என்றேனும் ஒருநாள்
நாங்கள் உங்களிடம் வருவோம்
ஆனால்,
காஸாவில் என்ன நடந்ததென்று
உங்களிடம் கேட்க மாட்டோம்
அது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்.
தீப் பற்றி எரியும்போது
நீங்கள் தண்ணீரைச் சுமந்துகொண்டு
எரியும் வீடுகளுக்குச் சென்றீர்களா
அல்லது
பற்ற வைத்தவனின் கைகளில் அளித்தீர்களா?
வானத்தைப் பிளந்து விழுந்தபோது
குழந்தைகளுக்காக
கூரைகள் அமைத்தீர்களா
அல்லது
குண்டு எறிந்தவனின் ஏணியைத்
தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தீர்களா?
என்ன நடந்ததென்று நாங்கள் கேட்க மாட்டோம்
ஆனால் ஒன்றேயொன்று கேட்போம்,
நதி முழுக்கச் சடலங்கள் மிதந்தபோது
நீங்கள் யாருடன் நின்றிருந்தீர்கள்?