ராஜ்கௌதமன் (1950)
தமிழில் அரசியல், இலக்கியம், பண்பாடு, தத்துவம் சார்ந்த தளங்களை தலித் பார்வையில் அணுகுவது என்ற போக்கு உருவானபோது அதற்கான பிரதிகளாக அமைந்தவை ராஜ்கௌதமனின் எழுத்துகளே. மார்க்சியம், அமைப்பியல், பின் அமைப்பியல் சார்ந்த கோட்பாடுகளின் பின்னணியும் தலித் என்னும் வாழ்வனுபவமும் பிணைந்து உருவான அவரின் கூறுமுறை 1990களின் தமிழ் எழுத்துவெளியைப் புதிய திசைக்கு இட்டுச்சென்றது.
தலித் அனுபவம் புனைவுக்கு மட்டுமே உகந்தது என்பதுபோலக் கருதப்பட்ட தருணத்தில் அவ்வனுபவம் தமிழ் வரலாற்றின் இடைவெளிகளையும் மௌனங்களையும் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் கூடத் தேவையானது என்பதைக் கூறின அவருடைய எழுத்துகள். அவர் பெயர் இல்லாமல் அவர் நிகழ்த்திய இடையீடுகளின் தாக்கம் இல்லாமல் தமிழ் இலக்கிய-பண்பாட்டு வரலாற்றை இனி எழுதிவிட முடியாது என்பதுதான் அவர் எழுத்தின் முக்கியத்துவம்.
புனைவுகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் சார்ந்து பங்களித்துள்ள அவர் தலித் இலக்கியம், தலித் பண்பாடு பற்றி மட்டுமல்லாது நவீன தமிழ்ச் சமூகத்தின் ஆளுமைகள் பற்றியும் சங்க இலக்கியங்கள் பற்றியும் விரிவான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். கோட்பாட்டு இறுக்கத்தை வலிந்து ஏற்றிக்கொள்ளாத அவரின் எழுத்து அதேவேளையில் தீவிரம் குறையாதது என்பது குறிப்பிடத்தக்கது. பகடியைக் கிண்டலாக இல்லாமல் சமூக விமர்சனமாக மாற்றியவை அவர் எழுத்துகள். எழுதுவதைத் தாண்டி எழுத்து சார்ந்து வேறெந்த நலனையும் யோசித்திராதவர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then