கடுமையான தாகத்துடன்
மண்குடங்களைத் தவிர
எங்களிடம் வேறேதுமில்லை
இந்தக் குடங்களைத் தயாரித்தவர் எங்கள் தாத்தா
அதற்கும் வெகுமுன்பாகச் சக்கரத்தை உருவாக்கினர்
எங்கள் மூதாதையர்
அதன்பிறகு எத்தனை இரவுபகல்கள் கடந்துவிட்டன
நாங்கள் உறங்குகிறோம்
மீண்டும் விழிக்கிறோம்
வெளிச்சத்துக்கும் இருளுக்கும் அப்பாலிருந்து
உங்களை அழைக்கிறோம்
மரங்களுக்குப் பின்னிருந்து
மண்குடத்தின் நீரைத் தேடுகிறோம்
கடுமையான தாகத்துடன்.
m
சொந்தக் கனவுகளின் கதைகள்
மண்ணின் ஆழத்திலிருந்து காயத்தழும்புகளுடன் எழுந்து வருகின்றன
விசித்திரமான முகங்கள்
ஊர்வலத்தில் அவர்கள் நடக்கின்றனர்
நெருப்பு மூட்டுகின்றனர்
இந்த மண்ணிலிருந்துதான் பிறப்பெடுத்தார்
எங்களது ஆதித்தந்தை என்று முழக்கமிடுகின்றனர்
இதோ பார், எங்களது ஆயிரம் கரங்கள்
நேருக்கு நேர் நிற்கும் அந்தப் போட்டியில்
நான் முன்னேறிச் செல்கிறேன்
உயிர் வாழ்வதற்கான பாடலைப் பாடுகிறேன்
அச்சமின்றி
கூண்டுப்பறவையாக அல்ல
இப்போது இந்த இரவின் அடரிருளில்
கைப்பிடியில் எடுத்துக்கொள்கிறேன்
எங்களது சொந்தக் கனவுகளின்
கதைகளை.
m
பல நூற்றாண்டுகளின் பேரழிவைத் துடைத்தழிக்கிறேன்
இரவு அடரும்போது
எமது தொல் மூதாதையைச் சந்தித்தேன்
அவரைக் கேட்டேன்
அவர் ஏன் நின்றுகொண்டே இருக்கிறார்?
அவர் என்னை அணைத்துக்கொள்கிறார்
அப்போது மேகத்திலிருந்து மழை பொழிய
நான் நனைந்துவிடுகிறேன்
அவரும் நனைகிறார்
பருவங்களும் நனைகின்றன
அவர் சொல்கிறார் –
முன்னேறிச் செல்
தலையை நிமிர்த்தி
நீ தீண்டப்படாத சண்டாளன் இல்லை
அண்ணாந்து பார் எல்லையற்ற ஆகாயத்தை.
நான் அவரது பாதங்களைத் தொட்டுக்கொள்கிறேன்
இருவிழிகளால் துடைத்தழிக்கிறேன்
பல நூற்றாண்டுகளின் பேரழிவை.
m
Illustration : Kholoud Ahmed
றெக்கை விரித்துப் பறக்கும் நீலகண்டப் பறவை
வானத்தில் மேகம் திரளும்போது வயல்வெளியில் வந்து நிற்கிறேன்
நிலையற்ற காலத்தைப் பார்க்கிறேன்
வனாந்தரத்தைக் கடந்து
இருண்ட நாட்கள் போய்க்கொண்டிருக்கின்றன
நான் அசைவற்று இங்கேயே நிற்கிறேன்
மாயாஜாலக் கதைகளை அல்ல
நான் கேட்டுக்கொண்டிருப்பது
உயிர் வாழ்வதற்கான பாடலை
இதோ பார்க்கிறேன்
கனவுகளோடு றெக்கை விரித்துப் பறக்கிறது நீலகண்டப் பறவை.
m
மலைகளின் கண்ணீரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
மலைகளைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் செல்கின்றனர்
பெரிய மனிதர்கள் அரண்மனைகளைக் கட்டுகின்றனர்
இங்கே நின்றுகொண்டு
மலைகளின் கண்ணீரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்
ஒவ்வொரு நாளும்.
m
நீங்களும் ஒருநாள் சிந்திக்கலாம்
நீங்களும் ஒருநாள் சிந்திக்கலாம்
வெள்ளை இல்லை
கருப்பு இல்லை
எல்லோரும் மனிதர்களே
சிதையின் நெருப்பில் நிலையற்ற தேகம் எரிந்தழிந்துபோனால்
சாம்பல் மட்டுமே எஞ்சி நிற்கும்
அல்லது சவப்பெட்டியின்மீது மண் விழுந்துகிடக்கும்
வாருங்கள், காலத்துக்குத் தலைவணங்குவோம்
பூமிக்கும்
அதோ நின்றுகொண்டிருக்கும் மரங்கள்
நமக்குப் பூக்களைத் தருகின்றன
பழம் தருகின்றன
நிழல் தருகின்றன
உயிரைக் காக்கின்றன
மனிதர்கள் திரும்பி வரட்டும் பறவையின் சிறகுகளில்.
ஆசிரியர் குறிப்பு
வங்காளத்தில் தற்போது எழுதிவரும் தலித் எழுத்தாளர்களில் சியாமல்குமார் பிரமாணிக் முதன்மையானவர். தலித் சாகித்திய அகாதெமி, தலித் சாகித்திய சன்ஸ்தா உள்ளிட்ட பல்வேறு தலித் இலக்கிய அமைப்புகளில் இணைந்து செயலாற்றிவருகிறார். இவரது இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வங்கமொழியில் வெளியாகியுள்ளன. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பங்களிப்பு செய்துவருகிறார். தலித் இலக்கிய, வரலாற்று ஆய்வு மற்றும் பதிப்பு முயற்சிகளிலும் சியாமல்குமாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவரது கவிதைகளும் சிறுகதைகளும் ஆங்கிலம், இந்தி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலங்களின் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அனன்ய நந்தனிக் இலக்கிய விருது, சக்திகுமார் சர்க்கார் நினைவு விருது என்று பற்பல விருதுகளையும் பெற்றுள்ளார்.