பிரியம்
நிஜத்தில்
அவன் ஒரு தொழிலாளி
கற்பனையில்
அவன் பெயரில்
ஒரு ஆலை இயங்குவது
யாருக்கும் தெரியாது
அதில் உற்பத்தியாகும்
சில
திக் திக் நிமிடங்களை
மாத்திரை வில்லைகளாய்
ஆரஞ்சு மிட்டாய்களாய்
பிஜிலி வெடிகளாய்
துப்பாக்கித் தோட்டாக்களாய்
பத்திரப்படுத்தி
வைத்திருப்பான்
பொழுது போக உதவும்
அவைகளின் மீது
பெரும் பிரியம்.
மூன்றாம் நபர்
வாட்ஸப்பில்
புதிய மாடல் ஒன்றை அனுப்பி
விரைந்து
நெய்யச் சொன்னது நிர்வாகம்.
டிசைனை வடிவமைத்துத்
தறியை
இயக்கிக்கொண்டிருக்கும்போது
அவசரக் குரலில்
ரெடியா
எத்தனை சேலை
நெய்யப்பட்டிருக்கிறது
என்று போன்.
மூன்றாவது கவிதை
ஓடிக்கொண்டிருக்கிறது என்று
கூறிவிட்டேன்.
சொல் பிசகலில்
உருப்பெற்ற கவிதை
புடவையணிந்துகொண்டு
நடக்கும் அழகைக் காண
பெரும் ஆவல்
ஒரு மூன்றாம் நபர் போல.