காலனித்துவச் சிப்பாய்கள்,
என் குடும்பத்தைக்
கவிதைக்கு வெளியே
கொன்றதைப் போல
என்னால் எளிதாக
என் கவிதைகளில்
அவர்களைக் கொல்ல முடிந்திருக்கும்
எனும்போது
இத்தனை வருடங்களாக
என் கவிதையில் அவர்கள்
என்ன செய்துகொண்டிருந்தார்கள்.
கொலைகாரர்களோடு
என் கணக்குளைத் தீர்க்கக்
கவிதைதான் எனக்கு வாய்ப்பாயிருந்தது.
ஆனால் நான்
அவர்களை வெளியில்
காலந்தள்ள அனுமதிக்கிறேன்.
இன்னும் அவர்களது வாழ்க்கை
சிதைவதை அறியவும்
முகங்கள் சுருங்குவதையும்
அவர்களது புன்னகை மெலிவதையும்
அவர்களது ஆயுதங்கள்
கூனிக் குனியவும்
நான் விரும்புகிறேன்.
ஆகவே அன்பின் வாசகர்களே,
என் கவிதையில்
ஒரு சிப்பாய் உலாவுவதைக்
காண நேர்ந்தால்
ஒரு குற்றவாளியை விட்டு வைப்பதாய்
அவனது விதியின்பால்
அவனது எஞ்சிய பல வருடங்களுக்கு
நான் விட்டு வைத்திருக்கிறேனென
நம்புங்கள்.
அவர்கள் அவனைத் தூக்கிலிடுவார்கள்.
இன்னும் அல்லற்படும் குடும்பங்களுக்காய்
என் கவிதைகளை
வாசித்துக் காட்டுவதை
அவன் செவியுறுவதாய்
அவனது செவிகள் அவனைத் தூக்கிலிடும்.
வாசகர்கள்
அவனை வெறித்துக்கொண்டிருப்பதால்
அவனால் என் புத்தகத்திலிருந்தோ
வாசிக்கும் அரங்கத்திலிருந்தோ
நழுவ முடியாமல் போகும்.
நீ ஆறுதலடைய மாட்டாய் சிப்பாயே.
ஆறுதலடையவே மாட்டாய்.
தளர்ந்த தோள்களோடும்
இறந்த தோட்டாக்கள் நிரம்பிய
சட்டைப் பையோடும்
என் கவிதை நிகழ்விலிருந்து
நீ வெளியேறும்போதும் கூட.
உன் கை
பல கொலைகளால் நடுங்கியபோதும்
ரவைகளால் பதற்றமுற்றபோதும்
உன்னால்
மௌனித்திருக்க மட்டுமே முடியும்.