டிரெட் லாக்

ஸ்ரீராம் கலியபெருமாள்

“என்ன வேணும் உனக்கு? சாராயமும் குட்டிக் கொயிக்கானும்1 தரட்டுமா, இல்ல என்ன வேணுமின்னு சொல்லு, தாரோம்”

ஜடா முடியோடு துள்ளிக் குதித்தபடி சாமி வந்தவனையும் பேய் பிடித்தவளையும் வரிசையில் நிற்க வைத்துக் குறி சொல்வார் கட்டாண்டி சித்தப்பா. முனி கோயிலின் எல்லா நடவடிக்கையிலும் கட்டாண்டி சித்தப்பாதான் சகலமும். ஒரு சிறிய பாதை, ஒரு ஓட்டுக் கட்டடம், நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே கொளத்துக்கரையில் வாழும் குடும்பம் கட்டாண்டி குடும்பம், கல்லு கொறவர்களுக்குப் பாத்தியப்பட்டது அந்தக் கோயில். உடன் பிறந்தவர்கள் சப்பானியும் மருதனும். எல்லோருக்கும் கல்லு வியாபாரம்தான். பீச்சுகன்னி சின்னம்மா இறந்த கொஞ்ச நாட்கள் கழித்து கோயிலும் குடியும்தான் சித்தப்பாவுக்கு. மருதன் மகன் பூச்சிக்கு சித்தப்பனின் ஜடா முடி மீது விருப்பம்தான். சித்தப்பாவிடம் அவ்வப்போது கேட்பதுண்டு,

“இந்தக் கோயிலு எப்ப சித்தப்பா கட்டுனாங்க? நாம ஏன் கும்புடறொம்?”

சித்தப்பாவுக்குப் பெரிமிதமாக இருக்கும்.

“புலாயி2க்குப் போறதுக்கு முன்னாடி எல்லாம் இங்க கும்பிட்டுப் போனம்னா மூணு திங்களம உக்காந்து திங்கலாம். புலாய்க்குப் பாதுகாப்பே அய்யன்தான்” என்பார் சித்தப்பா.

சித்தப்பாவைப் பொறுத்தவரைக்கும் பிடுங்கிக்கொண்ட இடங்களைத் தவிர, இவை முன்னோர்களின் இறுதி மிச்சம்.

“இந்தத் தெருல்ல எவனுக்கும் கோயில்லாம் இல்ல, நமக்குதான் இருக்கு. என்ன கொற, பய கோயில்ண்ணு ஒவ்வொருத்தனுக்கும் அந்த எண்ணம்தான். புலாயிக்குப் போறதுக்கு முன்ன இங்க படச்சி பண்ணி அறுத்துதான் சனம் போவும். பொத்துக்காரன்3 தேடிண்ணு வந்துச்சுனா இங்க ஒளிஞ்சுக்குறது. அப்படியே காலப்போக்குல மற வூட்டு ஆளுவலும் கும்பூடுவாங்கே. அவிங்களும் நம்மகூட புலாயிக்கு வர விரும்புவாங்கே. ஆனா, பங்கு வக்கிறப்ப ஏமாத்திப் பூடுவாயங்கே. அதுனால நாம அவிங்களோட போறதுல்ல. நாம திருவிழா பண்ணும்போது, என்னடா இந்தக் கொற வூட்டு ஆளுவ திருளா நடத்துரதுரெல்லாம் அவிங்களுக்குப் பிடிக்காது. மணி தேவருக்குப் பிள்ள இல்லாத காலத்துல ‘எனக்குப் பிள்ள பெறந்தா உனக்கு எடுத்துச் செய்றேன்’ன்னு வேண்டிக்கிட்டாறாம். வேண்டி ரெண்டாம் வாரம் கழிச்சி ஈன தொடங்கிட்டா மவராசி.

மணி தேவர் பெஞ்சாதி பரவாகோட்டைலேந்து கட்டிட்டு வந்தவளுக்கு மனசு கொள்ளல. வெள்ளி செவ்வா ஆனா கோயிலுக்குப் பூசதான். அவ கும்புடுறது பத்தாதுன்னு ஊரு சனமே வரத் தொடங்கி ஒரே விசேசம்தான்.

இன்னொரு பக்கம் ‘யார் கையில துண்ணூறு வாங்குறதுன்னு ஒரு வெவஸ்த வேண்டாமா…’

என்று சொல்லிய வீட்டுச் சனங்களைக் கடிந்துகொண்டாள். பெற்றெடுத்தப் பிள்ளக்கிப் பேர் வைத்தால் முனீஸ்வரன் என்று. மதிய சாப்பிட்டிற்கு வீட்டிற்கு வரும் கட்டாண்டியைக் காணவில்லையெனத் தேடி வந்த மருதனுக்கு, கோயில் உள்ளே மயங்கிக் கிடந்த காட்டாண்டியை மடியில் கிடத்தி தண்ணி கொடுத்தபோது கட்டாண்டி போயி சேர்ந்து பொழுதானது. மணி தேவரும் அவர் மனைவியும் பிள்ளையோடு வந்து மாரில் அடித்து அழுதபோது,

“கட்டாண்டி என்ன முனி அய்யாவா… கொற வூட்டு ஆளுவளுக்கு இப்படித் துக்கம் விசாரிக்கணும்னு என்ன தேவ இருக்கு” என வெதும்பினார்கள் அவள் உறவினர்கள்.

மருதனின் இளைய மகன் பூச்சி சில்லு விளையாடுவதும், ஆதித் தெரு பயலுவளோடு பளிங்கு உருட்டுவதும் என்று இருந்தவன், சித்தப்பனின் மறைவுக்குப் பிறகு கோயில் வேலைக்கான ஆளாய் மாறிப் போனான். விதவிதமான சிகையலங்காரம் வைத்துக்கொள்வது அவனுக்குப் பிடிக்கும். கேசத்தின் வடிவத்தைப் பொறுத்தமட்டில், தன் சித்தப்பன் போல முனியனுக்காக சடாமுடி வளர்த்தாக வேண்டும் என்று நினைத்தான். முப்பது நாள் கழித்துக் கோயில் பழைய நிலைக்கு வந்தது. அவனே பூசாரியாய் ஆனான். முச்சந்தியில் வீடு உள்ள ஜெயராணி அக்காவுக்கு மாடு தொட்டிதான் தொழில். பத்துக்கும் மேல் பசு, எருமை, காளை எனப் பல ரகம் மாடு வைத்திருந்தாள். அவளுடைய மாடு அவ்வப்போது சாவது வாடிக்கையானது. ஒன்று இரண்டானது, இரண்டு ஐந்தானது. அருகில் இருந்த மற வீட்டு ஆட்கள் அவளிடம் “கொற வூட்டு முனி கோயிலிலிருந்து ஒரு செங்கலை எடுத்து வைத்து வணங்கு. நடப்பது நடக்கட்டும்” என்றார்கள். அவளும் கல்லைக் கொண்டமர்த்தி பூசை போட்டாள். பூச்சிதான் முன் நின்று தங்கள் கோயில் தெய்வத்தை ஒற்றைச் செங்கல்லாக நிறுத்தி ஜெயராணிக்குக் கொடுத்தனுப்பினான். வருடம் ஒன்னு ஆனது. மாடுகள் மரிக்காததை முனியன் அருள் என நம்பினாள்.

பூச்சிதான் இந்தக் கோயிலிலும் சாமி ஆடி விபூதி கொடுத்தான். தெருவும் ஊரும் அவனை முழு பூசாரியாய் அங்கீகரித்தது. சடாமுடி தவிர. சாமி ஆடி குறி சொல்லும் பூச்சியின் கையில் விபூதி வாங்கிக்கொண்டனர் ஊர் ஆட்கள். அக்கா வீட்டிற்குப் போனால் எந்நேரமும் கொயிக்கான் கறியும், பருப்புச் சோறும்தான். தோசை ஊற்றிக் கொடுத்தால் கூட கொயிக்கான் நெய் சேர்க்காமல் வாயி கொள்ளாது. அப்படி இருந்தவன், ஊர்க்காரர்களின் பொதுவுக்காய் காலங்காலமாக வெட்டப்பட்ட கொயிக்கானை விட்டுவிட்டு ஆடு வெட்ட வேண்டும் எனவும், அனைவரும் சேர்ந்து திருவிழா செய்துகொள்ளலாம் எனவும் விட்டுக் கொடுத்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

உடுத்தலும்4 மூணானும்5 கிழமையில்லாமல் சாப்பிட்டவன், கொயிக்கானை ஓங்கிய அந்த அருவாளை இன்று ஆட்டை ஓங்கும் ஒவ்வொரு நொடியும் நகைப்புக்குரியதாகவும் கோபத்துக்கானதாகவும் இருக்கும். சித்தப்பா உயிரோடு இருந்தால் ஏற்றிருப்பாரா என்று கூட நினைப்பான். இருந்தும் சனம் முக்கியம். வேடனை6 முழுதாகக் குடித்துவிட்டு சூர போதையில் அமர்ந்திருக்கும்போது பூச்சியின் நண்பன் வீரமணி ஒவ்வொருமுறையும் இவனை ஆச்சரியமாகப் பார்ப்பான்.

“அப்படி என்ன இருக்கு இந்த தெய்வத்துட்டஞ் என்னையும் தீட்டுண்ணுதான் சொல்றான். ஒண்ணையும் அப்டிதான் சொல்றான். நீ ஏன் இந்தத் தெய்வத்த கட்டிக்கிட்டு அழுவுற? இத கும்பிடறதுனால உன்ன பொது ஆளா ஆக்கி, பிரேஸிடென்டா ஆகப் போறியா என்ன? உன் பன்னியையயும் உடுத்தலையும் விட்டுக் கொடுத்து ஊராணுக்குப் பாக்கணும்னு என்ன தேவ வந்துருக்கு, சொல்லு” என்பான் வீரமணி.

வீரமணியின் பிதற்றலைக் காதில் வாங்கிக்கொள்ள மாட்டான் பூச்சி. சாமியாருக்கான எல்லாத் தகுதிகளையும் அடைந்துவிட்டபோதும் சித்தப்பா கட்டாண்டிக்கு இருந்தது போல தனக்கும் ஜடா முடி தயார் செய்ய முடிவெடுத்தார். பூச்சியின் சிறுவயது தொட்டே முடி வெட்டும்போது புகையிலையை வாயில் மென்றபடி வெளிநாட்டில் அடுத்தவன் மனைவிக்குப் பேசி அனுப்பப்பட்ட டேப் கேசட்டை சலூன் கடையில் எல்லோர் முன்னிலையிலும் கேட்டுக்கொண்டே வெட்டுவது அம்பட்ட போஸின் வழக்கம். பூச்சி போஸிடம் சென்று “எப்படி ஜடா முடி வளக்குறது” என்று கேட்டபோது,

அவன், விபூதி போட்டு சீவாமல் விட்டுவிட்டால் அவை சுருண்டு ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இறுகிக்கொள்ளும் தன்மை வந்துவிடும் எனவும், இப்படித்தான் ஏனாதி வள்ளுவர் ஜோசியனுக்குத் தான் சேதி சொன்னதாகவும், அவன் உறங்கும்போது தலையில் குருவி கூடு கட்டிவிட்டது போல முடி வளர்ந்துவிட்டது எனவும் சொன்னான். முனியாண்டியும் மருதனும் இவனுடைய கோக்கு மாக்குகளை ஒருபோதும் விரும்பியது இல்லை. “கல்லு தூக்க வந்தால் நல்ல கூலி கிடைக்கும். ஒரு ஐந்து ஆறு அரவைகள் போட்டால் வெள்ளையம்மா நல்ல கூலி தருவாள். பொழுதுக்கும் முத்துப்பேட்டை ஆட்களோட குடிக்கப் போறது, இல்லன்னா மூணாணோ உடுத்தலோ ஏதோ கொண்டு வருவான். சும்மா காவி உடுப்பக் கட்டிக்கிட்டு, மின்டல7 வளத்து திரியுறதாளஞ் என்ன இருக்கப்போது… ஒழுங்கா முருகேசன் மகளுக்கு இவன கட்டி வச்சிருக்கணும்” என்று சொல்லிக்கொள்வார்கள்.

ஒருவழியாக மூன்று மாதத்தில் சுருள்சுருளான முடிகள் சிலந்தி வலைகளாகப் பின்னத் துவங்கின பூச்சியின் தலை. தன் வயது இளவட்டங்களோடு திரைப்படத்துக்கோ திருவிழாவுக்கோ செல்லும்போது இவன் மட்டும் தனித்துத் தெரிவான். இந்தப் பார்வைகள் அவனுக்கு ‘என்ன இப்படிப் பார்க்கிறார்கள்’ என்பது போல இருக்கும்.

Illustration : Major Oak

எதிர்பார்த்ததை விடவும் ஆச்சரியமும் ஒருவித வெக்கமும், வயதுக்கு ஒவ்வாத ஒன்றைத்தான் செய்துகொண்டிருக்கிறோமோ என்று நினைப்பான். தலையை அவ்வப்போது மறைத்துக்கொள்வதும் உண்டு. பேண்டு சர்ட்டுகள் தவிர்த்து முழுக்க காவி உடையுடன் வலம் வந்தான். ஜெயராணியின் பிரித்தெடுக்கபட்ட முனி அய்யனுக்குத் திருவிழாவும் வந்தது. இந்த வருடமும் சாமி ஆடி குறி சொல்ல அழைப்பு விடுக்கப்பட்டது பூச்சிக்கு. எந்த வருடம் போலும் அல்லாமல் இந்த வருடம் ஜெயராணியின் உறவினர்கள் நிறைய குழுமியிருந்தனர். அவர்களுக்கு இந்தச் சாமியை இவள் வீட்டில் வைத்தது குறித்து,

“கொற சாமிய ஒன் வீட்டுல வச்சிருக்கஞ் ஒரு வரமொர வேண்டாமா”

என்று சொல்லி ஒரு சாரார் கடிந்துகொண்டனர். பூச்சி வந்தவுடன் கடும் மரியாதையுடன் ஜெயராணி வரவேற்றாள். அவன் ஜெயராணியைத் தொட்டுத் தொட்டு,

“அக்கா… அக்கா”

என்று பேசுவது உறவினர்களுக்கு வித்யாசாமாக இருந்தது.

“என்ன இருந்தாலும் எத எங்க வக்கணும்னு தெரியல ஜெயராணிக்கு”

எனப் பேசிக்கொண்டனர். சாம்பிராணி போடப்பட்டு, வெட்டுக் கிடா வெட்டப்பட்டது. சாமி வந்து ஆடத் துவங்கினான் பூச்சி. அருவாளை வாங்கி நெஞ்சில் தாங்கியபடி வந்து மெதுவாக ஓடிய சாமி, பின்பு வேகம் கூடியது. கூட்டதில் சனம் மிரளத் துவங்கியது. ஒருநிலைக்கு வந்த பூச்சியிடம் ஒவ்வொருத்தராகக் குறி கேட்டனர். அவன் சொல்லத் தொடங்கும்போது,

“சூ…”

எனும் சத்தத்துடன் ஜெயராணி தன்னிலை மறந்து சாமி ஆடத் தொடங்கினாள். உறவினர்கள் அவளைப் பிடித்துக்கொண்டு,

“என்ன சாமி, சொல்லு ஐயா… என்னனு சொன்னாதான தெரியும்”

மூச்சை ஒரு மைல் தூரத்துக்கு மேலும் கீழுமாக இழுத்தவளிடம் குறி கேட்டனர் உறவினர்கள். வைத்திருந்த அருவாளை எடுத்துச் சுற்றியபடி ஜெயராணியும் பூச்சியும் ஒருசேர ஆடத் தொடங்கினர்.

அந்த ஆட்டத்தில் தேர்ந்த வேகமும், தான் ஒரு பெண் என்பதை மறந்து ஆடிக்கொண்டிருந்தாள். ஆடும்போது ஜெயராணி உடற்பாகங்கள் வெளியே வருவதைத் தவிர்க்க முயற்சி செய்துகொண்டிருந்தனர் ஜெயராணி வீட்டு ஆட்கள்.

பூச்சியை ஒரு நிமிடம் நிறுத்திய ஜெயாராணி, அருவாளோடு இருந்த பூச்சிக்குத் துண்ணூறு போட்டு அருவாவை வாங்கியபடி,

“எப்பா நீ ஒரு அஞ்சு தப்பு பண்ணிருக்கப்பா

சூ சூ சூ சூ…

என் எல்லக்கி வராதப்பா சூ சூ சூ சூ…

இனிமே உன் கையில ஏன் புல்லங்க துண்ணூறு வாங்க மாட்டாங்கப்பா”

முனியாட்டம் ஆடிச் சொன்னாள்.

“இப்படி சொன்னா எப்படி, சொன்னாதான தெரியும்… அப்படி என்ன செஞ்சோம் சொல்லு ஐயா”

என்று கேட்டார் அருகிலிருந்த பூச்சியின் உறவினர்.

“அத பொதுவுள சொல்ல முடியாதுப்பா”

என்று சொல்லி மலையேறினாள் ஜெயராணி. இயல்பு நிலைக்கு வந்த ஜெயராணி, தன் கையால் அனைவருக்கும் விபூதி கொடுத்தபடி பூச்சியைப் பார்த்தாள். பூச்சி ஜெயராணியைப் பார்த்தான்.

காலங்காலமா வழிபட்ட தன் தெய்வத்தை வேறோர் இடத்தில் விட்டுவிட்டு, ஜெயாராணியின் மாடுகளின் சத்தத்தைக் கேட்டபடி கொளத்துக்கரையில் நடந்து போனான் பூச்சி.

திருவிழா முடிந்த அடுத்த நாள், எந்தச் செங்கல் முனீஸ்வரன் என்று அவளுக்குக் கொடுக்கப்பட்டதோ அந்தத் தெய்வத்தைப் பார்க்கப் போன பூச்சி ஜெயராணியின் வீட்டு வாசலில் நின்று,

“அக்கா…”

என்று அழைத்தான்.

“வா பூச்சி”

ஜெயராணி முன்பு ஜடாமுடியின்றி, அறைவட்டமாகச் சரைத்துக்கொண்டு நின்ற பூச்சி வீசிய ‘செங்கல் முனி’ குறி சொன்ன ஜெயாராணியின் வாயைப் பதம் பார்த்தது. முனீஸ்வரனாக குருதியோடு ஜெயராணி சொன்னாள்…

“சூ சூ சூ சூசூசூ…”

குறிப்பு:

  1. கொயிக்கான் – பன்றி
  2. புலாயி – திருட்டு
  3. பொத்துக்காரன் – போலீஸ்காரன்
  4. உடுத்தல் – அனில்
  5. மூணான் – ஆமை
  6. வேடன் – சாராயம்
  7. மிண்டல் – கேசம், முடி

l realelephant26@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger