கடம்பனுக்குத் தன் தலைக்கு மேல் ஆயிரம் பேர்
சாதியின் பேரால் மதத்தின் பேரால்
பணத்தின் பேரால் பதவியின் பேரால்
கால் போட்டு அமர்ந்திருப்பதைப்
பற்றியெல்லாம் கவலையேயில்லை
சலூன் நாற்காலியில் மட்டும்
கால்மேல் கால் போட்டுக் காலாட்டிக்கொண்டே இருக்கணும்
நானும் பார்த்துப் பார்த்துச் செய்யணும்
பயந்து பயந்து வழிக்கணும்
என்ன பண்றது சார்
அவனிடம் நிறைய மயிரு இருக்கு
என்னை நம்பி நிறைய வயிறு இருக்கு.
♦
அம்மா காகம் கரைகிறது என்றேன்
யாரு வரப் போறாங்க நம்ம வூட்டுக்கு
ஊரும் பத்துப் பைசாவுக்கு மதிக்காத
வூடும் அஞ்சி பைசாவுக்கு மதிக்காத
குடிவெறியன் நம் மண்டையை உடைத்தபோது
நமக்கு ஞாயம் சொல்லாத ஊரிலுள்ள
நாட்டாமைக்காரு, போலீஸ்காரு, வாத்திகாரு,
தபால்காரு, பால்காரு, மனையக்காரு, பண்ணைக்காரு,
மாடிவீட்டுக்காரு, குச்சி வீட்டுக்காரு, குடிசை வீட்டுக்காரு
இவனுக்கெல்லாம் தும்பப் பூப்போல முகம் வழிச்சி
தொடப்பக்கட்ட போல மீசை வைக்கிறதுக்கு
அடப்பத்தை எடுத்துக் கிணத்துல போட்டு
அரிச்சுவடிய எடுத்துக்கிட்டுப் பள்ளிக்குப் போடா என்றாள் அன்னை
♦