அண்மையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்பறையில் ‘முதல் பெஞ்ச்’, ‘கடைசி பெஞ்ச்’ என்ற பாகுபாட்டைக் களையும் சோதனை முயற்சியாக ‘ப’ வடிவ வகுப்பறை முன்னெடுக்கப்பட்டது. அதையொட்டி கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினர் ‘ப’ வடிவ வகுப்பறையின் சாதக, பாதகங்களை முன்வைத்தனர். அதன் விளைவாக, அரசு அந்த முயற்சியைக் கைவிட்டது. ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய நிகழ்வுகள் இயல்புதான்.
இங்கு கவனிக்க வேண்டியது, அரசு மேற்கொண்ட நடவடிக்கை மீதான பன்முக விவாதங்களைத்தான். சிறார் / மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் உடல் / மன நலத்தையும் கருத்தில் கொண்டவையாக அவ்விவாதங்கள் இருந்தன. இது பாராட்டத்தக்கது. ஆனால், சிறார் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மீதும், வழக்குகள் மீதும், அதன் பிறகான அவர்களின் உளவியல் மீதும் ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் ஏன் தொடர்ந்து நடக்கவில்லை?
ஆம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO – Protection Of Children from Sexual Offenses) பற்றிய உரையாடல்களின் போதாமையைத்தான் குறிப்பிடுகிறோம். இச்சட்டம் இயற்றப்பட்ட 2012ஆம் ஆண்டிலிருந்து, இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தபடியே இருக்கிறது. இதை இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளலாம். ஒன்று, போக்ஸோ சட்டத்தின் கூறுகள், விசாரணை, விதிக்கப்படும் தண்டனை ஆகியவை மீது மக்களுக்கு நம்பிக்கையும் விழிப்புணர்வும் ஏற்பட்டு, அதன் காரணமாக எவ்வித தயக்கமுமின்றி வழக்கைப் பதிவதால் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மற்றொன்று, எத்தனை சட்டங்கள் வந்தாலும், விழிப்புணர்வு ஏற்பட்டாலும் குற்றம் செய்யும் மனநிலையும் துணிவும் சிறிதும் குறையவில்லை.
2023ஆம் ஆண்டில் பதிவான வழக்குகளை (4,581) விட 2024ஆம் ஆண்டில் பதிவான வழக்குகள் (6,975) 52 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களை விட்டுவிடுவோம். போக்ஸோ சட்டம், வழக்கு, அதன் பிறகான சிறாரின் உளவியல் போன்றவை குறித்து விவாதிப்போம்.
சிறார் மீதான குற்றங்களைக் கையாளுவதில் கோவா குழந்தைகள் சட்டம் (2003) வலுவாக இல்லாத காரணத்தால் இயற்றப்பட்டதுதான் போக்ஸோ சட்டம். பாலியல் வன்கொடுமை மட்டுமல்லாமல், பாலியல் சீண்டல், துன்புறுத்துதல், பாலியல் வன்முறை, ஆபாசப் படமெடுத்தல் எனப் பலவற்றையும் இச்சட்டம் கருத்தில் கொண்டது. மேலும், இவ்வழக்குகளை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் நிறுவுதல்; புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை என அனைத்து நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்ட சிறாரின் நலனை மையப்படுத்தியே இச்சட்டம் மிகுந்த நுணுக்கத்தோடு இயற்றப்பட்டுள்ளது. சிறாரின் இருப்பிடத்திற்கே சென்று வழக்கு பதிவது, துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் அதிகாரிதான் வழக்கு பதிய வேண்டும், அவரும் சீருடையில் அல்லாமல் சாதாரணமாகத்தான் செல்ல வேண்டும், சிறாரிடம் கனிவாகப் பேச வேண்டும், திரும்பத் திரும்ப நடந்ததைச் சொல்லச் சிறாரை வற்புறுத்தக் கூடாது, சிறாரின் அடையாளத்தை நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் இல்லாமல் வெளியிடக் கூடாது போன்ற சீரிய பாதுகாப்புக் கூறுகளைக் கொண்டது போக்ஸோ சட்டம்.
உண்மையில் இவையெல்லாம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது பெரும் கேள்விக்குறி. உதாரணமாக, கடந்த ஆண்டு சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது பெற்றோரையும் காவல்நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் கொடுமைப்படுத்தி, குற்றம் செய்த காமுகன் முன்நிலையில் அடித்துத் துன்புறுத்தியதோடு, சிறுமியிடம் பெற்ற இரகசிய வாக்குமூலத்தையும் வெளியே கசியவிட்டுள்ளார் காவல் ஆய்வாளர். இதுகுறித்து நாளிதழில் வெளிவந்த செய்தியைக் கொண்டே சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்தது. தற்போது அவ்வழக்கின் நிலை என்னவென்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக, பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை வழக்கிலும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், போக்ஸோ வழக்குகளைப் பொறுத்தவரையில் ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 100 போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 300 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல். இவற்றில் பெரும்பாலான வழக்குகளின் பின்னணியில் காவல்துறையின் அலட்சியம், அரசியல் / பண பலம் போன்றவை இருப்பதை எவரும் புரிந்துகொள்ளலாம்.
பொதுவாக, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பார்கள். அதிலும், சிறார் மீதான குற்றங்களில் தாமதிக்கப்பட்ட நீதியானது இன்னொரு குற்றத்திற்குச் சமம் என்றே சொல்லலாம். அரசும் நீதித்துறையும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் இது. சரி, அரசு என்ற நிறுவனம் அப்படித்தான் இயங்கும். கட்சிகள் மாறலாம், ஆனால் அரசு – ஆட்சி என்று வந்துவிட்டால் அவற்றின் செயற்பாடுகளில் பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை. அரசை விமர்சிப்பது என்பதும் நிர்வாக ஒழுங்கையொட்டியே ஒழிய, அதைத் தாண்டிய பரந்துபட்ட பார்வை அதில் இருப்பதாகத் தெரியவில்லை.
வழக்கு, விசாரணை, தீர்ப்பு – பாலியல் குற்றமானது இவற்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதன் பிறகான சிறாரின் உளவியலையும் கவனப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணையின்போது சங்கடப்படுத்தும்படியான கேள்விகளையோ, நடத்தையைச் சந்தேகிக்கும் கேள்விகளையோ கேட்கக் கூடாதென்று சட்டம் சொல்கிறது. ஆனால், பெரும்பாலான வழக்குகளில் அப்படி நடப்பதில்லை. சிறாரின் குடும்பத்தினரே குற்றவாளி என்றால் பத்தாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இச்சூழலில், அந்தக் குழந்தையின் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும். உறவினர்களே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவிடுவர்.
இத்தனையையும் கடந்து வழக்கு பதியப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டால் அரசும், நிர்வாகமும், நீதித் துறையும் தம் கடமை முடிந்ததென்று அடுத்த வேலைக்குச் சென்றுவிடும். பொதுமக்களும் குற்றவாளியைச் சில நாட்களில் மறந்துவிடுவர். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தை பல ஆண்டுகளாக அந்த ரணத்தை மனதில் சுமந்துகொண்டிருக்கும். பாதிக்கப்பட்ட சிறாருக்குத் தேவையான அத்தனை பாதுகாப்பு வசதிகளும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதைச் சட்டம் உறுதி செய்கிறது. குற்றவாளி தண்டிக்கப்பட்டாலும், விடுவிக்கப்பட்டாலும், குற்றவாளி யாரென்று அடையாளம் காணப்படாவிட்டாலும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதுவும் நீதிமன்ற உத்தரவு வந்த 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் இருக்கிறது. ஆனால், நடைமுறை அவ்வாறில்லையே.
அரசுதான் இதற்குப் பொறுப்பேற்று அதிகாரிகள் முதல் எளிய மக்கள் வரை அனைவரும் போக்ஸோ சட்டத்தின் முக்கியக் கூறுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும். துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி – வானொலி – சமூக ஊடகப் பிரச்சாரங்கள் என வாய்ப்பிருக்கும் அத்தனை வழிகளிலும் போக்ஸோ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மரபு – கலாச்சாரம் – ஒழுக்கும் என எந்தப் பெயரைக் கொண்டும் ‘உடல்’ மீது குறிப்பாக, ‘பெண்ணுடல்’ மீது புனிதத்தன்மை கட்டமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
இந்த இடத்தில் திரைப்படங்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். சிறார் மீதான பாலியல் குற்றங்கள் என்ற கருவில் அமைந்த அத்தனை திரைப்படங்களும் குற்றவாளிக்குத் தண்டனை அளிப்பதையே நோக்கமாகக் கொண்டு ‘நாயக’ பிம்பத்தையே வளர்த்தெடுக்கின்றன. பாதிக்கப்பட்ட குழந்தையின் உளக் கூறுகளை அவை கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. போக்ஸோ சட்டத்தையும் அவை போதிய அளவில் எடுத்தாளவில்லை.
போக்ஸோ வழக்குகளில் நாம் தவறவிடும் மற்றொரு விஷயம் பாலினம். சிறுமிகள் பாதிக்கப்படுவதையே பெரும்பாலும் குற்றமாகக் கருதுகிறோம் / பொருட்படுத்துகிறோம். சிறுவன்கள் பாதிக்கப்படுவது பற்றியும் இங்கு போதிய விழிப்புணர்வு இல்லை. சிறுவன்கள் எதிர்கொள்ளும் உளச் சிக்கல் இன்னும் தீவிரமானது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட வயது மூத்தவர்கள் பற்றியும் பேச வேண்டும். அதாவது, உடல் ரீதியாக 18 வயதைக் கடந்திருந்தாலும் மன ரீதியாக குழந்தையாக இருப்பவர்கள் இந்தச் சட்டத்திற்குள் இல்லை என்ற குற்றச்சாட்டும் சட்ட வல்லுநர்களிடையே நிலவுகிறது.
எனவே, பள்ளிப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்விக்குக் குரல் கொடுக்கும் நாம், பொது மக்களிடையே சமூகக் கல்வியைப் பரப்ப என்ன செய்யப் போகிறோம்?