சென்னைப் புத்தகக் கண்காட்சி 49ஆவது ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக, சென்னைப் புத்தகக் கண்காட்சி பல சச்சரவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றது. அது பல நிலைகளில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் எனப் பல கருத்துகள் இருந்தாலும் வெற்றிகரமாக ஆளும் தரப்பாலும் மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட கண்காட்சி. கடந்த டிசம்பர் மாதம் பபாசி அமைப்பின் புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றிருக்கிறது. கடந்த ஆண்டைவிட ஒப்பீட்டளவில் இம்முறை சில புதிய அணுகுமுறைகளைப் பார்க்க முடிந்தது. புதிய பதிப்பாளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தல், அரங்கிற்குள் நிலவும் ஜனநாயகத்தன்மையற்ற நிலை என இன்னும் மேம்பட வேண்டியவை இருந்தாலும், சில புதிய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.
ஆண்டுக்கொருமுறை நடக்கும் இப்புத்தகக் கண்காட்சியை மையப்படுத்தியே தமிழின் பெரும்பாலான பதிப்பகங்கள் புதிய நூல்களைக் கொண்டு வருகின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சியை இலக்கியத் திருவிழா எனக் குறிப்பிட முடியாமல் போனாலும், இதன் பின்னால் இருக்கும் சந்தை ஒரு கூடுகையைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. அக்கூடுகை தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்கள் சங்கமிக்கும் இடமாக மாறுவதால் அதற்கோர் இலக்கிய அந்தஸ்த்து கிடைக்கிறது. கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்தப்படுவதும் வரவேற்கப்பட வேண்டியது. புத்தகத் திருவிழா என்கிற அளவில் விரிவடைந்திருக்கும் இம்முயற்சி, நாளடைவில் இலக்கியத் திருவிழாவாக உருமாற வேண்டும்.
சென்னைப் புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே காலகட்டத்தில் சற்று முன்னும் பின்னுமாகப் பிற மாநிலங்களில் நடக்கும் இலக்கியத் திருவிழாக்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கேரள இலக்கியத் திருவிழா, கர்நாடக இலக்கியத் திருவிழா, புக் பிரம்மா இலக்கியத் திருவிழா, கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாக்கள் ஆகியவை ஒவ்வோர் ஆண்டும் மிக பிரமாண்டமாக நடந்தேறுகின்றன. உலகம் முழுவதிலுமிருந்து எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆளுமைகள், சூழலியலாளர்கள், திரைப் பிரபலங்கள், கலை இலக்கிய, அறிவியல், கல்விப்புல ஆளுமைகள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கு பெறுகிறார்கள். பல புதிய நூல்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, நூல் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடக்கின்றன, சமகாலத்து அரசியல் சூழல் விவாதமாகிறது, காலை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் மாலை வரை நீடிக்கின்றன, ஒரே நேரத்தில் வெவ்வேறு அமர்வுகள் நடக்கின்றன, ஆயிரக்கணக்கான வாசகர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற அரங்குகளை நோக்கிச் செல்கிறார்கள், ஒவ்வோர் அமர்வு முடிந்ததும் நூல் விற்பனை அரங்குக்கு அருகே எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது, ஒவ்வொரு நாள் இறுதியிலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இத்தகைய இலக்கியத் திருவிழாக்களில் கூடும் இலட்சக்கணக்கான இளைஞர்களைப் பார்க்கும்போது உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கின்றன. அங்கு பகிரப்படும் கருத்துகள் எந்தவிதமான மாற்றத்தை உண்டு செய்கின்றன என்பது இரண்டாம் பட்சம். ஆனால், இப்படியொரு கூடுகையை இலக்கியத்தை மையப்படுத்திக் கூட்டுவதே இத்திருவிழாக்களின் முதன்மை வெற்றி. இந்நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும் விதம், அதன் அமர்வுகள், வடிவமைப்பு, விளம்பரம் என எதுவுமே சமகால இளைஞர்களிடமிருந்து அந்நியப்பட்டவையாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய இலக்கியத் திருவிழாக்களில் கலந்துகொள்வது தொடர் கலாச்சாரமாக மாறும்போது, கலை இலக்கிய அரசியல் அதன் தீவிர தன்மைக்காக வெகுஜன ரசனைகளிலிருந்து விலக்கி வைக்கப்படாமல், அவை சமூகத்தின் அங்கமாகத் தொடர்ந்து தக்க வைக்கப்படுகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் விற்பனைக்கு வரும் பல முக்கிய நூல்களின் முதல் பதிப்பு குறைந்தது பத்தாயிரம் பிரதிகள் வரை விற்பனையாகின்றன. முக்கியமாக அங்கு புகழ்பெற்ற எழுத்தாளர்களை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. தமிழ் இலக்கியச் சூழலில் இவை ஏன் சாத்தியப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
இங்குள்ள புத்தகத் திருவிழாக்களில் உரையாற்றுவதற் கென்றே சிலர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறார்கள். கூடுதலாகப் பட்டிமன்றப் பேச்சாளர்கள், தொலைக்காட்சிகளில் புகழ்பெற்றவர்கள் ஆகியோர் பெருந்தொகை கொடுத்து வரவழைக்கப்படுகிறார்கள். மாவட்ட அளவில் நடக்கும் இலக்கியத் திருவிழாக்களில் இத்தகையோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது குறித்த விமர்சனம் எழுந்தபோது, “பிரபலமானவர்கள் மூலம் மக்களைக் கூட்டுவது ஒருவகையில் நன்மையே” என்பது அரசு சார்பில் ஒருங்கிணைப்பவர்களின் பதிலாக இருந்தது. ‘இலக்கியத்தை யார் காப்பாற்றவது?’ என இங்கு நெடுங்காலமாக நடக்கும் ஒப்பீட்டு உரையாடலுக்குள் நாம் போகத் தேவையில்லை. புத்தகத் திருவிழாக்கள் என்கிற அளவில் தற்போது நடப்பது சரியாகவே இருக்கட்டும், இதே அரசு ஆதரவோடு மேற்குறிப்பிட்ட இலக்கியத் திருவிழாக்களை இங்கு நடத்துவதற்கான முயற்சிகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை என்பதை நோக்கி நாம் நகர வேண்டியிருக்கிறது.
பிற மாநிலங்களில் நடக்கும் இலக்கியத் திருவிழாக்களை அரசே ஏற்று நடத்துவதில்லை. ஆனால், அரசு ஆதரவோடு நடக்கிறது. தமிழ்நாட்டிலும் அது சாத்தியப்பட வேண்டும். அரசுடன் தொடர்ந்து பணியாற்றும் பபாசி போன்ற அமைப்புக்கு மட்டும் கிடைக்கக்கூடிய நிதியுதவி நாளடைவில் அதிகாரமாய் மாறும். தமிழ்ப் பதிப்பாளர்கள் வணிக ரீதியாக இயங்குவதற்கு இத்தகைய புத்தகத் திருவிழாக்கள் அவசியமாகிற அதேவேளையில், இந்நிகழ்வுகள் கலை இலக்கியத்தை மேம்மபடுத்துவதில் எந்தப் பங்கும் வகிக்கவில்லை என்பதே உண்மை. அதை மேம்படுத்தக் கூடிய இடத்தில் இருக்கும் இலக்கிய அமைப்புகளை, பதிப்பாளர்களை ஒருங்கிணைத்து இத்தகைய இலக்கிய நிகழ்வுகளைச் சாத்தியப்படுத்த அரசு முன்வர வேண்டும்.
தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளுக்கும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழுக்கும் அறிமுகப்படுத்தும் மொழிபெயர்ப்புப் பணிகள் முக்கியமானவை. சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அது மட்டுமே போதாது. தொடர் இலக்கிய நிகழ்வுகள் மட்டும்தான் இதற்கான பாலமாக இருக்க முடியும். மக்கள் தொகை அளவிலும் பொருளாதார பின்புலத்திலும் கேரளா சிறிய மாநிலம். இத்தகைய உலகளவிலான முயற்சிகள் அங்கு சாத்தியப்படும்போது தமிழ்நாட்டில் இதை இன்னும் எளிதாக நிகழ்த்திக் காட்ட முடியும்.
பொதுவாகவே வாசிப்பு பழக்கம் குறைந்துவருவதாக உலகம் முழுக்கக் குரல் எழத் துவங்கியிருக்கிறது. எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இது முன்வைக்கப்படுகிறது என்பதைக் காட்டிலும், டிஜிட்டல் யுகத்தின் கையடக்கக் கருவிகள் கணிசமான தாக்கம் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது. காலத்திற்கு ஏற்றார் போல எது ஒன்றையும் தகவமைக்க முயலாமல் குற்றச்சாட்டுகளால் மட்டுமே எதையும் தீர்க்க முடியாது. கைப்பேசியில் தனியோர் உலகத்தைக் கட்டமைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் தனிமனிதராக மாறி வரும் வேளையில் இலக்கியத்தின் பெயரால் இலட்சக்கணக்கான மக்கள் கூடுவது சமூகத்திற்குப் பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்று. புத்தகக் கண்காட்சியோடு தன்னிறைவடையும் தமிழ் இலக்கியம் இலக்கியத் திருவிழாவாகப் பற்றிப் படர வேண்டும், அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தால் அவசியமானது.




