முன்பு ஒருமுறை யாரும் அதிகம் புழங்காத சாலையில்
தீயாய் எரிந்த
சரக்கொன்றை மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு
போவோர் வருவோர் என்னை வினோதமாய்ப் பார்ப்பதைப்
பொருட்படுத்தாது விம்மி விம்மி அழுதேன்.
இன்று அந்தச் சாலையில் இருந்து நெடுந்தொலைவு வந்துவிட்டேன்
நினைவுகளுக்கும் நரை கூடிவிட்டது.
ஆனால்,
பயணிக்கிற சாலைகளில் அபூர்வமாய் தென்படுகிற கொன்றைகள்
அன்று போலவே இன்றும் எரிகிறது.
யாரேனும் எப்போதேனும்
அதனடியில் நின்று அழுகிறபோது
அது தன் மலர்களில் சிலதை அவர்கள் மேல் தூவி
“ஞானம் என்பது ஆசைகளுக்கு அஞ்சுவதில்லை
அது கொடுக்கும் வலிகளுக்கு அஞ்சுவது”
என்று சொல்கிறது.
m
Reelsக்கு வெளியே துள்ளும் உலகம்
சுட்டெரிக்கும் ஒரு கோடை காலத்தில்
கால் முறிந்து ஆஸ்பத்திரி கட்டிலில் கிடந்தபோது
அப்பன் Reels பார்க்கத் தொடங்கினார்
அன்றிலிருந்து அவர் தன்னை மறந்தார்.
தன்னைப் பிரிந்து மூத்த மகன் குடும்பத்தோடு வாழும் மனைவியை மறந்தார்.
15 வருடங்களாய் பேருந்து நிலையத்திற்கு அடுத்திருக்கும்
அரை ஏக்கர் நிலத்திற்காய்
தன் அண்ணனோடு நடக்கும் கோர்ட் கேசை மறந்தார்.
கலியாணம் ஆகாத
இளைய மகன் பற்றிய கவலைகளை மறந்தார்.
மஞ்சள் காமாலையில் மரித்துப்போன
மகள் வயிற்றுப் பேத்தியை மறந்தார்.
தினசரி எட்டுமணிக்கு அடிக்கும்
இரண்டு ரவுண்டு pegதான்
இன்னும் reelsக்கு வெளியே ஒரு உலகம் துள்ளிக்கொண்டிருப்பதை
அவருக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது.
m
எந்தக் கடவுள் என்று சரியாக நினைவிலில்லை
ஆனால், கூறியது இதுதான்
“தேவடியா மகன்களின் காலம் முடிவுறும்போது நான் உங்கள் முன் தோன்றுவேன்
உங்கள் தோளில் கை போட்டபடி
மரங்கள் அசையும் சாலையில் பறவைகளின்
கீச்சிடல்களைக் கேட்டபடி
உங்களோடு நடப்பேன் அனைவரும் ஒரே வட்டிலில் இருந்து
ஒரே உணவை
பகிர்ந்துண்போம்
எனது ராஜ்ஜியத்தின் தராசில்
பூக்களும் பறவைகளும்
மனிதர்களும் எறும்புகளும்.
அப்போது சமமாய் இருப்பார்கள்”
தேவடியாமகன்களின் காலமோ பெரியது…
கடவுளின் வாக்குகளோ
சிறியது…