சாதி பற்றியான பொதுவான உரையாடல்கள் வெகுசன தளத்தில் முக்கியமானவை. ஆனால், அவை தலித் உரையாடல்களை மேலும் பின்னோக்கி இழுப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அண்மையில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்வின் இரண்டு எபிசோடுகள் இந்தப் பொருண்மையில் அமைந்தவை. தலித்துகளுக்கு எதிரான மனநிலையை ஆவணப்படுத்துகிறார்கள், அதன் முடிவில் தலித் ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார்கள்.
அத்தகைய முடிவுரையை எழுதுவதன் மூலம், தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் தங்களைப் புரட்சியாளர்களாக நிலைநிறுத்திக்கொள்ளத்தான் இத்தகைய எபிசோடுகள் பயன்படுமே ஒழிய, தலித்துகளுக்கு அது எந்த வகையிலும் பயன் தராது. சொல்லப்போனால் இந்த இணைய உலகில், தலித்துகளுக்கு எதிரான பொதுப் புத்தியை அவை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை மட்டுமே மையப்படுத்தி இதைச் சுருக்கிவிட முடியாது. இது தமிழ்நாட்டுச் சமூகநீதி வரலாற்றில் தொடர்ந்து இருந்துவரும் போதாமையும் கூட. அதைப் பல்வேறு சூழல்களில், பல்வேறு கட்டுரைகளில் தலித் ஆளுமைகள் எழுதியும் பேசியும் வந்திருக்கின்றனர். தலித்துகள் வரலாற்றில் சந்தித்த, சந்திக்கும் பிரச்சினைகளை மட்டுமே சாதியப் பிரச்சினைகளென முன்னிறுத்தி, அதிலிருந்து சமூகநீதி கோருவது அப்பட்டமான வரலாற்றுத் திரிபுவாதம். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் தங்கள் வரலாற்றில் சந்தித்த சமூக இழிவுகளை நினைவுகூராமல் பார்த்துக்கொள்வதும் இதனூடாக நடக்கிறது.
சாதி ரீதியான திரட்சி சாத்தியப்பட்டு, அதன் பலனாக அரசியல் – பொருளாதாரம் – சமூக ரீதியாக முன்னேறி வருகிற சாதிகளுக்கு மேன்மையான இடத்தைக் கொடுத்து, அங்கிருந்து படியிறங்கி சமத்துவத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களிடம் இறைஞ்சுகிறார்கள் அல்லது கோருகிறார்கள். இவர்களது மனசாட்சியைத் தட்டியெழுப்ப தலித்துகள் சந்தித்த சமூக இழிவுகள் இரையாக்கப்படுகின்றன.
நூறு பேர் அமர்ந்திருக்கக்கூடிய ஓர் அரங்கு, கோடி பார்வையாளர்கள் பார்க்கப்போகும் நிகழ்ச்சி, இந்த ரீல்ஸ் காலத்தில் பலகோடி பேர் மீண்டும் மீண்டும் பகிர வாய்ப்புள்ள ஒரு நிகழ்ச்சி, அரங்கின் நடுவே நிற்கும் நெறியாளர் ‘உங்களில் யார் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொள்ளத் தயார்?’ எனக் கேட்கிறார். பெரும் மௌனம் நிலவுகிறது, அதற்குப் பின் அவர் தீர்ப்பெழுதுகிறார், அது சமூகவலைத்தளத்தில் சிலாகிக்கப்படுகிறது, பகிரப்படுகிறது. பட்டியலின மக்களின் சுயமரியாதைக்கு எதிராக அங்கு நிகழ்த்தப்பட்ட மௌனம் ஒருதலைப்பட்சமானது. சாதி மறுப்புத் திருமணம் கணிசமாக நடந்தாலும், அங்கே ஆண்கள் பட்டியலினத்தவர்களாக இருக்கும்போது பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இத்திருமண சர்ச்சைகள் பெரும்பாலும் சாதிய சமூகத்தால் நிகழ்பவை, அவை சமூக அரசியல் பின்புலத்தைக் கொண்டவை, அதனால் பிரச்சினைகள் தொடர்கின்றன. புறவயமாக இப்படி நிறைய இடையீடுகள் இருந்தாலும், பட்டியலின ஆண்கள் சாதி இந்து சமூகப் பெண்களால் காதலிக்கப்படாமல் இல்லை, இது முக்கியமானது.
இந்தப் பிரச்சினையின் மையமாகப் பேசப்பட வேண்டியது பட்டியலின ஆண்கள் காதலிக்கப்படுகிறார்களா, இல்லையா என்பதல்ல. பட்டியலின ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் தங்கள் சொந்தச் சமூகத்தால் சந்திக்கும் பிரச்சினைகளையும், காதலிக்கப்பட்ட காரணத்திற்காகப் பட்டியலின ஆண்களைத் தொந்தரவுக்குள்ளாக்கும் சமூக – சாதி அரசியலைத்தான். சாதியை வெறும் தீண்டாமை என்று புரிந்துகொள்வதிலிருந்து உருப்பெறுவது இது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பல சாதிகள் இத்தகைய தீண்டாமை இழிவுகளை வரலாற்றில் நேரடியாகச் சந்தித்திருப்பினும், இன்றுவரை ஏன் அது பட்டியலினத்தவரை மட்டுமே பதம் பார்க்கிறது? அதன் அரசியல் காரணியென்ன? எந்த அரசியல் இதைத் தீர்மானிக்கிறது என்கிற பகுப்பாய்வுதான் இன்று நடத்தப்பட வேண்டியது. ஆனால், இப்பொருண்மையில் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்து, அதன் அசலான பிரச்சினைகள் பேசப்பட்டு அது ஒளிபரப்பாக இங்கு சாத்தியமே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
இதே ‘நீயா நானா’வில் இரண்டு மாதங்களுக்கு முன் சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த மாமனார் ஒருவர், தான் சுகமில்லாமல் மருத்துவமனையில் இருந்த காலத்தில் தன் மருமகன் செய்த உதவியை நன்றியோடு நினைத்துப் பார்த்து, கண்ணீர் வழிய “இப்படியொரு மருமகன் தனக்குக் கிடைத்தது வரம்” என்றார். அந்தக் காணொலியும் சமூக வலைதளத்தில் உணர்வு கொப்பளிக்கப் பகிரப்பட்டது. சாதி இந்துக்களின் அங்கீகாரத்தையும், நன்மதிப்பையும் பெற ஒருவர் இத்தனை தியாகச் சீலராக இருந்தால்தான் சாத்தியமா? உதவும் குணம் இல்லாமலும், உதவும் சூழல் வாய்க்காமலும் போகும் ஒருவர் காதலிக்கத் தகுதியற்றவரா? இங்கே நாம் கேள்விக்குட்படுத்துவது சக மனிதன் மீதான அன்பை அல்ல. அந்த மாமனாருக்கு உதவுபவர் மருமகனாகத்தான் இருக்க வேண்டுமென்பதுமில்லை. நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியது, மனமாற்றத்திற்கான காரணத்தையும், அதை உணர்வெழுச்சியோடு பகிரும் உளவியலையும்தான்.
ஒரு மனிதனுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய சமத்துவத்தை, பட்டியலினத்தவர் என வருகிறபோது அதை அடைய அவர் உச்சபட்ச நேர்மையானவராக இருக்க வேண்டியிருக்கிறது; தியாகியாக இருக்க வேண்டியிருக்கிறது; பொதுச் சமூக மனசாட்சியை உலுக்க என் மாண்பை, சுயமரியாதையை அரங்க வெளியில் காட்சிப்படுத்த வேண்டியிருக்கிறது, இத்தனையையும் மீறி பெறப்படுவது சமூக மாற்றமாக, விடுதலையாக இருக்க முடியாது.
‘நீங்கள் நிராகரிக்கும் இடத்தில் நாங்கள் இல்லை, எங்களுடனான உங்கள் பயணம் என்பது இதுவரை உங்களுக்குச் சாத்தியப்படாத சமத்துவத்தை நோக்கியது’ என அந்த அரங்கிலேயே மௌனம் சாதித்தவர்களுக்குப் பதிலுரைக்க நவீன அரசியல் மனம் கொண்ட ஓர் தலித் இளைஞனின் இருப்பை உறுதி செய்வதுதான் உரையாடலின் ஊடாக நிகழ்த்த முடிகிற மாற்றமாக இருக்க முடியும்.