இலக்கியப் புண்
இலக்கியப் புண்
சீழ்ப்பிடித்து
நாற்றமெடுக்கிறது.
அதிலிருந்து எட்டிப் பார்க்கின்றன
இலக்கியப் பீடங்களின்
அதிகாரக் குஞ்சுகள்
செம்மொழியின் கொரோனா தொற்று
கை கழுவிக் கழுவித் துடைத்துக்கொள்கிறேன்.
முகக்கவசம் மாட்டிக்கொள்கிறேன்.
மூச்சு முட்டுகிறது.
சுவாசிக்க முடியவில்லை.
கனவிலிருந்து விழிக்கும்போது
எம் குடிசைகளில் அச்சமின்றி
விளையாடிக்கொண்டிருக்கும்
குழந்தைகளிடம் கவிதையின் சாயல்.
கொரோனாவாவது மயிராவது!
முகக் கவசத்தை எடுத்துத் தூர வீசிவிட்டு
அச்சமின்றி சுவாசிக்கிறேன்.
ஹஹா…
காற்று உனக்கானது மட்டுமல்ல..
ரத்தம் வடியும் காயத்தில்
என் ஆத்தாக்கிழவி காளியாத்தா
எச்சில் துப்பித்
தெருப் புழுதியை எடுத்துப் பூசுகிறாள்.
பீடங்கள் சரிகின்றன.
டண்டணக்கா.. டணக்க்கு டக்கா.
டண்டணக்க்கா..
இனி என்ன..!?
இலக்கியச் சிறைவெளி
உடைகிறது.
டண் டணக்கா டணக்கு டக்கா.
டண் டணக்கா.. ஹேஹே டண் டணக்கா..
காளியாத்தா தாம்பூலம் சிவக்கிறது.
m
கவிதைப் பேய்
கவிதைக்குள் பேய் இருக்கிறது
எல்லாக் கவிதைக்குள்ளும்
எதோ ஒரு பேய் வாசம் செய்கிறது.
கவிதையைக்
கொஞ்சம் கொஞ்சமாகப்
பிய்த்துத் தின்று பசியாறுகின்றது
கவிதையின் படிமப்
புன்னகையிலிருந்து
வடியும் ரத்த வாடையை
எதோ ஒரு பூவைக் கொண்டு
துடைத்துக்கொள்கிறது.
கவிதையை வாசிக்கப்
பலர் அச்சப்படுவது ஏன்?
கவிதைப் புத்தகங்கள்
ஏன் விற்பதில்லை?
கவிதை எழுதியவனுக்கெல்லாம்
எங்கிருந்து முளைக்கிறது கொம்பு?
கவிதைக்குள் பேயிருக்கிறது.
அது எல்லோர் கண்ணுக்கும் தெரியாது.
தெரிந்தவர்கள்
அந்த மந்திரத்தை
வெளியில் சொல்லப் பயப்படுகிறார்கள்.
கவிதைக்குள் பேயிருக்கிறது.
கவிதையை வாசிப்பதற்கு
நீங்கள் கோடாங்கியாக மாற வேண்டும்.
திருநீறு பூசுவதும்
பூசாமல் இருப்பதும்
உங்கள் பகுத்தறிவு உரிமை.
கவிதைப் பேய்
அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.
கவிதையைத் தொடுவதற்கு
ஒரு நவீன சேவலைப்
பிடித்துத் தலையைத் திருகிப்
படையலிட வேண்டும்.
தேங்காய் வெற்றிலை பாக்கு
கற்பூரம் சாம்பிராணி ஊதுபத்தி விடு பூ
புளி வைத்துத் தேய்த்தச் சொம்பில்
குளிர்ந்த வெள்ளம்
இதெல்லாம் தேவைதான்
என்றாலும்
கவிதையிலிருக்கும்
பேயைக் கண்டுபிடிக்கக்
கட்டாயம் வேண்டும்
கையில் ஒரு பிரம்பும் புளியம்விளாறும்.
பி.கு: இதை யாரும் பகலில் வாசிக்க வேண்டாம்.