1
மாவிளக்குகளின் இனிப்புச்சுடருக்கு விழிக்கும்
பெரும்பறைச்சேரியின் நடுநிசி தெய்வம்
வாணவெடிகளுக்குப் பயமுறுகிறது.
வெட்டி வெட்டியிழுக்கும்
முண்டச்சேவலின் ரத்தநகங்கள்
தரையில் பன்னிரண்டு தழும்புகளைக் கீறுகின்றன.
திரவியங்கள் மணக்கும் கொழுபன்றிக்குள்
வேல்கம்பினைக் கூட்டமாய் அழுத்தியிறக்க
பன்றி எழுப்புகிறது பன்னிரண்டு பேரலறலை.
உதிரக்கறியள்ளி எல்லோரும் வணங்குகையில்
பறந்துபோன தெய்வம்
கொலையுண்ட பன்னிருவரின் தாகத்திற்கு
குருதி கொடுத்து
பசிக்கு மாவிறைச்சி ஊட்டி
அநீதிப் புண்களில் விளக்கெண்ணெய் பூசி
வரிசையில் பதிமூணானது.
(தளுகை – 1978 ஜூலை 25, 26 தேதிகளில் நடந்த விழுப்புரம் கலவரத்தில் சாதி இந்துக்கள் கூட்டாக இணைந்து பெரியபறைச்சேரியைச் சேர்ந்த தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவர்களது குடிசைகளை எரித்தனர். கலவரத்தில் கொல்லப்பட்ட மணிகுண்டு, செல்வராஜ், மண்ணாங்கட்டி, வீரப்பன், திருமால், காத்தவராயன், ராமசாமி, ஆறுமுகம், சக்தி, ரங்கசாமி, சேகர், இருசம்மாள் ஆகியோருக்கும், படுகாயமடைந்தோருக்கும்)
2
புத்தாடை அணிந்து
கோயில் நோக்கி நடக்க
மஞ்சள் மயிர்கள் அரும்பும் சிசுப்புறாவுக்கு
ஒரே மகிழ்ச்சி.
ஊரின் நாவுகள் ஆயுதங்களாக மாறி
எனைத் தாக்கிட
இரையுடன் வந்திறங்கிய தாய்ப்புறாவின் குரல்வளை
கோபுரயிடுக்கில் நடுங்குகிறது.
மண்ணள்ளித் தூற்றும் நாவுகளின் சபித்தலில்
பிஞ்சு நாவுகளுக்கு ஒரே குதூகலம்.
கோயிலுக்குள்
நான் முன்னகர முன்னகர
பிடுங்கித் தொங்கும் நாவுகளின் நுனி
தரையைத் தொடுகின்றன.
விபூதி குங்குமத்தில் திளைத்த பெண் நாவுகள்
அருளேறி மறிக்க
நீதிமன்ற ஆணையுடன்
சாமிகளையும் முட்டித் தள்ளினேன்.
பொய்ச்சாமிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டவுடன்
மலையிறங்கிய கலக்க முகங்களைப் பார்த்து
எனது கருநாக்குப் பலிக்க பலிக்கச் சிரிப்பதில்
புறாயிரண்டின் இரைப்பை
நிம்மதியாகிறது.
3
அன்றைய தினம்
எருக்கம்பூவுக்குள் ஒளிந்த நான்
அப்பனால் கண்டுபிடிக்கப்பட்டு
வங்கொலையானதில்
ஒடிந்து அழுதன எருக்கஞ்செடிகள்.
மேய்ச்சல் நிலத்தில் புதைத்து
என்னைத் தெய்வமாக்கியதற்குப்
புல்லறுத்தே சிதைந்த பன்னருவாள்களே சாட்சி.
இன்று
எனக்காக விரிக்கப்பட்ட
வழிபாட்டுப் படையலை வீசியெறிந்து
அருவாளுக்கான கைப்பிடிகளை
எருக்கம்பாலால் செய்து
குடும்பத்தாரை விரட்டுகிறேன்.