ஊறவைத்த கருவேலத்தைப் போல்
உடம்பு வாகு கொண்ட
நம் ஆடவரின் இதயம்
வேலிப்பருத்தியின் வெண்பஞ்சு
போன்றதடி தோழி!
அங்கே காண்!
கதை சொல்லும் முதுபாணன்
விடலையர் சூழ களிப்புறுவதை;
இங்கே காண்!
பனையின் வேர்களைத் தோண்டி
கள் மாந்தியவனைப்போல் பாடும்
மறவோன்
சிலம்பத்தைச் சுழற்றியாடும் கூத்தை;
அதோ காண்!
சிறிய மாவடு போன்றிருக்கும்
நத்தையின் மூடி
கொதிநீரில் திறந்து கொள்வதுபோல்
தம் தலைவியின் மனம்
தாழ் திறவாதாவெனத் தவிக்கும்
காளையர் கண்களை;
♦
அடி மதினி!
உனக்கொன்று சொல்லட்டுமா?
தாக்குவதற்கு ஓடிவரும்
கனத்த விலங்கை
தன் மேலே பாய விட்டுக்
கணப்பொழுதில் மண்டியிட்டு
அதன் நெஞ்சாங்குலையில்
கத்தியைச் செருகி முட்டியைத் தேய்க்கும்
இந்தக் காளையர்தான்
தாம் காமுற்ற பெண்கள்
மஞ்சள் உரசும் கற்களைப்
பேதையர் போல் மோந்துக் கிறங்குவார்கள்;
காதலின் இயற்கைப் புணர்ச்சிக்கு
நாம் மனது வைக்கும் காலம் வரை
கைக்கிளையில் கயிறு போடும்
இவர்களின் அகப்பாடலைக் கேட்டுப் பாரேன்;
புதிய வகைமையில்
கலித்தொகையும் குறுந்தொகையும்
தொகுக்க வேண்டியவர்களாக
நாம் மாறிவிடுவோம்;
அதோ…
பனை மரத்தில் பாதி இருக்கின்றானே;
கொல்லர் தம்
உலையில் போட்டு அடித்த
வீச்சரிவாளைப்போல் கைகளும்
வம்பர மரத்தைக்கொண்டு
இழைத்த மம்பட்டிக் கையைப்போல்
கெண்டைக்கால்களும் கொண்ட
அந்த உடும்பன்;
அவன்
என் மீது காமுற்று இயற்றிய பாடலில்
ஓர் உவமை உண்டு;
அந்தக் கற்பனைக்காகவே
அவனை நான்
ஆரத்தழுவிக்கொண்டேன்;
என் தொப்பூழை
“வயிற்றின் மீது படுத்துறங்கும் நத்தை” என்றான்;
அன்று இரவு
அந்த நத்தை என் உடம்பெங்கும்
ஊறியதும்;
அதைப் பிடிப்பதற்காக
ஊருணியில் இறங்குவதைப்போல்
எனக்குள் அவன் இறங்கியதும்
வேறு கதை; அதை விடு;
♦
எஞ்சோட்டுப் பெண்ணே!
முயலைத் துரத்தும்போது
காற்றைப் போல் பறக்கும் வேட்டை நாய்கள்
இப்போது பாறைகளுக்கு நடுவே தேங்கிய
சுனைநீரைப்போல்
வாசலில் சுருண்டிருக்கின்றனவே
அவற்றின் ஈரக் கண்கள்
சங்குப்பூக்களைப் போன்று
மலர்ந்துள்ளதைக் காண்!
இந்த நீர்மையை ஒருபோதும்
வேட்டைப் பிராந்தியங்களில்
காணமுடியாது;
கழுகின் தலையும் புலியின் உடம்பும் கொண்ட
கற்பனையான விலங்கைப்போல்
அவை மூர்க்கமாகப் பாய்ந்தோடும்;
நமது ஆண்களும்
இயல்பில் இவ்வாறுதான்;
கவணிலிருந்து எறியப்படும் கல்
இரையை நெருங்கும் வரை உருவாகும்
‘கிர்’ என்ற ஒலியும்;
வில்லிலிருந்து புறப்படும் அம்பு
இரையைத் துளைக்கும் வரை உண்டாகும்
‘ஃபூ’ என்ற ஒலியும்
ஒரே கோட்டில் இணைந்தால்
எப்படியிருக்குமோ அப்படியோர் ஒலி
சமவெளிக் காட்டில் கேட்கிறதென்றால்
நமது வேட்டுவர்கள்
நாலு கால் பாய்ச்சலில் ஓடும்
விலங்கைத் துரத்திக்கொண்டு
எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடுகிறார்கள் என்று பொருள்;
வேர்கள் புடைத்தால் கூட விழாத விரிசல் நிலத்தில் விழும் பார்!
அப்போது
மண்ணில் தெரியும் கறுப்பு மின்னல்.
♦
கணங்குழை மாதே!
வேட்டையாடிடும் புலிகள்
தம் காதல் இணைகளோடு
பூக்காடுகளில் ஓடுவதைப் பற்றியும்;
இரவில்
பாறை மீது ஏறி நின்று
நிலவைப் பார்ப்பது பற்றியும்;
நீர்நிலையில் இறங்கி நின்று
மீன்கள் தீண்ட
தம்மை ஒப்புக்கொடுத்து
நிற்பதைப் பற்றியும்;
உன்னிடம் கதைகளே இல்லையா?
உனது வேட்டுவன்
உன் முலைகளுக்கு மத்தியில்
தன் வேட்டைக் கருவியை வைத்துவிட்டு
உன் மடியில் தலை வைத்து
அசந்த பொழுதுகள் பற்றிக் கூறேன்!
♦
அடி கள்ளி…
இளந்தாரிச் சிறுக்கி!
இந்த இரவின் குளிர்ந்த காற்றுக்கு
நீ மூட்டம் போடப் பார்க்கிறாயா?
உன் கணுக்கால் சதையில்
பல் பதிக்கக் காத்திருக்கும் ஒருவனைக்
கண்டடைந்து விட்டாயோ!
சமத்தான கிழத்திக்கு ஏங்கும்
இளைய மறவர்களில் எவனோ ஒருவன்
உன் கழுத்து எலும்பைச்
சதையால் மூடும் காமத்தை
உனக்கு வளர்த்து விட்டுவிட்டானென்று நினைக்கிறேன்;
உடம்பில் கூந்தலை
அள்ளிப்போட்டுக்கொண்டு
மோட்டுவளையை வெறித்துக் கிடக்கும்
உன் கிடந்த கோலத்தைக்
கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்;
இப்போதெல்லாம்
ஆவாரம் பூக்களை
லாந்தர் வெளிச்சத்தில்
பார்ப்பதைப் போலிருக்கிறது
பாதகத்தியின் முகவாட்டம்.
♦
அடி தோழி…
கஞ்சாவில் செய்த
கசாயத்தைக் குடித்ததைப் போல்
கேட்கக் கேட்க
போதைத் தருகிறது உன் மொழி;
நழுவி விழும் அரச இலையை
மிதக்கும் தருணத்தில் பார்த்திருப்பாய் தானே?
அதுபோன்று நான் மிதக்கிறேன்;
ஒரு பெண்ணுக்கே
இத்தனை மெய்ப்பாடு உருவாகிறதென்றால்
ஆணுக்குச் சொல்லவா வேண்டும்!
உன் தலைவனின் உடம்பிலிருந்து
மல்லிப்பூவின் மணம் வருகிறதென்று
அவனுடைய பங்காளிகள்
ஒருநாள் பகடி செய்து விளையாடியதைப் பார்த்தேன்;
இப்போதல்லவா அதன் காரணம் புரிகிறது!
எனக்கும் கொஞ்சம்
காமத்துப்பாலைப் பயிற்றுவியேன்.
நானும்
ஒரு புலியின் மீசையில்
தேன் தடவி நீவி விட விரும்புகிறேன்.
தொடரும்…