ஒரு முன்மாதிரியான திட்டத்தைத் — தலித்துகளுக்குச் சொந்தமாகக் குடியிருப்பு நிலங்களை வழங்குதல் — செயல்படுத்துவதில் சத்யவாணி முத்துவின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதன் பிறகு மாநில அதிகார மையமான சென்னையில், ஆதிதிராவிடர் நலனுக்கான மத்திய அரசின் நிதிகள் எவ்வாறு பகிரப்பட்டன என்பதைக் கருத்தில் கொள்வோம்.
வீட்டுமனை வழங்கும் திட்டம் என்பது தலித்துகள் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஓரளவாவது மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள தலித் குடியிருப்புகள், சாதி இந்துக்களிடமிருந்து தனியாக இருந்தாலும், தங்களிடம் பணியாற்றிய தலித்துகள் குடியிருந்த ‘காலனி’ நிலத்தைக் கூட நிலப்பிரபுக்கள்தான் வைத்திருந்தனர். நாடு முழுவதும் அடிமைத்தனத்தின் வடிவங்கள் வேறுபட்டாலும், எஜமானர்களால் குடியிருப்பு நிலங்கள் சொந்தமாக்கப்படுவது தொழிலாளர்களைக் / தலித்துகளைக் கட்டுப்படுத்தும் வலிமையாகவும் சக்தியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில், தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு வேறு இடங்களுக்குச் சென்று குடியேறுவதற்குத் தேவையான மூலதனமோ அல்லது பிற வழிகளோ அவர்களிடம் அரிதாகவே இருந்தன. இதனால் நிலப்பிரபுக்கள் தங்களோடு முரண்படும் தொழிலாளர்களை ஒரே நேரத்தில் ‘வெளியேற்றம் – வேலையிழப்பு’ இரண்டையும் காட்டி அச்சுறுத்த முடிந்தது; இது தலித்துகள் தர நேர்ந்த பெரும் விலையாகும்.62 காலனித்துவ அரசின் சில அதிகாரிகள் கூட, சாதி அடிப்படையிலான விவசாய அடிமைத்தனத்திற்கு ஆதரவு அளித்தபோதிலும், தலித்துகளின் குடியிருப்பு நிலம் மீதான நிலப்பிரப்புக்களின் ஆக்கிரமிப்பை ‘அடிமைத்தனம்’ என்றே கருதினர்; 1910 வாக்கில், காலனிகளில் உள்ள தலித்துகளுக்கு வீட்டுமனை நிலம் வழங்குவது விவசாயத்தின் நவீனமயமாக்கலுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியம் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பொருளாதாரக் கட்டாயங்களோடு, நிலப்பிரபுத்துவச் சமத்துவமின்மையை ஒழிக்க சுதந்திர இந்தியாவில், வீட்டுமனை வழங்குவதென்பது மத்திய அளவில் ஆதிதிராவிடர் நலனுக்கான மையக் கொள்கை நிலைப்பாடாக இருந்தது. மேலும் தமிழ்நாட்டில், முதல் மூன்று ஆட்சிக் காலங்கள் முழுவதும் பட்டியல் சாதி சட்டமன்ற உறுப்பினர்களாலும் பிறராலும் சட்டமன்றத்தில் அடிக்கடி எழுப்பப்பட்ட ஒரு பிரச்சினையாக இருந்தது.63
ஆனால், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீட்டுமனை வழங்குவது, குறைந்தது மூன்று பொதுவான சிக்கல்களால் பலவீனப்படுத்தப்பட்டது. இச்சிக்கல்கள் ஒவ்வொரு தசாப்தத்திலும் மீண்டும் கண்டறியப்பட்டாலும், அவை ஒருபோதும் தீர்க்கப்படவில்லை. முதலாவது, அதன் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளாகும். உதாரணமாக, 1960களின் முற்பகுதியில் தலித்துகளுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலோரிடம் அங்கு கட்டடம் கட்ட உண்மையில் மூலதனம் இல்லை – இது பிரச்சினையல்ல, ஆனால் ஆயிரக்கணக்கான இடங்கள் பல ஆண்டுகளாகக் காலியாகக் கிடப்பது கண்டறியப்படும் வரை அரசாங்கம் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாவது, அளவீடு சார்ந்த பெரிய பிரச்சினை. 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் 7.5 முதல் 10 மில்லியன் தலித்துகளுக்கு வீடுகள் தேவைப்பட்டன. குறைந்தபட்ச மதிப்பீட்டின்படி ஒரு மில்லியன் மனைகள் தேவைப்பட்டன. ஆனால் 1975 வாக்கில், ஓராண்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 15,000 மட்டுமே.64 அதே ஆண்டில் வீடுகளும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபோது, அதன் மாதிரி வடிவமைப்புப் பற்றி ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால், சுமார் இரண்டு ஆண்டுகள் மனைகள் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது, இங்கு நம் நோக்கங்களுக்கு மிகவும் முக்கியமானது என்னவென்றால், வீட்டுமனை வழங்குவது நில உரிமையாளர்களின் எதிர்ப்பைத் தூண்டியதுதான்.
அரசு தனது முயற்சிகளுக்காக (விவசாயம் செய்யப்படாத அல்லது ஆக்கிரமிக்கப்படாத இடங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்தபோதிலும்) நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைப் பயன்படுத்தியதற்காக நூற்றுக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டது. இந்த வழக்குகள் பொதுவாகத் தீர்க்கப்படப் பல ஆண்டுகள் ஆனது.65 1970இல் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் நல பட்ஜெட் குறித்து விவாதிக்கும்போது, சத்யவாணி முத்துவிடம் பட்டியல் சாதி சட்டமன்ற உறுப்பினர் இ.கோ.பாலகிருஷ்ணன் கேட்டார்: “குறிப்பிட்ட இடங்களை வழங்குவதை நில உரிமையாளர்கள் எதிர்ப்பதாக மாண்புமிகு அமைச்சர் கூறுகிறார். ஆனால், அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதை வெறுமனே விட்டுவிடாமல், அவசர கையகப்படுத்துதல் சட்டத்தைப் பயன்படுத்தி நிலத்தைப் பறிமுதல் செய்து ஏன் நீங்கள் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை?”66
சத்யவாணி முத்து பதிலளித்தார்: “நில உரிமையாளர் ஒருவரின் விருப்பத்திற்கு எதிராக ஓர் இடத்தை ஆக்கிரமித்தால், அதன் பின்விளைவுகள் குறித்து தலித்துகள் பயப்படுகிறார்கள். எனவே, நாம் அவர்களின் எதிர்ப்பைப் புறக்கணிக்க முடியாது, அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”
அவரின் இந்தப் பதில், நில உரிமையாளர்கள் சுதந்திரமாக அச்சுறுத்தவும், அரசாங்கக் கொள்கைக்கு நேரெதிராகத் தலித் அடிபணிதலைப் பராமரிக்கவும் அனுமதி அளித்தது என்று பொருள்படும். ஆளும் கட்சி அமைச்சராக இருந்ததால், சத்யவாணி முத்துவால் கட்சியின் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை.67 ஆனால், எனது சொந்த ஆய்வின்படி, அவருக்கு அந்தக் கொள்கையில் உடன்பாடு இல்லை. அவர் தனது பதவியைப் பயன்படுத்தி வருவாய் வாரிய அதிகாரிகள் மூலம் இந்த நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மிகவும் விவேகத்துடன் இடையீடு செய்ய முயன்றார். நிச்சயமாக, அனைத்து நவீன அரசாங்கங்களும் பொது மக்கள் நலனுக்காக இத்தகைய வழியில் சொத்துகளைக் கையகப்படுத்த முடியும். தமிழ்நாட்டில், மற்ற இடங்களைப் போலவே, சந்தை விலைக்கு நிகரான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் சத்யவாணி முத்துவின் பரிந்துரை வாரியத்தால் நிராகரிக்கப்பட்டது, அவரது கோரிக்கை ‘பறிமுதல்’ செய்யும் தன்மையில் இருப்பதால் அது ‘அரசியலமைப்பிற்கு எதிரானது’ என்று அவரிடம் அப்பட்டமாகப் பொய் கூறியது!68 மோசமான வடிவமைப்பு, மிகக் குறைந்த அளவீடு, சிலருக்குச் சாதகமாகச் சொத்துரிமைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை – தலித்துகளுக்கு எதிரான வன்முறையிலும் அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் நடப்பது போல – ஆதிக்கக் குழுவின் அதிகாரத்துக்கான அடித்தளத்தைப் பாதுகாத்து, அதே நேரத்தில் அந்த அதிகாரத்தைக் குறைக்க முயன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபான்மைப் பிரதிநிதி மற்றும் அமைச்சரின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தகர்த்து மீண்டும் அரசைக் குற்றவாளியாக்கியுள்ளன.
ஆனால் இந்த வழக்குகள், உண்மையில் அரசின் நல்நோக்கம் கொண்ட திட்டங்களை ‘சமூகம்’ எதிர்க்கும் ஒரு நிகழ்வு அல்லவா? ஆம், தனிச் சொத்து உரிமையாளர்கள் ஆதிதிராவிடர் நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மறுத்தனர். இருப்பினும், நமது ஆய்வை அதோடு நிறுத்திவிடுவது இரண்டு முக்கியமான உண்மைகளைப் புறக்கணிப்பதாகிவிடும். முதலாவதாக, வருவாய் வாரியத்துடனான சத்தியவாணி முத்துவின் தொடர்புகளும், எனது ஒட்டுமொத்த விரிவான ஆய்வும் காட்டுவது போல, இந்த வழக்குகள் ஒரு குறிப்பிட்ட அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டன; அந்த அரசோ ஆதிக்கக் குழுவினரின் சொத்து உரிமையை உறுதிபட ஆதரித்த அதேவேளையில், மற்றவர்களின் உரிமைக் கோரல்களில் சிலவற்றை மட்டுமே ஏற்று மற்றதை நிராகரித்தது. தனியார் சொத்துரிமை ஆட்சிமுறைக்கும் ஆதிதிராவிடர் நலக் கொள்கைக்கும் முரண்பாடு ஏற்படும்போது, அரசு அதிகாரிகள் சொத்துரிமைகள் ‘புனிதமானவை’ என்று வலியுறுத்தினர்; ஆனால், உள்கட்டமைப்பு அல்லது தொழில் வளர்ச்சிக்காக நிலம் தேவைப்படும்போது, அந்தப் புனிதமான உரிமைகள் காற்றில் விடப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்க செயல்பாட்டின் நடைமுறைகளைக் கவனித்தால், நில உரிமையாளர்களால் தொடரப்பட்ட இந்த வழக்குகள் அரசு ஏற்கெனவே தோற்பதற்குத் துணிந்துவிட்ட வழக்குகளே தவிர, இவை அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான ஒரு திட்டமிட்ட மோதலுக்கான சான்று அல்ல.
இரண்டாவது மற்றும் மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால், இந்த வழக்குகளை ‘சொத்து உரிமையாளர்கள் மற்றும் அரசுக்கு இடையிலான மோதல்’ என்று அதன் முகமதிப்பில் அப்படியே ஏற்றுக்கொள்வது, தற்போதுள்ள சொத்துரிமை முறையை இயற்கையான ஒன்றாகக் கருதும் போக்கிற்குத் துணை போவதாகும். இது நீதிமன்றங்கள் முதல் காவல்துறை வரை அந்தச் சொத்துரிமை முறையை உருவாக்கி நிலைநிறுத்தும் அரசு நிறுவனங்களையும், சட்டக் கட்டமைப்புகளையும் புறக்கணிக்கிறது. தாராளவாத அரசாங்கங்கள் தாங்கள் நடுநிலையாக நிர்வகிப்பதாகக் கூறிக்கொள்ளும் ‘சமூகத்தில்’ நிலவும் சமத்துவமின்மையை உருவாக்குவதிலும் பராமரிப்பதிலும் தங்களுக்குள்ள பங்கை மறைக்கப் பயன்படுத்தும் முக்கிய தந்திரம் (conceit) என்னவென்றால், ‘பொருளாதாரம்’, ‘அரசியல்’ இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தியங்கும் துறைகள் என்று காட்டுவதாகும்.69 இதன் விளைவாக, முந்தைய ஆட்சியின் (ancien régime) சொத்துரிமை முறையை அடுத்த அரசு அங்கீகரிக்க முற்படும்போது – இந்தியா பெரும்பாலும் அவ்வாறே செய்தது – அது ஒரு தெரிவாகவோ முடிவாகவோ துல்லியமாக முன்வைக்கப்படுவதில்லை; மாறாக, தாராளவாத சித்தாந்தம் சித்தரிப்பதைப் போல அது ஓர் ‘இயற்கையான ஒழுங்கைப்’ பாதுகாப்பதாகவோ அல்லது ‘புரியாததை மேலும் புரியாத ஒன்றைக் கொண்டு விளக்குவது’ போல, காலங்காலமாகத் தொடரும் ‘வழக்கத்தைப்’ பாதுகாப்பதாகவோ முன்வைக்கப்படுகிறது.70 இந்தியாவின் கிராமப்புற சொத்துரிமை முறையை முழுமையாக ஒழித்து, தனியார் உரிமையைத் தவிர்த்து அரசு நிர்வகிக்கும் கூட்டுப் பண்ணை முறையைக் கொண்டுவர அம்பேத்கர் முன்மொழிந்தார் என்பதும், அரசுக்கு அவ்வாறு செய்ய உரிமையில்லை என்ற அடிப்படையில் அது நிராகரிக்கப்படவில்லை என்பதும் பெரும்பாலும் மறக்கப்படுகிறது.71 உண்மையில், சொத்து என்பது அரசு அதை அங்கீகரிக்கும் வரையில் மட்டுமே நீடிக்கிறது; சொத்துரிமை என்பது அரசு உருவாக்கிய ஒன்று, அது எப்போதும் நிபந்தனைக்குட்பட்டது, வரம்பிற்குட்பட்டது.72
இப்போது மீண்டும் ஆதிதிராவிட நல விவகாரத்திற்கு வருவோம். பிரதிநிதித்துவ அரசியலில் சத்தியவாணி முத்துவின் அனுபவங்கள் குறித்த நமது விவாதத்தை, ஓர் அடிப்படைப் பிரச்சினையை ஆராய்வதன் மூலம் நிறைவு செய்வோம். இந்தப் பிரச்சினை வெறும் வீட்டுமனைத் திட்டத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமைச்சகத்தையுமே பாதிப்பதாக இருந்தது: அதாவது, ஆதிதிராவிடர் நலனுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட நடைமுறையாகவே (institutionalized redirection) தமிழ்நாடு அரசு கொண்டிருந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக சத்தியவாணி முத்து இருந்தபோது, கிராமப் பஞ்சாயத்து அளவில் நிதி தவறாகக் கையாளப்படுவது பரவலாக இருப்பதை அவரே ஒப்புக்கொண்டார்; அவரது நேரடி கிராம ஆய்வுகள் வழியாகவும் அமைச்சக அதிகாரிகளின் தகவல்கள் மூலமும் இது உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், இதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், மாநில அரசு அளவிலேயே இந்த நிதி எவ்வாறு திசைதிருப்பப்பட்டது என்பதை முத்து கண்டறிந்ததாகும்.
1940களிலிருந்து 1960கள் வரை, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்ற சொல் பெரும்பாலும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சில அரசு ஆவணங்களில் இச்சொல் மிகவும் விரிவான பொருளில் பயன்படுத்தப்பட்டது. அதாவது, முன்னேறிய சாதியினரைத் தவிர்த்து இந்தியாவில் நலிவடைந்த நிலையில் இருப்பதாகக் கருதப்பட்ட அனைத்துப் பூர்வகுடி மக்களையும், சில நேரங்களில் பட்டியல் சாதியினரை விலக்கிவிட்டு பிற பிராமணர் அல்லாதவர்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது.73 இங்கு குறிப்பிடத்தக்க மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பட்டியல் சாதியினர் – பழங்குடியினரின் நலனுக்காகவே பிரத்யேகமாகத் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் நிதியானது, பல ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்ற காலாவதியான, குழப்பமான பெயரிலேயே தொடர்ந்து குறிப்பிடப்பட்டுவந்தது. அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, இந்த நிதியை அதன் உண்மையான பயனாளர்களான பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் செலவிடாமல், தமிழக அரசு ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ (OBC) என வகைப்படுத்தியிருந்த அரசியல் வாக்குவங்கியினருக்கும் சேர்த்துச் செலவிடத் தெரிந்தே ஆணையிட்டதைச் சத்தியவாணி முத்து தனது சுயசரிதையில் விவரிக்கிறார்.74
மக்கள் தொகையில் 22 – 23 சதவீதமாக இருந்த பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது, மக்கள் தொகையில் அதிகமாகவும் (சுமார் 52 சதவீதம்) தேர்தல் அரசியலில் சக்திவாய்ந்தவர்களாகவும் இருந்த மற்றவர்களுக்குத் திசைதிருப்பப்பட்டது. இது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் நலனைப் பலிகொடுத்துச் செய்யப்பட்ட செயலாகும். மீண்டும் ஒருமுறை, அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ‘ஒரு தரப்புக்குச் சாதகமான ஆட்டத்தை’ (zero-sum game) இங்கே காண்கிறோம். ஆனால், இது உண்மையிலேயே ‘அரசு’தானா? அதாவது, பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட நெறிமுறைகளிலிருந்து விலகிச் சென்றாலும், இது விதிகளின் அடிப்படையில் இயங்கும் வழக்கமான நடைமுறைதானா? அல்லது சந்தர்ப்பவாத அரசியல்வாதி ஒருவரால் அரசாங்கத்தின் ‘உண்மையான’ அமைப்புகளில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஊழலாக இதைக் கருத வேண்டுமா?
தனது கண்டுபிடிப்பால் அதிர்ச்சியடைந்த சத்யவாணி முத்து, இந்த விவகாரம் குறித்து கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளிகள் பற்றிய தனது விளக்கமே சரியானது என்று கருணாநிதி பிடிவாதமாக வாதிட்டார்! இருப்பினும், சிறிது காலத்திற்குப் பிறகு, செலவிடப்பட்ட நிதிக்கான கணக்கை மத்திய அரசு கேட்டபோது, தமிழ்நாடு அரசு அளித்த பதில் சத்யவாணி முத்துவின் வாதமே சரி என்பதை மெய்ப்பித்தது: ‘மத்திய அரசால் வழங்கப்படும் நிதி, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நலனுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும்’ என்று அது கண்டிப்புடன் சுட்டிக்காட்டியது.75 இதுபோல் பட்டியல் சாதியினருக்குத் தீங்கிழைக்கும் அரசாங்க நடைமுறைகளைக் கேள்விக்குட்படுத்த முயன்று தோல்வியுற்ற நிகழ்வுகள், சத்யவாணி முத்துவுக்கும் கருணாநிதிக்கும் இடையே வளர்ந்துவந்த கசப்புணர்வை மேலும் தூண்டின. இதுவே 1974இல் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. அம்மையாரின் சுயசரிதை பெரும்பாலும் திமுக, குறிப்பாக கருணாநிதி மீதான அவரது ஏமாற்றத்தையே மையமாகக் கொண்டிருந்தாலும், மத்திய அரசு வழங்கிய ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ நிதி குறித்து நிதித்துறை அதிகாரி ஒருவருடன் மேற்கொண்ட மறக்க முடியாத உரையாடலை அவர் நினைவுகூர்கிறார்.
அந்த உரையாடல் ஓர் உண்மையைத் தெளிவுபடுத்தியது: பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான நிதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் திசைதிருப்புவது என்பது கருணாநிதி அல்லது திமுகவால் செய்யப்பட்ட ஊழல் அல்ல; மாறாக, அது தமிழ்நாட்டில் காலங்காலமாக நிலவிவந்த வழக்கமான (அங்கீகரிக்கப்படாதபோதிலும்) அரசின் நடைமுறையாகும். சத்யவாணி முத்து கூறுகிறார்: “ஆதிதிராவிடர் நிதித்துறைச் செயலாளர் என்னைச் சந்தித்தார். ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு மற்ற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகிறது என்று அவர் என்னிடம் கூறினார். காமராஜர் காலத்திலிருந்தே இதுதான் நடைமுறை என்றும் அவர் விளக்கினார். இப்போது அதைத் திடீரென்று மாற்ற முடியாது என்று தனது இயலாமையை அவர் தெரிவித்தார்.”76
சத்யவாணி முத்து உடனடியாகத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்: “ஆனால் இது நின்றாக வேண்டும். அண்ணா அமைத்த அரசாங்கத்தில் இது நடக்கக் கூடாது,” என்று தனது வழிகாட்டியின் நேர்மையைச் சுட்டிக்காட்டினார். பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் விழுமியங்களில் நம்பிக்கை கொண்டிருந்த அவர், “ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக நான் பதவியில் இருக்கும்போதே இது எப்படித் தொடர முடியும்?” என்று கேட்டார்.77
இதற்கு நிதித்துறைச் செயலாளர் அளித்த பதில் இந்நூலில் குறிப்பிடப்படவில்லை, அடுத்த பத்தியில் தலைப்பு மாறுவிடுகிறது. எவ்வாறாயினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; மேலும் சத்தியவாணி முத்து விரைவில் கட்சியிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பட்டியல் சாதியினருக்கான மத்திய அரசு நிதியை அரசியல் ரீதியாகச் செல்வாக்கு மிக்க இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் திசைதிருப்புவது என்பது வெறும் தற்செயலான தவறோ அல்லது பிறழ்வோ அல்ல. அது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் ‘உண்மையான’ நடைமுறையாகவே இருந்தது – மத்திய அரசின் கொள்கையை இது மீறுகிறது என்பதற்கான தெளிவான சான்றுகள் இருந்தபோதிலும், நிதித்துறைச் செயலாளர் கூட அதை எதிர்ப்பது பற்றி யோசிக்க முடியாத அளவுக்கு அது விதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறையாக இருந்தது.
சத்தியவாணி முத்து தனது காலத்தில், ஏன் தமிழக வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான பட்டியல் சாதிப் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தபோதிலும், தனது தொகுதியின் நலன்களைத் திறம்படப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து அவர் தொடர்ந்து தடுக்கப்பட்டார்.78 இதற்குக் காரணம் தனிப்பட்ட தோல்விகளோ அல்லது அரசின் முன்னேற்றத் திட்டங்களை எதிர்க்கும் ‘சமூகச் சக்திகளோ’ அல்ல. பட்டியல் சாதியினர் ஏதோ பகுத்தறிவற்ற ஜாதியக் கும்பல்களால் மட்டுமே வன்முறைக்கு ஆளாவதில்லை; மாறாக, அரசின் நிர்வாகக் கட்டமைப்பே அவர்களை வன்முறைக்கு ஆளாகக்கூடிய நிலையில் வைத்திருக்கிறது. அரசு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படும் விதம் ‘ஒரு தரப்புக்குச் சாதகமான ஆட்டமாக’ (zero-sum game) இருப்பதால், அவர்கள் ஆதிக்கச் சாதிகளுக்கு எதிராக நிறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அதிகாரமற்றவர்களாகவும், பிறரைச் சார்ந்திருப்பவர்களாகவும் மாற்றப்படுவதால், அவர்கள் பாதிக்கப்படும்போது நீதி கோர முடியாதபடி அழுத்தப்படுகிறார்கள். அதே சமயம், இந்த உறவுமுறையினால் பலன் பெறும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும், பாதிக்கப்பட்ட பட்டியல் சாதியினரைத் தங்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்குமாறு வற்புறுத்துவதற்கே தூண்டப்படுகிறார்கள்.
அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இடஒதுக்கீட்டின்படி அரசு வேலைகள் அவர்களுக்கு ஒருபோதும் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. இறுதியாக, ‘ஆதிதிராவிடர் நலத்’ திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிகக் குறைந்தபட்ச சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் கூட, எழுதப்படாத சட்டத்தைப் போல, ஒருபோதும் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டாலும் கூட, அவற்றின் வடிவமைப்பானது ‘ஊர்’ – ‘சேரி’ என்ற சமத்துவமின்மையைத் தொடர்ந்து பராமரிப்பதாகவே இருக்கும். பற்றாக்குறை நிலவும் சூழலில், ஜாதி அடிப்படையில் இட ரீதியாகப் பிரிக்கப்பட்ட குழுக்களுக்கு இடையே சமமற்ற, அரசு ஆதரவுடனான போட்டியை இது ஏற்படுத்துகிறது.
இத்தகைய அடிமைத்தனத்தின் உண்மைகள் அவ்வப்போது பொதுமக்களின் பார்வைக்கு வரும்போது (2000களின் தொடக்கத்திலும் அதற்குப் பின்னரும் நடந்தது போல), அவை அனுதாபத்தைப் பெற்றன வருத்தத்துடன் கவனிக்கப்படுகின்றன – ஆனால் பின்னர் அவை ஏதோ எஞ்சியிருக்கும் அல்லது அசாதாரணமான நிகழ்வுகள் என்று கூறி நிராகரிக்கப்படுகின்றன. அவற்றின் முறையான தொடர்ச்சியும் (systematicity), அவற்றிற்கான காரணங்களும் அறிஞர்களின் கவனத்திலிருந்து தப்பிவிட்டன, அல்லது அவை கவனத்திற்குத் தகுதியற்றவை எனக் கருதப்படுகின்றன.
முடிவுரை: சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய ஆய்வில் கோட்பாடும் முறைமையும்
ஆரம்பத்திலேயே நான் விளக்கியது போல, தமிழ்நாடு குறித்த கல்விசார் எழுத்துகளுக்கும், இங்கு நிலவும் சமத்துவமின்மை, புறக்கணிப்பு, வன்முறை போன்ற யதார்த்தங்களுக்கும் இடையே உள்ள கூர்மையான முரண்பாடே எனது ஆராய்ச்சிக்கான அடிப்படைத் தூண்டுகோலாகும். பட்டியல் சாதியினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே அரசு அளிக்கும் ஆதரவில் உள்ள மிகப்பெரிய வேறுபாடு இத்தகைய ஆய்வுகளில் பொருட்படுத்தப்படுவதில்லை; அதேபோல், வழக்கமாக நடக்கும் வன்முறைகள் மாநில அரசியல் அமைப்பின் ஓர் உள்ளார்ந்த அங்கமாக அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. தமிழ்நாட்டு அரசாங்கத்தின் – அரசியலின் இத்தகைய முக்கியமான அம்சங்கள் இவ்வளவு காலம் எப்படி கவனிக்கப்படாமல் போயின? இந்தக் கேள்விக்கான விடை, ஆய்வு முறையியலிலும் (Methodology), பயன்படுத்தப்பட்ட தரவுகளிலும் (Sources) இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாடு அரசு – அரசியல் குறித்த தற்போதைய ஆய்வுகள் பெரும்பாலும் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், கட்சித் தொண்டர்கள் ஆகியோருடனான நேர்காணல்கள்; செய்தித்தாள்கள் போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான உரையாடல்கள்; கட்சி வெளியீடுகள், திராவிடத் தலைவர்களின் உரைகள், எழுத்துகள், திரைப்பட வசனங்கள் போன்ற பிரச்சாரத் தரவுகள் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.79 எனது ஆராய்ச்சி எதிர்க்கும் அதே அடிப்படைக் கருத்துருக்களையே இந்த ஆதாரங்களும் பகிர்ந்துகொள்கின்றன: அதாவது, சமூக நலன்கள் என்பது அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டுச் சுயமாகவே இயங்குவதாகக் கருதுகின்றன. அதன்படி, பிரதிநிதித்துவ அமைப்புகள் இத்தகைய சுயாதீனமான சமூக நலன்களைச் சட்டமன்றச் செயல்பாட்டின் மூலம் அரசாங்கத்திற்குள் கொண்டு செல்கின்றன என்ற ‘பன்மைவாத மாயையை’ (pluralist conceit) இவை முன்வைக்கின்றன.
நிர்வாக மற்றும் அரசியல் அமைப்பிற்குள் இருப்பவர்களுக்கு அந்த அமைப்பு என்னவாகத் தெரிகிறதோ, அதையே மாநிலத்தின் அரசாங்கம் மற்றும் அரசியல் வரலாறாகக் காட்டுவதற்கு இத்தகைய கணக்குகள் பொருத்தமானவை. இதையே மானுடவியலாளர்கள் ‘எமிக்’ (emic) கோட்பாடு என்று அழைக்கிறார்கள்; சமூகச் செயல்பாட்டாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்துத் தங்களுக்குள்ளும் மற்றவர்களுக்கும் விளக்குவதற்குப் பயன்படுத்தும் நெறிமுறை வகைகளை இது வழங்குகிறது. ஆனால், அது மட்டுமே போதுமானதல்ல. பங்கேற்பாளர்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுமே சமூக யதார்த்தத்தின் முழுமையான விளக்கமாகக் கருதுவது அறியப்பட்ட போலித்தனமாகும் (fallacy). இதனால்தான் மானுடவியலாளர்கள் தகவல் வழங்குபவர்களை நேர்காணல் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுடன் வாழ்ந்து, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்த விரிவான தரவுகளைச் சேகரிக்கின்றனர் – குறிப்பாக அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு நிலவும்போது இது முக்கியமானது. இந்தத் தரவுகளின் முறையான பகுப்பாய்வே, சமூகச் செயல்பாட்டாளர்கள் தாங்களே உணராத அல்லது அவர்களின் சித்தாந்தத்திற்கு முரணாக இருக்கக்கூடிய செயல்பாட்டு ஒழுங்குகளை அடையாளம் காண இனவரைவியலாளர்களுக்கு உதவுகிறது.80
நேர்காணல்கள், கட்சிப் பிரச்சாரங்கள், அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் ஆகியோரின் நினைவலைகளுக்கு மாறாக, நிர்வாக ஆவணக் காப்பகங்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சி – அதாவது பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையே பரிமாறப்பட்ட செய்திகள், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் விரிவான காலவரிசைப் பதிவுகள் என அரசின் ‘மனசாட்சியாகவும்’ அறிவு வங்கியாகவும் திகழும் ஆவணங்கள் – அரசாங்கம் உண்மையில் என்ன செய்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இது பெரும்பாலும் அரசியல் – நிர்வாகப் பிரதிநிதிகள் வெளியே சொல்லும் கருத்துகளுக்கு நேர்மாறாக இருக்கும். உதாரணமாக, காலனித்துவ கால மெட்ராஸ் மாகாணத்தில் தலித் மக்களின் நிர்வாகம் குறித்து நான் மேற்கொண்ட முந்தைய ஆராய்ச்சி, அதிகாரப்பூர்வக் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்ட அரசு நிறுவனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த நிறுவனங்கள், தலித் மக்களின் அடிமைத்தனத்தை மறுத்துக்கொண்டே, நிலவுடைமைச் சாதிகளுடன் தலித்துகளுக்கு இருந்த அடிமைத்தனமான உறவை உறுதிப்படுத்தின. மேலும், வரி வசூலிக்கும் அரசையும் கிராமப்புற ஆதிக்கச் சக்திகளையும் தலித் உழைப்பைச் சுரண்டுவதில் அரசியல் கூட்டாளிகளாக நிலைநிறுத்தின.81
பிரிட்டிஷ் அரசு அடிமை முறையை அதிகாரப்பூர்வமாக ஒழித்த நீண்ட காலத்திற்குப் பிறகும், நடைமுறையில் (de facto) அது பாதுகாக்கப்பட்டுவந்த யதார்த்தம், அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளுக்கே கூட எளிதில் புலப்படவில்லை. பல தசாப்தங்களாகப் பல்வேறு துறைகளில் பரவிக் கிடந்த வழக்குக் கோப்புகள் மற்றும் கிராமப்புற ஆதாரங்களை முறையான பகுப்பாய்வு செய்த பிறகுதான் அது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.82 பொதுவாகச் சொன்னால், அதிகாரப்பூர்வ கதையாடல்களுக்கு முரணான இத்தகைய செயல்பாட்டு முறைகள், அரசு இயந்திரம் போன்ற ஒரு சிக்கலான, பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்ட அமைப்பில் பணிபுரியும் தனிப்பட்ட அதிகாரிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டவை. ஏனெனில், இவற்றைத் தெரிந்துகொள்ள பல தசாப்த கால ஆவணங்களை ஆய்வு செய்வதற்கான நேரமும் அணுகலும் தேவை. இது சமகாலத்தில் பணியாற்றுபவர்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது; ஆனால் வரலாற்றாசிரியர்களுக்கு இது சாத்தியமாகிறது.83
எனது தற்போதைய ஆய்விற்கு இரண்டு பெரிய ஆவணத் தொகுப்புகள் முதன்மையான ஆதாரங்களாக உள்ளன. முதலாவது, 1950களின் தொடக்கத்திலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய பல்வேறு ஆட்சிக்காலங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு அரசு ஆவணங்களாகும். சமூக நலன், பொதுத்துறை, உள்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில், தொழிலாளர் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய துறைகளின் பல பத்தாண்டு கால அட்டவணைகளை முழுமையாக ஆய்வு செய்ததன் மூலம், பட்டியல் சாதியினர் மீதான அரசின் செயல்பாடுகள் குறித்த முக்கியமான கோப்புகளை நான் அடையாளம் கண்டேன். இவை கொள்கை ரீதியான மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தன: தலித்துகள் மீதான வன்முறைகளுக்கு அரசின் எதிர்வினைகள், ‘ஆதிதிராவிடர்’ நலத்திட்டங்களை வழங்குதல், விவசாயத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துதல் – ஒழுங்குபடுத்துதல். ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட கோப்புகளில் இருந்து, மிக விரிவான தகவல்களைக் கொண்ட 258 தனித்துவமான கோப்புகளை (ஒவ்வொன்றும் ஆறு முதல் இருநூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டவை) எனது ஆய்விற்காகத் தேர்ந்தெடுத்தேன். இவை கொள்கை உருவாக்கம் – அமலாக்கம், அந்த அமலாக்கம் எவ்வாறு தாமதப்படுத்தப்பட்டது அல்லது முடக்கப்பட்டது, அதன் விளைவாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த விரிவான தகவல்களை வழங்கின. இது தவிர, கோப்புகளில் இல்லாத பிற முக்கிய ஆவணங்களையும் நான் சேகரித்தேன்; குறிப்பாக 1954 முதல் 1980 வரையிலான ‘இருவார ரகசிய அறிக்கைகள்’ (Fortnightly Confidential Reports) மிக முக்கியமானவை. இவை மாநிலத்தில் நிலவிய சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள், அரசியல் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான, ஆனால் தெளிவான சித்திரத்தை வழங்குகின்றன. ‘கோப்புகளுக்கும்’ ‘அறிக்கைகளுக்கும்’ இடையிலான வேறுபாடு என்னவென்றால், கோப்புகளில் அரசு அதிகாரிகளுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றங்கள் இருக்கும். இதன் மூலம், எந்த அதிகாரிக்கு எந்த விஷயம் எப்போது தெரிந்தது என்பதையும், அதிகார வர்க்கத்தினருக்கு இடையிலான உள்முக அதிகார உறவுகள், தவறுகள், திருத்தங்கள் ஆகியவற்றையும் ஓர் ஆராய்ச்சியாளரால் காலவரிசைப்படி கண்டறிய முடியும்.
நான் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய ஆதாரத் தொகுப்பு, இதுவரை அரசியல் அறிஞர்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் பெரிதும் கவனிக்கப்படாத ஒன்றாகும். அது 1952 முதல் 1983 வரையிலான காலகட்டத்தின் ‘சட்டமன்ற விவாதங்கள்’ ஆகும். இவை பல்லாயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட, சட்டமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் வரிக்கு வரிப் பதிவுகளாகும்.84 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் அரசு நடவடிக்கைகளின் அமலாக்கம், எதிர்பாராத விளைவுகள் குறித்து அடிக்கடி விவாதித்துள்ளனர். இந்த ஆவணங்களை ஆழமாக ஆய்வு செய்ததன் மூலம், கிராமம் – தாலுகா அளவிலான அரசு நிர்வாகம் குறித்த செழுமையான, இதுவரை பயன்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்தன. மேலும், சட்டமன்றப் பதிவுகளில் இடம்பெறும் உள்ளூர் நிலவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டியவை என்பதாலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு ஆட்சிக்காலங்களில் ஒரே மாதிரியான அவதானிப்புகளை முன்வைத்திருப்பதாலும், இவை அதிகாரத்துவக் கோப்புகளிலிருந்து மாறுபட்ட, நம்பகமான உள்ளூர் நிர்வாக ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்தத் தொகுப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, தலித் மக்கள் மீதான நிர்வாகம் குறித்த சுமார் 4,000 பக்கங்கள் கொண்ட தரவுத்தளத்தை நான் உருவாக்கினேன். இதில் அரசாணைகள், ஆணைய அறிக்கைகள், வரவு செலவுத் திட்டங்கள் போன்ற அமலாக்கத்திற்கான ஆதாரங்களும் அடங்கும். இந்தச் சட்டமன்ற ஆவணத் தொகுப்பில், ஆதிதிராவிடர் நல நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள், தலித் ஒடுக்குமுறைகள் குறித்த உரையாடல்கள், விவசாயத் தொழிலாளர்கள் குறித்த முக்கிய விவாதங்கள் என 30 ஆண்டு காலப்பகுதியில் தலித் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.85
அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் இழப்பில் மற்றொரு பிரிவினருக்குத் திட்டமிட்டு வளங்களை மறித்து அனுப்புவதையும், அந்தப் பிரிவினரின் மேலாதிக்கத்தை ஆதரித்து வலுப்படுத்துவதையும் வழக்கமான செயல்பாடாகக் (pervasive patterns) கொண்டிருப்பதை இந்த ஆதாரங்கள் எனக்குக் காட்டின.86 இத்தகைய செயல்பாட்டு முறை சட்டமன்றத்தின் எந்தவொரு முறையான உத்தரவாலோ அல்லது குறிப்பிட்ட கொள்கை அல்லது அரசியலமைப்பு வழிகாட்டுதலாலோ உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக, இது குறைந்தபட்சம் ஒரு வழிகாட்டுதல் கோட்பாட்டையாவது மீறுவதுடன், குடிமக்களுக்கு இடையேயான சமத்துவம், அரசின் நடுநிலைமை ஆகிய பொதுவான அரசியலமைப்பு நெறிமுறைகளையும் நேரடியாக மீறுகிறது. முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை மட்டுமே உண்மையான அரசு நிறுவனங்களாகக் கருதும் ‘குடிமையியல் பாடப்புத்தக’ பார்வையில் பார்த்தால், நான் கண்டறிந்தவை அரசாங்கத்தின் ‘உண்மையான’ வடிவத்திலிருந்து ஏற்பட்ட பிறழ்வாகவோ அல்லது ஊழலாகவோ கருதப்படும்.87
நிச்சயமாக, இது சில தனிநபர்கள் தங்கள் சொந்த சமூகங்களுக்கு அல்லது தனிப்பட்ட நலன்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவே விவரிக்கப்படும் – அதாவது, பழியானது ‘சமூகத்தின்’ மீது சுமத்தப்படும். ஆனால் நான் சுட்டியுள்ளபடி, ‘சமூகத்தின்’ பிரிவுகளும் எல்லைகளும் அரசின் நிர்வாக எல்லைகள், வகைப்பாட்டுத் திட்டங்கள், சொத்துரிமை முறைகள் போன்றவற்றால்தான் நீடிக்கின்றன. இவை பட்டியல் சாதியினரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் ‘ஒரு தரப்புக்குச் சாதகமான ஆட்டத்தில்’ (zero-sum game) ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் அரசின் சதியே ஆகும்.88 நான் இந்தக் கட்டுரையில் அடையாளம் காட்டியுள்ள செயல்பாட்டு முறைகள் வெறும் பிறழ்வுகள் அல்ல, மாறாக அவை அரசாங்கத்தின் வழக்கமான நிறுவன நடைமுறைகள் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
மேலும், வளம் குறைந்த சிறுபான்மையினரான பட்டியல் சாதியினரைப் பொறுத்தவரை, பிரதிநிதித்துவ அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. எனது வாதங்களை நிரூபிக்க சத்யவாணி முத்துவின் வாழ்க்கையிலிருந்து இன்னும் பல சம்பவங்களைச் சான்றாகக் காட்டியிருக்க முடியும்; முடக்கப்பட்ட முயற்சிகளைக் கொண்ட பல பட்டியல் சாதிப் பிரதிநிதிகளில் சத்யவாணி முத்துவும் ஒருவர். பொதுவாக முறையான அரசியலும் (சட்டமன்றம் போன்ற பிரதிநிதித்துவ நிறுவனங்கள்) நிர்வாகமும் தனித்தனியாகவே ஆராயப்படுகின்றன. ஆனால், நான் பட்டியல் சாதி அரசியல் பிரதிநிதித்துவத்தை, அந்தத் தொகுதியை அன்றாட வன்முறைக்கு ஆளாக்கி, அத்தியாவசிய பொருளாதார வளங்கள், வேலைகள் உள்ளிட்ட பிற வாய்ப்புகளை ஆதிக்கச் சாதியினருக்குத் திசைதிருப்பி அவர்களைத் தொடர்ந்து அதிகாரமற்றவர்களாக்கும் அரசு நிறுவனங்களின் சூழலில் வைத்தே ஆராய முயன்றுள்ளேன். ஒரு பட்டியல் சாதிப் பிரதிநிதியின் வெற்றி அல்லது தோல்வியை அவரது தனிப்பட்ட செயல்பாடுகள், ஆளுமை, தேர்தல் தொகுதிகளின் அமைப்பு அல்லது பாரம்பரிய ஜாதியவாதத்தின் பிடிவாதம் ஆகியவற்றைக் கொண்டு விளக்குவது தவறான அணுகுமுறை என்று நான் கருதுகிறேன். இந்தக் கட்டுரையின் முன்னுரையில் நான் குறிப்பிட்டது போலவும், இப்போது நிரூபித்திருப்பது போலவும், பிரதிநிதித்துவ அரசாங்க முறை என்பது நிறுவன ரீதியாகத் துணை-மக்கள்தொகையினரைச் (subpopulations) சமமற்றவர்களாக மறுஉற்பத்தி செய்யும் ஓர் அரசாங்கத்திற்குள்ளேயே பொதிந்துள்ளது மற்றும் அதைச் சார்ந்தே இருக்கிறது.
நன்றி: கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுடன் நடத்தப்பட்ட விரிவான உரையாடல்கள், இந்தக் கட்டுரையும் இந்த ஆய்வின் அடிப்படையாக விளங்கும் பெரிய ஆராய்ச்சியும் விடை தேட முயன்ற கேள்விகளைத் தூண்டின:
- அமரர்.டி.பி.கமலநாதன்
- அமரர். ஏ.பத்மநாபன், இ.ஆ.ப.
- அமரர்.எக்ஸ்ரே மாணிக்கம்
- எரிமலை ரத்தினம்
- து.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்
- பி.தயானந்தன்
- ப.சிவகாமி, இ.ஆ.ப.
- சி.லட்சுமணன்
- ஸ்டாலின் ராஜாங்கம்
- கார்த்திகேயன் தாமோதரன்
- தமிழ்முரசு
- நிகோலஸ் சின்னப்பன்
- கிறிஸ்துதாஸ் காந்தி, இ.ஆ.ப.
- பிருந்தாவன் மோஸஸ்
- சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்முதல்வன், அரவிந்தன் கண்ணையன், வாசுகி பாஸ்கர், ஏ.பி.ராஜசேகரன்
கார்த்திகேயன் தாமோதரன், ஹியூகோ கோரிங் ஆகியோர் 2018இல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்தக் கட்டுரையின் முதல் பதிப்பை அம்பேத்கர் விரிவுரையாக வழங்க எனக்கு உதவினார்கள், அவர்களின் கருத்துகளுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்தக் கட்டுரையின் மிகச் சமீபத்திய பதிப்பை வாசித்து, நுட்பமான கருத்துகளை வழங்கிய ஷீதல் சப்ரியா, மைக்கேல் காலின்ஸ், ஜான் ஹாரிஸ், நிக்கோலஸ் மார்ட்டின், நேட் ராபர்ட்ஸ், ஸ்ரீரூபா ராய், அஷ்வின் சுப்பிரமணியம் ஆகியோருக்கு நன்றி.
அடிக்குறிப்புகள், மேற்கோள்கள்
- காலனித்துவ கால வீட்டுமனைத் திட்டக் கொள்கை, அதன் அரசியல் விளைவுகள், அத்துடன் அரசின் தலையீட்டால் தூண்டப்பட்ட வன்முறைகள் குறித்த விரிவான விவாதத்திற்குப் பார்க்க விஸ்வநாத், The Pariah Problem, பக். 95 – 99, 168 – 189. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் ஒரு சம்பவம் நிரூபித்தது போல, இது சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் தொடங்கி குறைந்தது 1980களின் முற்பகுதி வரை வன்முறையைத் தூண்டிய ஒரு பிரச்சினையாக இருந்தது: GO (Public) 1405 Ms., 20 July 1981, TNA.
- உதாரணமாக, TNLAD, 13 March 1969, pp. 565 – 566, 576 – 577, 586 – 587; TNLAD, 26 March 1969, pp. 494 – 495; TNLAD, 3 April 1970, pp. 172 – 173; TNLAD, 8 April 1970, pp. 504 – 505; TNLAD, 25 August 1972, p. 416; TNLAD, 24 January 1974, pp. 28 – 31; TNLAD, 4 March 1975, pp. 479 – 481.
- TNLAD, 4 March 1975.
- 1969இல் சத்யவாணி முத்து அமைச்சர் பதவியை ஏற்றபோது சுமார் 700 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
- TNLAD, Vol. 30 (March 26 – April 1) 1970, p. 172.
- நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் ஒரு பகுதி, ஏழை தலித்துகளின் நலன்களுக்கு எதிராக வேலை செய்ய பட்டியல் சாதிப் பிரதிநிதிகள் எவ்வாறு அரசியல் நிர்ப்பந்தங்களால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஆராய்கிறது; இந்தக் கட்டுரை அம்மக்களுக்கான நலத் திட்டங்களுக்காகப் பரிந்துரைக்க முயற்சிக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் நிறுவனத் தடைகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது.
- GO (Social Welfare) 412 Ms., 11 May 1970, TNA.
- Ha-Joon Chang, ‘Breaking the Mould: An Institutionalist Political Economy Alternative to the Neo-liberal Theory of the Market and the State’, Cambridge Journal of Economics, vol. 26, 2002, pp. 539 – 559.
- இந்திய அறிவுசார் சூழலின் விசித்திரம் என்னவென்றால், ‘வழக்கம்’ அல்லது ‘பாரம்பரியம்’ (custom) என்பது பெரும்பாலும் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான விளிம்புநிலை மக்களின் (subaltern) எதிர்ப்பு ஆயுதமாகத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆண்ட்ரூ சார்டோரி (Andrew Sartori) சுட்டிக்காட்டியுள்ளது என்னவென்றால், இந்தியாவில் ‘பாரம்பரிய உரிமைகள்’ குறித்த சொல்லாடல் என்பது மேலாதிக்கச் சொத்துரிமை வர்க்கங்கள், தங்களின் பரம்பரைச் சலுகைகளை அரசு இனி அங்கீகரிக்காது என்ற நிலையை எதிர்ப்பதற்காகப் பயன்படுத்திய ஒரு கருவியாகும். மேலும், அவர்களின் இந்த ‘பாரம்பரியம்’ என்ற கருத்துரு தாராளவாதச் சொத்துரிமைக்கு (liberal property) எதிரானது என்பதற்குப் பதிலாக, உண்மையில் அதிலிருந்தே அது உருவானது என்பதையும் அவர் விளக்குகிறார்: Andrew Sartori, Liberalism in Empire: An Alternative History (Berkeley: University of California Press, 2014). சொத்துரிமை என்பது இயற்கையிலேயே நிலவும் ஒன்று என்றும், அரசுகள் அதனை ‘ஒழுங்குபடுத்தவோ அல்லது பாதுகாக்கவோ’ மட்டுமே முடியும், அதனை உருவாக்க முடியாது என்றும் தாராளவாதக் கருத்தை முன்வைக்கிறது; ஜான் லாக் இதற்கான மிகச்சிறந்த செவ்வியல் விளக்கத்தை வழங்குகிறார்: C.B. Macpherson (ed.), Second Treatise of Government (Indianapolis: Hackett Publishing Company,1980).
- அம்பேத்கர், மாநிலங்கள் & சிறுபான்மையினர், ப. 397. நிரஜா ஜெயால் விவரிப்பது போல, இவ்விவாதங்கள் சமூக, பொருளாதார உரிமைகளை அரசியல் உரிமைகள் போலவே சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியுமா என்பதிலேயே மையப்படுத்தப்பட்டன. இது இறுதியில் இவ்விரண்டு உரிமைகளுக்கும் இடையேயான கருத்தியல் பிரிவினைக்கு வழிவகுத்தது, சமூக – பொருளாதார உரிமைகளை ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ என்ற நிலைக்குக் கீழிறக்கியது, Niraja Jayal, Citizenship and its Discontents: An Indian History (Cambridge, MA: Harvard University Press, 2013), p. 144.
- Geoffrey Hodgson, ‘Property, Possession, and Contract’, in Conceptualizing Capitalism (Chicago: University of Chicago Press, 2015), pp. 101 – 128.
- Marc Galanter, Competing Inequalities: Law and the Backward Classes (Oxford: New Delhi, 1984), pp.154 – 159, குறிப்பாகப் ப.155இல் உள்ள அட்டவணை, அந்தச் சொல்லின் வெவ்வேறு சாத்தியமான குறிப்புகளைக் காட்டுகிறது.
- ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ (OBC) வகைப்பாடானது மாநில அளவிலேயே தீர்மானிக்கப்படுகிறது; இதற்கான தகுதியை நிர்ணயிப்பதற்குத் தெளிவான, சமூக அறிவியல் ரீதியான அல்லது வரலாற்று ரீதியான அளவுகோல்கள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் முக்கியமான ளிஙிசி சமூகங்கள் அனைத்தும், எம்.என்.ஸ்ரீநிவாஸ் வரையறுத்த ‘ஆதிக்கச் சாதிகளாகவே’ பெரும்பாலும் உள்ளன. ஆனால், அடிப்படையில் ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்பது உண்மையில் மாநில அரசாங்கம் எதை அவ்வாறு சொல்கிறதோ அதுவே ஆகும். இந்த வகைப்பாட்டில் ஒரு சமூகத்தைச் சேர்ப்பதற்கான முடிவு என்பது முற்றிலும் அரசியல் சார்ந்த ஒன்றாகும். இது பொதுவாகப் பலன் பெறும் சமூகத்தின் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் தேர்தல் கணக்குகளின் அடிப்படையில் – அதாவது ஒரு புதிய வாக்குவங்கியை உருவாக்குவதற்காக – முன்னெடுக்கும் தீவிரமான அழுத்தக் குழு (lobbying) செயல்பாடுகளின் விளைவாகும். அதே வேளையில், இந்த முடிவினால் தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ள வாய்ப்புள்ள பிற சமூகங்களின் எதிர்ப்புகளையும் கருத்தில் கொண்டு இது சமன் செய்யப்படுகிறது. தற்போதுள்ள இந்தக் கட்டுரையின் மூலமான எனது புத்தகத்தில், இந்த முழு செயல்முறையையும் விரிவாக விவரிக்கத் திட்டமிட்டுள்ளேன். ஒப்பிடுக Nicolas Martin, ‘Dominant Caste’, in The Oxford Handbook of Caste, (eds) Surinder Jodhka and Jules Naudet (Oxford: Oxford University Press, 2023).
75 . சத்யவாணி முத்து, எனது போராட்டம் (My Struggles), ப. 44.
- மேலது, பக். 43 – 44.
- மேலது, ப. 46. (மொழிபெயர்ப்பு: கட்டுரையாளர்).
- அநாமதேய விமர்சகர் ஒருவர் மாற்று கருதுகோளொன்றை முன்வைத்தார். அதில் சத்யவாணி முத்துவின் தோல்விக்கு அவரது பாலினம், சாதி அடையாளம் அல்லது பொதுவாக ‘பார்ப்பனிய ஆணாதிக்கம்’ காரணமாக இருக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். பிந்தைய காரணத்திலிருந்து தொடங்கினால், பார்ப்பனிய ஆணாதிக்கம் என்பது முறையாக ஓர் அமைப்பு யதார்த்தத்தையோ – ஆணாதிக்கக் குடும்பம் ஒன்றினுள் பார்ப்பன ஆண்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கும் அமைப்புகளின் தொகுப்பு, பார்ப்பனர்கள் பின்பற்றும் அகமணம் சார்ந்த உறவுமுறை விதிகள் – அல்லது கோட்பாடு ரீதியான யதார்த்தத்தையோ குறிக்கிறது. பார்ப்பன ஆண்களின் சலுகையை குடும்பம், சமூகம், மத நிறுவனங்களுக்குள் புனிதத் தூய்மையின் அடிப்படையில் நியாயப்படுத்தும் சமஸ்கிருத மதத் தொகுப்பு இது. நான் விவரிக்கும் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் அரசாங்கம், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள் அர்த்தத்தில் ஆணாதிக்கமாக இருந்தது. ஆனால் அமைப்பு ரீதியலோ அல்லது சித்தாந்த ரீதியிலோ அது பார்ப்பனியமாக இல்லை. தமிழ்நாட்டின் ஆளும் திராவிட சித்தாந்தம் குறிப்பாகப் பார்ப்பனியத்தை எதிர்த்தது. சத்யவாணி முத்து சவால் விட முயன்ற அரசாங்க நிறுவனங்கள் பார்ப்பனர்களுக்கு அல்ல, மாறாக ஓ.பி.சி.க்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கின. எல்லா வகையான ஜாதி ஆதிக்கங்களையும் ‘பார்ப்பன ஆணாதிக்கம்’ என்று முத்திரை குத்தும் ஒரு விரிவான பொருளில் மட்டுமே, இச்சொல்லிற்கு இங்கே இடமிருப்பதாக என்னால் கருத முடிகிறது. இத்தகைய ஆதிக்கங்கள் அனைத்திற்கும் இறுதிக்காரணம் பார்ப்பன இந்து மதத்தின் மத சித்தாந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இது சொல்லப்படுகிறது – அதற்கான துல்லியமான காரண காரியத் தொடர்பு தெரியவில்லை என்றாலும் சரி, அல்லது சம்பந்தப்பட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்களே பார்ப்பனியத்தை நிராகரிப்பதாகக் கூறிக்கொண்டு தங்கள் செயல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட காரணங்களை முன்வைத்தாலும் சரி. இப்படிப்பட்ட ஒரு கருதுகோளை எப்படித் தவறென்று நிரூபிக்க முடியும் என்று காண்பது கடினம். இதனால்தான் எனது சொந்த ஆய்வு, ஜாதி ஆதிக்கம் எத்தகைய அனுபவப்பூர்வமாக அவதானிக்கத்தக்க அரசு நிறுவன நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை யாருடைய நலன்களுக்காகச் செயல்படுகின்றன, அவை உருவாகக் காரணமான குறிப்பிட்ட வரலாற்றுச் செயல்முறைகள் என்ன என்பவற்றில் கவனம் செலுத்துகிறது. சத்யவாணி முத்துவின் தனிப்பட்ட ஜாதி, பாலின அடையாளமே அவரது தோல்விக்குக் காரணம் என்று சொல்லப்படுவதைப் பொறுத்தவரை, அவர் மிகச்சிறந்த அரசியல்வாதியாகவும் நிர்வாகியாகவும் இருந்தார் என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம்; தலித் மக்களை அடிமைப்படுத்தும் அரசு நடைமுறைகளை அவர் கேள்விக்கு உட்படுத்த முயன்றபோது மட்டுமே அவர் செயலற்றவராக்கப்பட்டார். தலித் மற்றும் தலித் அல்லாத பிற ஆண் சட்டமன்ற உறுப்பினர்களும் இதே போன்ற நடைமுறைகளை மாற்ற முயன்றபோது அவர்களும் அவ்வாறே தோல்வியடைந்தனர்.
- அடிக்குறிப்புகள் 8 – 13இல் மேற்கோள் காட்டப்பட்ட கண்ணன் உட்பட அனைத்துக் வழக்குகளுக்கும், The DMK Years; and Arun V. Swamy, ‘The Nation, the People and the Poor: Sandwich Tactics in Party Competition and Policy Formation, India, 1931–1996ʹ, PhD thesis, University of California, Berkeley, 1996.
- Pierre Bourdieu, Outline of a Theory of Practice (Cambridge: Cambridge University Press, 2013 [1972]).
- பார்க்க ரூபா விஸ்வநாத், The Pariah Problem, குறிப்பாகப் பக். 13 – 15. மேலும் பார்க்க Uday Chandra, Joel Lee, Brian Pennington, Lucinda Ramberg, Zoe Sherinian and Rupa Viswanath, ‘Roundtable on Rupa Viswanath’s The Pariah Problem’, Modern Asian Studies, vol. 56, no. 1, 2021, pp. 1 – 64.
- எனது தற்போதைய ஆராய்ச்சியும் முந்தைய ஆராய்ச்சியும் ஆய்வு முறையியலில் ஒன்றுபட்டிருந்தாலும், அவற்றின் அடிப்படைத் தத்துவக் கருத்தாக்கத்திலும், நான் பகுப்பாய்வு செய்யும் ‘அரசு’ கட்டமைக்கப்பட்டுள்ள விதத்திலும் எனது தற்போதைய ஆய்வு மாறுபடுகிறது. மெட்ராஸ் மாகாண நிர்வாகம் குறித்த எனது முந்தைய ஆய்வு, ‘அரசின் ஊடுருவல்’ – அதாவது நான் அப்போது குறிப்பிட்ட ‘ஜாதி – அரசு பிணைப்பு’ – என்ற கருத்தாக்கத்தைச் சார்ந்திருந்தது. ஆனால், தற்போதைய தமிழ்நாடு அரசு குறித்த எனது ஆராய்ச்சி, புதிய அதிகார நிறுவனங்கள் மற்றும் செயல்பாட்டு முறைகள் மூலம் ‘துணை – மக்கள்தொகையினரை’ அரசு எவ்வாறு தீவிரமாக உருவாக்குகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது: அதாவது, மக்கள் பங்கேற்கும் பொதுத் தேர்தல்கள் நிலவும் சூழலில், ஒரு ‘மேம்பாட்டு அரசு’ (developmental state), ‘பிரதிநிதித்துவ அரசாங்கம்’ (representative government) எவ்வாறு இயங்குகின்றன என்பதை இது ஆராய்கிறது.
- அதிகாரிகளோ அல்லது உயர்மட்ட அரசியல்வாதிகளோ, பொதுவான அரசாங்கக் கதையாடல்களில் இடம்பெறாத அரசின் உண்மையான நிறுவன நடைமுறைகளைப் பற்றிய சித்திரத்தைப் பெறுவது கொள்கை ரீதியாகச் சாத்தியமே இல்லை என்று நான் வாதிடவில்லை. எனது அவதானிப்புகளை உறுதிப்படுத்தும் வகையில், ‘சேரி’ என்பது ‘ஊருக்கு’ நிர்வாக ரீதியாகக் கீழ்ப்படுத்தப்படுவதால் உருவாகும் ‘ஒரு தரப்புக்குச் சாதகமான ஆட்டத்தை’ (zero – sum game) மிக நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்யும் சிறுபிரசுரத்தை நான் இங்கு மேற்கோள் காட்டியுள்ளதை வாசகர்கள் கவனிக்கலாம். இந்தப் பிரசுரத்தை எழுதியவர் ப.சிவகாமி ஐ.ஏ.எஸ் ஆவார். அதேபோல், இந்த ஆய்வுக் கட்டுரையில் அரசு ஆவணக் காப்பகத் தரவுகளுடன் ஓர் அரசியல்வாதியின் (சத்யவாணி முத்து) சுயசரிதைக் குறிப்புகளையும் நான் இணைத்துள்ளேன். மேலும், ப.சிவகாமி, சத்யவாணி முத்து ஆகிய இருவருமே பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண்கள் என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. அரசாங்கம் குழுக்களைச் சமமற்ற முறையில் நடத்துவது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் முற்றிலும் புலப்படுவதில்லை என்பது எனது வாதம் அல்ல; மாறாக, பல பத்தாண்டுகளாகப் பல துறைகளில் நடக்கும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும் விரிவான பார்வையைப் பெறுவதற்கான சூழலில் அவர்கள் பொதுவாக இருப்பதில்லை என்பதே எனது கருத்து. அதாவது, சந்தர்ப்பவாத ஊழல்களால் ஏற்படும் தற்காலிக முறைகேடுகளுக்கும், சவாலுக்கு உட்படுத்த முடியாத அளவுக்கு விதிகளால் பிணைக்கப்பட்ட நிலையான நிறுவன நடைமுறைகளுக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்களால் துல்லியமாகக் கண்டறிய முடிவதில்லை. அரசுப் பணியாளர்கள் இத்தகைய வேறுபாடுகளைத் தெளிவாகக் கண்டறிய வேண்டுமானால், அவர்கள் தங்களின் வழக்கமான பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, நான் மேற்கொண்டதைப் போன்ற விரிவான ஆவணக் காப்பக ஆய்வுகளைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு சமூகச் செயல்பாட்டாளர் தனது அன்றாட வாழ்க்கையில் நடைமுறை ரீதியாக ஈடுபடுவதற்கும், ஓர் ஆராய்ச்சியாளர் நீண்டகாலத் தரவுகள் மூலம் அந்த உலகைக் கோட்பாட்டு ரீதியாகப் புரிந்துகொள்வதற்கும் இடையே உள்ள அறிவுசார் இடைவெளியை பியர் போர்டியூ மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். முறையான மேலோட்டப் பார்வை இல்லாதது ஒருபுறமிருக்க, அரசுப் பணியாளர்கள் தங்களின் பயிற்சியின் மூலமும், அரசியல் சூழலின் நெருக்கடிகளாலும், பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் அரசு நடைமுறையிலிருந்து ஏற்படும் மாற்றங்களை வெறும் தனிநபர் ஊழல்களாகவே கருதுவதற்குப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். நேர்காணல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியின் குறைபாடு என்னவென்றால் (ஆவணக் காப்பக ஆய்வு அல்லது நேரடி அவதானிப்புடன் ஒப்பிடும்போது), ஆராய்ச்சியாளருக்குச் சரியான கேள்வியைக் கேட்கத் தெரியாவிட்டால், தகவல் வழங்குபவர்கள் தங்களின் ‘எமிக்’ பார்வைக்கும் உண்மையான நடைமுறைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைத் தாமாக முன்வந்து ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு வலுவான தனிப்பட்ட ஆர்வம் இருந்தாலோ (உதாரணமாக, அவர்கள் ஒரு நலிவடைந்த சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பது) அல்லது தங்களின் பணிக்காலம் முழுவதும் முறையான குறிப்புகளை எடுக்கும் பழக்கம் இருந்தாலோ ஒழிய, நான் இங்கு முன்வைக்கும் பகுப்பாய்விற்குத் தேவையான நம்பகமான தரவுகளை அவர்களால் ஆராய்ச்சியாளருக்கு வழங்க முடியாது. பார்க்க, Howard S. Becker, ‘Interviewing Medical Students’, American Journal of Sociology, vol. 62, no. 2, September 1956, pp. 199 – 201; & Howard S. Becker and Blanche Geer, ‘Participant Observation and Interviewing: A Comparison’, Human Organization, vol. 16, no. 3, 1957, pp. 28 – 32. அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் பிரச்சாரங்கள் மற்றும் செய்தித்தாள் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகள், நேர்காணல் முறையிலான ஆராய்ச்சிகளில் உள்ள பல கட்டமைப்பு ரீதியான வரம்புகளையும் அதற்கும் மேலான சில குறைபாடுகளையும் கொண்டுள்ளன. அரசு அதிகாரிகள் – அரசியல்வாதிகளின் உலகப் பார்வையானது ஆதிக்க அரசியல் மற்றும் அரசு சித்தாந்தங்களால் வடிவமைக்கப்படும் வேளையில், கட்சி வெளியீடுகளோ மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட அரசியல் பிரச்சாரக் கருவிகளாகவே இருக்கின்றன. அரசாங்கங்களைப் பற்றிய ஆழமான புலனாய்வின் அடிப்படையில் அமையும் உண்மையான எதிர்நிலை இதழியல், நமது உலகைப் புரிந்துகொள்ள முயலும் எவருக்கும் ஒரு விலைமதிப்பற்ற ஆதாரமாகும். ஆனால், வழக்கமான நாளிதழ்ச் செய்திகள் அரிதாகவே அந்த நிலையை எட்டுகின்றன; அவை பெரும்பாலும் அரசாங்கத்தின் கதையாடல்களை அப்படியே பரப்பும் ஊடகங்களாகவே செயல்படுகின்றன. பார்க்க Edward S. Herman and Noam Chomsky, Manufacturing Consent: The Political Economy of Mass Media (New York: Pantheon Books, 1988).84. 1950களில் இந்த நடவடிக்கைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன, 1960களின் முற்பகுதியிலிருந்து முற்றிலும் தமிழில் இருந்தன.
- ‘அல்லது கிட்டத்தட்ட அனைத்தும்’, ஏனெனில் இந்தத் தலைப்புகளில் உள்ள அனைத்துச் சட்டமன்றப் பதிவுகளையும் அடையாளம் கண்டு சேகரிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தபோதிலும், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் உரை முழுவதும் பணியாற்றுவது கடினமாக இருந்தது. நான் சில சிறிய விவாதங்கள் அல்லது கலந்துரையாடல்களைக் கவனிக்காமல் விட்டிருக்க வாய்ப்புள்ளது.
- மேலே குறிப்பிட்ட ஆதாரங்களைத் தவிர, கடந்த இருபது ஆண்டுகளாக மூத்த தலித் ஆர்வலர்கள், வன்முறையில் இருந்து தப்பியவர்கள் ஆகியோரின் வாய்மொழி வரலாற்றுத் தரவுகள்; தமிழ், ஆங்கிலத்தில் உள்ள நினைவுக் குறிப்புகள்; தமிழ், ஆங்கிலத்தில் உள்ள செய்தித்தாள்கள்; தனிப்பட்ட தொகுப்புகளிலிருந்து தலித் பத்திரிகைகள் ஆகியவற்றையும் சேகரித்துள்ளேன். எனது காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கிராமப்புற சமூகம் பற்றிய செயல்பாட்டு அறிவை வளர்த்துக்கொள்ள எனக்கு உதவிய மற்றொரு மிக முக்கியமான தொகுப்பு, 1950 – 1980 இடையிலான காலகட்டத்தில் களப்பணியாற்றிய ஒரு தலைமுறை மானுடவியலாளர்கள் மற்றும் வளர்ச்சி ஆய்வு அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க ஆய்வுகள் ஆகும். இன்றைய நமது பார்வையிலிருந்து இவற்றைப் படிக்கும்போது, உள்ளூர் விவசாயப் பொருளாதாரம், உழைப்பு முறைகள் மீது அரசுக் கொள்கையின் விளைவுகள் பற்றி நுண்வரலாற்றுக் காட்சிகளை வழங்குகின்றன. எனது ஆய்வுக்கு மிகவும் உதவியவை: Andre Béteille, Caste, Class and Power: Changing Patterns of Stratification in a Tanjore Village (New Delhi: Oxford University Press, 2002 [1965]); Göran Djurfeldt and Staffan Lindberg, Behind Poverty: The Social Formation in a Tamil Village. Scandinavian Institute of Asian Studies Monograph series no. 22 (London: Curzon Press, 1976); Kathleen Gough, Rural Society in Southeast India (Cambridge: Cambridge University Press, 1981); Kathleen Gough, Rural Change in Southeast India, 1950s to 1980 (Delhi: Oxford University Press, 1989); John Harriss, Capitalism and Peasant Farming: Agrarian Structure and Ideology in Northern Tamil Nadu (New Delhi: Oxford University Press, 1982); Kurien, Dynamics of Rural Stratification; Joan Mencher, Agriculture and Social Structure in Tamil Nadu: Past Origins, Present Transformations and Future Prospects (Durham: Carolina Academic Press, 1978); David Mosse, ‘Caste, Christianity and Hinduism: A Study of Social Organization in Rural Ramnad’, DPhil thesis, University of Oxford, 1986; and Dagfinn Sivertsen, When Caste Barriers Fall: A Study of Social and Economic Change in a South Indian Village (New York: The Humanities Press, 1963).
- ‘நிறுவனம்’ என்ற சொல்லின் அர்த்தத்தைப் பற்றி அடிக்குறிப்பு 7-ஐப் பார்க்கவும்.
- பட்டியல் சாதியினருக்கும் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், பிந்தையதில் உள்ள சேர்க்கை முற்றிலும் அரசியல் ரீதியான முடிவாகும், பட்டியல் பிரிவு ஒப்பீட்டளவில் தெளிவான சமூக, அறிவியல், வரலாற்று அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. பட்டியல் சாதியினர் எனும் அந்தஸ்தை வழங்குவதில் சில தெளிவற்ற நிலைகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், சைமன் சார்ஸ்லி வாதிட முயன்றது போல, பட்டியல் சாதியினர் என்ற வகைப்பாடானது முற்றிலும் தன்னிச்சையானது என்பதும், எம்.கே.காந்தியால் பரப்பப்பட்ட ‘சடங்கு ரீதியான தீண்டாமை’ என்ற தவறான அளவுகோலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்பதும் உண்மையல்ல; பார்க்க S.Charsley, ‘“Untouchable”: What is in a Name?’, The Journal of the Royal Anthropological Institute, vol. 2, no. 1, March 1996, pp. 1 – 23.
முற்றும்
[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகத்தால் ஆன்லைனில் 07 அக்டோபர் 2025 அன்று வெளியிடப்பட்டது]
l prismshiva@gmail.com




