சாளரத்தில் வாடிக்கையாய் வந்து அமரும்
ஓர் இருள்சுடரும் காக்கை.
அறை முழுதும் ஒவ்வொரு பொருளாய்
நின்று நிதானித்து உற்றுநோக்கிய பின்
கரையத் தொடங்கும்.
மூன்று முறை கரைந்து
சில நிமிடங்கள் அமைதி காத்து
மீண்டும் கரையும்.
என்னிடம் இருக்கும் நெல்மணிகளையும்
வடியாத நினைவுகளையும் எடுத்துச் செல்வேன்.
நெல்மணிகளைச் சாளரத்தின்
வெளிப்புறச் சுவரில் பரப்பிவிட்டுக்
கம்பிகளின் அருகில் சுழலும் நாற்காலியில் அமர்ந்துகொள்வேன்.
பின்னந்தலையில் கை வைத்து லாவகமாய்ச் சாய்ந்து
கண்மூடிப் பேசத்தொடங்குகையில்
நெல்மணிகளைக் கொத்திக்கொண்டிருக்கும் காக்கை.
நினைவுகளைக் கொத்தும் அகத்திற்குள்
வந்து வந்து ஒலிக்கும்
காக்கை நெல் கொத்தும் அலகின் இசை.
பூரிப்பின் பெருங்கணத்தில் மெல்ல கண் விழிப்பேன்.
அலகினைச் சாளர உட்பகுதிவரை நீட்டிக் காட்டிவிட்டு
விடைபெற்றுச் சிறகடித்துப் பறந்து செல்லும்.
அது மிச்சம் வைத்த ஒற்றை நெல்மணியை
உள்ளங்கையில் வைத்துப் பார்த்திருப்பேன்.
நெல்மணி எனக்குக் காக்கையின் தளிர் அலகு.
நினைவின் மணம்.
எளிய வாழ்வின் சிரிக்கும் பல்.
நெல் கொத்தும் அலகின் இசை – கீதா கார்த்திக் நேத்தா
ஓவியம்: பெனித்தா பெர்சியல்