ஏழாவது சொர்க்கத்திலும்
எட்டாவது நரகத்திலும்
வாழ்பவள்
வைக்கப்பட்ட கண்ணியாகவும்
அகப்படும் விலங்காகவுமிருப்பவள்
விடிகின்றபோதே
இருள்கின்ற பூமி
ரகசியப்பேயுரு
ஆனந்த ஊழிக்கூத்து
தன்னைத்தானே கொன்றுகொள்ளும்
பிறழ்வுகளில்
பிணமாகிப் பிணமாகி உயிர்த்தெழுகிறவள்
மேலே செல்லாமலும்
கீழே விழாமலும்
மறைந்துவிடுகிற அம்பு
ஒரு புறம் ‘ஹவ்வா’
மறுபுறம் ‘வாதி’
↔↔↔↔↔↔↔↔↔↔
கடல் பாறை இடுக்குகளில்
மிருதுப்பாசிகளை உண்ணும்
நண்டுகளை அவிழ்த்து விடுகிறாள்
நுரைகளில் பாயும் கதிர்கள்
மாயாஜாலம் காட்டும் அலைகளை
மடித்த கொசுவங்களாக்கி
அடிவயிற்றில் புதைக்கிறாள்
கடல்ஒளி
வியர்வை வாசனையில்
சிலிர்த்த நரம்புகளில்பட்டு
சிவப்பு வரியோடிய
ஈரப்பாறைகளில் எதிரொலிக்கிறது
நுரைக்கூடுகளில் காமம் பயின்று
நட்சத்திர மணலில்
உலர்கிற சிப்பிக்கு
துரோகத்தின் இரு கதவுகள்
↔↔↔↔↔↔↔↔↔↔
கரிந்த மணல் தரையின்
கீழ் அடுக்குகளுக்குள்..
புதைந்திருக்கின்றன
செம்பிறைகள்
துயர் மினுங்கிடும் புதையல்
மீட்சியறியாக் கணங்களில் புறந்தள்ளப்பட்டு….,
வீழ்ந்து…
ஆழத்தின் கீழே மூடிக்கொண்டன !
மலை பிளந்திடும் பேரொலியோடு
ஆகாயத்திலிந்து சரிந்து
தரையை சென்றடைவதற்குள்
உபாயங்கள் தோற்று
மன்றாடித் தேய்ந்த…
செம்பிறைகள்
செம்பிறை கோதுகளில்…
கடந்துபோகின்ற முகில்களின் குளிர்
மழைப் பொழிவோடு
மணல்புழுதிக்குள்
வெண் தீ பொசுங்கி அணைகின்றது
↔↔↔↔↔↔↔↔↔↔
இருள் தன்னுள்
திரட்டி எடுத்த நினைவென
கரும்புழு ஊர்கிறது
மையிருட்டில் ஊசலாடுகிற
ஆழமான தூண்டிலின் முன்பாக
பெருகாமலும்
சென்று சேராமலும்
உருவாகி ஓடும் அருவியை
மலைப் பள்ளங்கள்
தங்களிடம் அழைக்கின்றன
கனத்த மந்தமான மேகங்கள்
அடர் நீர்ம இருளில்
தேய்பிறையின் வாசலுக்கு
நகரும்பொழுது கண்டேன்
இரு மிகைகள்
கவர்ந்திழுக்கப்பட்ட
ஒளிப் புள்ளிகளாய்
அதை அடைந்து
கடந்து போவதை
↔↔↔↔↔↔↔↔↔↔
தொடக்கமும் முடிவுமறியாத
சுனைகள் பாயும்
மலைத் தொடர்களின் மேலாக
தாவிச் செல்லும் மேகங்கள்
கருமேகப் பிளவுகளுக்குள்ளிருந்து
மின்னலின் அசரீரிகள்
அதிகூர்மையாக வெளிப்பட்டன
மௌனத்தின் புலனாகாவெளி
உள்ளமையில் விரிந்திருக்கிறது
நெருங்க நெருங்க
விலகும் நிழல்கள்
அதன் இன்மையின் பைத்தியப் பாடல்களை
உள் மறைந்து துடித்து அதிரும்
மழையாய்ப் பெய்கிறது