்தைகளில்
சீர்திருத்தமும் ஒன்று.
பெண்களிடம்
குடும்பக் கௌரவத்தின் வேர் உள்ளது
என்பதாக நம்பக்கூடியவர்கள் எல்லாம்
சமூகச் சீர்திருத்தவாதிகளாக இருந்தால்
அவர்கள் கட்டமைக்கும் கட்சி
தோல்வியைத்தான் தழுவும் என்றேன்.
என் நிலைப்பாட்டை
புரிந்துகொள்ளும் வாய்ப்பை
சீர்திருத்தவாதிகளுக்குக் கொடுத்தேன்
ஏனெனில்,
இயல்பில் அவர்கள் இந்துக்கள்.
சமூக சக்திகளின் வலிமையே
அரசியல் சாசனத்தின்
இருப்பைத் தீர்மானிக்கும் என்பதை
அவர்கள் உணர வேண்டும்,
அதை உணர்த்தினேன்.
முதலைகள் இருக்கின்ற ஆற்றை
நீந்திக் கடந்திட முடியாது
என்பதை அறிவேன்
அவர்களிடம் சொன்னேன்:
காட்டில் எரிகிற தீயை அணைக்காமல்
விதைகளை விதைக்காதீர்கள்
சாம்பலைத்தான் அறுவடை செய்ய வேண்டிவரும்.
m
புரட்சிகளின் வரலாறு
மதங்களால் எழுதப்பட்டது
ஐரோப்பியர்களின் அரசியல் விடுதலைக்கும்
லூதருக்கும் தொடர்புண்டு
இங்கிலாந்தின் அரசியல் விடுதலையை
பியூரிட்டானிசம் தீர்மானித்தது
நபிகள் நாயகம் இல்லாமல்
அரேபியர்கள் அரசியல் சக்தியாகியிருக்க முடியாது
புத்தரை விலக்கி விட்டு
மவுரிய அரசைப் பார்க்க முடியாது
சிவாஜியின் கிரீடம்
மதத்துறவிகளால் சூட்டப்பட்டது
சீக்கியரின் அரசை
குருநானக்கின் சொற்கள்
வழி நடத்தின
மீண்டும் சொல்கிறேன்:
புரட்சிகளின் வரலாறு
மதங்களால் எழுதப்பட்டது.
m
பக்கிரிகள்
சாதுக்கள்
மகாத்மாக்கள்
மடாதிபதிகள்
இவர்களின் காலடிகளில்
தரித்திர நிலையில் இருப்பவனும் விழுகிறான்
செல்வங்களில் செழித்திருப்பவனும் விழுகிறான்
ஒரு நீதிபதியை விடவும்
ஓர் அரசனை விடவும்
ஒரு தலைவனை விடவும்
ஒரு சாமியாருக்கு செல்வாக்கு அதிகம்
மனிதர்கள் மீது
மதம் நிறுவும் அதிகாரக் கட்டுமானத்துக்கு
அவர்களே
கற்களை எடுத்துக் கொடுக்கிறார்கள்.
அந்தக் கோபுரத்தின் நிழல் படாமல்
உலகில்
ஒரு மனிதனாலும் வாழ முடிவதில்லை.
ஏனெனில்,
மதத்தின் போதை
வேறு எந்த வஸ்துக்களை விடவும் அதிகமானது.
m
பசியோடு இருப்பவனுக்கு
வயல்களைக் கொடுப்பது சரியா
உணவளிப்பது சரியா
ஒரு லட்சிய உருவகத்தை விடவும்
நடைமுறைத் திட்டம் முக்கியமானது என்பது
என் கருத்து.
வயல்களைக் கொடுத்து
விதைக்க தானியங்கள் கொடுத்து
உழுவதற்கு ஏறும் மாடும் கொடுத்து
அறுவடையைச் சேர்க்க களம் கொடுத்து
அவனைச் சமத்துவத்துக்குள் கொண்டுவருவதைப்
பிறகு பார்த்துக் கொள்ளலாம்
இப்போது அவனைப் பசியாற்றுங்கள்.
தீண்டாமையைத் தூண்டும்
தவறான எண்ணங்களை
மக்களின் மனதிலிருந்து அகற்றும் சக்தி
பொருளாதார பலத்துக்கு இல்லை என்பது
என் பார்வை,
கழுதைப் புலிகளை
வளர்க்கும் ஊரில்
ஆடுகளை மேய்க்க முடியாது
என்பதைப்
புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே!
m
Illustration: André Carril
தலைவிதித் தத்துவம்
தீமையானது என்பேன்
அதை
வேதம் ஓதுபவன் ஏற்றிருக்கிறான் என்பதற்காக
சாக்கடை அள்ளுபவனும் ஏற்க வேண்டும் என்பது
அறிவீனம்
சாதி அமைப்பை
தொழில் பிரிவினையின் மறு உருவமாகக் காணும்
மன நோயாளிகளின் உளறல் அது.
கட்டுக் கதைகளை
அடித்தளமாகக் கொண்ட சமூகம்
உண்மைக்கு முன்பு
இப்படித்தான் பல் இளிக்கும்.
m
அற்பத்தனம் குரூரத்தை விட கேவலமானது
மோட்சத்தை அடையும் வழியை
விருப்பம் இல்லாதவர்களுக்கு
காட்ட விரும்பிய
மத போதகர்கள்
குரூரர்கள் என்றால்
இருளில் இருப்போரை
மேலும் படு பாதாளத்தில் தள்ள நினைக்கும்
சவர்ணர்கள் அற்பர்கள்.
m
ஒருபோதும் ஒரு இசுலாமியனை
இந்துவாக மாற்ற முடியாது
ஒருபோதும் ஒரு கிறித்துவனை
இந்துவாக மாற்ற முடியாது
காரணம்,
மதம் மாறியவர்களுக்குத்
தங்குவதற்கு அங்கு இடமில்லை
அதுவொரு மூடப்பட்ட கூடாரம்
ஓர் இரும்புக் கதவாய்
அடைத்து நிற்கிறது சாதி.
பரப்புரை மதமாக நீடிக்க முடியாமல்
இந்து மதம் தேங்கிப் போனதற்குக்
காரணம்
நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும்
புகுத்த முடிந்தவர்களால்
ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை
உறுதி செய்ய முடியாது என்பதும்,
மதம் மாறி வருபவர்களுக்கு
எந்தச் சாதியில் இடமளிப்பது என்பதும்தான்.
m
தங்களைக் காப்பாற்றிக் கொள்ள
நினைக்கும் கோழைகள்
நம்பிக்கைத் துரோகத்தையே
ஆயுதமாக எடுப்பார்கள்
அல்லது
சூழ்ச்சி செய்வார்கள்
அல்லது
சரணாகதி அடைவார்கள்
அல்லது
புறமுதுகிட்டு ஓடி ஒளிவார்கள்
கோழைகளுக்கு
வேறு போக்கிடம் இல்லை.
ஏனெனில்,
அவர்களால் சண்டை செய்ய முடியாது.
m
இங்கு
பொது ஒழுக்கம் என்று ஒன்றில்லை
நல்ல இயல்புகளைச்
சாதி ஒழித்து விடுகிறது
இரக்கத்துக்கு உரியவர்களைத்
தவிக்க விடுவதும்
தகுதியானவர்களை புறக்கணிப்பதும்
வருந்துவோரை
மேலும் ரணப்படுத்துவதும்
மனித இயல்பாக மாறிப்போனது.
இங்கு
பொதுவானதாக அறவுணர்ச்சி இல்லை.
அது
தன் சொந்தச் சாதியோடு மட்டுமே
நின்றுவிடுகிறது.
m
சமூகக் கலப்பில்லாமல்
ஜனநாயகம் சாத்தியமா என்றால்,
கூட்டு வாழ்க்கை முறை இல்லாமல்
அது எப்படிச் சாத்தியமாகும் என்பேன்
அப்படியென்றால்
இந்தியா ஜனநாயக நாடு இல்லையா?
என்று யாரேனும் கேட்பீர்கள் என்றால்
என்னுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும்:
“கூச்சமே இல்லாமல்
எப்படி உங்களால்
இந்தக் கேள்வியைக் கேட்க முடிகிறது ”
m
சைத்தானின் இறந்த உடலை
அப்படியே விட்டுவிட்டோம்
ஆயிரமாயிரம் புழுக்களாக
அது மாறிவிட்டது
சடலமாக இருக்கும்போது
எரிக்காமல் விட்டுவிட்டு
உயிருள்ள புழுக்களாக அவை மாறியதும்
எடுத்து வளர்க்கத் தொடங்கினோம்
இப்போது
ஆபத்தானவையாகவும் அருவருப்பானவையாகவும்
அவை பெருத்துக் கொழுத்து நிற்கின்றன.
ஆயிரக்கணக்கான அந்தப் புழுக்களுக்கு
நான்கு வண்ணங்களை அடித்து விடுவதால்
அவை சிறிய கூட்டமாக மாறி விடுமா என்ன?
m
மனுவின் கத்தியில்
குருதியின் ஈரம் எப்போதும்
இருந்துகொண்டே இருப்பதற்கு
அவர்கள்
குற்றவியல் அதிகாரத்தை உருவாக்கினார்கள்
அந்த அதிகாரத்தில் கூர் தீட்டிய ஆயுதத்தால்
நாக்கை அறுத்தார்கள்
காதுகளை எரித்தார்கள்
கொலை செய்தார்கள்
அந்தக் கத்தியின் தாகம்
எப்போது தீரும் என்று
உங்களுக்குத் தெரியுமா நண்பர்களே!
அந்தக் கத்தியை
மழுங்கடிக்க
உங்களால் முடியுமா நண்பர்களே!
அந்தக் கத்தியை முறித்துப் போட
உங்களிடம் தைரியமுண்டா நண்பர்களே!
நீங்கள் தலைகுனிய வேண்டும் என்று
இதை நான் கேட்கவில்லை
சமூக மாற்றத்தை
விரும்பக் கூடியவர்களாக இருக்கிறீர்களே
ஆகையால் கேட்டேன்.
m
இந்தியாவில் ஏன்
சமூகப் புரட்சிகள் நடக்கவில்லை
எனக்குள் இருக்கும்
இடைவிடாத கேள்வி இது
ஒடுக்கப்பட்டவர்கள்
தங்களது கலப்பையை
வாளாக உயர்த்தி
ஏன் போர் செய்யவில்லை
தாழ்த்தப்பட்டவர்கள்
தமது விடுதலைக்காக
ஏன் துப்பாக்கியை எடுக்கவில்லை
தங்களைக் கட்டி வைத்திருக்கும்
அடிமைத் தளையை
ஏன் அவர்கள்
ஆயுதம் கொண்டு அறுத்தெறியவில்லை
இதுபோல் எண்ணற்ற கேள்விகள்
என்னிடம் உண்டு
எல்லாக் கேள்விகளுக்கும்
பதிலும் என்னிடம் உண்டு
தோழர்களே!
இந்தக் கேள்விகளை நீங்கள்
சிந்தித்திருக்க மாட்டீர்கள்
ஆனால்,
பதிலை நன்கறிவீர்கள்.
(கடந்த ஏப்ரல் தலித் வரலாற்று மாத ‘வேர்ச்சொல்’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை)