பேருந்தில் ஏறியதும்
படிகளுக்கு அருகில் இருந்த
முன் சீட்டில் அமர்ந்துகொண்டேன்.
எனக்கு அடுத்த நிறுத்தத்தில்
ஒரு பருத்த மூட்டையோடு ஏறியவன்
மூச்சிரைக்க அதை இறக்கி
என் இருக்கையின் மீதி இடத்தில் வந்தமர்ந்தான்.
கைப்பேசியைப் பார்த்திருந்த என்னை
அவன் பார்ப்பதை உணர்ந்து நிமிர்ந்தேன்.
பரஸ்பரப் புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம்.
தண்ணீர் கேட்டவனுக்கு நீர்புட்டியை நீட்டினேன்.
தாகம் தணித்துக்கொண்டு பாட்டிலைத் திருப்பித் தந்தான்.
மூட்டையில் என்ன என்றேன்.
முத்தங்கள் என்றான்.
அதற்குள் நான் இறங்கும் நிறுத்தம் வந்திருந்தது.
எழுந்து படிக்கு நகர்ந்தேன்
ஆட்காட்டி விரலால் என்னைத் தொட்டவன்
அன்பின் நிமித்தமெனக்
கைப்பிடி முத்தத்தை நீட்டினான்.
கடைசிப் படியிலிருந்து இறங்கிய என்னை
ஓடிவந்து அணைத்தான் மகன்.
கையிலிருந்த முத்தங்களைக் காட்டினேன்
வெடுக்கென்று பிடுங்கியவன்
தன் குட்டி பொம்மை – ட்ராக்டரில் நிரப்பி
சாலை முழுக்க விதைக்கத் தொடங்கினான்.
விதை – கீதா கார்த்திக் நேத்தா
Image Courtesy: Moonassi