அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்காளான வழக்கில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. எதிர்க்கட்சிகள் கூட இந்தக் கேள்வியைத் தங்களின் தேர்தல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டன. ஆனால், அதை விடவும் முக்கியமான ஒரு கேள்வி இங்கு கேட்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது. எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தேசிய கட்சி என யாரும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கேள்வியைக் கேட்பதால் அடுத்த தேர்தலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தெரிந்தும், கண்டுகொள்ளாமல் கடந்துபோவதில்தான் இந்த மண்ணின் தனித்துவமான உளவியல் வெளிப்படுகிறது.
மக்களுக்காகப் போராடும் அமைப்புகளும் இக்கேள்வியைப் புறக்கணிப்பது பெரும் அயர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடக்கத்திலிருந்தே முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திய அரசும் அதன் ஊதியப்படையான காவல்துறையும், வழக்கம்போல புகார் கொடுத்தவர்களையே குற்றவாளி என்கிறது.
எதைச் சொல்கிறோம் என்பதை விட எதைத் தவிர்க்கிறோம் என்பதே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. சரி, அப்படி இவர்கள் எந்தக் கேள்வியைத்தான் தவிர்க்கிறார்கள்:
‘யார் அந்த முத்தையா?’
வேங்கைவயலில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்த வன்செயல் யாவரும் அறிந்ததே. 2022 டிசம்பர் இறுதியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். இதன் பிறகான விசாரணை, தீர்ப்பு என்பது தனிக்கதை. ஆனால், வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே அப்பகுதி மக்கள் முத்தையா என்பவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். காவல்துறை மறந்தும் கூட அவரை விசாரிக்கவில்லை.
24 டிசம்பர் 2022 அன்று வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவிக்கிறார்கள். அதையடுத்து 26ஆம் தேதி சுதர்சன், முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரும் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி மீது ஏறிப் பார்த்து மலம் கலந்திருப்பதை உறுதி செய்கிறார்கள். அதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நேரடியாக வந்து விசாரிக்கும்போது, இரட்டைக் குவளை முறை, கோயிலுக்குள் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமைக் கொடுமைகள் நடைமுறையில் இருப்பதை அறிந்துகொள்கின்றனர். மேற்கண்ட இரு அநீதிகளுக்காக கைது நடவடிக்கை மேற்கொண்டவர்கள், மலம் கலக்கப்பட்ட வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை. இதுகுறித்த விரிவான அறிக்கை நீலம் பிப்ரவரி 2023 இதழில் வெளியாகியுள்ளது.
தொடர் அழுத்தங்களால் தனிப்படை அமைப்பது, வேறு வேறு அதிகாரிகளை நியமித்து விசாரிக்கச் சொல்வது என மாநில அரசும், ஒருநபர் ஆணையத்தை அமைப்பது, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது என நீதிமன்றமும் தீவிரமாக இயங்குவது போல் காட்டிக்கொண்டாலும் குற்றவாளியை நோக்கி ஓரடி கூட இவர்களால் முன்னேற முடியவில்லை, விரும்பவுமில்லை.
இன்று, குற்றத்தை உறுதி செய்தவர்கள் மீதே குற்றம்சாட்டியிருக்கிறார்கள். உண்மையில், இருக்கிற ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக, இவர்கள் குறி வைத்திருக்கும் நபர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கான ஆதாரங்களைத் தயார் செய்வதற்குதான் இரண்டு ஆண்டுகள் ‘உழைத்திருக்கிறார்கள்’ போல!
சரி, ‘யார் அந்த முத்தையா?’
புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பத்மாவின் கணவர்தான் முத்தையா. இவர் முன்பு தலைவராக இருந்தவர்தான். பின்னாட்களில் அப்பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு இவருடைய மனைவி தலைவராகிறார். இருந்தாலும் அதிகாரம் முத்தையாவிடம்தான் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சாதிவெறி கொண்ட முத்தையா, தலித்துகளை எந்தவிதத்திலும் கண்டுகொண்டதில்லை. இவரது சாதிய முகத்தை, இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நீலம் சோஷியல் நடத்திய உரையாடலில் முழுவதுமாகத் தெரிந்துகொள்ளலாம். முக்கியமான சில தகவல்களை மட்டும் இங்கு பார்ப்போம்.
வேங்கைவயல் நீர்த்தொட்டி வன்செயலுக்கு மூலக்காரணமாக, 2 அக்டோபர் 2022 அன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தைச் சொல்கிறார்கள். வேங்கைவயல் தலித் மக்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கான சுடுகாட்டுப் பாதை பிரச்சினை சரிசெய்யப்பட்டதாகவும் அறிக்கை எழுதி சபையில் தந்திருக்கிறார்கள். அதை மறுத்து சதாசிவம் என்பவர் வாதிட்ட உடனே கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். அதுபோல ஒன்றிய அரசின் கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டம் (Jal Jeevan Mission) மூலமாக மோட்டார் அமைக்க ஒதுக்கப்பட்ட ஏழு இலட்சம் ரூபாயை முத்தையா அபகரித்ததை மோட்டார் ஆபரேட்டர் சண்முகம் அனைவர் முன்னிலையிலும் அம்பலப்படுத்தினார். இதனால் அவரைப் பணிநீக்கம் செய்ய வைத்தார் முத்தையா. மேலும், வேங்கைவயல் தலித் குடியிருப்புகளுக்குத் தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகளையும் முத்தையா மேற்கொள்ளவில்லை.
தலித்துகள் மீதான இந்தக் காழ்ப்புணர்வுதான் நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலப்பதுவரை சென்றிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது, டிசம்பர் 26ஆம் தேதி என்பது மலம் கலக்கப்பட்டதை உறுதி செய்த நாள்தான். அதற்கு முன்பே அப்பகுதி குழந்தைகள் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, ஒருசில நாட்கள் முன்னதாகவே அந்த வன்செயல் நடந்திருக்க வேண்டும்.
மட்டுமல்லாது, 26ஆம் தேதி தலித் மக்கள், மாற்றுச் சமூக மக்கள், பஞ்சாயத்து தலைவர், அரசு அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையிலேயே முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா, சுதர்சன் மூவரும் தொட்டி மீது ஏறியிருக்கின்றனர். புகைப்படம் எடுத்து வந்து மக்களிடமும் காட்டுகின்றனர். அவர்களைத்தான் இன்று இந்த அரசும் காவல்துறையும் குற்றவாளிகள் என்கிறது. பொதுவாக, விசாரணைக்கு வரும் காவல்துறை, பாதிக்கப்பட்ட மக்களிடம் “உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?” என்று கேட்க வேண்டும். காவல்துறையோ தொடக்கத்திலிருந்து தலித் மக்களை மட்டுமே விசாரித்திருக்கிறது. சிபிசிஐடியும் விதிவிலக்கல்ல. ஒருகட்டத்தில் சதாசிவம் என்பவர், “குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி எங்கள் மக்களையே துன்புறுத்துகிறார்கள்” என்று முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதிய பிறகே சிபிசிஐடி அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். அப்போதும் முத்தையா பெயரைச் சொல்லியிருக்கிறார்கள், எந்தப் பலனும் இல்லை. பெரும்பான்மை ஊடகங்களும் முத்தையா பெயரைக் கவனமாகத் தவிர்த்துவருகின்றனர்.
ஒற்றை நபரைக் காப்பாற்றுவதற்கு இரண்டு ஆண்டுகளாக, டிஎன்ஏ பரிசோதனை, குரல் பரிசோதனை, செல்ஃபோன் பரிசோதனை என ‘அறிவியல்பூர்வ’மாகச் செயற்பட்டிருக்கிறது ஜூனியர் ஸ்காட்லாந்து யார்டு. ஒற்றை நபர் என்பதை சாதியாக, அதன் அதிகாரமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதாவது நாம் கேட்க வேண்டும், ‘யார் அந்த முத்தையா?’
m
இவ் வன்செயல் விவகாரத்தில் மிகவும் வேதனையளிக்கக் கூடிய விஷயம், பொதுச் சமூகம் அதை எதிர்கொண்ட விதம்தான். குறிப்பாக, காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மீம்ஸ்களில் வெளிப்படும் வன்மம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆளுங்கட்சியின் பங்களிப்பும் இதில் இருக்கிறது. பல விவகாரங்களில் அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் இணையப் போராளிகள் கூட தலித் மக்களுக்கெதிரான இந்தக் குற்றப்பத்திரிகையை ஆதரிப்பது, நாம் எந்த மாதிரியான நாட்டில் எப்படியான மக்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. தலித் மக்கள் பாதிக்கப்படும் எந்த நிகழ்விலும் பொதுச் சமூகம் இப்படிதான் வினையாற்றுகிறது.
தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் நாம் அரசையோ, அமைப்புகளையோ, கட்சிகளையோ, பொதுச் சமூகத்தையோ குறை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. நாம் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் இயங்கியிருந்தால், சிறுசிறு நிவாரணங்களில் திருப்தியடையாமல் முழு உரிமைகளுக்காகப் போராடியிருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். நம்மால் அத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க முடியாததற்கு, சமூக ஓர்மை இல்லாததும், பொருளாதார நிலையில் பின்தங்கியிருப்பதுமே முக்கியக் காரணம். இதற்குத் தீர்வே கிடையாதா?
69 ஆண்டுகளுக்கு முன்பே, தான் முன்னெடுத்த பண்பாட்டு மாற்றத்தின் மூலம் பாபாசாகேப் தீர்வைக் கண்டடைந்துவிட்டார். அவரைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் ஆங்காங்கு சில மக்கள் அதைச் செயல்படுத்திவந்தாலும் அது போதாது. எத்தனையோ வன்கொடுமைகள் நடந்தாலும் நாம் இந்தப் பண்பாட்டு மாற்றம் பற்றி யோசிப்பதில்லை. அரசும் அது நடக்காதவாறு பார்த்துக்கொள்கிறது. பெயரளாவிற்கு மட்டும் அரசியல் அதிகாரத்தைக் கொடுத்து நம்மை அமைதிப்படுத்துகிறது. இனியும் நாம் ஏமாறக் கூடாது. அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் சிறு சிறு அமைப்புகள் இப்பண்பாட்டு மாற்றத்தை முன்னெடுக்கின்றன. அவற்றின் துணையோடு செயல்படுவோம். சமூக ஓர்மையும் பொருளாதார வளமும் பெறுவோம்.
ஆடு மாடுகளைப் போல் இனியும் பலியாகாதீர்கள். சிங்கங்களாக கர்ஜிக்கும் வலிமையைப் பெறுங்கள். அதற்குக் கேள்விகளை மாற்றிக் கேளுங்கள்.
ஜெய் பீம்.