“புரட்சி தானே வரப்போகுது. கம்யூனிசம் வரும். அப்போது எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கும். இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு எல்லா நிலத்தையும் வித்திட்டுக் கட்சிக்குக் குடுத்திட்டார். நானும் விற்பேன். விற்கலைன்னா ஒருவேளை என் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த நேரலாம். நானொரு யுத்தக்காலத்துல இருக்கேன். அதுக்குத் தயாராயிட்டேன்”.
– செறுகாடு (பக். 768)
வீட்டு வாசற்படியிலிறங்கி இரண்டு தப்படிகள் எதிரே நடந்தால் பெரியம்மாவின் வீட்டை அடையலாம். இருவர் எதிரெதிரே கால்நீட்டி அமர்ந்தால் விரல்கள் தொட்டுவிடக்கூடிய சிறிய ஓட்டுக் கூரையினடியில் குண்டுகுழியுமான தரையில் புழங்கியவனுக்கு அந்தப் பெரிய வீடு ஆசுவாசமளிக்கும் கேந்திரமாக விளங்கியது. அவ்வீட்டின் ஆசாரமே (ஹால்) எங்கள் வீட்டை விடவும் கூடுதல் நீள அகலத்துடன் இருக்கும். மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவன் என்பதால் அவளது செல்லத்திற்குரியவனாக, இன்னொரு பிள்ளையாக வலம் வந்தேன். வெளியே செல்லுந்தோறும் இடுப்பில் குந்தியிருப்பேன். அப்போது அவள் தோளில் தலை சாய்ந்திருக்க வேண்டும். தவறினால் தலையில் ஒரு தட்டு, கன்னத்தை ஒரு நிமிண்டு. காலையில் இருவரும் சேர்ந்தே கொல்லைப்புறத்தில் செழித்திருந்த செடிகளுக்கும் மரங்களுக்கும் நீரூற்றுவோம். மலர்ந்திருக்கும் செம்பருத்திகள் எனக்கும் – கோயிலுக்கு எடுத்துச் செல்வேன் – தென்னை மரத்தின் தேங்காய்கள் அவ்வீட்டுக்குமென எழுதப்படாத ஒப்பந்தமிருந்தது. அவரது சொந்த மகன்கள் இருவரும் என்னை விடவும் இருபது வருடங்கள் மூத்தவர்கள் என்பதாலும், தங்கள் சின்னம்மாவுக்குக் குழந்தையில்லாமலேயே போய்விட்டால் தாய்வழிச் சொத்தும் தன் அம்மாவுக்கே வந்துவிடும் என்ற கணக்கிற்கு இடையூறாக முளைத்து விட்டிருந்தேன் என்பதாலும் எப்போதும் ஈரமில்லாமல்தான் நடந்துகொள்வார்கள். அதை ஒதுக்கிவிட்டு அவளது நிழலைத் தேடி ஓடுவேன். சுருக்குப்பையை நீக்கித் தரும் சொற்பக்காசுக்கு முந்தானை முனையைப் பிடித்தபடியே அலைவேன். வாரியெடுத்து முத்துவாள். இத்தனை களிப்புகளும் உச்சிமுகர்தல்களும் முடியப்போகின்றன என்பதை அறியாமல் அவரது இளைய மகனுக்கு மகன் பிறந்து, மருமகள் பேரனுடன் வாயிலில் நிற்கும்போது ஆரத்தியினுள் போட மறந்துபோன வெற்றிலையை வாங்க கடைக்கு ஓடிச் சென்று திரும்பி தட்டில் இட்டுச் சிரித்தேன். அதன் பிறகு பழைய அன்பின் திருவுருவம் மெதுவாக மங்கி தேய்ந்து சில மாதங்களுக்குள்ளாகவே முற்றிலும் இல்லாமலேயே போய்விட்டது. பாசமும் பிரியமும் ரத்தச் சொந்தத்துக்கு – பேரனுக்கு – மடை மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. பெரியம்மாவின் மொத்த உலகுமே குருதியுறவின் மீது கவிழ்ந்து பிரகாசிக்க ஆரம்பித்தது. அந்த வெளிச்சத்தை ஏற்க முடியாமல் கண் கூசி அம்மாவிடம் முறையிட்டேன். தற்காலிகச் சமாதானங்கள் போதுமான அளவு வழங்கப்பட்ட பின்னும் அக்காயம் தழும்பாகாமல் அப்படியே இருந்தது. அந்த விலகலின் நஞ்சிலிருந்து மீள மேலும் சில மாதங்கள் அல்ல, ஆண்டுகள் ஆயின. அந்த வேதனைமிக்க நாட்களை மீண்டும் எண்ணிக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏதேனுமொரு புனைவு நூலில் எதிர்கொண்டிருந்தால் கூட அன்று என்ன உடை போட்டிருந்தேன் என்பது ஈறாக நினைவில் மிதந்து வந்திருக்காது. மிகச்சிறந்த சுயசரிதை நூலொன்றில் மகத்தான வாழ்க்கையை உதாரணமாக விட்டுச் சென்ற மனிதனும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் அதே அனுபவத்திற்கு ஆளாகியிருந்தான் என்பதைக் காண்பது ஓர் அர்த்தத்தில் வெளிச்சமாக ஆயிற்று. தன்னிச்சையாகப் புன்னகை அரும்பியது. தொண்டைக்குழியிலிருந்து கேவலொன்று சன்னமாக எழுந்தடங்கியது. அத் தருணத்தில் மனதிற்குள் நன்றி கூட கூறிக்கொண்டேன். ஏனெனில், எந்தக் காலத்திலும் மனிதனின் அடிப்படை இயல்பு ஒன்றேதான் என்கிற தெரிந்த பாடத்தை இந்தச் சாதாரண மனிதன், முன்னுதாரம் மிக்க லட்சியவாதியிடமிருந்து மீண்டும் உறுதி செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததே.
¥
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then