காலையிலிருந்து ஏழாவது முறையாக முழு வீட்டையும் புரட்டிப் போட்டுத் தேடிக்கொண்டிருந்தாள் பேச்சியம்மாள். வீட்டில் சிதறிப்போய்க் கிடந்த பொருட்களையும் பாத்திரங்களையும் பார்த்தபோது எரிச்சல் வந்தது சுமதிக்கு. இருந்தாலும் எரிச்சலுணர்வு வெளிப்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் வார்த்தைகளை உதிர்த்தாள்.
“அத்த, காலைல இருந்து எத்தன வாட்டி அத்த தேடுவ, அதான் எல்லா எடத்துலயும் பாத்தாச்சுல்ல. திரும்பத் திரும்பத் தேடுனா மட்டும் கெடச்சிடவா போது”
“அதுக்கு இல்லடீ, இந்தப் பொந்துக்குள்ள உக்காந்துருக்கலாம்ல, அதான் தேடிப் பாக்குறேன்”
பேச்சியின் பதில் சுமதிக்கு மேலும் கோபத்தை வரவழைக்க, மீண்டும் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்தாள்,
“பொந்துக்குள்ள இருந்தா சத்தம் வந்திருக்கும்ல உள்ள இருந்து” இந்தமுறை சுமதியின் குரலில் எரிச்சலுணர்விற்குப் பதிலாக ஒருவிதமான சோர்வு தெரிந்தது.
“அட ஆமா, இந்தக் கிறுக்குச் சிறுக்கிக்கு அது புரியாம போச்சு பாரேன்”
தன்னைத் தானே திட்டிக்கொண்டு இரு கைகளையும் தரையில் ஊன்றி அழுத்தி கூன் விழுந்த முதுகுடன் எழுந்து நின்றாள் பேச்சி. ஒருக் கையை இடுப்பிலும் மற்றொரு கையை கன்னத்திலும் வைத்தபடி சுமதியை நோக்கி,
“என்னாடீ இது, அதிசயமா இருக்கு. எங்க போயிருக்கும்“ என்றாள் முகம் முழுக்க ஆச்சரியத்துடன்.
“எங்க போயிருக்கோஞ் ஒரு கோழிக் குஞ்சுக்காக இவ்வளவு அக்கப்போரா, வர வர உங்க அநியாயம் தாங்கல” சுமதியின் குரலில் கொஞ்சம் எரிச்சலோடு கண்டிப்பும் வெளிப்பட்டது.
“அதுக்கில்லடீ, பேரப்புள்ள ஆசையா கேட்டது. சாயங்காலம் அது வந்து கோழிக்குஞ்சு எங்கன்னு கேட்டா என்னன்னு சொல்லுவேன்” கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னாள்.
“அதான் தேடிப் பாத்தாச்சு… இல்லன்னுதான் சொல்லணும்“
“ரோசாப்பூ நிறத்திலதான் வேணும்னு என் தங்கம் ஆசையா கேட்டு வாங்கினது”
“அதுக்கு என்னா பண்ண முடியும் அத்த, காக்கா தூக்கிட்டுப் போயிருக்கோ, பூனை தூக்கிட்டுப் போயிடுச்சோ, கீரிப்புள்ள எதுவும் தூக்கிட்டுப் போயிடுச்சோ, கள்ளப்பிராந்து எதுவும் வந்துகூட புடிச்சிட்டுப் போயிருக்கலாம். அதுக்கு என்ன பண்ண முடியும். அவன்ட்ட சொல்லித்தான் புரிய வைக்கணும். இது ஒரு பிரச்சனைன்னு காலையில இருந்து வீட்டப் பொரட்டிப் போட்டுட்டுருக்க நீ”
அதற்குமேல் அவளிடம் பேச்சைத் தொடர மனமில்லாத பேச்சி மெல்ல நடந்துசென்று குடிசை வாசலுக்கருகில் இருக்கும் சிறிய அளவிலான மணல் திட்டில் குத்த வைத்து அமர்ந்துகொண்டாள்.
கண்களைச் சுருக்கி வீட்டு வாசலிலிருந்து ஐம்பது மீட்டர் தொலைவில் இருக்கும் கருவேல மரங்களுக்கிடையில் ஏதேனும் தென்படுமா என்ற எண்ணத்துடன் பார்வையை ஊடுருவவிட்டாள். ஆனால், அவளுடைய மங்கலான பார்வைத்திறன் அதற்குத் தடையாக இருந்தது. நேரம் என்னவாக இருக்கும் என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்தவளுக்குக் கண்கள் கூச வெப்பக்கணைகளை வீசியபடி உச்சியில் காட்சியளித்தான் கதிரவன்.
எப்படியும் இன்னும் மூன்று அல்லது நான்கு மணி நேரங்களில் தன்னுடைய பேரன் வீடு திரும்பிவிடுவான் என்று மனக்கணக்குப் போட்டுக்கொண்டு அவனை எப்படிச் சமாளிப்பதென்று யோசித்தபடியே பெருமூச்சுவிட்டாள்.
நான்கு நாட்களுக்கு முன்னால் ஒரு கல்யாணத்தில் கலந்துகொள்வதற்காக ஆறு வயதான பேரன் மதியழகனுடன் டவுனுக்குச் சென்றிருந்தாள் பேச்சி. அதை முடித்துவிட்டு அவர்கள் ஊர் திரும்ப பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது மதியழகன் எதையோ பார்த்து நிற்க, அவன் பார்வை சென்ற இடத்தை நோக்கிக் கவனித்தவள் கண்களுக்குச் சாலையோரத்தில் அட்டையால் செய்யப்பட்ட தற்காலிக வேலிக்குள் முதியவர் ஒருவர், கலர் கோழிக்குஞ்சுகளை விற்றுக்கொண்டிருந்தது தெரிந்தது.
“அப்பத்தா அது என்ன?” ஆச்சரியத்துடன் கேட்ட பேரனை அதன் அருகில் கொண்டு சென்று நிறுத்தினாள்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேல் கைகளைக் கட்டியபடி அட்டையால் செய்யப்பட்ட வேலிக்குள் முப்பதிலிருந்து நாற்பது கோழிக்குஞ்சுகள் “கீச் கீச்“ என்ற சத்தத்துடன் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தான் மதியழகன்.
அவனுடைய தோள்களைத் தட்டிக் கவனத்தைக் கலைத்து,
“என்ன தங்கம், கோழிக்குஞ்சு வேணுமா” என்றாள் வாஞ்சையாக.
அவள் அவ்வாறு கேட்பதற்காகவே காத்திருந்தவன்போல முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் சிரித்தபடியே தலையை ஆட்டினான்.
அங்கே இருந்த பல்வேறு வண்ணக் கோழிக் குஞ்சுகளுக்கு மத்தியில் அவன் ரோஜாப்பூ நிறத்திலான கோழிக் குஞ்சைத் தேர்ந்தெடுத்தான்.
அதை ஒரு கையில் வாங்கியவன் இன்னொரு கையால் அதை அதிகம் அழுத்தாதவாறு பொத்திக்கொண்டான். ஊர் திரும்பும்போது மினி பஸ்ஸின் அதிர்வுகளும் ஜன்னல் வழியே வந்த அதீத காற்றும் கோழிக்குஞ்சைப் பாதிக்காமலிருக்க இரண்டு கைகளாலும் அதைப் பொத்திக்கொண்டு மார்போடு அணைத்தபடி உட்கார்ந்திருந்த மதியழகனின் பிம்பம் இப்போதும் பேச்சியின் நினைவிலிருந்தது.
வீட்டிற்கு வந்தவுடன் மூலையில் கிடந்த ஒரு பழைய அட்டைப்பெட்டியில் மண் பரப்பி, அதற்குள் அந்தக் கோழிக்குஞ்சை விட்டு அதற்கோர் உறைவிடம் அமைத்துக்கொடுத்தாள் பேச்சி.
பள்ளிக்கூடம் செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களிலெல்லாம் அந்தக் கோழிக்குஞ்சுடனே தன்னுடைய நேரத்தைச் செலவிடுவான். அக்கம்பக்கத்து வீட்டுச் சிறுவர்களுடன் பம்பரம் விளையாடச் செல்லும்போது கூட கோழிக்குஞ்சை அட்டைப்பெட்டியுடன் தூக்கிச்சென்று, தன் அருகில் வைத்துப் பார்த்துக்கொள்ளவே விரும்பினான். இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் வீட்டுத் திண்ணைக்குக் கீழே இருக்கும் சிறிய இடைவெளியில் கோழிக்குஞ்சை அட்டைப்பெட்டியுடன் வைத்துவிடுவாள் பேச்சி.
இன்று காலை பேரனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்ட பிறகுதான் அட்டைப்பெட்டி வைத்த இடத்திலிருந்து கோழிக்குஞ்சின் சத்தம் வரவில்லை என்பதை உணர்ந்து அதை எடுத்தவள் வெற்று அட்டைப்பெட்டியைப் பார்த்து அதிர்ந்து போனாள்.
அந்தக் கோழிக்குஞ்சைத் தேடித்தான் காலையிலிருந்து வீட்டையே புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தாள் பேச்சி.
திருமணமான இரண்டாவது வருடத்தில் குடிப்பழக்கத்தால் கணவனையும், மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது காமாலை நோயினால் மகனையும் இழந்த பேச்சியின் வாழ்வில் புதியதொரு பிடிப்பாக இருந்தவன்தான் மதியழகன்.
வெகுநேரமாக அந்த மணல்திட்டின் மேல் உட்கார்ந்திருந்த பேச்சிக்குத் திடீரென்று ஒரு யோசனை வரவே அவசரமாக எழுந்து மருமகள் சுமதியை நோக்கி ஓடினாள்.
“ஏன்டீ, பேசாம எவட்டயாவது கோழிக்குஞ்சு வாங்கிட்டு வந்து சாயத்துல முக்கி எடுத்துருவோமா, சின்ன புள்ளைக்கி என்ன தெரியவா போது”
சமையல் வேலையிலிருந்த சுமதி, பேச்சியின் பக்கம் பார்வையைத் திருப்பாமல் பதிலளித்தாள்.
“அத்த, நீ வேண்டாத வேல பாத்துட்டு இருக்க. இப்ப கோழிக்குஞ்சுக்கு எங்க போவ.”
“அதான்டி அந்த லட்சுமி டீச்சர் வீட்டுல கோழி வளக்கறாங்கல்ல அவங்க கிட்ட கேட்டு வாரேன்.”
“ஆமா ஆமா, உன்ட்ட குடுத்துட்டுதான் மறு வேல பாக்கப் போறாங்க.”
“இரு நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றபடி வேகமாகத் தெருவில் இறங்கி லட்சுமி டீச்சரின் வீட்டை நோக்கி ஓடிய பேச்சி, போன வேகத்தில் திரும்ப வந்தாள்.
“என்ன அத்த, கோழிக்குஞ்சு வாங்கிட்ட போல இருக்கு” நமட்டுச் சிரிப்புடன் கேட்டாள் சுமதி.
“ஒரு மூதியும் தரமாட்றாளுவ. கேட்டா ரெண்டு குஞ்சுதான் இருக்கு, மத்ததெல்லாம் கள்ளப்பிராந்து தூக்கிட்டுப் போயிருச்சு. அதையும் உன்கிட்ட கொடுத்துட்டு என்ன பண்றதுன்னு கேக்குறாளுங்க. கோழி கேட்டா வரிஞ்சுக் கட்டிட்டுக் குடுக்க வராளுங்க, குஞ்சக் கேட்டா தரமாட்றாளுக. இனி எவளாவது முருங்கக்கா கொடுங்க பாட்டி, கீர குடுங்க பாட்டின்னு வீட்டு வாசல மிதிக்கட்டும்ஞ் இருக்கு அவளுகளுக்கு” என்றாள் கோபம் மேலோங்க.
“அவங்க என்னத்த பண்ணுவாளுங்க. சும்மாவே கீரிப்பிள்ளைக்குப் பயந்து கோழி வளக்கிறதயே பாதிபேரு நிறுத்திட்டாளுக. அதையும் நீ போய் கேட்டா எப்படித் தருவாளுக. ஆகுற வேலையப் பாரு.”
“பேசாம பக்கத்து ஊருக்காரிங்கக் கிட்ட கேட்டுப் பாக்கவா?”
“உள்ளூர்க்காரிகளே தரலையாம், பக்கத்து ஊர்ல யார் கிட்ட போய்க் கேப்ப”
அவள் சொன்னது சரி என்றே பட்டது பேச்சிக்கு.
திடீரென்று ஏதோ தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாய் தன்னுடைய சுருக்குப் பையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு வேகமாக வாசலை நோக்கி நடந்தாள்.
“என்ன அத்த எங்க போற”
“இல்லடீ, அன்னைக்கி வாங்குறப்போ இந்நேரத்துலதான் அந்தக் கோழிக்குஞ்சு விக்கிற ஆளு ரோட்டோரத்துல வித்துட்டு இருந்தான். இப்பப் போய்ப் பாத்தா இருப்பான். பேசாம அவன்டயே வாங்கிட்டு வரேன்”
என்று பேச்சி கூறியவுடன் சமையலிலிருந்து கவனத்தை விலக்கி அவளை நோக்கித் திரும்பி அமர்ந்தாள் சுமதி.
“ஏங் அத்த இப்படிப் பண்ணிட்டு இருக்க, இப்ப டவுனுக்குப் போய் இந்த வெயில்ல அவனை எங்கன்னு தேடுவ, புள்ளய செல்லம் கொடுத்து நீதான் கெடுக்கிற”
“போடி, மத்த வீட்டுப் புள்ளைங்க மாரி அது வேணும், இது வேணும்னு நம்ம புள்ள என்ன அடமா புடிக்குது, எத்தன திருவிழாக்குக் கூட்டிட்டுப் போயிருக்கோம், அது ஆசையா ஏதாவது கேட்டுருக்கா. அது ஆசையா கேட்டதே இந்தக் கோழிக்குஞ்சத்தான். ஒரு அப்பத்தாக்காரி இதக் கூட பண்ண மாட்டாளா” என்றபடி சுமதியிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள் பேச்சி.
ஒருவழியாக பஸ்ஸைப் பிடித்துக் கூட்ட நெரிசலில் சிக்கி டவுனில் இறங்கியவள், கலர்க் கோழிக்குஞ்சு விற்கப்பட்ட இடத்திற்குச் சென்று நின்றபோது அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
illustration : Negizhan
அங்கு வேறு யாரோ ஒருவர் பூக்கடை வைத்திருந்தார். சுற்றியிருக்கும் பூக்கடைக்காரர்களிடமும் பழக்கடைக்காரர்களிடமும் விசாரித்த பேச்சிக்குச் சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியான அலைச்சலால் சோர்ந்து போனவள், சாலையோரத்திலிருந்த பூட்டப்பட்ட கடையின் படியில் அமர்ந்துகொண்டாள். காலையிலிருந்து ஓடிய ஓட்டம் வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தது. பத்து நிமிடம் இளைப்பாறிவிட்டு மீண்டும் ஊருக்குச் செல்வதே சிறந்த யோசனையாக அவளுக்குப் பட்டது. பதினைந்து நிமிடங்களுக்குமேல் ஓய்வெடுத்தபோதும் அவளுடைய உடல்சோர்வு நீங்குவதாகத் தெரியவில்லை. ஒருவழியாக வீட்டிற்குக் கிளம்பலாம் என்ற முடிவுடன் எழ முயன்றவளை நோக்கிவந்து விழுந்தது அந்தப் பரிச்சயமான குரல்.
“என்ன அப்பத்தா, இங்க என்ன பண்ணிட்டுருக்க” ஸ்கூல் பேக் மாட்டியபடி இரட்டைச் சடையுடன் வந்து நின்றாள் தேன்மொழி.
பேச்சி வசிக்கும் தெருவிலிருந்து இரண்டு தெரு தள்ளி வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் சுந்தரத்தின் மகள்.
பதிமூன்று வயதான தேன்மொழி, சிறுவயதிலிருந்தே பேச்சியை நன்கு தெரிந்திருந்த காரணத்தினால் எங்கு பார்த்தாலும் அப்பத்தா என்று உரிமையாக அழைப்பாள்.
“தங்கப்புள்ள, பள்ளிக்கூடம் இல்லையா இன்னைக்கி”
“இல்ல அப்பத்தா, காலாண்டு பரிட்ச நடக்குதுல்ல, அரநாள்தான் பள்ளிக்கூடம். அது சரி, நீ என்ன பண்ற இங்க?”
மதியழகனுக்காகக் கலர்க் கோழிக்குஞ்சு வாங்கவந்த கதையை தேன்மொழியிடம் முழுவதுமாகச் சொல்லி முடித்தாள் பேச்சி.
“ஏங் அப்பத்தா, இந்த ஒல்லியா ஒரு தாத்தா இருப்பாரே அவரையா சொல்ற”
“ஆமாண்டீ அவனத்தான்”
“அட இப்பதான் அவரப் பார்த்தேன். பக்கத்துத் தெருவுல முனிசிபாலிட்டி ஸ்கூல் இருக்குல்ல அதுக்கு முன்னாடி கோழிக்குஞ்சு வித்துட்டு இருந்தாரு.”
தேன்மொழி சொன்னதைக் கேட்டதும் உடலில் இருந்த சோர்வு அனைத்தும் பறந்துபோனது பேச்சிக்கு. உடனே தன்னை அங்கு அழைத்துச் செல்லுமாறு தேன்மொழியிடம் கூற, அவள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு முனிசிபாலிட்டி பள்ளி இருக்கும் திசை நோக்கி நடக்கத் தொடங்கினாள் தேன்மொழி.
வெறுங்காலுடன் இருந்ததால் தார்ச் சாலையின் வெப்பம் பேச்சிக்கு அதிகப்படியான சிரமத்தை ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் உதாசினப்படுத்திவிட்டு தேன்மொழியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்து சென்றாள்.
இறுதியாக கோழிக்குஞ்சு விற்கும் இடத்தை அடைந்தபோது அந்த அட்டை வேலிக்குள் பெரும்பாலான கோழிக்குஞ்சுகள் விற்கப்பட்டு ஏழு குஞ்சுகள் மட்டும் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தன. ஆனால் அவள் தேடிவந்த ரோஜாப் பூ நிற கோழிக்குஞ்சுகள் அங்கே தென்படவில்லை.
“ஐயா, மஞ்சக் கலரு கோழிக்குஞ்சு மேல ரோசாப்பூ நிறத்துல சாயம் பூசித் தர முடியுமா?” என்றாள் அப்பாவியாக.
“இல்ல பாட்டி, ஏற்கனவே சாயம் பூசி இருக்குல்ல. அதுக்கு மேல சாயம் பூசினா அது சில நேரம் நிக்காது. இருக்கிறத வேணா எடுத்துட்டுப் போங்க பாட்டி” என்றான் பீடியைப் புதைத்தபடி.
அந்தக் கிழவனுக்கு பேச்சியின் வயதிலிருந்து பத்து பதினைந்து வயது மட்டுமே குறைவாக இருந்திருக்கக்கூடும். அவன் பேச்சியைப் பாட்டி என்றழைத்தது அவளுக்குக் கோபத்தை வரவழைத்தாலும் கூட, அதைக் காட்டுவதற்கான இடம் அதுவல்ல என்று அவள் உணர்ந்திருந்தாள்.
“வேணும்னா ஒன்னு பண்ணுங்க, இரண்டு நாள் கழிச்சு வாங்க. நான் உங்களுக்கு ரோஸ் கலர்ல ரெண்டு கோழிக்குஞ்ச தனியா எடுத்து வச்சுற்றேன்” என்றவனின் பேச்சைக் காதில் வாங்காமல் தேன்மொழியைக் கூட்டிக்கொண்டு நகர்ந்தாள் பேச்சி.
பஸ்ஸைப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தவள் வீட்டை அடைந்தபோது சுமதி வாசல் தெளித்துக்கொண்டிருந்தாள். வெறுங்கையுடன் உடல் சோர்ந்து நடந்து வந்துகொண்டிருந்த பேச்சியைப் பார்த்தபோது சுமதிக்குப் பாவமாக இருந்தது.
பேச்சி மதியழகனிடம் காட்டும் அளவுக்கதிகமான அன்பை சுமதி ரசித்தாலும் கூட, சில சமயங்களில் அது அவனைக் கெடுத்துவிடுமோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வும் அவ்வப்போது எழுந்துகொண்டிருந்தது.
“என்ன அத்த சாப்பாடு எடுத்து வைக்கவா” என்ற சுமதியின் கேள்வியைப் புறக்கணித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த பேச்சி, பானையிலிருந்து சொம்பு தண்ணீரை முழுவதுமாகக் குடித்து முடித்தாள். கை நடுக்கம் காரணமாக சொம்பிலிருந்து சிதறிய நீர்த் துளிகள் அவளுடைய சேலையில் ஆங்காங்கே தென்பட்டன.
வலுவிழந்துபோன பேச்சி வீட்டின் மூலையில் ஒருபக்கம் சாய்ந்தவாறு கால்களை நீட்டி உட்கார்ந்துகொண்டாள். அடுத்த சில நிமிடங்களில் தன்னையறியாமல் உறங்கிப் போனவளைத் தட்டி எழுப்பியது சுமதியின் குரல்.
தூக்கம் கலைந்து மெல்ல எழுந்து வாசலில் சென்று பார்த்தவளுக்கு முன்னால் கையில் ஒரு வெள்ளைநிறப் பூனைக்குட்டியுடன் நின்றிருந்தான் மதியழகன்.
“என்ன ஆச்சுடி”
“இங்கப் பாருங்க அத்த, இந்தப் பூனைக்குட்டிய எங்கிருந்தோ ரோட்டுல கெடந்து கொண்டு வந்திருக்கான். இத வளர்க்கணுமாம். பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டா யார் பார்க்கிறது” சுமதியின் குரல் உச்சத்தை அடைந்ததும் பயத்தில் கண்களைச் சுருக்கி, உதடுகளைக் குவித்து அழத் தொடங்கினான் மதியழகன்.
“ஏன்டீ கழுத, எப்பப் பாரு புள்ளய ஏதாவது சொல்லிக்கிட்டு… பள்ளிக்கூடம் போனா நான் பாத்துக்கப் போறேன்” என்றபடியே மதியழகன் அருகில் சென்று அவனை மார்போடு அணைத்துக்கொண்டாள் பேச்சி.
“அதானே, எங்க வரலையேன்னு பாத்தேன். செல்லம் கொடுத்துக் கொடுத்து நீ அவனக் கெடுக்கப் போற” என்றபடியே மாடுகளை அவிழ்த்துக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பினாள் சுமதி.
வீட்டில் மிச்சம் இருந்த சாதத்தைப் பூனைக்குட்டிக்கு கொடுத்து, அது சாப்பிடுவதை அருகிலிருந்து ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் மதியழகன்.
இரவு உறங்கும்வரை பூனையுடன் விளையாடிய மதியழகன், அந்த ரோஜாப் பூ கலர்க் கோழிக்குஞ்சைப் பற்றி மறந்தே போனான். பேச்சிக்கு அது ஆச்சர்யமாக இருந்தாலும் அதை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி படுக்கையில் சாய்ந்தாள். ஏனோ இப்போது அவளுக்கு அந்தக் கோழிக்குஞ்சின் மீது பரிதாபம் வந்தது.