அன்றாடம் வன்முறைகள், படுகொலைகள், வழக்குகள், பாகுபாடுகள், உள்முரண்கள், அரசியல் சமரசங்கள், இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், களமாடுதல்கள், சட்ட நடவடிக்கைகள் என தலித் மக்களின் வாழ்க்கை இன்றும் போராட்டமாகவே உள்ளது. இத்தகைய அவலங்களைச் சுட்டிக்காட்டி தலித் மக்களிடையே அரசியல் – பொருளாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நீலம் உள்ளிட்ட கலை இலக்கியப் பண்பாட்டு இதழ்கள் வெளியாகின்றன. இதையொட்டி எழுத்தாளர்களும் தம்மால் இயன்ற பணிகளைச் செய்துவருகிறார்கள்.
ஆனால், தலித் மக்களின் வாழ்வியல் இவற்றுக்கும் அப்பாற்பட்டது. எங்களின் பண்பாடு, கலை, ஆன்மீகம் யாவும் கொண்டாட்டங்கள் நிறைந்தவை; கலகக் கூறுகள் கொண்டவை; முக்கியமாக சத்தமானவை, வீரியமானவை. இவற்றையும் நாங்கள் தொடர்ந்து கவனப்படுத்திவருகிறோம்.
¤
இந்தியக் கலைத்துறையினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே கடந்த மார்ச் மாதம் முக்கியமானதாகிவிட்டது. இதுநாள்வரை மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்ட ‘மார்ச் 8’, இனி ‘சிம்பொனி தின’மாகவும் கொண்டாடப்படும். இசைஞானியின் ஆளுமை மேற்கத்திய செவ்வியல் இசையிலும் வலுவான தடம் பதித்திருப்பது நமக்கு எந்தவகையிலும் ஆச்சரியமில்லை, கொண்டாட்டம்தான்.
தொடக்கக் காலந்தொட்டே பல்வேறு விமர்சனங்கள், அவதூறுகள் ஆகியவற்றை எதிர்கொண்டாலும், எவற்றையும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் தன் வேலையைத் தொடர்ந்து செய்துவருபவர் இசைஞானி இளையராஜா. “நீங்கள் இப்படியெல்லாம் என்னைப் பற்றிப் பேசி காலம் கடத்திக்கொண்டிருந்த நேரத்தில் நான் ஒரு சிம்பொனியை எழுதிவிட்டேன்” என்பதுதான் தன் மீதான அவதூறுகளுக்கு இசைஞானியின் பதில்.
இசைத்துறையில் அவர் அடைந்திருக்கும் உயரம் முக்கியமானது. சாதிமயமான சமூகத்தில் – துறையில் அவர் செய்திருக்கும் சாதனைகள் அன்றும், இன்றும் யாரும் எண்ணிக் கூடப் பார்க்க முடியாதது; பிரமிப்பானது. இவர் பாடல்கள் ஒலிக்காத ஒரு பொழுதும் கிடையாது எனும் வகையில் மூன்று தலைமுறைகளைத் தன் இசையால் ஆக்கிரமித்த ஆளுமை உலகில் அரிது. ‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தன் இசையால் நிகழ்த்தியவர் இளையராஜா’ என்று தன் கட்டுரையொன்றில் விவரித்திருக்கிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம். 1,500க்கும் மேற்பட்ட படங்கள்; அவற்றின் பாடல்கள் – பின்னணி இசை; இரண்டு தனி இசைத் தொகுப்புகள்; ‘கீதாஞ்சலி’, ‘ரமணமாலை’, ‘திருவாசகம்’, ‘திவ்ய பாசுரங்கள்’ போன்ற ஆன்மீக இசைத் தொகுப்புகள் என நீண்ட இசைப் பயணத்தில் மக்களின் அத்தனை உணர்வுகளுக்கும் உற்ற துணையாக இருந்து அவர்களை ஆற்றுப்படுத்தியவர் இசைஞானி.
“இந்தியாவில் மூன்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன: புத்தர், அம்பேத்கர், இளையராஜா” என்றனர் எழுத்தாளர்கள் பிரேம் – ரமேஷ். இதைவிட எளிதாக அவரது மேன்மையை உணர்த்திவிட முடியாது. தான் கடந்து வந்த பாதையை அதிகம் நினைவுகூராது, தனிப்பாதையை அமைத்து அதில் நம்மை அவரோடு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார். அந்த வகையில் தலித் இலக்கியத்தின் திசைவழிக்கு முன்னோடியாக அமைகிறார்.
நம் மீது கல்லெறிபவர்களை, நம்மைப் புறக்கணிப்பவர்களை, இழிவுபடுத்துபவர்களை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு இசைஞானியும் ஒரு முக்கிய உதாரணம். 82 வயதில் முதல் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு, “இது ஆரம்பம்தான்” என்று ஒருவர் சொல்கிறாரென்றால், அந்த மனநிலையை என்னவென்று விளக்குவது. எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ நேர்காணல் ஒன்றில், “ஒவ்வொருமுறையும் எனக்கு எதிராக உள்ள வெள்ளையினத்தவரை விடப் பத்து மடங்கு விசயக் கனம் கொண்டவளாக இருக்க வேண்டும் என்று உறுதிகொண்டேன்” என்றார். இசைஞானி இந்நிலையை என்றோ அடைந்துவிட்டார். ஆனால், இன்றும் அவர் சிம்பொனி எழுதுவதை “நான்தான் இசை, இசை எனக்குச் சுவாசிப்பது போன்றது” என்று அவருடைய வார்த்தைகளில் புரிந்துகொள்ளலாம்.
அல்லது, “இளையராஜா என்பவர் தனிமனிதரல்லர். அவர் ஒரு நிகழ்வு, காலிக்குறிப்பான்” என்று ஆய்வாளர் டி.தருமராஜ் வழியிலும் புரிந்துகொள்ளலாம்.
நிகழ்ந்துகொண்டே இருங்கள் இசைஞானி!
¤
1990களில் தமிழ்நாட்டில் உருவான தலித் எழுச்சியையொட்டி ஏப்ரல் மாதம் ‘தலித் வரலாற்று மாத’மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘நீலம் பண்பாட்டு மையம்’ தலித் வரலாற்று மாதத்தை ‘வானம் திருவிழா’வாகக் கொண்டாடுகிறது. தலித் மக்களின் கலை – பண்பாட்டு – அரசியல் சூழல் குறித்து விவாதிக்கவும், விழப்புணர்வு பெறுவதற்கும், புதிய இலக்குகளைக் கண்டடைவதற்குமான நிகழ்வாக ‘வானம் திருவிழா’ கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
பி.கே.ரோசி திரைப்பட – ஆவணப்பட விழா, வேர்ச்சொல் இலக்கியக் கூடுகை, நித்தம் புகைப்பட – ஓவியக் கண்காட்சி, தம்மா நாடக விழா என இம்மாதம் முழுவதும் நம் பண்பாட்டு வேர்களை உலகத்தோருக்குத் தெரியப்படுத்தும் பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். இன்னும் சொல்லப்படாத கதைகள் நம்மிடம் ஏராளம் உள்ளன. அதை வீரியமாகவும் காத்திரமாகவும் நவீனமாகவும் சொல்வதற்காகவே இத்திருவிழா.
முன்பைவிட இன்னும் சத்தமாகக் கொண்டாடலாம் வாருங்கள். ஜெய்பீம்!