பரிமாறிக்கொள்ளாத முத்தம்
அவனும், அவளும்
பேருந்து நிழற்கூடத்தில் அமர்ந்திருக்க
பொங்கிக் கசிந்துகொண்டிருந்தது
அவர்களுக்கான அணைப்பு
இருவரின் தோள்களின் இடைவெளியில்
இதழ்களின் ஓரத்தில் பரிமாறிக்கொள்ளாத
முத்தங்களின் பரிதவிப்புக்கிடையில்
அவளை அவனிடமிருந்து பிரித்து
கூட்டிச் செல்ல வேண்டிய
பேருந்துகள் அனைத்தும்
அவளை அவனோடு
விட்டுச் சென்றுகொண்டிருந்தன
விரல் தொடும் தருணத்தில்
ஹார்ன் சத்தத்தோடு
வந்து நின்றது கடைசிப் பேருந்து
அவள் ஒரு யுகத்துக்கான அணைப்பையும் முத்தத்தையும்
பேருந்து ஜன்னல் கம்பி வழி
கண்களால் தந்து சென்றாள்.
அவன்
பேருந்து சென்ற திசையில்
சிறிது நேரம் உலவி
வீடு திரும்பினான்.
அவ்வுணர்வுக்குப் பெயரில்லை.
இணைக்கோடுகள்
ஆறாம் வகுப்பு பள்ளிக்கூடம்
உனக்கும் எனக்கும் ஒரே மாதிரி
வெள்ளை, காக்கி சீருடை
ஒரே மாதிரியான
மதிய உணவு
அறிவியல் ஆசிரியையிடம்
ஒன்றாய்ப் பாடம் படித்தது
ஒரே பென்சிலைப் பாதியாக உடைத்து
இருவரும் கலந்துகொண்ட
ஓவியப்போட்டி
கிழிந்துபோய் பிட்டங்கள் தெரியும்
என் டிரவுசரின் ஓட்டையில்
போஸ்ட் பாக்ஸ் என்று
உன் மாமன் மகனுக்கு
நீ வெற்றுக் காகிதங்களால்
கடிதம் அனுப்பியது
இப்படி அனைத்துத் தருணத்திலும்
ஒன்றாய் இருந்த நம்மை
தினமும் மாலை மணியடித்தவுடன்
பிரித்துச் சென்றது
உன் ஊர்த்தெருவுக்கும்
என் சேரிக்கும் செல்லும்
இரு வேறு சாலைகள்