“ஒரு பொருள் இருப்பதனால் மட்டும் அது உண்மை ஆகிவிடுவதில்லை. அது சொல்லப்படணும், தொடர்ந்து சொல்லப்படணும். அது யாரால் சொல்லப்படுகிறது, அதிகாரப்பூர்வமானவர்களால் சொல்லப்படுகிறதா அப்படிங்குறதையெல்லாம் பொறுத்துதான் இங்க உண்மை என்கிற ஒன்றே உருவாகுது. இப்படிச் சொல்றதுனால அப்போ உண்மைங்குற ஒன்றே இல்லையா அப்படின்னு கேட்க வேண்டியது இல்லை. உண்மை இருக்கலாம். ஆனால், நாம உண்மைனு நம்பிகிட்டு இருக்குறதெல்லாம் மட்டும்தான் உண்மைனு நாம நம்ப வேண்டியது இல்லைனு சொல்றேன்.”
– ஸ்டாலின் ராஜாங்கம், குருகு நேர்காணல்.
கொச்சினைத் தளமாகக் கொண்டு செயலாற்றும் ‘பிரபோதன் அறக்கட்டளை’ சுவாமி ஆனந்த தீர்த்தர் பேரிலான விருதினைத் தமிழ்நாட்டு எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு இந்த ஆண்டு வழங்கியுள்ளது. பிரபோதன் அறக்கட்டளை காந்தியத்தை முன்னெடுக்கும் அமைப்பு. முதல் ஆண்டு இந்த விருது எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு வழங்கப்பட்டது. அடித்தள மக்கள் ஆய்வில் அசலான கண்டடைதல்களை முன்வைக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு வேறு மாநிலத்திலிருந்து செயல்படும் காந்திய அமைப்பு கவுரவம் அளிக்கிறது என்பதை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகக் காண்கிறேன். இன்றைய இந்திய அரசியல் சூழலில் இத்தகைய அங்கீகாரம் பரஸ்பரம் நன்னம்பிக்கையை வளர்க்கும். துருவமாதலும் பிளவுகளும் அதிகரித்துவரும் காலத்தில் ஒருங்கிணைவை முன்வைக்கும் வழியாக இதைக் காண்கிறேன்.
ஆனந்த தீர்த்தர் எனும் பெயரைத் தமிழ் அறிவுச் சூழலில் பரவலாக்கியதில் ஸ்டாலினுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. 2016ஆம் ஆண்டு காலச்சுவடு இதழில் ‘வரலாற்றை வழிமறிக்கும் வெகுமக்கள் நினைவுகள்’ எனும் தலைப்பில் ஆனந்த தீர்த்தர், பென்னி குயிக், ஜார்ஜ் ஜோசெப் ஆகியோரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். காந்தியத்தில் ஆர்வம் கொண்ட என்னைப் போன்ற பலருக்கும் ஸ்டாலின் வழியாகவே ஆனந்த தீர்த்தர் அறிமுகமானார். இந்தக் கட்டுரையின் தலைப்புதான் ஒருவகையில் ஸ்டாலின் மேற்கொள்ளும் ஆய்வுகளின் சாரம் என்று தோன்றுகிறது. வரலாற்றை மறுப்பதல்ல, கேள்விக்கு அப்பாலான, புனிதம் ஏற்றப்பட்ட அதன் ஓட்டத்தை வழிமறிப்பது. இந்த வரலாற்றுக்கு இத்தகைய ஏற்பு எப்படி வந்தது? இதை அடைவதற்கு அது எவற்றையெல்லாம் உதிர்க்க வேண்டியிருந்தது? விடுபட்டவை ஏன் விடப்பட்டன? சங்கடமான கேள்விகளின் வழி வரலாற்றின் பெரும்போக்கின் போதாமைகளைச் சுட்டிக்காட்டுகிறார். மாற்று சாத்தியங்களை அடையாளப்படுத்துகிறார். இவற்றை ஏன் பேச வேண்டும்? வரலாறு ஆயுதமாகாமல் தடுக்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. ஸ்டாலின் காட்டும் அயோத்திதாசர், வெறும் வரலாற்று ஆளுமை மட்டுமல்ல. அவரது சிந்தனை வழிமுறையைப் பண்பாட்டு ஆய்வுக்கான ஒரு கருவியாக வெற்றிகரமாக நிறுவிக் காட்டுகிறார். ஸ்டாலின் சொற்களில் சொல்வதானால் “அயோத்திதாசர் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறார் அப்படிங்குறதயும், அதிலிருந்து நாம எப்படிச் சிந்தனைகளை வகுத்து தொகுத்து எடுத்துக்கொள்வது என்கிற புரிதலாக இருந்தது. புனைதல், திரிபு, திரும்பத் திரும்பச் சொல்லுதல், காலத்தால் பழமையாக்குதல் என்கிற அம்சங்கள் அவர் எழுத்தில் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கிறது. ஆனால், அதைத் தனியாகப் பிரித்தெடுத்து சாதியமைப்பைப் புரிந்துகொள்வதற்கான சட்டகமாகக் கொள்ள முடியும் என்பவற்றை நானாக உருவாக்கிக்கிட்டேன். இதுக்கு முன்னாடி அயோத்திதாசர் பற்றி எழுதியவர்கள் யாரும் இந்தத் தளத்தில் வேலை பண்ணல.” என் நோக்கில் தமிழ் அறிவுத் தளத்திற்கு ஸ்டாலின் செய்திருக்கும் அசலான, முதன்மையான பங்களிப்பு என்று இதையே சொல்வேன். அவரது ‘பண்பாட்டின் பலகணி’ இவ்வகையில் மிக முக்கியமான நூல்.
பொதுவாக அறிவுஜீவி கோட்பாட்டாளர்கள் நினைவுகூரப்படும் அளவிற்குக் களப்பணி ஆற்றியவர்கள், செயற்பாட்டாளர்கள் தங்கள் காலம் கடந்து நினைவுக்கூரப்படுவதில்லை. எழுத்து மரபில் அவர்களுக்குப் பெரிதாக இடமில்லை என்றாலும் வாய்மொழி மரபில் அவர்களுடைய நினைவுகளை மக்கள் எப்படியோ பேணுவதற்கு முயல்கிறார்கள். ‘பெயரழிந்த வரலாறு’, ‘எழுதாக் கிளவி’ போன்ற தலைப்புகள் நமக்கு ஸ்டாலினின் வழிமுறையை உணர்த்துபவை. ஒரு நிகழ்வோ மனிதரோ கதைகளாக, நினைவுகளாக எப்படி மாறுகிறது, அதற்கான சமூகத் தேவை என்ன என்பதை ஆராய்கிறார். அதன்வழி சமூகத்தைப் பற்றிய கூர்மையான அவதானிப்புகளை முன்வைக்கிறார்.
ஸ்டாலின் காந்தியை வாசித்தவர் அல்ல. களப்பணியின் ஊடாக காந்தியத்தின் தாக்கத்தை உணர்ந்துகொண்டவர். அதன்வழி காந்தியை மதிப்பிடுபவர். காந்தியை அறியாத காந்தியராகவும், காந்தியை ஏற்காத காந்தியராகவும் ஒருவர் இருக்க முடியும் என்பதே காந்தியம் அளிக்கும் சுதந்திரம். மறுதரப்பினரோடு ஓயாத உரையாடலில் ஈடுபடுவதும், பொறுப்பேற்றுக்கொள்வதும்தான் காந்தியத்தின் அடிப்படை. எங்கள் மரப்பாச்சி வட்ட கலந்துரையாடலில் ஸ்டாலின் சொன்னதை மேற்கோளாக அளிக்கிறேன். இந்த உரையாடல் தன்மை ஸ்டாலினை தனித்த, முக்கியமான ஆய்வாளராக ஆக்குகிறது.
“சமூகப் பாகுபாடுகளுக்கு எதிரான வேலைகள் எல்லாத் தளத்திலும் யோசிக்கப்பட வேண்டும். சட்ட நடவடிக்கைகள் உடனடியாக நடக்க வேண்டும். ஆனால், அது மட்டும் நடந்துகிட்டு இருந்தால் பிரச்சினைகள் நிற்கப் போவதில்லை. இதனைச் செய்கிறவர்கள் யார், அவர்களுடைய மனநிலை என்ன, சமூகத்தைப் பற்றின அவர்களுடைய புரிதல் என்ன, சமூகப் பார்வை என்ன, உளவியல் என்ன என்பவை மாதிரியான விசயங்களைப் புரிந்து யோசிக்க வேண்டும். அவற்றைப் புரிந்துகொள்வதன் வழியாகத்தான் அவற்றை மாற்றுவது பற்றியும் யோசிக்க முடியும். இதெல்லாம் நடக்காத வரைக்கும் தண்டனைகளால் மட்டுமே ஒரு சமூகத்தை மாற்ற முடியாது. இத்தகைய மாற்றங்களை அரசியல் தளத்தில் இருப்பவர்களால் செய்ய முடியாது. அவர்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாததால் அல்லது அரசியல் ரீதியாக மட்டுமே புரிந்துகொண்டிருப்பதால் புதுப்புது சட்ட விதிகளையும் தண்டனைகளையும்தான் தீர்வாக உருவாக்குவார்கள். எவ்வளவு பேருக்கு இவ்வாறு செய்துகொண்டே இருக்க முடியும்? முரண்படுகிற சமூகங்களுக்கு இடையில் ஏன் பிரச்சினை என்று பார்க்க வேண்டும். அவ்வாறெல்லாம் பார்த்தால்தான் பண்பாட்டுத் தள வேலைகள் ஆரம்பிக்கும். நான் முன்பே சொன்னது போல இன்றைக்கு முரண்பட்டுக் கிடக்கிற இரண்டு சமூகக் குழுக்கள் எப்படி ஒருகாலத்தில் ஒன்றாக இருந்தார்கள், எப்போதிருந்து முரண்பாடு தொடங்கியது என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது.”
எழுத்துகள் வழி ஓர் ஆளுமையை நாம் பின்தொடரும்போது அவரது கருத்துலகத்தைச் சென்று சேர்கிறோம். செயல்வழி ஓர் ஆளுமையைத் தொடரும்போது அவரது வாழ்க்கை நோக்கத்தைச் சென்றடைகிறோம். காந்தியை இரண்டு வழிகளிலும் சென்று சேரலாம். கருத்துலகில் முரண்பட்டு செயல்தளத்தில் அவரை ஏற்க முடிகிற ஒருவராகவே ஸ்டாலினைக் காண்கிறேன். டி.ஆர்.நாகராஜ் அவ்வகையில் ஸ்டாலினுக்கு ஒரு முன்னோடி. செயல்தளம் வழியே காந்தியின் கருத்துலகிற்குள் நுழைந்தவர் நாகராஜ். ஆகவேதான் அவரால் காந்தியத்தின், அம்பேத்கரியத்தின் எல்லைகளையும் பங்களிப்புகளையும் புரிந்துகொள்ள முடிந்தது. அவை கூட்டாக இயங்கும் சாத்தியத்தைக் கனவு காண முடிந்தது.
காந்தி எழுத்தையும் செயல்பாட்டையும் இணையாகக் கருதினார். செயல்பாடை ஒருபடி மேலே வைத்தார் என்றுகூட தோன்றுகிறது. “ஒரு விஷயத்தைத் தீவிரமாக நம்புபவர்களைச் சிந்திக்கத் தூண்டி அவர்கள் உள்ளத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதையே நம் அனுபவம் உணர்த்துகிறது… இதயத்தின் வழியாகவே அறிவைத் தொட சத்யாகிரகி முயற்சி செய்கிறான்” என்கிறார். சிந்தனை பரப்பைத் தாண்டி, செயலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அதேபோல் எழுதப்பட்ட நூல்களுக்கு, அவை எழுதப்பட்டவை என்பதாலேயே, புனிதமானவை என்று கருதப்படுவதாலேயே வாழ்க்கையை வழிநடத்தும் அதிகாரம் இருப்பதாக காந்தி கருதவில்லை. “கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக எனது மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறேன். எனது பகுத்தறிவை விட எந்தவொரு மறை விளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்கிறார்.
காந்தியர் எனும் அடையாளம் சுமை ஏறியது. சிக்கலானதும் கூட. அரசியல் பொருள் ஏற்றப்பட்டது. ஆனால், என்னளவில் ஸ்டாலினின் வழிமுறைகள் காந்திக்கு நெருக்கமானவை என்று நிச்சயம் சொல்லிவிட முடியும். பெரும்போக்கிற்கு மாற்றாக வெகுமக்கள் நினைவுகளை முன்னிறுத்துகிறார். பெரும் செல்வாக்கு செலுத்திய தேசிய ஆளுமைகள் ஒருபக்கம் என்றால், உள்ளூரில் தன் ஆற்றலுக்கு உட்பட்டு மாற்றத்திற்காக உழைத்து மண்ணுக்கு உரமாகிப்போன ஆளுமைகளை, அவர்களது பங்களிப்புகளை நினைவுகூர்கிறார். “ஆனால் இங்க என்ன நடக்குதுன்னா நம்ம வாழ்க்கையில் இருக்குற கோளாறுகளையும் நல்லதையும் புரிஞ்சுக்குறதுக்கு ரொம்பொ கிட்ட இருக்குற சிற்றிலக்கியங்களை விட்டுட்டு ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால இருக்குற காலத்தை எடுத்துக்கிட்டு அதோட கனெக்ட் பண்ணிக் காட்டப்படுது. இது இந்தத் தமிழ்ச் சமூகம் தன்னை என்னவாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறது, என்னவாக முன்வைத்துக்கொள்ள விரும்புதுங்குறதோட பிரச்சினைதான்னு நினைக்குறேன். பழையதாக இருப்பதுதான் சரியாகவும் தூய்மையாகவும் இருக்கும் என்கிற எண்ணம் மட்டுமில்லை. அப்போதுதான் மக்களையும் ஏற்க வைக்க முடியும் என்று நினைக்கிறார்கள்” எனும் ஸ்டாலின் கருத்து மிக முக்கியமானது. நம் சமூகத்தை எந்தச் சட்டகத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அசலான புரிதல்களை வழங்குபவை. ஸ்டாலின் எழுதும் கட்டுரைகள் புனைவுக்குரிய சுவாரசியமும் அசல்தன்மையும் கொண்டவை.
நண்பராகவும், என் மீது தாக்கம் செலுத்திய ஆசிரியர்களில் ஒருவராகவும் திகழும் ஸ்டாலினுக்கு சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
l drsuneelkrishnan@gmail.com




