பிறிதொரு ஜீவனுக்காக
தன்ஜீவனைத் தரும் மனம்
இருக்கிறது இருவரிடத்தும்
விலங்குக்கும் கைகளுண்டு
சொறிபவர் சொந்தமாகும்போது
ஜோசியக் கிளிக்கு றெக்கைகளை
நம்பிக்கையற்றுக் கத்தரித்தாலும்
உப்புக்காற்றே சுவாசமாகி
விசுவாசமும் கடிவாளமாவதால்
கட்டுவதில்லை கால்களை
பிடறிமயிர் சிலிர்க்க
குளம்புமண் தெறிக்க
செலுத்துபவன் உணர்வது
நீரும்நிலமும் தன்பரப்பெனத்
தானொரு தனிராஜாவென
பெருநீர்க்கரை நீண்டாலும்
பாய்ச்சலுக்குப் பாதையிருப்பினும்
காலெட்டின் மனக்கணக்கு
காப்பாளனின் சீழ்க்கையோடு
சிறுநீரும் விலங்கினெல்லை
அவித்த மக்காச்சோளம்
தோலூதிய வறுகடலை
குச்சி நீக்கிய குல்பி
புல்லுக்கு மாற்றாகச்
சரிபங்கு சவாரிக்குப் பின்
தான்தந்த செங்கோல்கள்
படைநின்று வென்ற களங்கள்
சாம்ராஜ்யம் சரித்த கதைகளெனக்
குதிரைகள் கூறுவதில்லை
ஆண்ட பரம்பரையென
ஆட்டத்திற்கான மோளம்
அதற்கென்றான ஆடை
கவனத்துக்காக முடிவெட்டு
சாரட்டின் அலங்கரிப்பு
கூப்பிட்டவருக்குக் கூடுதல் பெருமை
திகட்டத் தவிடு முட்டத் தண்ணீர்
தரலாம் எவரென்றாலும்
எல்லையுண்டு எல்லோருக்கும்
கீழ்த்தாடை வருட
அதுவிரும்பும் விரல்கள் தேவை
காப்பிடி குறுமிளகுக்கும்
தந்திருக்கிறான் யவன வணிகன்
வழிவந்தவை கொட்டில்மாற
லகான்களில் ஒன்றிரண்டு
நெஞ்சுச் சளியோடு இருமுபவனிடம்
நட்டமான நாளென்றாலும்
கனைப்பின் ஒலிபெயர்ப்பு
‘சுழி நல்லசுழி
குணம் நல்லகுணம்
ராசி நல்லராசி’