தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலில், தமிழ் மாதம் பங்குனியில் பதினைந்து நாள் திருவிழா நீண்ட காலமாக நடந்துவருகிறது. அதன் அழைப்பிதழில் நன்கொடை அளித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது வழக்கம். அவ்வாறு குறிப்பிடும்போது பெயர்களோடு செட்டியார், ராஜு, நாயுடு, கள்ளர் எனச் சாதிப்பெயர்களைப் பின்னொட்டாகச் சேர்ப்பதும் வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. அதேவேளையில், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பொத்தாம் பொதுவாக ‘ஊரார்’ எனக் குறிப்பிட்டே அழைத்துவந்திருக்கின்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு நாடியம்மன் கோயிலில் ஆதிதிராவிட சமூகத்தார் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் குறித்துக் கோரிக்கை எழுப்பியபோது, தங்களின் பெயர் ‘ஊரார்’ எனக் குறிப்பிடப்படுவதை மேற்கோளிட்டு, அதை மாற்றக் கோரினர். அதையொட்டி நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் ‘இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அவர்களுக்கு இந்தக் கூட்டத் தீர்மானத்துடன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மூலமாகக் கடிதம் அனுப்பி ஒப்புதல் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தாசில்தார், காவல் நிலைய ஆணையர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பின் இது குறித்த எந்த முன்நகர்வும் இல்லாத சூழலில், கடந்த 06.11.2024 அன்று பட்டுக்கோட்டை, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரால் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில் அதிகாரி, சம்மந்தப்பட்ட சாதிப் பெயர்களைச் சேர்த்துக் குறிப்பிடுவது நீண்ட நாள் வழக்கமென்றும், ‘ஊரார்’ என்றால் அதற்குள் அனைவரும் வருவார்கள் என்றும், சாதி இந்துக்கள் மட்டுமே நன்கொடை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிற பொருண்மையிலும் தனது வாதத்தை முன்வைத்தார். இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றம் ‘கோயில் திருவிழா அழைப்பிதழ்களில் விழா நிகழ்ச்சிகளை மட்டுமே அச்சிட வேண்டும், மாறாக சாதி, சமூகப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது’ எனத் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பின் அடிப்படையில், முதற்கட்டமாகத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களிலிருந்து இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டின் சமூகநீதி உரையாடல்களில் பெருமைமிகு மாற்றங்களில் ஒன்றாக, பெயர்களில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடுவதுண்டு, அவை முழு உண்மையல்லவென்றாலும். சாதிப் பெருமிதங்கள் நிலைநிறுத்தப்படும்போது அவை அதிகாரமாக வெளிப்படும், அதுவே ஓர் ஊரின் அரசியலை நிர்வகிக்கும். இந்தச் சூழலில் இத்தீர்ப்பை மையப்படுத்தி தமிழகம் முழுவதிலுமுள்ள அரசு கோயில்களின் அழைப்பிதழ்களில், நன்கொடை அளித்தவர்களின் பெயர்களிலிருந்து சாதியை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அந்தவகையில் இதுவொரு முக்கியமான தீர்ப்பு.
சாதிபேதமற்ற முற்போக்குச் சமூகத்தை நிறுவிடவும், நவீன நோக்கிலும் இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேவேளையில் இதில் புதைந்திருக்கும் மற்றொரு கோணமும் முக்கியமானது. பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயிலை மையப்படுத்தி இந்தத் தீர்ப்பு வந்திருந்தாலும், தமிழ்நாடு முழுக்கப் பெரும்பான்மைக்கும் அதிகமாக இதுவே சமூக நிலை. பன்னெடுங்காலமாகத் தங்களது சாதிப் பெருமிதங்களை, சாதி இந்துச் சமூகங்கள் இப்படித்தான் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நிலைபெறச் செய்துவந்திருக்கின்றன. அப்படி நிலைபெறச் செய்ததின் அனுகூலங்களை அனுபவித்தும் வருகின்றன. இதை எதிர்த்துப் பட்டியலின தரப்பிலிருந்து கேள்வி எழும்போது, “இது நீண்ட நாள் வழக்கம்” என்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி. இந்த நீண்ட நாள் வழக்கத்திற்கு எதிராகக் கீறல் விழ வேண்டுமானால், ராஜு, செட்டியார், நாயுடு சாதிகளின் பெயர்களுக்கு இடையே ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த சாதிகளின் பெயர்கள் இடம்பெற வேண்டும். அது நிகழும்போது, சாதி இந்துக்கள் அவற்றை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில்தான் சமூகத்தின் யதார்த்தம் பொதிந்திருக்கிறது. பொத்தாம் பொதுவாக எந்தச் சாதிப் பெயர்களையும் குறிப்பிடக் கூடாது என்கிற தீர்ப்பைக் கூட, சாதி இந்துச் சமூகங்கள் மனக்கசப்போடு ஏற்றுக்கொள்ளக் கூடும். ஆனால், தங்களது சாதி அதிகாரம் நிலைபெற்றிருக்கும் இடத்தில், சரிக்குச் சமமாக ஆதிதிராவிடர் சாதிகள் இடம்பெறுவதை அவர்களால் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதிதிராவிடர்களின் தரப்பில் இக்கோரிக்கை எழும் வேகத்திலேயே, எல்லாச் சாதிப்பெயர்களும் நீக்கப்பட வேண்டும் என்கிற ஆணையை மேலோட்டமாகப் பார்க்கும்போது சீர்திருத்தமாகத் தெரிந்தாலும், அவை ஆதிக்க வகுப்பாருக்கு அனுசரணையான ஒரு முடிவாகவும் இருக்கிறது. இதனை உறுதிப்படுத்த தமிழக அரசியல் வரலாற்றில் கடந்து போக முடியாத ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
1995ஆம் ஆண்டு மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தை இரண்டாகப் பிரித்து, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தியாகி வீரன் சுந்தரலிங்கனார் பெயரில் போக்குவரத்துக் கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அது 1997 திமுக ஆட்சியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து தென்மாவட்டம் முழுவதும் கலவரம் வெடித்தது. இரயில் மறியல், சாலை மறியல், பஸ் எரிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து அரங்கேறிய சூழலில், அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு ஒருமனதாக எல்லா மாவட்டங்களிலும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்களும், மாவட்டங்களுக்குச் சூட்டப்பட்ட தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன.
பிற சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சூட்டப்பட்டது அதுவரை சமூக இயல்பாக இருந்தது. ஆனால், தியாகி வீரன் சுந்தரலிங்கனார் பெயர் சூட்டப்பட்டதும் தென்மாவட்டமே கலவரமானது. அதன் விளைவாய் எல்லாப் பெயர்களும் நீக்கப்பட்டன. ஓர் அரசு இதை எவ்வாறு கையாண்டிருக்க வேண்டும், தீர்வாக எதை முன்வைத்திருக்க வேண்டும் என்பதற்குள் நாம் போக வேண்டியதில்லை. ஆனால், எந்தப் பெயரைச் சூட்டிய பின் இந்தச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்பது முக்கியம்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் தற்போது நிகழ்ந்திருப்பது இதற்கிணையானதே. சாதி இந்துக்களின் அடையாளம் நிலைபெறச் செய்வதைக் காட்டிலும், பட்டியலின சாதிகளின் அடையாளங்களும் வரலாறும் நிலைபெற்றிடக் கூடாது என்பதில் தமிழ்ச் சமூகம் கூடுதல் கவனத்தோடு இருக்கிறது. எப்போதெல்லாம் பட்டியலின மக்களின் பெயர்களை இதர சாதிகளின் பெயர்களுடன் பொதுத்தளத்தில் இணைத்துக்கொள்வதற்கான நிர்ப்பந்தங்கள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பட்டியலின மக்களின் பெயர்களை இணைத்துக்கொள்வதற்குப் பதிலாக, பிற சாதியினரின் பெயர்களை நீக்கும் முடிவினையே பெரும்பாலும் பொதுச் சமூகம் எடுக்கிறது.
அதற்காகச் சிலவற்றை இழக்கக்கூட தயாராக இருக்கிறது. இதில் இழப்பு என்பதும் கூட சாதி இந்துக்களின் பாவனைதான். ஏனெனில், சாதி என்பது வெறும் பெயர்களால் மட்டுமே நிலைபெறுவதில்லை. பெயர்களில் சாதியை ஒழித்த மாநிலம் என்கிற வெற்றுப் பெருமிதங்களுக்கு இடையே தினந்தோறும் அரங்கேறிக்கொண்டிருக்கும் சாதிய வன்முறைகளைப் போல, சாதி என்பது அது ஒழிக்கப்பட்டதாய் சொல்லப்படும் இடங்களிலும் கூட தீர்க்கமாய் இயங்கக்கூடியது.
சமூகச் சீர்திருத்தங்கள் தீர்வுகள் ஆகாது. ஆனாலும் ஒரு பெரிய மாற்றத்திற்கான துவக்கப்புள்ளியாக அதைக் கருத வேண்டியதாயிருக்கிறது. சாதியை ஒரு பண்பாடாக ஆராதிப்பவர்கள் கூட பொதுவெளியில் அதை முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. சட்டம் ஓரளவு அவர்களைக் கட்டுப்படுத்துகிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் சமூகத்தில் நேர்மறையாகச் சில விளைவுகளை உருவாக்கும் என்று நம்புகிறோம். அதனடிப்படையில் கோயில் திருவிழாக்களில் இனி சாதிப் பெயர்கள் குறிப்பிடப்படக்கூடாது என்கிற மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இத்தீர்ப்பை திமுக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகப் பட்டியலின மக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிராக சாதி இந்துக்கள் அணிதிரள்வதை நாம் பார்த்துவருகிறோம். இந்தச் சூழலில் இவ்வழக்கை நடத்தி முன்மாதிரியான தீர்ப்பிற்குக் காரணமான மூத்த வழக்குரைஞர் கா.பிரபு ராஜதுரை, வழக்கறிஞர் இராபர்ட் சந்திர குமார், நடுவிக்கோட்டை ஆதிதிராவிடர் நலச்சங்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.