திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மேல்புதுப்பாக்கம் கிராமத்தில் 1890 ஜனவரி 27இல் முனுசாமி – அலமேலு தம்பதியினருக்கு மகானாகப் பிறந்தவர் சுவாமி சகஜாநந்தர். பெற்றோர் வைத்த பெயர் முனுசாமி. தொடக்கக் கல்வியைத் தனது கிராமத்திலிருந்த அமெரிக்கன் ஆற்காட் புரோட்டஸ்டண்ட் மிஷன் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைத் திண்டிவனத்திலும் பயின்றார். குடும்ப வறுமை காரணமாக, பிழைப்புத் தேடி கோலார் தங்கவயலுக்கு இடம்பெயர்ந்தார். இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் ஏற்பட்டதால் உயிர்கள் மீது கருணை கொண்டவராக விளங்கியவர். தன்னுடைய 17 வயதில் பெற்றோரிடம் தான் சன்னியாசி ஆகப்போவதாகக் கூறி வீட்டைவிட்டு வெளியேறினார். பல ஊர்களிலும் அலைந்து திரிந்து, யோகி நீலமேக சுவாமிகள், தட்சணா சுவாமிகள், கைலாச சுவாமிகள், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கரபாத்திர சுவாமிகள் போன்றோரைச் சந்தித்து ஆன்மீக ஞானத்தைப் பெற்றார். கரபாத்திர சுவாமிகள்தான் அவருக்கு சகஜாநந்தா எனப் பெயரிட்டதாகக் கூறப்படுவதும் உண்டு.
ஆன்மீகம் மட்டுமின்றி, தான் பிறந்த சமூகம் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறையின் மீது கோபம் கொண்டவராகவும், அவர்களின் சமூக விடுதலையில் அக்கறை கொண்டவராகவும் இருந்து செயல்பட்டவர். அவரது மனவுணர்வைப் புரிந்துகொண்ட முருகேசன் பிள்ளை என்பவர் 10.07.1910 அன்று அவரைச் சிதம்பரம் அழைத்து வந்தார். ஆறுமுகசாமி, பின்னத்தூர் இலட்சுமணன் ஆகிய இருவரும் சிதம்பரம் அருகே உள்ள ஓமக்குளம் கிராமத்தில் கீத்துக் குடில் அமைத்து ஆன்மீகப் பணியை மேற்கொண்டு வந்தனர். அவர்களுடன் இணைந்து, நந்தனாரைத் தன்னுடைய அடையாளமாக ஏற்றுக்கொண்டு சமூகத்தில் பின்தங்கியிருத்த பட்டியல் சமூக மக்களுக்காகப் பணியாற்றத் தொடங்கினார் சுவாமி சகஜாநந்தர்.
1910இல் ஓமக்குளத்தில் கூரைக் கொட்டகையில் 25 மாணவர்களுடன் உண்டு உறைவிட கல்விச்சாலை தொடங்கி அதற்கு ‘நந்தனார் பள்ளி’ எனப் பெயரிட்டார். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
கீத்துக் குடிலாக இருந்த நந்தனார் மடத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை, 1918இல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் ஐயர் நாட்டினார். 1920களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கிப் பயிலும் இடமாக நந்தனார் கல்வி நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். கல்வி மட்டுமின்றிச் சமூகச் சீர்திருத்தம் மற்றும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் மிக வீரியமாக அன்றைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் சுவாமி சகஜாநந்தர் செயல்பட்டார். ஓமக்குளம் மட்டுமின்றிச் சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களை உருவாக்கினார். இவ்வகையில் சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஏழுக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை உருவாக்கியவர், சமூகப் பணிகளிலும் மிகத்தீவிரமாக இயங்கினார். சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி உட்பட அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தில் பட்டியலின மக்கள் பறை அடிக்கக் கூடாது; வெட்டியான் வேலை பார்க்கக் கூடாது போன்ற சீர்திருத்தங்களை மேற்கொண்டார். நிலவுடைமையாளர்களிடம் கூலித்தொழிலாளிகளாக இருந்தவர்களுக்கு முறையான கூலி வழங்கப்படுவதற்கும் போராட்டங்களை முன்னெடுத்து உரிமைகளைப் பெற்றுத் தந்தார். இதன் காரணமாக சாதி இந்துக்களுடைய எதிர்ப்பையும் சந்தித்தார்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் இயங்கிய மதராஸ் ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் அமைப்பில் 1920களில் இணைந்து தன்னுடைய அரசியல் பணியைத் தொடங்கினார். பிற்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1926இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மெட்ராஸ் மாகாண மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 1932வரை அப்பதவியில் இருந்தார்.
இதன்பிறகு 1936 முதல் 1947 வரை மீண்டும் மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் ரீதியாக காந்தி, ஜெகஜீவன் ராம், இராஜாஜி, வ.உ.சி, காமராஜர், அண்ணாதுரை உள்ளிட்ட பல தலைவர்களுடன் நெருங்கிய நட்பைப் பேணினார் சுவாமி சகஜாநந்தர். வ.உ.சி இறந்தபோது அவரது குடும்பத்திற்கு முன்னின்று நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறார். சுவாமி சகஜாநந்தர் ‘பரஞ்சோதி’ என்கிற இதழை நடத்திவந்துள்ளார். பல நூல்களையும் இயற்றியுள்ளார். ஆனால், தற்போது அவை கிடைக்கப்பெறவில்லை.
சுவாமி சகஜாநந்தரின் பெரும் முயற்சியில் மேலவன்னியூர், பின்னத்தூர், பண்ணப்பட்டு, சாட்டைமேடு, முகையூர் உள்ளிட்ட சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் இருபாலர் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இப்பள்ளிகள் அனைத்தும் நலப்பள்ளிகளாகவே (Welfare School) விளங்கின. மேலவன்னியூரில் இன்றளவும் இருபாலர் பயிலும் மேல்நிலைப் பள்ளி விடுதியுடன் இயங்கிவருகிறது.
நந்தனார் பள்ளி மட்டுமே சுவாமி சகஜாநந்தரால் நிறுவப்பட்டதாகப் பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால், சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் தொடங்கப்பட்ட பள்ளியே 1950களில் தற்போது அமைந்துள்ள இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
1920களில் சுவாமி சகஜாநந்தர் நடத்திவந்த நந்தனார் கல்விக் கழகத்திற்கு காட்டுமன்னார்குடி வட்டம் கள்ளிப்பாடியில் சுமார் 52 ஏக்கர் நிலமும், சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு வட்டத்தில் 28 ஏக்கர் நிலமும் ராஜாஜியால் வழங்கப்பட்டன. இதுதவிர ஆங்கிலேயர்களிடம் முறையிட்டும் குறிப்பிடத்தக்க நிலத்தைப் பெற்றிருக்கிறார் சுவாமி சகஜாநந்தர். இந்த நிலங்களே இன்றுவரை நந்தனார் கல்விக் கழகத்தின் முதன்மையான சொத்துகளாக உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்சி, எம்எல்ஏ எனச் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றினார். 1957இல் திமுக தேர்தல் அரசியலுக்கு வந்தபிறகு அதன் தலைவர் சி.என்.அண்ணாதுரை, “சுவாமி சகஜாநந்தர் அவர்கள் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வரை அவருக்கு எதிராக நாங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்” என அறிவித்ததாக வரலாற்றுக் குறிப்பு உள்ளது. இந்நிகழ்வும் சுவாமி சகஜாநந்தருக்குச் சமூகத்தில் இருந்த நன்மதிப்பையும் செல்வாக்கையும் எடுத்துரைக்கிறது. சுவாமி சகஜாநந்தரால் நிறுவப்பட்ட நந்தனார் பள்ளியை காந்தி, ஜவகர்லால் நேரு, பாபு ஜெகஜீவன் ராம், இராஜேந்திர பிரசாத், இராதாகிருஷ்ணன், காமராஜர், மு.கருணாநிதி உட்பட பல தலைவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
தமிழக அரசியல் சூழலில் ஆன்மீக ரீதியாகச் செயல்படுபவர்கள் குறித்த பார்வையானது எதிர்மறையானது. இதற்கு சகஜாநந்தரும் விதிவிலக்கன்று. ஆன்மீகவாதி என்பதால் பிராமண மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவரோ அல்லது இந்து மதத்தை முற்றிலும் சரியானது என ஏற்றுக்கொண்டவரோ அல்லர், இந்து மதத்திற்கு மாற்றாக திருக்குறள் மதம் உருவாக்கப்பட வேண்டும் எனப் பேசியவர் சுவாமி சகஜாநந்தர். தமிழகத்தில் பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் நாத்திகம் பேசியது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய அண்ணாதுரை, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். இதன்வழியாக அனைவரும் உணர வேண்டியது, மக்களின் இயல்பிலிருந்து கடவுள் மீதான நம்பிக்கையைப் பிரிக்க முடியாது என்பதே. சுவாமி சகஜாநந்தர் இயல்பிலேயே ஆன்மீகவாதியாக இருந்து அவ்வழியே மக்களை அணிதிரட்டி, கல்வி வழங்கி, நல்வழிப்படுத்த முடியும் என நம்பிச் செயல்பட்டு, பல மாற்றங்களை உருவாக்கினார். நீதி கட்சியானது 1916இல் தொடங்கப்பட்டது. ஆனால், சுவாமி சகஜாநந்தரின் கல்வி, சமூக, அரசியல் பணிகள் 1910களிலயே தொடங்கிவிட்டன. ஆக, பட்டியல் சமூகத்தவர்கள் வரலாற்றில் எப்போதும் யாரையும் சார்ந்திருக்கவில்லை.
1926, 1934 என இரண்டுமுறை நந்தனார் மடத்திற்கு காந்தி வருகை புரிந்துள்ளார். அந்நேரத்தில், காந்தியிடம் பட்டியலின மக்களின் நிலை குறித்தும் இந்து மதத்தில் பட்டியலின மக்களின் நிலை குறித்தும் பத்துக் கேள்விகளை எழுப்பினார் சுவாமி சகஜாநந்தர். இவற்றில் பலவற்றுக்குப் பதில் சொல்லாமல் சென்றார் காந்தி. 1932இல் வட்டமேசை மாநாட்டிற்காக பாபாசாகேப் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் இலண்டன் சென்றனர். அதற்காக சுவாமி சகஜாநந்தர் ஒரு கூட்டம் நடத்தி, அதில் ‘சென்று வாருங்கள் வென்று வாருங்கள்’ என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தார். பூனா ஒப்பந்தம் தொடர்பாக, காந்தி தன்னுடைய நண்பராக இருந்தபோதிலும், சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி காந்தியின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தவர்.
1938இல் இராஜாஜியால் கொண்டுவரப்பட்ட ஆலய நுழைவுச் சட்டம் சுவாமி சகஜாநந்தர் போன்றோரின் அரசியல், சமூகச் செயல்பாடுகளின் பின்னணியாக அமைந்தது. காந்தியின் அரிசன சேவா சங்கத்துடன் இணைந்தும் செயல்பட்டார் சுவாமி சகஜாநந்தர். 1947 வரை சிதம்பரம் நடராஜர் கோயிலில் பறையர்கள் உள்ளே சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. இதற்கெதிராக காந்தியின் அரிசன சேவா சங்கத்துடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பறையர் இன மக்களை அழைத்துக்கொண்டு நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தார். அன்றுமுதல் பறையர் இன மக்கள் நடராஜர் கோயில் உள்ளே சென்று வழிபடும் நிலை சுவாமி சகஜாநந்தரால் உருவானது. சுவாமி சகஜாநந்தர் சாக வேண்டும் எனக் கோபம்கொண்ட பிராமணர்கள் யாகம் வளர்த்தனர். தேசியம் என்றோ, மதம் என்றோ, முதலாளிகள் என்றோ தன்னுடைய மக்களின் உரிமைகளைத் தளர்த்திக்கொண்டவரல்ல சுவாமி சகஜாநந்தர். ஆன்மீகத்தின்படி தன் சமூகத்துக்கு உண்டான அரசியல், கல்வி, பொருளாதார செயல்பாடுகளைத் தகவமைத்துக்கொண்டவர். ஆனால், தன்னுடைய சமூகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு எனில், அவற்றைத் துறக்கவும் தயங்கியவரல்ல.
சுவாமி சகஜாநந்தர் முதலில் தன்னை சைவ சமயத்தவராக அடையாளப்படுத்தியே சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். ஆனால், சைவ மாநாடு ஒன்றில் சுவாமி சகஜாநந்தருக்கு அவமரியாதை ஏற்பட்டது. அதன்பிறகு தன்னை வைணவராக அடையாளப்படுத்திக்கொண்டார். ஆக, அவருக்கு ஆன்மீகம் என்பது சமூகப்பணிக்கு ஓர் ஆயுதமே தவிர, ஆன்மீகமே முதன்மையல்ல. 1930களில் கடலூர் மாவட்டம் திரிப்பாதியூரில் சுவாமி சகஜாநந்தர் ஒரு கூட்டத்தில் பேசும்போது, பட்டியலின மக்கள் பிராமணர்களால் பாதிக்கப்படுவதைவிட வன்னியர், செட்டியார், ரெட்டியார், முதலியார், பிள்ளை போன்ற சாதி இந்துச் சமூகங்களாலேயே அதிகம் பாதிக்கப்படுவதாக உரையாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்பு போன்ற மொழி விவகாரங்களில் சுவாமி சகஜாநந்தர், “எம்மக்கள் அவர்களின் வளர்ச்சிக்கு எந்த மொழி தேவையோ அதனை நிச்சயம் கற்றுக்கொள்வார்கள்” என்றார். பல மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தன் சமூக மக்களை ஊக்குவித்தார். சுவாமி சகஜாநந்தர் சமஸ்கிருதத்தில் நன்கு புலமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமி சகஜாநந்தரை முழு காங்கிரஸ்காரர் என நினைக்கும் போக்கு உள்ளது. ஆனால், அது உண்மையல்ல. ஆரம்ப காலகட்டங்களில் காங்கிரஸாருடன் சமூக ரீதியான தொடர்பில் மட்டுமே இருந்தார். 1940க்குப் பிறகுதான் காங்கிரஸில் இணைந்தார். அதற்கு முன்பாக கல்வியாளராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். 1927இல் தொடங்கப்பட்ட மதராஸ் ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் அமைப்பில் இணைந்து பணியாற்றினார். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தலைமையிலான இவ்வமைப்பில் எம்.சி.ராஜா, சிவராஜ் போன்றோரும் செயல்பட்டனர். இவ்வமைப்பின் சார்பாக 1937இல் எம்எல்சி தேர்தலில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். செப்டம்பர் 27-28, 1941 அன்று சேலத்தில் சுவாமி சகஜாநந்தர் தலைமையில் மெட்ராஸ் ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷன் அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
சுமார் முப்பது ஆண்டுகள் எம்எல்சி, எம்எல்ஏ எனச் சட்டமன்றத்தில் பட்டியலின, பழங்குடி மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் பணியாற்றியவர் சுவாமி சகஜாநந்தர். தியாகி இமானுவேல் சேகரன் படுகொலைக்காகவும் முதுகுளத்தூர் கலவரத்திற்காகவும் முத்துராமலிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசினார். சட்டமன்றத்தில் அவரது உறுதிமிக்கச் செயல்பாட்டை இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது.
சுவாமி சகஜாநந்தர் சமூக உரிமைக்காக மக்களைத் திரட்டி களத்திலும் வீரியமாகப் போராடியவர். நந்தனார் மடத்தின் எதிரே அமைந்துள்ள ஓமக்குளத்தில் பறையர் இன மக்கள் நீர் எடுப்பதற்குத் தடை இருந்துவந்தது. இதை எதிர்த்து 1917இல் ஓமக்குளம் கிராம பறையர் இன மக்களைத் திரட்டி நீர் எடுக்கும் போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக அன்றைய சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் சுவாமி சகஜாநந்தர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்தப் போராட்டமும் வழக்கும் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாகவே பொது இடங்களிலும் பொது அலுவலகங்களிலும் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படாததற்கு எதிராக 22.08.1924 அன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மெட்ராஸ் மாகாண அவையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்தே பட்டியலின மக்கள் பொது இடங்களிலும் பொது அலுவலகங்களிலும் சட்டப்பூர்வமாக நுழையும் உரிமை அன்றைய ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் கிடைத்தது.
இந்திய அரசாங்கத்தால் பட்டியல் பழங்குடி மக்களின் கல்வி, பொருளாதாரம், மற்றும் தீண்டாமைக்கு எதிராக அமைக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் இரண்டு போராட்டங்களை முன்னோடி போராட்டங்களாகக் குறிப்பிடுகிறார் கமிட்டியின் தலைவர் இளையபெருமாள். முதலாவது, 1917இல் சுவாமி சகஜாநந்தர் முன்னெடுத்த ஓமக்குளம் நீர் எடுக்கும் போராட்டம். இரண்டாவது, 1927இல் பாபாசாகேப் அம்பேத்கர் நடத்திய மகத் குளப் போராட்டம்.
சுவாமி சகஜாநந்தரின் அரசியல் வாரிசாக வரலாற்றில் அடையாளம் காணப்படுபவர் எல். இளையபெருமாள். சுவாமி சகஜாநந்தர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் இளையபெருமாள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1958இல் சிதம்பரத்தில் இளையபெருமாளும் சுவாமி சகஜாநந்தரும் இணைந்து நடத்திய மாநாட்டில் முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
சுவாமி சகஜாநந்தர், 01.05.1959 அன்று தனது 69ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது உடல் நந்தனார் மடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிதம்பரம் – சீர்காழி சாலையில் ஆண், பெண் இருபாலர் தனித்தனியே பயிலும் நந்தனார் பள்ளி இன்றுவரை செயல்பட்டுவருகிறது. 115 ஆண்டுகள் வரலாறு கொண்டது இப்பள்ளி. 1990இல் சுவாமி சகஜாநந்தரின் நூற்றாண்டை சிதம்பரத்தில் இளையபெருமாள் நடத்தினார். இதில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி கலந்துகொண்டார். சுவாமி சகஜாநந்தரின் சமூகப் பணியைச் சிறப்பிக்கும் பொருட்டு 2014ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுவாமி சகஜாநந்தருக்கு அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்காக செ.கு. தமிழரசன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் போன்றவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளனர். சுவாமி சகஜாநந்தரின் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு 2018இல் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டது. சிதம்பரம் நந்தனார் ஆண்கள், பெண்கள் பள்ளிகளிலும் நந்தனார் மடத்திலும், சுவாமி சகஜாநந்தர் மணிமண்படத்திலும் சுவாமி சகஜாநந்தரின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இதுதவிர காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகே சுவாமி சகஜாநந்தருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதே காட்டுமன்னார்குடி பேருந்து நிலையம் அருகே எல். இளையபெருமாளுக்கும் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சுவாமி சகஜாநந்தரின் சமூகப் பணிக்குரிய குறைந்தப்பட்ச அடையாளங்களாகும்.
ஜனவரி 27, 2026 சுவாமி சகஜாநந்தரின் 136ஆவது பிறந்ததினம்.
] balasingam736@gmail.com





