உடம்பரசியல் அறிக்கை உடம்பரசியல் அறிக்கை
எனது உடம்பின் எல்லை சுற்றிவளைக்கப்பட்டு முள்கம்பி வேலியால் அடைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் மட்டுமே நானிருக்கிறேன். எனது புழங்குவெளி உடம்பைத் தாண்டி இல்லை. இதிலிருந்து வெளியேறும் முயற்சியின் முதல் படியாக முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணை எனக்குள்ளிருந்தே அடையாளம் கண்டு அவள் வழியே எல்லைத் தாண்டி வெளியேறி, போகுமிடத்திலெல்லாம் எனது விடுதலையை வெளிப்படுத்திவிட்டு ஒரு பறவையைப்போல் மீண்டும் கூடடைகிறேன். பெண்வேடம் எனக்குப் பொருந்திவருகிறது; அதில் எனக்குச் சிறகுகள் கட்டப்படுகின்றன. நிலத்தின் எல்லைப்புறங்கள் வேலிகளிட்டு அடைக்கப்பட்டாலும் வெட்டவெளி வானில் என்னால் தடைகளின்றிப் பறக்க முடிகிறது.
நானொரு பெண்வேடமிட்ட ஆண் என்பது இந்நகரத்தில் வாழும் ஒருவருக்கும் தெரியாது. ஆண்கள் நுழையத் தடைசெய்யப்பட்டப் பகுதிகளில் பெண்ணாக நுழைந்து உடம்பின் மறைபொருள் உண்மைகளை அறிந்துகொள்கிறேன். ஓருடம்பில் ஒரு வாழ்க்கை என்ற விதியை மீறி ஓருடம்பில் இரு வாழ்க்கையைக் கட்டமைக்கிறேன். பிறப்பு ஒருமுறைதான் என்னும்போது அதில் ஆண், பெண் இருநிலைகளிலும் வாழ்ந்துபார்க்கும் பேரவா. பெண்ணை அறிய பெண்ணாக மாறு என்கிறது நான் ஒழுகும் மதத்தின் புனிதநூல்; எனவே, மதம் தடைசெய்த எதையும் நான் மீறவில்லை என்ற அறம் பிறழா நேர்மையுடன் கடவுள்முன் நிற்கிறேன். கடவுள் படைத்த என்னை, பால் திரித்து வேறொன்றாக நிற்பதைப் புனிதநூலின் சட்டம் தடுக்கவில்லை என்று வெளியில் சொன்னால் மத அடிப்படைவாதிகளால் கொல்லப்படுவேன். இந்தப் பயத்தினால் நானேவொரு மறைபொருளாகச் சுற்றித் திரிகிறேன்.
பெண்வேடமிடும் ஆண், பொதுவாக, தன் முகத்தில் பெண் கடவுளைப் புனைந்துகொள்வான். கடவுளின் வேடம் சமூகப் பாதுகாப்பைக் கொண்டது. கடவுளை யாரும் தூற்றமாட்டார்கள்; அதிலும், பெண் கடவுளை ஒருவரும் வன்புணர முன்வரமாட்டார்கள். இந்தப் புரிந்துணர்வு சமூகத்தில் தானாகவே கட்டமைந்தது. எனது உடம்பிலிருந்து வெளியேறும் நான் கடவுள் வாழும் இடமான கோயிலில் அடைகிறேன். அரசன் வாழும் அரண்மனையே நாட்டில் ஆகப்பெரியக் கட்டடமாக இருக்கும்போது, குடிகள் பொதுவில் புழங்கும் பேரமைப்பாகக் கோயில் இருக்கிறது. அரண்மனை அரசனுக்கும் கோயில் குடிகளுக்குமான இரட்டைப் பேரமைப்புகளில் நான் கோயிலில் ஆணாகவும் பெண்ணாகவும் இருவேறு நிலைகளிலும் புழங்குகிறேன். ஆனால், அரண்மனையில் பெண்ணுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அங்குப் பெண்ணாகப் பால் திரிந்து நுழைகிறேன்.
பால் எல்லைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு முள்கம்பி வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு வரையறுக்கப்பட்ட பால்வெளியிலிருந்து எல்லைத் தாண்டி வெளியேறுகிறேன். நான் ஒற்றைப் பாலில் அடங்க மறுக்கும் உயிரி. கடவுள், அரசன் என்ற இரட்டை அதிகாரத்திற்கு வெளியே நிலைக்கிறேன். ஆம், எனது உடம்பு எனது உரிமை.
புகைப்படம்: நவீன்ராஜ் கௌதமன்
மழையோடு வந்தவள்
ஐப்பசி மாலை இருட்டிக்கொண்டுவந்தது. ஊருக்குச் சென்ற உறவுகள் இன்றும் திரும்பிவரவில்லை. தனித்திருக்கும்போதுதான் என்னைப் பற்றி சிந்திக்கிறேன். கூட்டத்திலிருந்துகொண்டு என்னை என்னால் பார்க்கமுடிவதில்லை. கருமுகில் அடர்ந்து வெளியை மூடிக்கொண்டிருந்தது. தோட்டத்தில் நின்று வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நனைத்துப் பிழிந்த துணிபோல ஈரக்காற்று என்னைப் போர்த்தியது. வீட்டுக்குள் வந்தேன். மழை தொடங்கிவிட்டது. வாசல் கதவடைத்தேன். வெளித்திண்ணையோரம் யாரோவொருத்தி மழைக்கு ஒதுங்கி நிற்பதைக் கண்டேன். திண்ணையில் அமருங்கள் என முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு எனக்குள் திறந்திருந்த கதவையும் அடைத்தேன்.
மழை வலுத்துவிட்டது. சாரலில் நனைவாளோ என்ற ஐயப்பாட்டில் தெருச் சாளரத்தைத் திறந்து பார்த்தேன். திண்ணையில் அமர்ந்து மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாசல் விளக்கொளியில் முகம் தெளிவாகத் தெரிந்தது. இதற்கு முன்பு இந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேன் என்ற எண்ணம் எழுந்தது. கூழாங்கல் நிறத்தில் தசையாலான இந்த முகம் எனக்கு நெருக்கமானது. இவள் யாராக இருக்கும்? உடன் படித்தவளா? என்ற கேள்வியோடு சாளரத்தை மீண்டும் பார்த்தேன். அடைக்கப்பட்ட வாசல் கதவின் வெளிப்பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நேர்க்கொண்ட நோக்கில் முகம் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. மூக்குத்தியை அவிழ்த்துவிட்டால் இந்த முகமீன் எளிதில் நினைவுத் தூண்டிலைக் கவ்விவிடும். சாளரக் கம்பியில் முகம் பதித்து மழையைப் பார்ப்பதுபோல அவளைப் பார்த்தேன்.
பார்க்கப் பார்க்க இந்த முகம் மழையில் நனைந்து நினைவில் மிதந்து வந்தது. அவளை உள்ளே அழைக்கலாமா என்ற கேள்வியோடு மழையின் வேகம் குறைந்தாலும் பொழியும் அடர்த்திக் குறையவில்லை. நீராவி முகத்தில் படிந்தபடியிருக்க அதை அடிக்கடி துடைத்தாள். அவள் முகத்தைத் துடைக்கும்போது செங்குத்தாகக் கீழிறங்கிய மழை பக்கவாட்டில் அசைந்துகொடுத்தது. மூக்குத்தியைக் கடந்த எண்ணம், மழையிலிருந்து அந்த முகத்தைப் பிரித்தெடுத்தால் அடையாளம் கண்டுவிடலாம் எனத் தோன்றியது. மீண்டும் சாளரத்தை அடைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். முற்றத்தில் கொட்டும் மழையில் அம்மணமாக நனைய மனம் ஏங்கியது.
மீண்டும் சாளரத்தைத் திறந்துப் பார்த்தேன்; வெளியில் அவள் இல்லை. தயக்கம் தடுத்ததால் இரண்டொரு வார்த்தை அவளிடம் பேசவில்லை. பேசியிருந்தால் அவளை எனக்குள் கண்டடைந்திருக்கலாம். வேட்டி, சட்டையைக் களைந்துவிட்டு முற்றத்து மழையில் நின்றேன். அடர்த்தி குறைந்திருந்தது. ஈரத்தோடு நிலைக்கண்ணாடி முன் நின்றேன். நீராவி படிந்த கண்ணாடியில் எனது அம்மணவுடம்பின் கழுத்திலிருந்து என் முகம் பிடுங்கப்பட்டு, அந்த இடத்தில் அவள் முகம் பொருத்தப்பட்டிருந்தது. தொடைகளின் கவையில் நசநசக்க, தொட்டுப் பார்த்தேன்; உள்ளங்கையில் குருதி படிந்திருந்தது.
வெளியேற்றம்
கிணற்றில் எட்டிப் பார்த்தேன்; ஆழத்தில் கையகல நீரில் முகம் மிதந்தது; நீ அங்கேயே இரு எனச் சொல்லி விட்டுவிட்டு வெறும் முண்டமாக எட்டிவந்தேன். சொந்த அடையாளச் சுமையை இறக்கிய பிறகு நிழல்போல உடம்பும் நிலத்தில் கனமின்றி நகர்ந்தது. முகத்தின் வழியே எனது குடும்பத்தின் கதை, ஊரில் விரியும் குருதியுறவின் வரலாறு, காலத்தில் அது அடைந்துவந்த மாற்றம், குடிமை வளர்ச்சியில் மூதாதையரின் பங்களிப்பு, இவற்றையெல்லாம் கணக்கில்கொள்ளும் இன்றைய எனது பங்கேற்பு. தற்காலிக மாந்தனான நான் இந்த முகத்தின் வழி வரலாற்றில் கட்டமையப்பெற்ற குமுக மாந்தராகிறேன்.
இது நானில்லை. இதை என்னால் கையாள முடியாது. வளர்ந்துவந்த வழிநெடுக இது செய்த மாபாதகங்களுக்கு நான் பொறுப்பாளியாக முடியாது. நான் வெட்டவெளியில் வெற்றாய்ப் பிறந்தவன். முன்னும் பின்னும் தொடர்பை அறுத்தவன். குமுகத்திலிருந்து வெளியேறுவதென்பது வரலாற்றிலிருந்து வெளியேறுவதாம். விதிக்கப்பட்ட சொந்த பாலடையாளத்தை மறுத்து அதிலிருந்து வெளியேறுவதே புரட்சிகர வெளியேற்றமாகும். எனது ஆண்முகம் கிணற்றில் மிதக்கிறது; யாரோ பயன்படுத்தி குப்பையிலெறிந்த பெண்முகம் ஒன்றை முண்டத்தில் பொருத்திக்கொண்டு அலைகிறேன்.
முகமிருந்தால் போதும், உடம்பு மொத்தமும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். என்னை அழுத்திக்கொண்டிருந்த வரலாற்றுச் சுமையைப் பால்மாறிக் கடந்தேன். தன்னிலை ஒன்றின் விடுதலை, சொந்த பாலடையாளத்தைத் துறப்பதிலிருந்துத் தொடங்குகிறது என்று எதிலோ படித்திருக்கிறேன். ஆண்டான் வூ அடிமை மோதலின் கதையே வரலாறு; அது பால், இனம், சாதி, மொழி, நிலம், வளம் என ஒன்றிலொன்று பிணைந்துத் தன்னை உருத்திரட்டிக்கொள்வது. இவற்றில் முதல் கட்ட நடவடிக்கையாகப் பால்நிலை பிறழ்ந்து நிற்கிறேன்; இது என்னால் மட்டுமே பிறரின் கூட்டுச்செயலின்றி நிகழ்த்த இயன்றது.
ஆண், பெண் என்னும் பிரிவினை அதிகாரக் கட்டமைப்பில் அரசும் மதமுமாக எனக்குப் பொருள்படுகின்றன. இந்த இரண்டும் எனக்குள் கணிசமாகப் பங்குபெற்றுள்ளன. இந்த உண்மையை எல்லோரும் மறைக்கிறார்கள். எனது உடம்பின் ஒருமையை அழித்துவிட்டேன். ஒன்றில் பொருள்படும் இயற்கையின் வன்மத்திலிருந்து என்னை விடுவித்துக்கொண்டேன். வாழ்விலே ஒரேயொருமுறை பரிதி எழுந்து மறையும்வரை, மறைந்து எழும்வரை கடவுளாக வாழ்ந்து பார்க்க வேண்டும். மாந்தக் கற்பனையின் உச்சத்தில் தசையும் குருதியுமாக ஒரேயொரு நாள் கடவுளாக வாழ்ந்து அதிலிருந்து வெளியேறும்வரை இந்த மனப்பிறழ்விலிருந்து வெளிவரமுடியாது.