மதுக்கடை வாசலில் நிறுத்தப்பட்ட
வாகனங்களைச்
சற்றுத் தள்ளி ஒரு சந்தில் நிறுத்தினார்கள்
ஆள் வராத வண்டிகளை
ப்ளாட்பாரத்தில் ஏற்றினார்கள்
சில வண்டிகளைக் கடைக்குள்ளேயே
விட்டார்கள்
எல்லாம் எதுக்காகத்தான்
ஒரு கவிஞன் வருகிறானே அதுக்காகத்தான்
என்று சொன்னால்
நம்புங்கள் என் செல்லங்களே.
m
நான்
அந்த வீட்டில்தான் பிறந்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன்
அந்தக் குடும்பத்தில்தான் வளர்ந்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன்
எனக்கொரு கலியாணம் ஆனதாகவும்
ஆசைக்கொரு ஆண்
ஆஸ்திக்கொரு பெண் பிறந்ததாகவும்
நினைத்துக்கொண்டிருந்தேன்
ஒருநாள் என்னை அங்குதான்
புதைத்தார்கள் எனவும்
அதுதான் என் ஊர்
அதுதான் என் எல்லாமும் என
நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால்
எதுவுமே உண்மையில்லையாம்.
எதுவுமே உண்மையில்லையெனத்
தெரிந்துகொள்ள
ஒருமனிதன் எவ்வளவுதான் விலை கொடுப்பது.
m
Illustration: saucebabilonia
முதல் வகையினர் தைரியமானவர்கள்
அவர்கள் அழ
எதுவும் தேவையிருப்பதில்லை
அழுகை ஒரு வளர்ப்பு நாயைப் போல
வா என்றால் போதும் வந்துவிடும்
இரண்டாம் வகையினர்
கோழைகள்
அவர்கள் அழ
மதுவோ ராஜாவின் பாடலோ தேவைப்படும்
மூன்றாம் வகையினர்
அதிகோழைகள்
அவர்களுக்கு
நிறைய மதுவும்
கடித்துக்கொள்ள அழுகிய துயர கனிகளும்
கொஞ்சமே கொஞ்சம்
ராஜா பாடல்களும் தேவைப்படும்
ஒருவேளை
மூவகையினரும்
சந்தித்துக்கொண்டால்
அந்நாளில்
அங்கோர் கலவரத் திருவிழா நிகழும்
அங்கே
நாக்கை மடித்தபடி
கையில் வாளோடு அமர்ந்துகொண்டு
இசைக்கோவைகளை வழிநடத்துவார்
நமது
இளையராஜா கருப்பனார்.





