பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை பார்த்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைகள் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனாலும், சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட சில சம்பவங்களுக்கு உடனே தனது ஆதங்கத்தைத் தெரிவிக்கும் தமிழக முதல்வர், இவ்விசயத்தில் மட்டும் கள்ள மௌனம் கொள்வதென்பது சமூகநீதிக்கு ஏற்பட்ட மாபெரும் சோதனை. மேலும் மைய நீரோட்டத்தில் கலந்து ஒட்டுமொத்த தலித் மக்களின் பிரதிநிதியாகச் செயல்படக்கூடியவர்களும் ஏனைய முற்போக்கு அமைப்புகளும் இதுபற்றிப் பேசாமலிருப்பதற்கான காரணமும் விளங்கவில்லை. சொல்லி வைத்தாற்போல் எல்லோருமே அமைதியாக இருக்கின்றனர் அல்லது கள்ள மௌனியாய் கடந்து செல்கின்றனர். அவ்வளவு பேரமைதி எல்லோரிடத்திலும். சாதியவாதிகளிடம் பேரமைதி நிலவுவது இயல்பு. ஆனால், தலித்தியவாதிகளிடமும் இத்தகைய பேரமைதி நிலவுவது யாரைக் காப்பாற்றுவதற்காக என்கிற சந்தேகம் எழுகிறது. நடந்திருப்பது மாபெரும் குற்றம். அது ஒரு தலித் பெண் மீது நிகழ்த்தப்பட்டிருப்பதால்தான் முற்போக்குச் சிந்தனையாளர்களும் சமூகநீதிக் காவலர்களும் வழக்கம்போல அமைதியாக இருக்கின்றனர்.
மாறாக, மேற்கண்ட குற்றத்தை நிகழ்த்தியவர்கள் தலித்துகளாக இருந்து, பாதிக்கப்பட்ட பெண் மாற்றுச் சாதியினராக இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்! ஊடகவியலாளர்கள் தங்களது நித்திரையைத் தொலைத்திருப்பார்கள்; அரசு இயந்திரங்கள் விழிப்படைந்திருக்கும்; அனைத்துக் கட்சியினரும் பொதுச் சமூகமும் கொந்தளித்திருப்பர்; பல குடிசைகள் எரிந்து சாம்பலாகியிருக்கும்; குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது சிறைக்காவல் மரணத்தைத் தழுவியிருப்பார்கள்; நீதித்துறையும் தானாக முன்வந்து வழக்கைக் கையிலெடுத்து வழக்கம் போல தலித்துகளுக்கெதிரான அநீதியை நிலைநாட்டியிருக்கும். ஆனால், குற்றவாளிகள் ஆண்ட பரம்பரை பெருமை பேசுகிற, அரசியல் செல்வாக்கு மிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் மகன் – மருமகள். இதைவிட என்ன வேண்டும், தமிழகத்தில் முற்போக்கு பேசக்கூடியவர்களும் சமூகநீதிக் காவலர்களும் மௌனம் சாதிப்பதற்கு. தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்கள் தலித் தரப்பினராக இருந்தால், அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களும் தலித்தாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பிற்போக்கான சூழல் நிலவும் வரைக்கும் தலித்துகளுக்கான நீதி என்பது கானல் நீரே.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, திருநறுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், சென்னை திருவான்மியூரில் உள்ள மேற்கண்ட சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆண்ட்டோ மதிவாணன், மருமகள் மெர்லினாவால் கடந்த ஏழு மாதங்களாகப் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற அப்பெண் மேற்கொண்டு படிக்க விரும்பியதினால், “உன்னை நாங்கள் படிக்க வைக்கிறோம், அதற்கான பணத்தையும் கட்டுகிறோம்” என ஆசை வார்த்தைகளைக் கூறி அவரையும் அவரது தாயையும் ஏமாற்றியிருக்கிறார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, 26.04.2023 அன்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கவும் வீட்டைச் சுத்தம் செய்யவும் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது அவருக்கு வயது 17. அப்படியானால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தோடு, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1989, பிரிவு 14இன் படியும் குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட இடைத்தரகரையும் சிறைப்படுத்த வேண்டும்.
வேலைக்கு வந்த சில நாட்களிலேயே தன் தாயிடம் “இவ்வேலையில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆதலால், என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்று கைபேசியில் பேசியிருக்கிறார். இதையறிந்த ஆண்ட்டோ மதிவாணனின் மனைவி மெர்லினா, அப்பெண்ணை அடித்து அவரிடமிருந்த கைபேசியையும் பிடுங்கியுள்ளார். அவரது சகோதரரையும் தாயையும் கொன்றுவிடுவதாக மிரட்டிய மெர்லினா, “நாங்க எம்.எல்.ஏ வீடு. எங்களிடம் பவர் இருக்கு. அதனால நாங்க என்ன வேண்டுமானாலும் பண்ணுவோம்” என்று கூறியிருக்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற அச்சத்தினால் ஆறுமாதப் பணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.
இச்சூழலில் ஆறுமாதங்களாகக் கொத்தடிமையை விட மிகவும் கொடூரமாகவே நடத்தப்பட்டிருக்கிறார். நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பணி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். முடியாமல் போன தருணங்களில் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனர் கொண்டு சூடும் வைப்பது போன்ற பல்வேறு கொடுமைகளை மெர்லினா செய்திருக்கிறார். எவ்வளவு கொடுமைகள் செய்தாலும் அதனால் இரத்தமே வந்தாலும் அதற்கான சிகிச்சைக்குக் கூட அழைத்துச் செல்ல மறுத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மனிதத் தன்மையை இழந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் மெர்லினாவும் அவரது கணவரும். இதற்கு மற்றுமொரு காரணமாக, வர்ணாசிரம ஒழுக்க விதிகளின் மீது அவர்கள் வைத்திருக்கும் பகுத்தறிவற்ற நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டலாம்.
“என்னால வேலை செய்ய முடியல அக்கா. என்னை விட்டுடுங்க” என்று கெஞ்சியும் கூட எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் பல்வேறு சித்திரவதைகளைச் செய்திருக்கிறார்கள். மேலும், “இதப் பத்தி வெளிய சொன்னா உன்ன காப்பாத்துறதுக்கு யார் இருக்கா? நீயே ஒண்ணுமில்லாத நாயி. நான் எம்.எல்.ஏ மருமகள். ஒரு வார்த்தைச் சொன்னால் உங்க வீடே இல்லாம பண்ணிடுவாங்க” என்று மிரட்டுகிற ஆணவம் அவருக்கு எங்கிருந்தது வந்தது. அவர் சொல்வது உண்மையென்றால், எம்.எல்.ஏ மகனும் மருமகளும் அடியாட்கள் வைத்துக் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்களா என்கிற சந்தேகம் எழுகிறது. “எம்.எல்.ஏ வீடு என்றால் எவனும் கேட்க மாட்டான். பொத்திக்கிட்டுப் போயிடுவான்” என்று அவர் சொல்லியிருக்கிறார். இவ்வார்த்தை காவல்துறையினருக்கும் பொருந்தும். அதனால்தான் பாதிக்கப்பட்ட பெண் 18.01.24 அன்று புகார் கொடுக்க, 19.01.24 அன்று வழக்குப் பதிவு செய்து 25.01.24 அன்று குற்றவாளிகளைக் கைது செய்து, 26.01.24 காலை 6.00 மணிக்குப் புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவ்வளவு கால தாமதம் ஏன், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகவா என்கிற கேள்வி எழுகிறது. அதன் காரணமாகவே கூடுதல் அமர்வு நீதிபதி கூட இரவு இரண்டு மணிக்கு, “பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய அசல் சாதிச் சான்றிதழ் இருந்தால்தான் குற்றவாளிகளை ரிமாண்ட் செய்வேன்” என்று சொல்ல முடிகிறது. அப்படியொரு வழக்கம் சட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும், அவரால் அவ்வாறு சொல்ல முடிகிறதென்றால், இவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் எழுகிறது. பொதுவாக, தலித்துகள் பாதிக்கப்படும்போது மட்டும்தான் காவல்துறையும் நீதித்துறையும் நத்தை வேகத்தில் செயல்படுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தனக்கும் தனது மகன், மருமகளுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரில் பேசுகையில் “திருவான்மியூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு இ.கருணாநிதி நான்கைந்து முறை வந்துசென்றதைப் பார்த்திருக்கிறேன்” என்கிறார். அப்படியானால், சட்டமன்ற உறுப்பினர் தனது மகனைக் காப்பாற்றவே நினைக்கிறார். தமிழக முதல்வரும் அவருக்கு உதவும் வகையில் செயல்படுகிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது. அதனாலேயே இன்றுவரையிலும் இவ்விசயத்தில் மௌனமாகவே இருக்கிறார். அதோடு மட்டுமல்லாது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் பதவியேற்ற நாளிலிருந்தே மௌனமாகத்தான் இருக்கிறார். எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இத்துறை அமைச்சர்களின் நிலைப்பாடு இதுதான். இத்தகைய தீண்டாமைப் போக்கினைப் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர், “இந்தக் குடியரசில் ஜனநாயகத்துக்கும் சமத்துவத்துக்கும் இடமே கிடையாது. இதில், சுதந்திரத்துக்கோ சகோதரத்துவத்துக்கோ இடம் இல்லவே இல்லை. இந்தியக் கிராமம், குடியரசின் தத்துவங்கள் எல்லாவற்றையும் மறுப்பதாக உள்ளது. இது ஒரு குடியரசு என்றால், தீண்டத்தக்கவர்களால் தீண்டத்தக்கவர்களுக்காக நடத்தப்படும் தீண்டத்தக்கவர்களின் குடியரசாகும். இது தீண்டாதவர்களைச் சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகைக் காலனி ஆதிக்கமாகும். தீண்டாதவர்களுக்கு உரிமைகள் எதுவும் இல்லை. அவர்கள் வாழ்வதெல்லாம் காத்திருக்கவும், பணி செய்யவும், பணிந்து நடக்கவுமே. செய்வதற்கு அல்லது செத்து மடிவதற்கே அவர்கள் உள்ளனர். அவர்கள் கிராமக் குடியரசுக்கு வெளியே உள்ளவர்கள் என்பதால், அவர்களுக்கு உரிமைகள் இல்லை. குடியரசு என்று கூறப்படுகிறதற்கு வெளியே உள்ளதால் அவர்கள் இந்து சமூகத்துக்கு வெளியே உள்ளனர். இது ஒரு விஷச் சக்கரம். ஆனால், இது மறுக்கமுடியாத உண்மை” என்கிறார் (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுதி – 09, ப – 43).
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களும் தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதே இல்லை. அதிலும் கூட தீண்டாமையைக் கடைபிடிக்கின்றன. இதைக் காலங்காலமாகச் செய்துவருகின்றன. “ஆக்ஸ்பேம் இந்தியா மற்றும் நியூஸ் லாண்டரியின் ஆய்வின்படி 12 இதழ்களின் 972 முகப்புக் கட்டுரைகளை ஆய்வு செய்ததில் வெறும் 10 செய்திகள்தான் சாதி தொடர்பானவை. நாள்தோறும் சாதிக் கொடுமைகள் நடந்தேறும் ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஊடகத்துறை கள்ள மவுனத்தோடு கடந்து செல்வது வெட்கக்கேடு!” என்கிறார் எழுத்தாளர் ஜெயராணி (‘இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்’, ப. 281). ஆயினும் இவ்விசயத்தில் தங்களுக்கென்றே தனியொரு ஊடகத்தைக் கட்டமைக்க வேண்டுமென்கிற ஆர்வம் தலித்துகளுக்கு இருந்தாலும் அதற்குத் தலித் மக்கள் போதிய ஆதரவளிப்பதில்லை என்பதும் கசப்பான உண்மை.
தன் வீட்டில் பணி செய்த பெண் தனது சாதியைச் சார்ந்தவராக இருந்திருந்தால், மெர்லினா இத்தகைய மனிதத் தன்மையற்ற அத்துமீறலை நிகழ்த்தியிருப்பாரா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்விடத்தில்தான் அவர்களுக்குள்ளே இருக்கிற சாதிப் பற்றும் சாதியக் கட்டமைப்பும் காப்பாற்றப்படுகிறது. மாற்றுச் சாதியைச் சார்ந்தவர் அதுவும் தலித் பெண் என்கிற காரணத்தினால்தான் எந்தவோர் அச்சமுமின்றி அவர்களால் இத்தகைய செயலைச் செய்ய முடிகிறது. ஏனெனில், இந்திய சாதியக் கட்டமைப்பே தலித்துகளை ஒவ்வாமையுடன் பார்க்கிற நிலையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கூடவே அரசியல், பொருளாதாரம், சாதி பலமும் சேர்ந்துகொள்வதால் கூடுதல் வக்கிரப் புத்தியோடு இத்தகைய செயல்களைத் துணிச்சலாகச் செய்ய முடிகிறது. இதற்கு முக்கியக் காரணம் சாதியடுக்கின் மேல்கீழ் வரிசை. அதன் காரணமாகவே தாங்கள் செய்வது குற்றமெனத் தெரிந்தும் தொடர்ந்து நம்மை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களைவிட நாம் அறிவினில் சிறந்து விளங்கும்போது அதை ஏற்கும் மனமில்லாமல் நம்மைப் புறக்கணிக்கிறார்கள். நம் மக்களுடைய உழைப்பைச் சுரண்டுவது மட்டுமின்றித் தம்மையே அண்டிப் பிழைக்குமாறு நம்முடைய வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கும் செயல்களையும் செய்கிறார்கள். இவை யாவற்றையும் எந்தத் தயக்கமுமில்லாமல் இவர்கள் செய்வதற்குக் காரணம், நம்மிடைய ஆள்பலமிருந்தும் அமைப்பாய்த் திரளாமல், அதிகாரத்தை நோக்கி நகராமல் நாம் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதுதான்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தைரியமாக வெளியில் சொல்லியிருக்கிறார். இதைப் போன்று குறிப்பாக, கிராமங்களில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையிலுள்ள பெற்றோர்கள் வறுமையின் காரணமாகத் தங்களது குழந்தைகளின் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இம்மாதிரியான பணிப்பெண் வேலைகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் நேரடியாகவும் அனுப்பி வைக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இக்குழந்தைகள் பணிப் பெண்ணாகச் சேர்ந்ததோடு சரி, மீண்டும் அவர்களது பெற்றோர்களைச் சென்று பார்த்தார்களா என்பது கேள்விக்குறியே. எத்தனையோ குழந்தைகள் இம்மாதிரியான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வெளியில் சொல்ல வழியில்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டுத் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்கி அக்குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயில அரசு வழிவகுக்க வேண்டும். ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும்போதுதான் இம்மாதிரியான குழந்தைகள் இன்னலுக்குள்ளாவதைக் கண்டறிந்து, அவர்களின் மறுவாழ்விற்கான வழிமுறைகளை வகுக்க முடியும். அதன்மூலமே இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாத வண்ணம் தடுக்கவும் முடியும். ஏனெனில், இம்மாதிரி பணிப்பெண் வேலைகளுக்கு ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகள்தான் அமர்த்தப்படுகிறார்கள். அதிலும், தலித் குழந்தைகள் மட்டுமே சாதிய ரீதியான ஒடுக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். முதலில் அரசாங்கம் இம்மாதிரியான குழந்தைகளைப் பணிக்கமர்த்தும் தரகர்களைக் கண்டறிந்து குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும்.
இன்றைய சூழலில் சாதியவாதிகள் தொடர்ந்து தலித்துகள் மீது திட்டமிட்டே தீண்டாமை வன்கொடுமைகளை நிகழ்த்திவருகின்றனர். அதைத் தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் ஆளுகின்ற, ஆண்ட அரசுகள் இதுவரையிலும் செய்யவில்லை. இதுவும் கூட சாதியவாதிகளுக்குக் கூடுதல் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. சட்டம் கடுமையாக இருந்தும் தொடர்ந்து குற்றங்கள் நடந்த வண்ணமாகவே இருக்கிறது. காரணம், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடியவர்களும் சாதியைக் காப்பாற்றுபவர்களாகவே இருப்பதுதான். பொதுவாக, தலித்துகளாகிய நம்மை நாமே வழிநடத்த வேண்டும். ஆனால், இங்கு நம்மை வழிநடத்தக்கூடிய ‘மேய்ப்பர்கள்’ திறமைசாலியாக இருந்தும்கூட நம்மை அடிமைகளாகவே வைத்திருக்க எண்ணுகிறார்கள். இந்நிலையை மாற்ற தலித் இளைஞர்கள் முன்வர வேண்டும்.
நீதிக்காகப் போராடக்கூடிய தலித்திய இயக்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் சாதிய ஆணவப் படுகொலைகளாக இருக்கட்டும், தீண்டாமை வன்கொடுமைகளாக இருக்கட்டும் தொடக்கத்தில் விறுவிறுப்பாகவும் துடிப்பாகவும் செயல்படுவதைப் போல இறுதிவரைக்கும் செயல்படுகிறார்களா என்பது விவாதத்திற்குரியது. ஒருசில வழக்குகள் விதிவிலக்காக இருக்கலாம். தலித்திய அமைப்புகள் எத்தனை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணையாக இறுதிவரைக்கும் இருந்து வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பதும் விவாதத்திற்குரியதே. தொடக்கத்தில் இருக்கிற துடிப்பும் சுறுசுறுப்பும் இறுதிவரைக்கும் இருந்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுத்தாக வேண்டும் என்கிற முனைப்பும், சமூக அர்ப்பணிப்புணர்வும் ஒவ்வொரு தலித்திய அமைப்புக்கும் இயக்கத்திற்கும் இருக்க வேண்டும். குறிப்பாக, பல வழக்குகளில் குற்றவாளிகளுக்கு அவர்கள் சார்ந்த சாதியச் சங்கங்களும் அமைப்புகளும் வழக்கிற்குத் தேவையான பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உதவுகின்றன. ஆனால், தலித்துகளுக்காக அவ்வாறு செயல்படுகிற அமைப்புகளும் இயக்கங்களும் இருப்பது அரிதிலும் அரிதே. இதை நம்முடைய தோல்வியாகத்தான் கருத வேண்டும். அப்படியே இருந்தாலும் அதிலும் சாதிப் பார்த்தே உதவக்கூடிய மனநிலை தலித்துகளிடையேயும் நிலவுவது ஆபத்தானது. நித்தம் நித்தம் தலித் மக்கள்மீது தீண்டாமை வன்கொடுமைகளும் ஆணவப் படுகொலைகளும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. ஆயினும் இது தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை என்ன? அவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகள் முறையாக வழங்கப்படுகிறதா? அரசு அவர்களுக்கான நிவாரணத் தொகையைக் காலதாமதமின்றி வழங்குகிறதா? என்பதையெல்லாம் எந்தவொரு சமரசமுமின்றி ஆய்வு செய்வதற்கான கட்டமைப்பை நிறுவ வேண்டிய தேவை தொடர்ந்து இருக்கிறது. ஏனெனில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கண்ணகி – முருகேசன், கோகுல் ராஜ் ஆகியோர் வழக்குகளின் பின்னணியில் கூட போராளிகளாகக் கருதப்பட்ட அரசியல்வாதிகள் – தலித் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை உற்றுநோக்கினால் இதற்கான காரணம் புரியும். தற்போதைய வழக்கினைக் கையிலெடுத்திருக்கும் எவிடென்ஸ் அமைப்பு அத்தகைய தேவையை நிறைவு செய்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்குத் துணையாக நிற்பது நமது கடமையாகும். ஏனெனில், நம்மீது நிகழ்த்தப்படுகிற ஒவ்வொரு தாக்குதலுக்கும் சிதறிக்கிடக்கிற நாமெல்லோரும் இணைந்து குரல் கொடுக்கிற பட்சத்தில் அரசும் அரசு இயந்திரமும் தானாக நம் பக்கம் சுழல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்போதுதான் நமக்கான நீதியும் காலதாமதமின்றிக் கிடைக்கும். ஆனால், சமகாலத்தில் தலித்துகளிடையே நிலவுகிற போக்கு வருத்தமளிக்கிறது. சாதிய ஆணவப் படுகொலையாலும் தீண்டாமை வன்கொடுமையாலும் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவர்களின் உட்சாதியைப் பார்த்துக் குரல் கொடுக்கக்கூடிய சூழல் தலித்தியத்தின் வெற்றிக்கு ஒருபோதும் வழிவகுக்காது. இதன் பின்னணியில் தலித்திய அமைப்புகள் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்கிற பிரித்தாளும் சூழ்ச்சி இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, சமகால தலித்தியத் தலைவர்களுக்குள்ளும் அமைப்புகளுக்குள்ளும் ஓர் இணக்கமான நட்புறவைப் பேணுவதில் ஏற்பட்ட மாபெரும் குறைபாட்டைச் சரிசெய்வதற்கான முயற்சியில் வரும் தலைமுறையினர் ஈடுபட வேண்டும். மேலும், தலைவர்களுக்குள்ளேயே நிலவும் ஒருவித முதலாளித்துவ மனநிலையையும் மாற்ற வேண்டும். அப்போதுதான் ஒரு கையால் தட்டுவதால் எழும் ஓசையின் வலிமையைவிட இரு கைகள் இணைந்து தட்டும்போது எழும் ஓசையின் வலிமையை நம்மால் உணர முடியும்.
எனவே, ஆண்ட்டோ மதிவாணன் – மெர்லினா ஆகியோர் செய்த குற்றங்களுக்கு, குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1995, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு திருத்தச் சட்டம் 2015, இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே தொடர்ந்து இம்மாதிரியான குற்றங்கள் அரங்கேறுவதை ஓரளவிற்கேனும் தடுக்க முடியும்.