நூற்றாண்டுகளாக
ஒரே நிறச் சட்டையை விற்பவருக்கு
சட்டை அணியாதவர்களைக் கண்டால்
கடுங்கோபம் வந்துவிடும்
உடனே தன்னிடமுள்ள சட்டையை
வம்படியாக அவர்களுக்கு மாட்டிவிட்டு
தனது சாமர்த்தியத்தைத் தானே மெச்சிக்கொள்வார்
ஒரே நிறச்சட்டையை அணியும் மக்களுக்கு
துர்வாடை பீடித்திருந்தது
நூற்றாண்டுகளால் சிதைக்கப்பட்ட
சட்டையை அணியும்போதும்
வலிந்து அணிவிக்கும்போதும் குமட்டியது
சட்டையைக் கழற்றி எறிய எத்தனித்த சிலர் எரிந்தனர்
நறுமணமூட்டப்பட்ட சட்டைகளோடு
வியாபாரிகள் திடீரெனக் கடைவிரித்தார்கள்
நறுமணப் பளபளப்பில்
மக்கள் விரும்பிப் புகுந்துகொண்டனர்
பேரிடியில் இடிந்துபோன பழைய வியாபாரி
சட்டெனச் சட்டைமாற்றுத் தடைச் சட்ட வியூகம் வகுத்தார்
இச்சட்டம் பாம்புகளுக்கும் பொருந்தும்.