சென்னை 48ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. சில ஆண்டுகளாக அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டாலும் வாசகர் பரப்பு, வணிகம், விளம்பரம் என எல்லா வகையிலும் சென்னை புத்தக் கண்காட்சி பிரமாண்டமானது. அதனால், தமிழகம் மட்டுமன்றிப் பிற மாநிலங்கள் – நாடுகளிலிருந்தும் கூட வாசகர்கள் வருகைபுரிகிறார்கள்.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இந்தப் புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்து நடத்திவருகிறது. இத்தகைய கண்காட்சியை நீண்டகாலமாக ஓர் அமைப்பு நிர்வகிக்கும்போது அதிலுள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவது, முரண்படுவது, மாற்று அமைப்பின் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொள்வது என்பது இயல்பாகவே நடக்கும். அவ்வாறே பபாசிக்கு எதிராகச் சில அமைப்புகள் தோன்றிப் புதிய முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், பபாசிக்குக் கிடைக்கும் ஆளும் வர்க்கத்தினரின் ஆதரவு, பிற அமைப்புகளுக்குக் கிடைப்பதில்லை. தொடர்ந்து அரசு நிதியுதவி பெறும் அமைப்பாக பபாசியே திகழ்கிறது.
ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்துவதில் இயல்பாகவே சில நிர்வாகச் சிக்கல்கள் இருக்கக்கூடும். அதன் பொருட்டுச் சில விமர்சனங்கள், முரண்கள் உருவாகும். ஆனால், கடந்த சில வருடங்களாக தலித் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் பபாசி மூலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இத்தகையதானது அல்ல. தலித் பதிப்பாளர்களுக்கு அடிப்படை உரிமையே மறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் 800 முதல் 1000 அரங்குகள் வரை அமைக்கப்படுகின்றன. விற்பனையாளர்களும் பதிப்பாளர்களும் இதில் அடக்கம். சராசரியாக ஆயிரம் அரங்குகளில், பதினைந்தில் இருந்து பதினெட்டு மட்டுமே பட்டியல் சமூகப் பதிப்பகங்கள். இவற்றில் தொடர்ந்து செயல்படுவது பத்திற்கும் குறைவான பதிப்பகங்களே. இவர்களுக்கு அரங்குகள் ஒதுக்குவதிலும், அவர்களை பபாசியில் உறுப்பினர்களாகச் சேர்ப்பதிலும் தொடர்ந்து தீண்டாமையைக் கடைபிடித்துவருகிறது அதன் தலைமைக் குழு.
இரண்டு வருடங்களுக்கு முன் தடாகம், நீலம், வாய்ஸ் ஆப் புத்தா ஆகிய பதிப்பகங்கள் இந்த அடக்குமுறையை எதிர்த்து SC / ST நல ஆணையத்திடம் புகார் கொடுத்ததின் அடிப்படையில், அவ்வாணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை கடிதம் ஒன்றை அளித்தது. அதன்படி அரசு நிதியுதவிப் பெற்றுப் புத்தகக் கண்காட்சியை நடத்தும் ஓர் அமைப்பின், பட்டியல் சமூகப் பதிப்பகங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளில் தலையிட்டுத் தீர்வை எட்ட வேண்டும் என்று கோரியிருந்தது. ஒவ்வோர் ஆண்டும் பட்டியல் சமூகப் பதிப்பகங்கள் ஏதோவொரு பிரச்சினையை சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று.
இத்தகைய சிக்கல்கள் ஏதுமின்றி பபாசியுடன் சுமுகமாகப் போவதற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஒன்று: அவர்களிடம் விண்ணப்பித்துவிட்டுப் பெரும் காத்திருப்புக்குப் பின்னர் அவர்களாக ஒதுக்கும் ஒற்றை எண்ணிக்கை அரங்கைப் பெற்றுக்கொள்வது. இரண்டு: அவர்கள் கேட்கும் பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்தி அரங்குகளைப் பெற்றுக்கொள்வது. நீலம் பதிப்பகம் நான்கு அரங்குகளைப் பெற ஒவ்வோர் ஆண்டும் இரண்டரை லட்சத்திற்கு மேல் செலுத்திவந்தது. நடப்பு ஆண்டில் மூன்றரை லட்சம் வரை செலுத்தச் சொல்லி நிர்பந்தப்படுத்தப்பட்டோம். ஒவ்வொரு முறையும் இப்படியான போராட்டங்களுக்கிடையேதான் அரங்குகள் பெற முடிகிறதேயொழிய, ஓர் அமைப்பிற்குள் தொடர்ந்து இயங்கும் பிற பதிப்பகங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் நீலம் போன்ற தலித் பதிப்பகங்களுக்குக் கிடைப்பதில்லை. இதுதான் நமது பிரதான கோரிக்கை.
இந்த அடிப்படைக் கோரிக்கை மறுக்கப்படும்போதுதான், பட்டியல் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புகளையும் சட்டத்தையும் நாடி நாங்கள் போக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்பிரச்சினைகளைப் பட்டியல் சமூகப் பதிப்பகங்கள் தொடர்ந்து கவனப்படுத்திவந்ததால், இந்த ஆண்டு வாய்ஸ் ஆப் புத்தா பதிப்பகத்தின் உரிமையாளர் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தரின் முயற்சியாலும், தமிழக அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிடம் நீலம் உள்ளிட்ட பதிப்பகங்கள் முறையிட்டதின் விளைவாகவும், ஏழு பட்டியல் சமூகப் பதிப்பகங்களுக்கு தாட்கோவின் நிதியுதவியுடன் இம்முறை தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், Inclusive Dhamma Publications, அரசமரம் பதிப்பகம், பாலம், கலகம் வெளியீட்டகம், அறம் பதிப்பகம், மணற்கேணி உள்ளிட்ட பதிப்பகங்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தாலும், அரசு நிறுவனத்தாலும் அதிகபட்சமாகச் செய்ய முடிந்தது இதுதான். இதன் மூலம் பலன் பெறுகிறவர்கள் இருந்தாலும், நமது இலக்கும் கோரிக்கையும் இதுவல்ல.
பட்டியல் சமூகப் பதிப்பகங்கள் எழுப்பும் கோரிக்கைகள் என்பது, பபாசியின் பொதுவான விதிகள் பட்டியல் சமூகப் பதிப்பகங்களுக்கு மறுக்கப்படுவதுதான். ஆயிரம் அரங்குகளுக்கு மேல் இருக்கும் பொதுவான அரங்கத்தில், சில பட்டியல் சமூகப் பதிப்பகங்களுக்கு மட்டும் தனியாகச் சில அரங்குகளை ஒரே வரிசையில் அமைத்துக் கொடுப்பதென்பது, ஊர் – சேரி என்று தனித்தனியே பிரித்து வைத்திருப்பதற்கு இணையானது.
பபாசி அமைப்பிடம் புரட்சிகரமான மாற்றங்கள் எதையும் நாம் எதிர்பார்க்கவில்லை. நம் கேள்விகள் எளிமையானவை. கடந்த ஆண்டுகளில் யாரார் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் எதன் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்? உறுப்பினராகப் பட்டியல் சமூகப் பதிப்பாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் எதன் பொருட்டு நிராகரிக்கப்படுகின்றன? உறுப்பினராக மறுக்கப்படும் காரணத்தை எழுத்துப்பூர்வமாக இதுவரை தராதது ஏன்?
இக்கேள்விகள் யாவும் பபாசி என்கிற தனியார் அமைப்பு ஏற்படுத்தி வைத்துள்ள சட்டத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், அச்சட்டப்படியே அவர்களிடம் எந்த வெளிப்படைத்தன்மையும் இதுவரை தெரிந்ததில்லை. இந்தச் சூழலில்தான் அரசு இதில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் முன்வைக்கிறோம்.
அரசின் முகமாக இயங்கும் பபாசி, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியை நடத்தும் அனுபவமும் திறனும் வாய்ந்த பலர் இருக்கும்போது, ஏகபோக அதிகாரத்தோடு இயங்கும் பபாசியை அரசு ஏன் கேள்வியெழுப்ப மறுக்கிறது?
பட்டியல் சமூக மக்கள் ஆண்டாண்டு காலமாய் கேட்பது, ‘பொது’ என்கிற அமைப்பில் அவர்களுக்கென்ற பிரத்யேகமான இடத்தையல்ல. மாறாக, அந்தப் ‘பொது’வில் உள்ள அவர்களுக்கான உரிமையை மட்டும்தான். இதைத் தட்டையாகப் புரிந்துகொண்டு, விமர்சனங்களை எதிர்கொள்ள சில தற்காலிக ஏற்பாடுகளைச் செய்வதை விட்டுவிட்டு, இதற்கொரு நிரந்தர தீர்வை எட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.
மானுடச் சமூகத்தில் அன்பை போதிக்கவும், அறிவையும் அறத்தையும் நிலைபெறச் செய்யுவும் பெரும் ஆயுதமாக இருப்பது நூல்களும் வாசிப்பும்தான். அதை மேம்படுத்தக் கூடிய புத்தகத் திருவிழாவில் பங்குபெறுவதற்கே இப்படியொரு தலையங்கத்தைத் தீட்டும் கொடுமை, உலகின் வேறெந்த நாட்டில், வேறெந்தப் புத்தகத் திருவிழாவில் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.