‘மாமன்னன்’ பாடல் வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படத்தைக் குறிப்பிட்டு கமல் முன்னிலையில் மாரி செல்வராஜ் பேசியது குறித்துச் சமூக வலைதளங்களில் எதிரும் புதிருமாக நிறைய எழுதப்பட்டுவிட்டன. ‘தேவர் மகன்’, சாதி என்பவற்றை மையப்படுத்திப் பேச்சு இருந்ததால் பல யூடியூப் சேனல்காரர்கள் இதேபோன்று முன்பு வெளியான, பிரச்சினையைச் சந்தித்த படங்களைப் பற்றிப் பேசி கண்டென்ட் தேற்றினார்கள். ஒரு காணொளியில் 1987ஆம் ஆண்டு வெளியான ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம் பற்றிப் பேசியிருந்தார்கள். இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான படம் என்பதால் நீதிமன்றத்தில் தடை கோரப்பட்டது. படம் நிறுத்தி வைக்கப்பட்டுச் சில மாற்றங்களோடு பிறகு வெளியானது. இந்திய நீதிமன்றங்களில் இன்றளவும் கருத்துரிமை தொடர்பாக எடுத்தாளப்படும் மேற்கோளாக இப்பட தீர்ப்பு அமைந்திருக்கிறது. படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது, உருவாக்கத்தில் நிறைய பிராமணர்கள் பங்களித்திருக்கிறார்கள் என்பவற்றை மட்டுமே கண்டென்ட்டாக எடுத்துக்கொண்ட காணொளி, படத்தை எதிர்த்தவர்கள் யார், வழக்கு தொடுத்தது யார், அவற்றில் நடந்த வேறு விஷயங்கள் எவை என்பவற்றுக்குள் போகவில்லை. இப்படம் பற்றியும், இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு கதை பற்றியும் ‘ஒரு வரலாறாக’ சமூகவலைதளங்களில் குறிப்பிட நேருவோர் கூட இதற்குள் செல்வதில்லை. இவர்கள் மறைக்கிறார்கள் என்பதைவிட இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொல்வதே சரியாக இருக்கும். அதிலும் தலித்துகள் நடத்திய போராட்டங்களாக இருந்தால் அவை வரலாற்றிற்குள்ளும் கொணரப்படுவதில்ல. அவசர ஊடகவியலில் யாரும் எதையும் தேடவும் முற்படுவதில்லை.
இந்த விஷயத்திற்குள் செல்வதன் தொடக்கமாக ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படம் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். கதை அன்னவயல் என்ற தென் தமிழக கிராமத்தில் நடக்கிறது. அங்கு நடக்கும் வெள்ள பாதிப்பையொட்டி மத்திய அரசால் கருப்பாயி என்பவர் சிறப்பு அதிகாரியாக அனுப்பப்படுகிறார். அறிமுகமாகிறபோதே அவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பது கூறப்பட்டுவிடுகிறது.
பிறகு, அவர் மக்களுக்கு நல்லது செய்கிறார்; நியாயம் இல்லாத முறையில் டெண்டர் கொடுக்க மறுத்ததால் உள்ளூர் அரசியல்வாதியின் பகையைச் சம்பாதிக்கிறார். இதற்கிடையில் அவர் மறைத்து வைத்திருந்த பூர்வகதையைத் தெரிந்துகொள்ளும் அரசியல்வாதி அவரைச் சட்டத்தின் முன் நிறுத்துகிறார். தலித் பெண்ணாக அறியப்பட்ட கருப்பாயி உண்மையில் பிராமணப் பெண். அவருடைய இயற்பெயர் காயத்ரி. பள்ளிக்கூடத்தில் நிறைய மதிப்பெண்கள் பெற்றும் இட ஒதுக்கீட்டு முறையால் மேலே படிக்க ‘இடம் கிடைக்காத’ அவர், பட்டியலினப் பெண் (எஸ்.சி) என்று சாதியை மாற்றிப் படித்து இந்தப் பதவிக்கு வந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனைப் பெறுவதோடு படம் முடிகிறது.
படத்தின் இயக்குநர் ஜோதி பாண்டியன். இதற்கு முன்பும் பின்பும் அவர் படம் இயக்கியதாகத் தெரியவில்லை. இசை இளையராஜா. மற்றபடி படத்தில் பணியாற்றிய பெரும்பான்மையோர் பிராமணர்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் வாலி. இவர் முன்பு எழுதியிருந்த ‘காந்தி கிராமம்’ என்ற மேடை நாடகத்தின் விரிவாக்கம்தான் இப்படம். தயாரிப்பு இந்து ஏட்டின் அன்றைய பதிப்பாளர் எஸ்.ரங்கராஜன். நாயகி மைய படமான இதில் லட்சுமி நாயகி. முக்கியமான வேடங்களில் பூர்ணம் விஸ்வநாதன், சாருஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர மனோரமா, அருந்ததி, நிழல்கள் ரவி, வினு சக்கரவர்த்தி, வி.கே.ராமசாமி, செந்தில் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
படம் எடுக்கப்பட்டபோது எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்துகொண்டிருந்தது. படத்தில் இட ஒதுக்கீடு முழுமையாக எதிர்க்கப்படவில்லை. இட ஒதுக்கீடு வழங்க சாதியை அளவுகோலாகக் கொள்ளாமல் பொருளாதாரத்தை அளவுகோலாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்திய இடதுசாரி கட்சிகளில் பெரும்பான்மையோர் இப்பார்வையைக் கொண்டவர்கள். எம்ஜிஆர் ஆட்சியில் கூட பொருளாதார அளவுகோலின்படி இட ஒதுக்கீடு பற்றிப் பேசிப் பெரும் விவாதம் எழுந்து அடங்கியிருந்தது. அதன் தொடர்ச்சியில்தான் இப்படமும் அத்தருணத்தில் உருவாகியிருந்தது.
சாதிரீதியான இட ஒதுக்கீட்டை மறுக்கும் படம் என்பதால் பிற சாதிகள் வெறுப்பு என்று கருதப்பட்டுவிடக் கூடாதென இட ஒதுக்கீடு பெறும் சாதிகள் மீதான கரிசனம் கதையில் வலிந்து சேர்க்கப்பட்டிருந்தது. அதனாலேயே அவை கதையில் எளிய தந்திரங்களாக இருக்கிறதே ஒழிய விரிந்த உரையாடல் பின்புலத்தில் அமையவில்லை. படத்தின் மையக் கதைக் குறித்து ஒற்றைக் குரல் மட்டுமே கதையாடலில் இருக்கிறது. மற்றபடி படம் முழுக்கப் பிராமணிய மதிப்பீடுகளே இருந்தன.
அன்னவயலுக்கு மத்திய அரசின் சிறப்பு அதிகாரியாக கருப்பாயி வரப்போகிறார் என்று படத்தின் முதல் காட்சியில் எம்எல்ஏ உள்ளூர் அதிகாரியிடம் சொல்லுகிறார். அடுத்து அவர் தங்கப்போகும் வீட்டை உள்ளூர் அலுவலர் சுற்றிக் காட்டுகிறார். அப்போது ‘உங்களுக்குப் பிடிக்குமே என்று அம்பேத்கர் படத்தை மாட்டி வைத்தேன்’ என்கிறார். மூன்றாவது, சமையல் பணியாளராக தெய்வானை அறிமுகப்படுத்தப்படுகிறார். ‘அவரும் உங்களைப் போல அரிஜன வகுப்பைச் சேர்ந்த பெண்தான்’ என்கிறார். வேலைக்காரியாக இருந்தாலும் தெய்வானையைச் சமமாக உட்கார வைக்கிறார் கருப்பாயி. தெய்வானையின் கணவர் மொழிப்போரில் இறந்து போனதால் அநாதரவாக நிற்பவர் என்ற குறிப்பும் தரப்படுகிறது. பிறகு, கருப்பாயி தெய்வானையின் மகனைத் தன்னுடைய சொத்துகளின் வாரிசாக்குகிறார்; ஊரில் செருப்புத் தைக்கும் இசக்கியின் பேரன் படிக்க உதவுகிறார்; புறம்போக்கு நிலங்களை ஏழைகளுக்குப் பட்டா செய்கிறார். அவர் பிராமணர் என்பது பின்னால் தெரியப்போகிறது என்பதற்காகவே இக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் சான்றிதழ் மாற்றிப் படித்து வேலைக்குச் சென்றுவிட்டாலும் தலித்துகளின் நலன் மீது அக்கறை கொண்டவராக இருந்தார் என்று சொல்வதற்காக இக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு தந்திரமான கதையாடல். அதேபோல இளவயதில் இவரின் படிப்பாற்றலைப் பார்த்துவிட்டு ‘மேல் சாதி’ என்பதால் இடம் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்று சான்றிதழ் மாற்றித் தருபவராக ஒரு கிறிஸ்தவரைக் காட்டியிருக்கின்றனர். நன்றாகப் படிக்கும் பிராமணச் சிறுமியைச் சுட்டும் அவ்விடத்தில், தான் வளர்க்கும் அந்தோணியின் படிப்பறிவின்மையை ஒப்பிட்டு அவர் நொந்துகொள்கிறார். அதாவது பிராமணச் சிறுமி நன்றாகப் படிக்கிறாள், கிறித்துவச் சிறுவன் படிக்கவில்லை என்று எதிர்மறை உருவாகிறது. எனவே, சான்றிதழ் மாற்றத்திற்கு கருப்பாயி மட்டுமல்ல பிராமணரல்லாத கிறிஸ்தவ பாதிரியார்கள் உள்ளிட்டோரும் விரும்புகின்றனர் என்கிறது கதை.
கருப்பாயி குடும்பத்திற்குப் பாதிரியார் தேவசகாயம் உதவுவதற்கு மேலும் ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது, மாதா கோயிலில் மணி அடித்துக்கொண்டிருந்த மரியதாசின் மகனான தன்னை, கருப்பாயி என்கிற காயத்ரியின் தாத்தா பதஞ்சலிதான் படிக்க வைத்துத் தாசில்தார் ஆக்கினார். அதனால் அவர் குடும்பத்திற்குத் தான் கடமைப்பட்டிருக்கிறேன் என்கிறார். அதாவது இன்றைக்குத் தலித்துகளுக்குரிய சான்றிதழை மாற்றித் தந்திருந்தாலும் காயத்ரியின் முன்னோர்கள் பல ‘கீழ் சாதியினர்’ படிக்கக் காரணமாய் இருந்தனர் என்கிற தலைகீழ் கதையை முன்வைக்கிறது. அதோடு தன் வீட்டில் ராதாகிருஷ்ணன், தாகூர் படங்களோடு தன்னைப் படிக்க வைத்த பதஞ்சலி அய்யரின் படத்தையும் மாட்டி வைத்திருக்கிறார். மூன்று படங்களிலுமே ஓர் ஒற்றுமை இருக்கிறது. மூவருமே ‘உயர்’ வகுப்பினர். ஒரு கிறிஸ்துவ இல்லத்தில் முன்வைக்கப்படுகிற தேசியவாத பிம்பங்கள் இவை. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரல்கள் யாவும் மறுபுறத்தில் தேசிய ஒற்றுமை, வளர்ச்சி, இணக்கம் என்று பேசுவதை இன்றுவரை காண்கிறோம். இக்காட்சிகள் யாவும் தான் கூறவரும் கருத்தை நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட ரெடிமேட் காட்சிகள் என்பதை யாரும் புரிந்துகொள்ளலாம்.
படத்தில் இடம்பெறும் வசனங்கள் கூட பிராமணர்களை ஒழுக்கத்தோடு தொடர்புபடுத்தி அத்தகையவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது. படத்தில் சான்றிதழ் மாற்றுவதற்கு காயத்ரியும் அவள் தந்தையும் பாதிரியாரைச் சந்திக்கும் இடத்திலும், நீதிமன்ற காட்சிகளிலும் இத்தகைய வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. காயத்ரி சிறுமியாக இருக்கும்போது அழகாக சங்கீதம் பாடுகிறார். அதற்காக சங்கீத வாத்தியாரிடமிருந்து ‘கலைமகள் அவதாரம்’ என்று பாராட்டுப் பெறுகிறாள். தந்தையோ “சரஸ்வதியே எனக்குப் பொண்ணா பொறந்திருக்கிறாள்” என்று பூரிக்கிறார். இவ்வளவு அறிவிருந்தும் அங்கீகாரம் இருக்காது என்பதைப் “பிராமணக் குழந்தையாகப் பிறந்துவிட்டாய். நமக்கெல்லாம் மனுச சகாயத்தால் ஒன்றும் நடக்காது. நல்லது நடக்கணும்னா தேவசகாயத்தால்தான் நடக்கும்” என்று கூறுகிறார் அவள் தந்தை. தேவசகாயம் என்பது கடவுளையும் குறிக்கும், சான்றிதழ் மாற்றித் தரப் போகிற பாதிரியாரான தேவசகாயத்தையும் குறிக்கும். நீதிமன்றத்தில் கருப்பாயி, “வெள்ளைக்காரன் காலத்தில் இட ஒதுக்கீட்டுக்கு நியாயம் இருந்தது, இப்போ இல்ல. எல்லாவற்றுக்கும் இன்றைய சர்க்கார் – சட்டம்தான் காரணம். என் தகுதியை என் படிப்பைக் கொண்டு எடைபோடாமல் என் பிறப்பைக் கொண்டு எடைபோட்டது தவறு. அவர்களுக்குக் கொடுப்பதை ஏனென்று கேட்கவில்லை. எனக்கு ஏன் கொடுக்கவில்லை என்றுதான் கேட்கிறேன்” என்றெல்லாம் பேசுகிறார். அவளுடைய தந்தையோ “என் பொண்ணு படிச்சதை விட, வகுப்புதான் இங்கு முக்கியமாகிவிட்டதா?” என்று அங்கலாய்க்கிறார். மொத்தத்தில் இந்தக் கெடுதிக்கு இன்றைய அரசியல் சட்டம்தான் காரணம் என்கிறார்கள். தாங்கள் பொய் சொன்னோமே தவிர குற்றம் புரியவில்லை என்று வாதிடுகிறார்கள். இறுதியில் இடஒதுக்கீடு பிரச்சினைகளுக்குத் தீர்வாகப் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு அமைய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்கிறாள். பிறகு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக – அதாவது கருப்பாயி என்ற காயத்ரிக்கு ஆதரவாக இட ஒதுக்கீட்டுக்குரிய சாதியினரே போராடுவதாகக் காட்டப்பட்டுகிறது. தலித் பெண்ணான தெய்வானை “கம்யூனிட்டியாவது கம்மனாட்டியாவது! நல்லது செய்கிறவர்களுக்கு ஜாதி எது” என்று காயத்ரிக்கு ஆதரவாக ஆவேசப்படுகிறார். செருப்புத் தைக்கும் அருந்ததியர், காயத்ரிக்கு ஆதரவாகக் கோர்ட் வாசலில் உண்ணாவிரதம் இருக்கிறார். மற்றொரு பக்கம் மக்கள் அவருக்கு ஆதரவாகக் கையைக் கீறி இரத்தத்தால் கையெழுத்துப் போட்டு அனுப்புகிறார்கள். ‘வர்ணமும் கிர்ணமும் இடையில வந்தது, இடைஞ்சல தந்தது, எதுக்கு அதை ஒதுக்கு’ என்று பாடுகிறார்கள்.
மொத்தத்தில் சிக்கலைச் சமூகத்தின் வேரிலிருந்து பார்ப்பதை விடுத்து அரசியல் சட்டத்திலிருந்து தொடங்குகிறது. தனியொரு பிராமணப் பெண்ணின் திட்டமிட்ட மனிதாபிமானத்தைக் காட்டி கீழிருப்பவர்களை அவருக்கு ஆதரவாகத் திரட்டுகிறது கதை. பிராமணப் பெண்ணுக்குப் பொருளாதார வளம் இல்லாததைக் காட்டும் கதையாடல், தன்னை மறந்து அவர்களுக்கிருக்கும் பண்பாட்டு மூலதனத்தைக் கதையாடலின் ஊடாக ஒத்துக்கொண்டிருக்கிறது. (கல்வி, சங்கீதம், பொதுப் புத்தியின் உயர்வு நவிற்சி) அவர்களுக்குப் பொருளாதாரம் மூலதனம் இல்லாவிட்டாலும் பண்பாட்டு மூலதனம் இருக்கிறது. அது அவர்களுக்கு உதவும் என்பதுதான் சாதியின் உளவியல். இதுபோன்ற உளவியலுக்குள் போகாத இப்படம் சாதியையும் சாதி ஒழிப்பையும் புறமெய்யாக அணுகியிருக்கிறது.
m
படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தும் பெரிய அளவில் வியாபாரம் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்டது. திரைப்படத் துறையில் வேலை பார்த்த ஒருவர் பத்திரப்பதிவுத்துறை அலுவலரான குழந்தைசாமியின் உறவினர். அவர் முன்னோட்டக் காட்சி பார்த்தபோது படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துகள் இருப்பதைப் புரிந்துகொண்டு குழந்தைசாமியிடம் சொன்னார். தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் எஸ்சி/எஸ்டி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் தேதி கூடும் வகையில் அம்பேத்கர் கலாச்சார அகாடமி கூட்டம் அந்நாட்களில் நடந்துவந்தது. அக்கூட்டத்தில் இத்திரைப்படம் பற்றிய கருத்தை குழந்தைசாமி வெளிப்படுத்தினார். இதனைப் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும் என டாக்டர் பத்மநாபன் வலியுறுத்தினார். பிறகு இந்தியக் குடியரசுக் கட்சியின் பல பிரிவுகளும், அம்பேத்கர் மக்கள் இயக்கமும் போராட்டத்தில் இறங்கின. திராவிடர் கழகமும் எதிர்த்தது. 1987 ஆகஸ்டில் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆ.சக்திதாசன், வை.பாலசுந்தரம், மு.சுந்தரராஜன், தலித் எழில்மலை ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை அண்ணா சாலையில் பெரிய ஊர்வலம் சென்றபோது இந்து அலுவலகம் கல்வீசித் தாக்கப்பட்டது. இந்தப் போராட்டங்கள் மகத்தானவையாக இருந்தன என்று நினைவுகூருகிறார் செ.கு.தமிழரசன். சட்ட ஒழுங்கு பிரச்சினை எழக்கூடுமென தமிழ்நாடு அரசு பதிலளித்தது. நீதிமன்றத்திற்குச் சென்ற தலித் அமைப்புகள் படத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அண்ணா சாலை போராட்டத்தைப் பற்றி எக்ஸ்ரே மாணிக்கம் “போலீஸ் போராட்டக்காரர்களைக் கைது செய்துவிட்டு எரிமலை ரத்தினத்தைத் தூக்கி வேனில் வீசியதையும் அதைத் தடுக்கப் போன எல்.ஐ.சி. பிரபாகர்ராவ் அவர்களைத் தூக்கி எறிந்ததையும்” விவரித்துள்ளார். இதற்கிடையில் படம் வெளியாகும் முன்பே சமூகப் பிரச்சினைகளில் சிறந்தத் திரைப்படம் என்ற பிரிவில் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டது. இது போராட்டக்காரர்களை மேலும் உசுப்பியது. படத்திற்குக் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் வழங்கிய விருது சட்டவிரோதமாகக் கருதப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
பிறகு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தலித் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கிறிஸ்தவ கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மு.தெய்வநாயகம் இதற்கு முன்முயற்சி எடுத்தார். பி.ஜெகஜீவன்ராம் என்பவரின் பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தப் பணிக்காக எக்ஸ்ரே மாணிக்கமும் எரிமலை ரத்தினமும் டெல்லி சென்றனர். அங்கு அம்பேத்கர் ஆய்வாளர் பகவான் தாஸைச் சந்தித்து உதவி கோரினர். பகவான் தாஸின் கவன ஈர்ப்பையொட்டி நீதிமன்றத்திற்குப் பார்வையாளராக வந்திருந்தார் கன்சிராம். தீர்ப்பு நாளில் நீதிமன்றத்திற்கு வெளியே படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆனால், உச்சநீதிமன்ற மூவர் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய மறுத்தது. மிரட்டலுக்கு அஞ்சாமல் கருத்துரிமை சார்பாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறியது. இந்திய அளவிலான கருத்துரிமை தொடர்பான வழக்குகளில் இத்தீர்ப்பு இன்றளவும் எடுத்தாளப்படுகிறது. ஆனால், படத்தின் இறுதிக்காட்சியை, சட்டத்தை மீறியதற்காகக் காயத்ரி சிறை தண்டனைப் பெறுவதாகக் காட்டி நிறைவு செய்தனர்.
இவ்வளவு எதிர்ப்பையும் நீதிமன்ற அலைக்கழிப்புகளையும் கடந்து 1989ஆம் ஆண்டு வெளியான படம் வணிகரீதியாகத் தோல்வியைச் சந்தித்தது. அந்த அளவிற்குப் படத்திற்கான எதிர்ப்பு தமிழகத்தில் இருந்தது. போராட்ட விளைவு படத்தைக் கடுமையாகப் பாதித்தது. படத்தை நிறுத்த முடியவில்லை. ஆனால், படத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தில் மாற்றம் கொண்டுவர முடிந்தது. இப்போராட்டங்கள் பற்றி வரிசைக்கிரமமாகத் தரவுகள் திரட்டப்பட்டு எழுதப்பட வேண்டும். இப்போராட்டங்கள் தலித் அமைப்புகளால் அறியப்பட்டு – பரப்பப்பட்டு – நடத்தப்பட்டன. திராவிடர் கழகம் தவிர வேறு யாரும் இப்படத்திற்கு எதிர்ப்புக் காட்டவில்லை. எனவே, இப்படத்திற்கான எதிர்ப்பை ஏறக்குறைய தலித் அமைப்புகளின் போராட்டம் என்றே கூறலாம்.