தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் எழுப்பும் அரசியல் பிரதிநிதித்துவக் கோரலுக்கான குரல் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. இந்திய சுதந்திரத்திற்கு முன், பின் என அவற்றை இரண்டாக வகுத்துக்கொள்ளலாம். சுதந்திரத்திற்குப் பின்னாலான அரசியல் மாறுதலால் அதிகாரம் என்பது முழுக்கத் தேர்தல் அரசியலை மையப்படுத்தி நகரத் துவங்கியது. மாநில அளவில் சமூக ரீதியாக அதிகாரம் கைவரப்பட்ட சாதிகளுக்குப் பணிந்து போவதைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யுத்தியாகவே அரசியல் கட்சிகள் பின்பற்றின. அதன் விளைவாகச் சாதி இந்துக்களிடம் அரசியல் அதிகாரம் இயல்பாகவே குவியத் துவங்கியது.
ஆனால், தலித்துகளுக்கு இது இன்னமும் இயல்பான ஒன்றாகச் சாத்தியப்படவில்லை. சமூகநீதிக் களத்தில் கேள்விகளுக்குள்ளாகும்போது அதை ஈடு செய்யவே தலித் பிரதிநிதித்துவம் பெயரளவில் கொடுக்கப்படுகிறது.
இத்தகைய உரையாடல்கள் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால், அதிகார பிரதிநிதித்துவத்தை நோக்கிய இலட்சியப் பயணமாக, தொடர் செயல்பாடாக அவை இருந்ததில்லை. தலித் கட்சிகளும் இயக்கங்களும் இதை விமர்சனப்பூர்வமாக ஏற்றுச் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்த அளவில் மட்டுமே தலித் அரசியல் மீதான நம் விமர்சனங்கள், எதிர்பார்ப்புகள் எதுவாகினும் இருக்க முடியும். ஆனால், இத்தகைய உரையாடல்கள் நிகழும்போது அதையொட்டி வரும் எதிர்வினை, மௌனமாக கடந்து போதல் ஆகியவற்றின் அரசியல் முக்கியமானது.
கடந்த 2019ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சமஸ் உடனான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் நேர்காணல் ‘நான் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது’ என்ற தலைப்பில் வெளியானது. சமூக வலைதளங்களில் இத்தலைப்பின் மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தலித் தலைவர் ஒருவர் தன்னால் முதல்வராக இயலாத நிலையைக் குறிப்பிடும்போது, அதை அறுதியிட்டு நிறுவும் விதமாக அதையே தலைப்பாக்குவது அறமல்ல என்பதாக அந்த விமர்சனங்கள் இருந்தன. தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் மூலம் துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என்கிற கருத்துகள் மீண்டும் விவாதமாகியிருக்கின்றன.
தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கக்கூடிய கட்சிகளாக இருக்கின்றன. ஆட்சியில் பங்கு கொடுப்பது குறித்தும், துணை முதலமைச்சரைத் தேர்வு செய்வது குறித்தும் அவர்களே முடிவு செய்ய முடியும். அதனால் இத்தகைய கோரிக்கைகளுக்குக் கட்சிக்காரர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பது அறிந்ததே. ஆனால், தேர்தல் அரசியல் நீங்கலாக தமிழ்நாட்டில் இயங்கும் திராவிட, பொதுவுடைமை அறிவுஜீவிகள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியம்.
சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு உள்ளிட்டவற்றுக்கு இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என்று சொல்லப்படுவதுண்டு. இக்கூற்றைத் திராவிட இயக்கத்தோடு சுருக்கிப் பார்த்துவிட முடியாது. எனினும், வரலாற்றுப்பூர்வமாகத் வட மாநிலங்களை விட தமிழ்நாடு முற்போக்கான மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கேற்றக் கோட்பாட்டு ரீதியான தர்க்கங்களும் உரையாடல்களும் இங்கே தொடர்ந்து நிகழ்கின்றன. இத்தகைய சூழலில், தலித் தலைவர் ஒருவர் தனக்கு எல்லா விதமான தகுதி இருந்தும் தன் பிறப்பின் காரணமாய் ஒருநாளும் தான் முதல்வராக முடியாது என்று சொல்லிவருவதைக் குற்றவுணர்வோடு அணுகியிருக்க வேண்டும்; அது நிகழாமல் இருப்பதற்கான சமூகக் காரணிகள் பேசுபொருளாகியிருக்க வேண்டும். ஆனால், தமிழ் அறிவாளிகள் முதற்கொண்டு ஊடகங்கள் வரை 2026ஆம் ஆண்டு தேர்தலோடு தொடர்புபடுத்தி இந்த உரையாடலைத் தேர்தல் பேரமாகவும், பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த உதவும் என்பதாகவும் முடித்து வைத்தனர்.
தலித் அரசியல் மீதான விமர்சனங்களுக்குப் பதிலுரைக்கத் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் அதன் தலைவர் திருமாவளவனையும் விதந்தோதும் கோட்பாட்டாளர்களில் யாருமே பெயரளவுக்குக் கூட இந்த உரையாடல் நிகழும்போது திருமா கூற்றில் இருக்கும் நியாயத்தை முன்வைத்து, தலித் முதல்வர் என்பது ஒருநாள் சாத்தியமாகும் என்றோ, அதற்கு நாங்கள் துணை இருக்கிறோம் என்றோ பதிவு செய்ததில்லை. தலித் முதலமைச்சர் சாத்தியமாவதற்கு நடைமுறையில் பல தடைகள் இருப்பினும் கோட்பாட்டளவில் கூட இந்த உரையாடலை யாரும் கணக்கில் கொள்ளவில்லை.
தலித் முதலைமச்சர் என்கிற உரையாடல் ஒருபுறமிருக்கட்டும், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ, பிற முற்போக்குக் கட்சிகளோ இங்கே எதிர்க்கட்சியாக இரண்டாம் இடத்தை நோக்கிக் கூட நகர முடியாத நிலை இருக்கிறது என்பதே நிதர்சனம். அண்மையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில் திமுக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் ‘பாஜகவை நம்பி நிறைய கட்சிகள் அழிந்திருக்கிறது, அதில் அதிமுகவும் ஒன்று. விரைவில் அதிமுக மீள வேண்டும்’ என்றார். உதயநிதி இதை இயல்பாகப் பேசியிருந்தாலும் அதிமுக மீதான திமுகவின் கரிசனம்தான் தமிழக, திராவிடக் கோட்பாட்டாளர்களின் கருத்தும் கூட.
திமுக, அதிமுக என இரண்டையுமே திராவிடக் கட்சிகள் எனக் குறிப்பிட்டாலும் திமுகவே திராவிடத்தின் அடையாளம் என நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு இன்று சந்திக்கும் எண்ணற்றப் பிரச்சினைகளுக்கு அதிமுகவே காரணம் என்பது திமுக ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு. “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பாரதிய ஜனதாவின் அடிமைகளாக மாறிவிட்டனர்” என அரசியல் நீக்கம் செய்து பரப்புரை செய்தார் மு.க.ஸ்டாலின். அந்த அளவு அதிமுக மோசமான கட்சியாகச் சித்திரிக்கப்பட்டாலும் திராவிட இயக்கக் கருத்தியலாளர்களுக்கு அதிமுகவின் இருப்பு முக்கியம். கோட்பாட்டளவில் இடது முற்போக்குக் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அந்த இடத்தை நோக்கி நகர்வதை இங்குள்ள அரசியல் சூழல் விரும்புவதில்லை. ஒருவேளை இரண்டாம் இடத்தை நோக்கி இந்தக் கட்சிகள் முன்னேறுமேயானால், இரு திராவிடக் கட்சிகளையுமே அவர்கள் விமர்சித்தாக வேண்டும், அதை நோக்கிய சிறு முன்னெடுப்பைச் செய்தால் கூட அதற்கு உள்நோக்கம் கற்பித்து அரசியல் நீக்கம் செய்யும் பணியை முதலில் செய்பவர்கள் திராவிட அறிவுஜீவிகளாகதான் இருப்பர். இந்தப் பின்னணியிலிருந்துதான் தலித் முதலமைச்சர், ஆட்சியில் பங்கு, எதிர்க்கட்சி என்கிற நிலையை நோக்கி நகர்தல் உள்ளிட்டவற்றின் சாத்தியங்களை நாம் மதிப்பிட முடியும். தலித் முதலமைச்சர் என்கிற இலக்கு இங்கே என்னவாகத் திசைதிருப்பப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தலித் முதலமைச்சர் உரையாடல் நடந்துகொண்டிருக்கும் அதே சூழலில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா நிகழ்வு நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசும்போது, “தமிழ்நாட்டில் இன்று முதலமைச்சர் பதவிக்குப் போட்டியில்லை, துணை முதலமைச்சர் பதவிக்குத்தான் போட்டி. துணை முதலமைச்சர் பதவி ஒன்றும் டிஎன்பிசி தேர்வு வைத்துத் தேர்ந்தெடுக்க முடியாது” என்று மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் இருக்கும்போதே தலித் துணை முதலமைச்சர் குறித்த விவாதத்திற்குப் பதிலாகக் குறிப்பிட்டிருந்தார்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி குறிப்பிட்ட பகுதியில் இயங்கக்கூடிய வெளிப்படையான சாதிக் கட்சி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக சூரியமூர்த்தி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தலித் மக்களுக்கு எதிரான அவரது கடந்தகால சாதியவாத பிரச்சாரத்தின் காரணமாகவும், அவர் மீது நிலுவையில் இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை மேற்கோள் காட்டியும் தலித்துகள் மத்தியில் கடுமையான எதிர்வினைகள் வரவே சூரியமூர்த்திக்குப் பதில் மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழக அரசும் காவல்துறையும் தலித் விவகாரங்களில் நேர்மையாக இருந்திருந்தால் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியில் அநேகம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும். சமூகமும் அதிகாரமும் கொடுக்கும் பலத்தினால் சாதிக் கட்சியாகத் தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு கட்சியின் தலைவர் தலித்துகளின் கோரிக்கையை வேடிக்கையாக மேற்கோளிட்டுப் பேசுகிறார்.
தலித் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட உரையாடல்களுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் பதிலுரைப்பது, அதைச் சமூகநீதிக் கோட்பாட்டாளர்கள் மௌனமாகக் கடப்பது என இவை இரண்டையும் ஒரே புள்ளியில் இணைத்துப் பார்க்க வேண்டும். “தலித் சமூகத்திலிருந்து தனியாக ஒரு முதலமைச்சர் இங்கு உருவாக வேண்டிய அவசியமில்லை, அது அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றால் அடையக் கூடியது, இதைப் பேசுபொருளாக்குவதற்கு என்ன இருக்கிறது?” இவைதான் இவ்விவகாரத்தில் தமிழ்நாட்டின் கருத்துகளாக இருக்கின்றன. இதனூடாக தலித் முதலமைச்சர் உருப்பெறுவதற்குத் தமிழ்நாட்டில் இருக்கும் சமூகத் தடை பேசுபொருளாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
இந்த இலக்குக்கு ஏற்கெனவே உதாரணங்கள் இருக்கின்றன. உத்திரப்பிரதேசத்தில் செல்வி மாயாவதி நான்கு முறை முதல்வராக இருந்திருக்கிறார், அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் பட்டியலின பழங்குடி சமூகத்திலிருந்து ஐந்து பேர் அமைச்சர்களாகவும் துணை முதலமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எந்தெந்த மாநிலங்களை மேற்கோள் காட்டி தமிழகம் அதனினும் சிறந்தது என்று குறிப்பிடுகிறோமோ அந்த மாநிலங்களில் ஏற்கெனவே சாத்தியமான ஒன்றை நாம் தமிழகத்தின் எதிர்கால இலக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்திய அரசியலின் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடியவர்களாக, ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னரே இராவ் பகதூர் ரெட்டமலை சீனிவாசன், பெருந்தலைவர் எம்.சி.இராஜா, தந்தை என்.சிவராஜ் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் இருந்திருக்கின்றனர். அதையொரு கால அளவுகோலாகக் கொண்டு தர்க்க ரீதியாகச் சிந்தித்தால் தலித் முதலமைச்சர் என்பது காலத்தால் இயல்பாக இங்கு சாத்தியப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அதிகாரம் கைவரப்பெற்றவர்களிடம் அதைக் கோரிக்கையாக முன்வைத்து நியமன பதவிகளாகப் பெற்றோமேயானால், தலித் ஒருவர் முதல்வராகவும் துணை முதல்வராகவும் உருப்பெற்றதை விட அவர்கள் யாரால் ஆக்கப்பட்டார்கள் என்பதே வரலாறாக நிற்கும். ஆகையால், தலித் முதலமைச்சர் என்கிற பெரிய இலக்குக்கு முன்னே தலித்துகள் தவிர்க்க முடியாத இரண்டாம் கட்ட சக்தியாக உருப்பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே காலம் இக்கோரிக்கையைப் பரிசீலிக்கும்.