கடந்த கால பெருமிதங்களும் நவீனத்துவமற்ற அஞ்ஞானமும்

கனகா வரதன்

டந்த மாதம் ஜூலை 31ஆம் தேதி தமிழ்நாடு அரசு தனது ட்ரான்ஸ்ஜெண்டர் கொள்கை அறிக்கையை தமிழ்நாடு மாநில திருநங்கையர் (?) கொள்கை 2025 என வெளியிட்டிருந்தது. கேரளா அரசு பத்தாண்டுகளுக்கு முன் (2015) இந்தியாவில் முதன்முறையாக திருநர் மக்களுக்கான கொள்கை வரைவைக் கொண்டுவந்தது. அதன் பின் கர்நாடகா (2017), அசாம் (2020), ஒடிசா (2021), மகாராஷ்டிரா (2024) என ஐந்து மாநிலங்கள் சென்ற ஆண்டு நிலவரப்படி ஏற்கெனவே இப்படியானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன.1 கடந்த மூன்றாண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கொள்கை அறிக்கை குறித்துப் பால்புதுமையினர் சமூக மக்களிடமிருந்து ஒருசில நேர்மறை கருத்துகளையும், பரவலான எதிர்மறை கருத்துகளையும் காண முடிகிறது. இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்தக் கொள்கை அறிக்கையின் மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பதைத் திறனாய்வு செய்வதன் மூலம் விவாதத்தை எழுப்புவதும், சில கேள்விகளை முன்வைப்பதும்தான்.

தமிழ்நாடு அரசின் இந்தக் கொள்கை முடிவைப் புரிந்துகொள்வதற்கும், ஆராய்வதற்கும் திருநர் உட்பட பால்புதுமையினரின் வரலாற்றுப் பின்னணியை, குறிப்பாக, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டப் போராட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதிலும் இந்தக் கொள்கை அறிக்கையை நேரடியாகப் பாதித்த இரண்டு நிகழ்வுகளான ‘திருநர் நபர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019’, ‘சுஷ்மா vs சென்னை காவல் ஆணையர், 2021’ வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மாநில, ஒன்றிய அரசுகளுக்குப் பால்புதுமை சமூக மக்கள் சந்திக்கும் பாகுபாடுகளைக் களைய விதிகளையும் கொள்கைகளையும் வகுக்க பரிந்துரைத்த நிகழ்வு முக்கியமாகிறது.2 இந்த இரண்டு நிகழ்வுகளையும் தாண்டி திருநர் மக்கள் சார்ந்த சில அடிப்படைப் புரிதல்களை விளக்குவதன் மூலம் தெளிவானதொரு பார்வையை முன்வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

 

காலவரிசை

முதலில் திருநர் மக்கள் உள்ளிட்ட பால்புதுமையினரின் வரலாற்றுப் பார்வையைக் காலவரிசையின் மூலம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். இது பரிபூரண அல்லது முழுமையான காலவரிசை இல்லையென்றாலும், குறிப்பிடத்தக்கப் புரிதலை நம்மால் அடைய முடியும்.

  • 1861 – ஆங்கிலேய காலனிய அரசு, தாமஸ் மெக்காலே என்பவரால் வரையறுக்கப்பட்ட தண்டனைச் சட்டப் பிரிவு 377ஐ அறிமுகப்படுத்தியது. இது ஹோமோ செக்ஸுவல் உறவு முறைகளைப் பாவச் செயலாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவித்தது.3
  • 1897 – 1871ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தில் ஹிஜ்ரா மக்களைக் கண்காணிக்க, நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பிரத்தியேக திருத்தங்களைக் கொண்டுவந்து ஒடுக்குமுறைகளில் இறங்கியது. காலனிய அரசின் பிரதான நோக்கம் இந்த மக்களை முற்றிலும் அழித்தொழிப்பதாக இருந்ததை ஆவணக் குறிப்புகளின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.4
  • 1934 – ‘சமாஜ் ஸ்வஸ்திய’ பத்திரிகையின் குஜராத்தி பதிப்பில் சுயஇன்பம், தற்பாலீர்ப்பு சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளித்ததற்காக பகுத்தறிவுவாதியான டாக்டர் கார்வே மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அவருக்கு ஆதரவாக பாபாசாகேப் அம்பேத்கர் களமிறங்கினார். கருத்துச் சுதந்திரம், பாலியல் கல்வியைப் போதிப்பதற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மத அடிப்படைவாதத்திற்கு எதிராக நிலைநாட்ட வேண்டிய அவசியத்தையும், தற்பாலீர்ப்பு இயற்கையானது என்ற ஹவேலோக் எல்லிஸ் போன்ற ஐரோப்பிய அறிஞர்களின் கருத்துகளையும் மேற்கோள் காட்டி பாபாசாகேப் வாதிட்டார்.5
  • 1949 – குற்றப்பரம்பரை சட்டம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் கர்நாடக போலீஸ் சட்டம் 1963, பிரிவு 36(அ) போன்ற பல மாநில சிறப்புச் சட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் திருநர் மக்களுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறைகளை நிகழ்த்துவதற்கு வழிவகை செய்தது.6
  • 1950 – பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. உறுப்பு 14 சமத்துவத்தையும், உறுப்பு 15 (1) ஜாதி, மதம், பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான உரிமையையும், உறுப்பு 19 (1)(அ) கருத்துச் சுதந்திரத்தையும், உறுப்பு 21 வாழ்வதற்கான உரிமையையும், தனி நபர் சார்ந்த உரிமைகளையும் அனைத்து குடிமக்களுக்கும் உறுதிப்படுத்தியது.
  • 2001 – சட்டப் பிரிவு 377க்கு எதிராக நாஸ் பவுண்டேஷன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது பால்புதுமையினர் தங்கள் உரிமைகளுக்கான சட்டப் போராட்டத்தைத் துவங்கிய மைல்கல் என்றே சொல்லலாம். (1994ஆம் ஆண்டு இதே போன்ற வழக்கு தொடுக்கப்பட்டாலும் அது பெரிதாக கவனிக்கப்படவில்லை).
  • 2008 – தமிழ்நாடு அரசு இந்தியாவில் முதல் மாநிலமாக திருநங்கை நல வாரியத்தை உருவாக்கிப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. இந்தியாவைத் தாண்டி உலக அளவில் திருநர் மக்கள் நலன் சார்ந்து இது முக்கிய முன்னெடுப்பாக கவனிக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு அரவாணிகள் மறுவாழ்வுக்காக அமைக்கப்பட்ட துணை கமிட்டியும், 2006ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனால் சட்டமன்றத்தில் நல வாரியம் அமைக்கக் கோரிக்கை எழுப்பப்பட்டதும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் ‘திருநங்கை’ என்று பெயர் சூட்டப்பட்டதும் இதற்கு முந்தைய குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.7
  • 2013 – கௌஷல் vs ஒன்றிய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம், 2007ஆம் ஆண்டு சட்டப்பிரிவு – 377ஐ நீக்கிய டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை மாற்றி எழுதி, தற்பாலீர்ப்பைக் குற்றமற்றச் செயலாக உறுதி செய்யும் உரிமை நாடாளுமன்றத்திற்குத்தான் இருக்கிறதென்று வரையறுத்தது. இது பால்புதுமையினரின் உரிமைகளில் பெரும் பின்னடைவையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் சுதந்திரமாகச் செயல்பட்ட பலர், தாங்கள் இப்போது குற்றவாளிகளாகக் கருதப்படலாம் என அஞ்சினர்.8
  • 2014 – நால்சா vs ஒன்றிய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க, திருநர் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்பை வழங்கியது. பாலினத்தைச் சுயநிர்ணயம் செய்யும் உரிமையும், திருநர் மக்களுக்கான வாழ்வாதாரம், சுயமரியாதை, பாகுபாட்டுக்கு எதிரான நீதி, வெறுப்பு குற்றங்களை அங்கீகரித்தல் போன்ற பல முக்கிய அம்சங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பு சுதந்திர இந்தியாவில் திருநர் மக்களுக்கான முதல் அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது.9 இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அதே ஆண்டு மேலவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தாக்கல் செய்த தனிநபர் மசோதா, முதன்முறையாக திருநர் மக்களுக்கு இரண்டு சதவீத இட ஒதுக்கீடை உறுதி செய்ய வலியுறுத்தியது. நால்சா தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு 2017ஆம் ஆண்டு நீதியரசர் புட்டன்னசாமி வழங்கிய தீர்ப்பு இந்தியாவில் தனி உரிமையை (privacy) அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது.
  • 2018 – தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, தண்டனைச் சட்டம் 377ஐ நீக்கி ஒருமனதாகத் தீர்ப்பளித்து நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இங்கே குறிப்பிடப்பட வேண்டிய இரண்டு அம்சங்கள் இந்தியாவில் இன்றும் பால்புதுமையினரின் திருமணம் அங்கீகரிக்கப்படுவதில்லை, மற்றொன்று இந்தச் சட்டப்பிரிவு திருநர் மக்களைப் பாதிக்காது என்ற வாதம். பெரும்பாலும் ஹார்மோன் அல்லது பிற மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டு தங்கள் தோற்றத்தைப் பாலினத்திற்கு ஒத்தவாறு அமைத்துக்கொள்ளாத பல திருநர் மக்கள், தற்பாலீர்ப்பாளர்களாகக் கருதப்பட்டுப் பல ஒடுக்குமுறைகளுக்கும், காவல் நிலையத்தில் துன்புறுத்துதலுக்கும் உள்ளாவது திருநர் சமுதாயத்தில் உள்ள தற்பாலீர்ப்பாளர்களை நேரடியாகவே பாதித்தது. அதாவது, பெண்ணைக் காதலிக்கும் திருநங்கைகளும், ஆணைக் காதலிக்கும் திருநம்பிகளும் இதனால் நேரடியாகவே பாதிக்கப்பட்டிருந்தனர்.
  • 2019 – திருநர் நபர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் அமலுக்கு வந்தது. அடுத்த ஆண்டு (2020) இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளும் வழிமுறைகளும் வெளியிடப்பட்டன. 2016ஆம் ஆண்டு முதல் வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, திருநர் சமூகத்தின் பல எதிர்ப்புகள், போராட்டங்களின் விளைவாகப் பலகட்ட மறுபரிசீலனைகள் செய்யப்பட்டு, இறுதியாக 2019இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய இரண்டு அம்சங்கள், நால்சா வழங்கிய பாலினத்தைச் சுய நிர்ணயம் செய்யும் உரிமையை இந்தச் சட்டம் மறுக்கிறது; இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் திருநர் மக்களுக்குப் பலத்த ஏமாற்றத்தை அளித்தது.
  • 2023 – சுஷ்மா vs சென்னை காவல் ஆணையர், 2021 வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய பல வழிகாட்டுதல்களின்படி அக்டேபர் 2022 மாநில திட்டக் குழு தயாரித்த பால்புதுமையினருக்கான முதல் திட்ட வரைவைப் பரிசீலிக்கவும், இறுதியாக கொள்கை அறிக்கையைத் தயார் செய்யவும் பதினொரு நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட அடுத்த கட்ட வரைவு குறித்து மாநிலம் முழுவதும் உள்ள பால்புதுமை சமூக மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில், தங்களுக்குத் தனியான கொள்கை வரைவு வேண்டும் என்றும், ஒட்டுமொத்த பால்புதுமை சமூகத்தினரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவது தங்களுக்குக் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளையும் வாய்ப்புகளையும் தட்டிப் பறிக்கும் என அஞ்சுவதாகவும் சில திருநங்கைகள் கருத்துகள் தெரிவித்தனர்.
  • 2025 – தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பால்புதுமையினருக்குத் தனியாகவும், திருநர் சமூகத்தினருக்குப் பிரத்தியேகமாகவும் என இரண்டு கொள்கைகளைத் தயாரித்து வெளியிட உறுதியளித்து, இப்போது திருநருக்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

 

தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை – 2025

வாழ்த்துகளும் நன்றிகளும்

இந்தக் கொள்கை அறிக்கையையும், தொடர்பான அரசாணையையும் முதன்முறை வாசிக்கும்போது இதன் நோக்கம் மேன்மையானதாக இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் கோட்பாட்டையும் “யாரையும் விட்டுவிடாத வளர்ச்சி” என்ற ஐ.நா. சபையின் இலக்குகளையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறோம் என்ற தமிழ்நாடு அரசின் வாக்குறுதி பாராட்டுக்குரியது. தமிழ்நாடு அரசு திருநர் மக்களின் நலன் சார்ந்து முதன்மை மாநிலமாக இருக்கிறது என்ற பெருமிதத்தின் வெளிப்பாட்டை இவ்வறிக்கையில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசுக்கு முழுத் தகுதி உண்டென்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

அடையாள அட்டை, குடும்ப அட்டை, நிலப் பட்டா, ஓய்வூதியம் எனத் திருநர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும், மானியங்கள் வழங்குவதிலும், இலவசப் பேருந்து, கல்விச் சலுகை போன்ற பல முன்னோடி திட்டங்களையும் இந்திய அளவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியிருக்கிறது என்பதை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும். இணைப்பில் இதுவரை வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளின் புள்ளிவிவரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்கள் வருங்காலங்களில் திருநம்பிகளுக்கும் கிடைக்கப் பெறும் என்று கொள்கை அறிக்கையின் மூலம் நாம் நம்பிக்கை கொள்ள முடிகிறது.

அடுத்த கட்டமாக இந்த அறிக்கை கல்வி, வேலைவாய்ப்பு, பாலின அடையாளத்திற்கான உரிமை, கண்ணியம், சமத்துவத்திற்கான உரிமை என அனைத்து முக்கிய உரிமைகளையும் முன்வைக்கிறது (பகுதி 3). இது, உரிமை சார்ந்த முழுமையான பார்வை இந்த அரசுக்கு இருக்கிறதென்று எடுத்துக்காட்டுகிறது.

மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்க முற்படுவதையும், அதில் தலைமைச் செயலர் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்களையும், பல்வேறு அமைச்சகங்களை உள்ளடக்கியிருப்பதையும் கொண்டு அரசு இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த முனைப்பு காட்டுகிறது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

கேள்விகள் – குழப்பங்கள் – சறுக்கல்கள்

இந்தக் கொள்கை அறிக்கையைச் சுற்றி நடந்த நிகழ்வுகளை உற்று நோக்கிய பலருக்கும் எழுந்திருக்கக் கூடிய சில கேள்விகளை நாம் முன்வைப்பது அவசியமாகிறது. அதில் முதன்மையானது, இந்த அறிக்கையைத் தயார் செய்வதற்கு எதற்காக மூன்றாண்டுகள் தேவைப்பட்டன என்பதைத் தாண்டி, மாநிலம் முழுவதும் நடந்த கருத்து கேட்புக் கூட்டங்களின்போது முன்வைக்கப்பட்ட வரைவு அறிக்கையில் இருந்த பல அம்சங்கள் இதில் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன என்பதுதான். குறிப்பாக, இட ஒதுக்கீடு மற்றும் பிற நலதிட்டங்கள் சார்ந்த பல அம்சங்கள் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

அடுத்து பால்புதுமையினருக்குத் தனிக்கொள்கை என்ற அரசின் முடிவை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், அது எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் வருகிறது. இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருநர் மக்களை விட பால்புதுமையினர் சம்பந்தமான புரிதல்தான் உடனடித் தேவையாக இருக்கிறது. சில சமயம் முற்போக்கு தலைவர்கள் கூட பால்புதுமையினர் மீதான வெறுப்பை வெளிக்காட்டும்படி பேசுவதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ட்ரான்ஸ்ஜெண்டர் – திருநங்கையர் – திருநர்

இந்தக் கொள்கை அறிக்கையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே இது யாருக்கானது என்பதைப் புரிந்துகொள்வதில் ஒருவிதக் குழப்பம் நிலவுகிறது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணத்தின் ஆங்கிலப் பதிப்பில் டிரான்ஸ்ஜெண்டர் என்ற பதமும், தமிழ்ப் பதிப்பில் திருநங்கையர் என்ற பதமும் இடம்பெற்றிருப்பது தலைப்பிலேயே ஒருவகையான சங்கடத்தை உருவாக்குகிறது. அதே சமயம், இந்த ஆவணத்தில் ட்ரான்ஸ்ஜெண்டர் பர்சன் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக மருவிய பாலினம், மூன்றாம் பாலினம் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத பதங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

திருநங்கை என்பது பிறப்பின்போது ஆணாக அடையாளப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்படும் நபர்கள், தங்களைப் பெண்ணாக உணர்ந்து அதற்கான அங்கீகாரத்தை, உரிமையைக் கோருபவர்களைக் குறிக்கும் சொல்லாகவும்; திருநம்பி என்பது பிறப்பின்போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்படும் நபர்கள், தங்களை ஆணாக உணர்ந்து அதற்கான அங்கீகாரத்தை, உரிமையைக் கோருபவர்களை குறிக்கும் சொல்லாகவும்; திருநர் என்பது இந்த இரண்டு மக்களையும் சேர்த்துக் குறிக்கும் குடைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அடிப்படைச் சொல்லியலைப் புரிந்துகொள்வதில் அப்படி என்னச் சிக்கல் இருந்துவிட முடியும். இது மொழிபெயர்ப்பில் இருந்த மெத்தனப் போக்கா இல்லை, இதுகூட புரியாமல்தான் கொள்கை அறிக்கை தயார் செய்தார்களா?

மேலும் இடைப்பாலின மக்கள் தங்களைத் திருநர் என்ற குடையின் கீழ் கொண்டு வராமல் தனியாகக் குறிப்பிட வேண்டுமென்று திருநர் பாதுகாப்பு மசோதா காலத்திலிருந்து முறையிட்டுவருகிறார்கள். அதை இந்த அறிக்கையும் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது.

இங்கே ஒரு கூடுதல் தகவல். ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்ஜெண்டர் என்பது பெயர்ச்சொல் கிடையாது. அது விளிப்பெயர், மதிப்புக் கூட்டு விகுதி மட்டுமே. ஒருவரைக் குறிக்க ஆங்கிலத்தில் ட்ரான்ஸ் மக்கள் என்றும், ட்ரான்ஸ் பெண் அல்லது ட்ரான்ஸ் ஆண் என்றோ குறிப்பிடுவதுதான் சரியான வழக்கம். ஆனால், அதையும் வெறுமனே டிரான்ஸ்ஜெண்டர் என்ற பதத்தில் உபயோகிப்பது இந்தச் சமூக மக்களின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்குவதை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

இதே கருத்தை வலியுறுத்தி உயர் நீதிமன்றமும் “திருநர் மற்றும் இடைப்பால் இனத்தவர் கொள்கை” என்று இந்தக் கொள்கை அறிக்கையைப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தியிருக்கிறது.

பெண் – திருநங்கை – அரவாணி

இந்த அறிக்கையில் எனக்கு எழுந்த அடுத்த குழப்பம், பாலின சுய நிர்ணயம் அல்லது பாலின அடையாளத்தின் உரிமை (3.1) சார்ந்த விளக்கம்தான். இந்த ஆவணம் ஒருகட்டத்தில் எந்தவித மருத்துவச் சிகிச்சையும் இல்லாமல் ஒருவர் ஆண், பெண் அல்லது திருநராக தங்களைச் சுயநிர்ணயம் செய்யும் உரிமை இருக்கிறது என்று கூறினாலும், அடுத்த வரியிலேயே திருநர் பாதுகாப்புச் சட்ட (2019) விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கிறது.

இந்தியாவில் பாலினத்தைச் சுயநிர்ணயம் செய்யும் உரிமை முழுதாக வழங்கப்படவில்லை. ஒருவர் தன்னைத் திருநராக, திருநங்கை அல்லது திருநம்பியாகச் சுயநிர்ணயம் செய்துகொள்ள முடியும். ஆனால், ஆண் என்று அடையாளப்படுத்தப்படுபவர் பெண் என்று உரிமைக் கோரவும், பெண் என்று அடையாளப்படுத்தப்படுபவர் ஆண் என்று உரிமைக் கோரவும் பால் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையும், அது சம்பந்தமான மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். நால்சா தீர்ப்பில் வழங்கப்பட்ட இந்தச் சுய நிர்ணய உரிமையைத் திருநர் பாதுகாப்புச் சட்டம் (2019) மாற்றியமைத்தது. திருநர் மக்களின் பெரும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்குத் தமிழக அரசின் கொள்கை வரைவு உருத்து ஆணையாக இருக்கும் என்று தோன்றவில்லை. சில ஆங்கில நாளேடுகள், சுயநிர்ணய உரிமையைத் தமிழக அரசின் கொள்கை வழங்குகிறது என்று வெளியிட்டிருப்பது தவறான புரிதல் என்றே என்னளவில் தோன்றுகிறது.10

இங்கே விவாதிக்கப்பட வேண்டிய முக்கியப் புள்ளி, திருநங்கை என்ற சொல்லையும், அரவாணி என்ற சொல்லையும் நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்? திருநர் பாதுகாப்புச் சட்டம் திருநர் நபரை இப்படித்தான் விவரிக்கிறது:

transgender person’ (திருநர்) என்பது பிறக்கும்போது அந்த நபருக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் பொருந்தாத பாலினத்தைக் குறிக்கும். மேலும், trans man (திருநம்பி) அல்லது trans woman (திருநங்கை), (அந்த நபர் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை அல்லது லேசர் சிகிச்சை அல்லது அத்தகைய பிற சிகிச்சையைப் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும்), இடைச்செருகல் வேறுபாடுகள் உள்ள நபர், பாலினப்பிறவி மற்றும் கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற சமூக – கலாச்சார அடையாளங்களைக் கொண்ட நபர் ஆகியோர் அடங்குவர்.

திருநர், திருநங்கை, திருநம்பி என்பதெல்லாம் நாம் டிரான்ஸ்-பர்சன், டிரான்ஸ்-உமன், டிரான்ஸ்-மேன் போன்ற ஆங்கில வார்த்தைகளின் தமிழ் இணைச் சொற்களாகத்தான் புரிந்துகொள்கிறோம். அவற்றை ஹிஜ்ரா, அரவாணி போன்ற சமூகப் பண்பாட்டு இனக்குழு அடையாளங்களாகப் பார்ப்பதில்லை. அப்படியெனில், இங்கு எழும் ஒரு கேள்வி “எல்லா அரவாணிகளும் திருநங்கைகள். ஆனால், எல்லா திருநங்கைகளும் அரவாணிகள் இல்லை என்று புரிந்துகொள்ளலாமா? அல்லது திருநங்கை என்பது அரவாணி என்ற சொல்லின் மாற்றாக, கலாச்சார இனக்குழு அடையாளத்தின் புது சொல்லாடலாக எடுத்துக்கொள்ளலாமா?” சட்டத்தின்படி முன்னதும், தமிழ்நாட்டின் மைய நீரோட்டத்தின்படி பின்னதும் சரியானதாக இருக்கும்.

இந்தக் கேள்வி ஏன் முக்கியமாகிறதென்றால், திருநங்கை என்று கலைஞர் பெயர் சூட்டிய பிறகான இந்த இருபது ஆண்டுகளில் இனக்குழு அடையாளங்களை உதறித் தள்ளிய திருநங்கைகள் கணிசமாக இருக்கிறார்கள். திருநர் சமூகம் உள்ளடக்கிய ஹிஜ்ரா, அரவாணி போன்ற இனக்குழு அடையாளங்களுக்கு இன்று என்ன அவசியமும் தேவையும் இருக்கிறது என்பதைச் சமூகம் சிந்திக்க வேண்டும். அவற்றின் மதிப்பீடுகள் என்னவாக இருக்கிறது, மத – கலாச்சார அடையாளங்களைப் பேணிக் காப்பதன் மூலம் நாம் கட்டிக் காக்கும் பண்பாட்டு எச்சங்கள் என்னென்ன? செரினா நந்தா போன்ற மானுடவியல் வல்லுநர்களால் தொண்ணூறுகளில் வரையறுக்கப்பட்ட ஆணும் பெண்ணும் அல்லாத மூன்றாம் பாலினத்தவர் என்ற வக்கிரத்தை இந்தச் சமூகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் சுமக்க வேண்டும்? இந்த ஆய்வுகள் பெரும்பாலும் காலனிய, கீழைத்தேயப் (orientalist) பார்வைக் கொண்டது. இன்றளவும் திருநர் மக்களை ஆய்வுக்குட்படுத்துகிறோம், ஆவணப்படுத்துகிறோம் என்று கிளம்பும் பெரும்பாலான கலைஞர்களும், ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் இதே பார்வையைக் கொண்டிருக்கும் போக்கைக் காண முடிகிறது. இந்த இனக்குழு அடையாளங்களை உதறித் தள்ளாமல் திருநர் சமூகம் முன்னேறிப் போக முடியாது என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதை ஏதோ திருநர், குறிப்பாக திருநங்கை மக்களின் விருப்பம் சார்ந்த போக்காகக் காணாமல், சமூகச் சீர்திருத்தத்திற்கான தேவையாகத் தமிழ்நாடு அரசும், முற்போக்குச் சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே திருநர் மக்களுக்குக் குடும்பத்துடன் வாழும் உரிமை முக்கியமானதாகிறது. கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குடியிருப்பு மற்றும் தங்குவதற்கான உரிமையை (3.8) இதன் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன்.

கருத்துச் சுதந்திரம் – கலை மேம்பாடு – பாதுகாப்பு

திருநர் மக்களுக்கான கருத்துச் சுதந்திரத்தையும் (3.3) பாலினத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் இந்த அரசு உறுதிப்படுத்தும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது எப்படி நடைமுறைபடுத்தப்படும் என்பதுதான் கேள்விக் குறி. தனிப்பட்ட முறையில் இதற்காக ஏதேனும் பிரத்தியேக நிதி ஒதுக்கப்படுமா? அல்லது புகார்ப் பெட்டிகள், பிரத்தியேக ஹார்ட் லைன் வசதிகள் செய்து தரப்படுமா? அரசுதான் விளக்க வேண்டும்.

அடுத்ததாக திருநங்கைகளுக்குக் கலை மேம்பாட்டில் பயிற்சி அளிக்கப்படும் என்பது இந்த அரசு திருநர் மக்களையும், திருநங்கைகளையும் எப்படிப் பார்க்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. திருநங்கைகள் கோயில் திருவிழாக்களிலும், கல்யாண, சாவு வீடுகளிலும் ஆடிப் பாடி பிழைப்பு நடத்துவது அவர்களின் சாபக்கேடு. அப்படியிருக்க, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருநங்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்து விட முடியும் என்று இந்த அரசு நம்புகிறது? எந்தக் கள ஆய்வின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டது?

கடைசியாக, திருநர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திருநர் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும் துன்புறுத்தலையும் தண்டிப்பதற்குச் சட்ட விதிகளைக் கடுமையாக அமல்படுத்த இந்த அரசு உறுதி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், திருநர் பாதுகாப்புச் சட்டம் (2019) திருநர் மக்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்குக் குறைந்தபட்சமாக ஆறு மாத தண்டனையும் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளும் நிர்ணயித்திருக்கிறது. இது, திருநங்கை அல்லாத பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்குக் கொடுக்கப்படும் தண்டனையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. திருநர் பாதுகாப்புச் சட்டமே திருநர்களுக்கு எதிரான வன்கொடுமையை மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்பதுதான் வேதனையான உண்மை என்பதையும் இங்கே எடுத்துக்காட்ட வேண்டியிருக்கிறது.

மருத்துவம் – ஆரோக்கியம் – கண்ணியம்

ஆரோக்கியத்திற்கான உரிமை சார்ந்து (3.4) மருத்துவப் பாடத் திட்டங்களை மேம்படுத்துதல், மருத்துவப் பணியாளர்களுக்குத் தொடர் பயிற்சி அளித்தல் போன்ற அரசின் முன்னெடுப்புகள் வரவேற்கத்தக்கது. கட்டாய (பால் / பாலியல்) மாற்றுச் சிகிச்சைகளைத் தடை செய்வதும், அதற்குத் தண்டனைகளை உறுதி செய்வதும், இதனால் விளையும் தீங்குகள் குறித்து குடும்பம் மற்றும் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முடிவும் சரியான கண்ணோட்டத்தில் அமைந்திருக்கின்றன.

திருநர் மற்றும் இடைபால் சமூக மக்களைப் பொறுத்தவரை மருத்துவச் சேவை அவர்களது உடல்நலம் மட்டுமின்றி மனநலம் சார்ந்தும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மருத்துவச் சேவையைத் தாண்டி மருத்துவமனையில் எப்படிக் கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். இந்த அறிக்கையை வாசிக்கும்போது நமக்கு எழும் மற்றொரு எண்ணம், இது முழுக்க முழுக்கத் திருநங்கையரைச் சார்ந்திருக்கிறது என்பதுதான். திருநம்பியர் மற்றும் இடைப்பால் மக்களுக்கான தேவைகளைப் புரிந்துகொள்ள அறிக்கையைத் தயாரித்த குழுவிடம் துறைசார் நிபுணத்துவம் இல்லை என்றும், உள்ளார்ந்த உரையாடல்கள் நடத்தப்படவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இங்கே சுட்டிக்காட்ட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம், இந்தக் கொள்கை அறிக்கை உலக அளவில் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு மருத்துவத் தரத்தையும், நெறிமுறைகளையும் (WPATH) அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளையும் அமல்படுத்துவதை உறுதி செய்யாமல் இருப்பதுதான்.

இந்த இடத்தில் மகளிர் ஆணையத்திற்கு நிகரான சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய திருநர் மக்களுக்கான ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நாம் மேற்கோள் காட்டலாம். இப்படியான அதிகாரம் பொருந்திய ஆணையம் இல்லாமல் களத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் – மருத்துவப் பணியாளர்களுக்கான நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதும், கட்டாய சிகிச்சைகளைத் தடுப்பதும் தண்டிப்பதும் சாத்தியமில்லாத ஒன்றாகிவிடும். மருத்துவச் சேவைகளில் திருநம்பிகள் சந்திக்கும் அவலங்களை எடுத்துக் காட்டிய சமீபத்திய செய்திக் கட்டுரை இங்கே முக்கியமானதாகப் பார்க்கப்பட வேண்டும்.11

கல்வி – வேலைவாய்ப்பு – சமூக நீதி

இடைநிற்றலைத் தடுத்தல், இடை நின்றவர்கள் கல்வியை முடிக்க ஊக்குவித்தல், ஆசிரியர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வயது வரம்பைத் தளர்த்துதல், தொடர்பு அலுவலர்கள் நியமித்தல், கல்விச் சான்றிதழ்களில் பெயர், பாலின மாற்றத்திற்கான நடவடிக்கைகளை உறுதி செய்தல், ஆவணங்களில் திருநர் என்ற தேர்வைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்தல், சுயதொழில் உதவித் திட்டங்கள், மானியம், வேலைவாய்ப்பு முகாம்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்ற அனைத்து அம்சங்களும் வரவேற்கத்தக்கவை. ஆனால், திருநர் மற்றும் இடைபாலின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்காமல் முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியாது என்பது சமூகநீதி அரசுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

திருநர் மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராகக் கருதும் நடைமுறையை இந்தக் கொள்கை அறிக்கையும் உறுதி செய்கிறது. சமூகநீதி திராவிட அரசுக்கு இடஒதுக்கீட்டின் அவசியமும் தேவையும் நன்றாகத் தெரிந்திருக்கும். இட ஒதுக்கீட்டிற்காகப் பல சட்ட, அரசியல் போராட்டங்களை வரலாறு நெடுக முன்னெடுத்த இந்த அரசுக்கு இந்தக் கொள்கை அறிக்கை ஒரு கரும்புள்ளிதான். பல்வேறு மக்களால் கிடைமட்ட இடஒதுக்கீட்டின் தேவைகளும் நன்மைகளும் எடுத்துக்காட்டப்பட்ட நிலையில் இங்கு புதிதாகச் சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.

ரக்ஷிகா ராஜ் வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஒரு சதவீத கிடைமட்ட இடஒதுக்கீடை உறுதி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது (05.08.2025). இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம், கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது நூறு பொதுநல வழக்குகளாவது பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் திருநர் மக்களால், திருநர் சமூக நலன்கள் சார்ந்து தொடுக்கப்பட்டிருக்கும். பாபாசாகேப் வகுத்த சட்டமும் நீதிமன்றங்களும்தான் இந்த நாட்டில் அரசியல் பெரும்பான்மை இல்லாதவர்களுக்கு வடிகாலாக இருக்கிறது என்பது நிதர்சனமாக இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒவ்வொருமுறையும் நீதிமன்றத்தின் மூலம் அழுத்தம் கொடுப்பது, அரசின் மாண்பையும், அரசின் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கையையும் கேள்விக்கு உட்படுத்தும் என்பதை இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

நல வாரியமும் – நடைமுறைச் சிக்கலும்

இந்தக் கொள்கை அறிக்கையின் பிரதான பிரச்சினை இது மேம்போக்காக இருப்பதுதான். எந்தத் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடோ, செயல்திட்டமோ நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளோ, காலக்கெடுவோ, அபராதங்களோ, தண்டனைகளோ தெளிவாக இல்லை. ஓரளவுக்கு திருநர் பாதுகாப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி இது செயல்படுத்தப்படும் என்றாலும், நிதி ஆதாரம், செய்து முடிப்பதற்கான கால நிர்ணயம் போன்ற அம்சங்கள் தெளிவாக வரையறுக்கப்படாமல் நாம் குற்றம்சாட்டவோ, பாராட்டவோ முடியாது. இந்தக் கொள்கை அறிக்கையைச் செயல்படுத்த திருநங்கை நல வாரியம் ஆலோசனை அமைப்பாகவும், உச்ச அமைப்பாகவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் நாம் சென்ற ஆண்டு தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் திருநர் அல்லது திருநங்கையர் நல வாரியங்களின் செயல்பாடு குறித்த கட்டுரையை மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது.12 பிற நல வாரியங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு திருநங்கை நல வாரியம் ஓரளவுக்குச் சுமாராகச் செயல்பட்டாலும், வருடத்திற்கு இரண்டு முறைக்கும் குறைவாகவே சந்திப்புக் கூட்டங்களை நடத்தியிருக்கிறது. இந்தியா முழுதும் இதுவரை 6 சதவீதத்திற்கும் குறைவான திருநர் மக்கள்தான் அடையாள அட்டை பெற்றிருக்கிறார்கள் (தமிழ்நாட்டில் இதுவரை 10,637 அடையாள அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது). இந்தத் தகவல் அறிக்கையின் மூலம் நல வாரியத்தின் செயல்படும் திறன் பெரும் கேள்விக்குள்ளாகிறது. இப்படிப்பட்ட நல வாரியத்தின் மேற்பார்வையில் இந்தக் கொள்கை அறிக்கை சரியாகச் செயல்படுத்தப்படும் என்று எப்படி நம்புவது என்ற கேள்வியும் வருகிறது. இங்கே மறுபடியும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தி, திருநங்கை நல வாரியத்தில் திருநம்பிகள் புறக்கணிக்கப்படுவதையும், நல வாரியத்தின் அதிகாரம் பெரிதாகச் செயல்படும் திறன் கொண்டதாக இல்லை என்பதையும் கடந்த காலத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

இறுதியாக

தனிப்பட்ட முறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த, திருநர் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான திருச்சி சிவாவின் நெகிழ்ச்சியான இறுதி உரையை மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டுதான் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். திருநர் மக்களுக்காக ஒலித்த மிக முக்கியக் குரல் அது. திராவிட, பெரியாரிய கோட்பாடுகளின் அடிப்படையான மனித நேயத்தைப் பிரதிபலித்த அந்தக் கொள்கை உறுதி இன்று சருக்கியிருப்பது பெரும் ஏமாற்றமாகவும், வருத்தமளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

இறுதியாக இந்த அறிக்கையை வாசித்ததில் எனக்கு எழுந்த ஓர் ஊகத்தையும், ஒரு வேண்டுகோளையும் முன்வைத்து நிறைவு செய்ய முயற்சிக்கிறேன். ஒன்று, இந்த அறிக்கையின் போதாமைக்கும், தவறான புரிதலுக்கும் காரணம் தமிழ்நாடு அரசில் பால்புதுமையினர், திருநர் சார்ந்த நிபுணத்துவம் இல்லை என்பதுதான். துறைசார் வல்லுநர்களை அரசு பணியமர்த்தாமல், என்.ஜி.ஓக்களையும் சமூக ஆர்வலர்களையும் நம்பியிருப்பதனால் தொலைநோக்குப் பார்வை இருந்தாலும் அதைச் செயல் திட்டமாக வடிவமைப்பதில் பெரும் சுணக்கமும் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாவது, கலைஞர் ‘திருநங்கை’ என்று பெயர் சூட்டியதும், நல வாரியம் அமைத்ததும் அக்காலகட்டத்தில் பெரும் புரட்சிகர திட்டம்தான். ஆனால், இந்த இருபது ஆண்டுகளில் பால்புதுமையினர் பற்றிய புரிதலும், திருநர் மக்கள் சார்ந்த அறிவியலும், அரசியல் – சமூக ரீதியான கருத்துருவாக்கங்களும் பல பரிமாணங்களை எட்டியிருக்கின்றன. தமிழ்நாடு அரசும், ஒருவகையில் பெரும்பான்மை தமிழ்ச் சமூகமும் ஏனோ இரண்டாயிரங்களிலேயே தேங்கிவிட்டது வருத்தமளிக்கிறது. நாம் கடந்த கால பெருமிதங்களை மட்டுமே மெச்சிக்கொண்டிருந்தால் நிகழ்கால அறிவியல், நவீனத்துவங்களை இழக்கும் அபாயங்களுக்குத் தள்ளப்படுவோம். நவீனத்துவம் பழைமைவாதமாகப் புறையோடிப் போவதும், புது கருத்துகள் அதை மாற்றி அமைப்பதும் இயற்கை விதி, இயங்கியல் பொருள்முதல்வாதம். எனவே, காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பிதுக்கொள்ளும் தேவை எல்லோருக்கும் இருக்கிறதென்பதை தமிழ்நாடு அரசும் தமிழ்ச் சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்புகள்

  1. https://thewire.in/rights/the-reality-of-indias-transgender-welfare-boards-what-an-rti-investigation-reveals
  2. https://www.reuters.com/world/india/indian-court-calls-sweeping-reforms-respect-lgbt-rights-2021-06-07/
  3. https://www.bbc.com/news/world-asia-57606847
  4. https://www.historyworkshop.org.uk/queer-history/registers-of-eunuchs-in-colonial-india/
  5. https://en.themooknayak.com/lgbtq-news/when-ambedkar-quoted-havelock-ellis-works-on-homosexuality-as-natural-in-1930s-court-proceedings
  6. https://clpr.org.in/wp-content/uploads/2019/06/Section-377-and-Beyond.pdf
  7. https://www.undp.org/india/publications/case-tamil-nadu-transgender-welfare-board-insights-developing-practical-models-social-protection-programmes-transgender-people
  8. https://www.humandignitytrust.org/news/indian-supreme-court-overturns-landmark-decriminalisation-ruling/
  9. https://clpr.org.in/wp-content/uploads/2024/12/Accessible_Transgender-Rights-Resource-Book-3.pdf
  10. https://www.changeincontent.com/tamil-nadu-state-policy-for-transgender-persons/
  11. https://www.thenewsminute.com/premium/for-trans-men-in-india-a-doctor-visit-is-a-minefield-of-humiliation-denial-and-trauma
  12. https://www.hansrajcollege.ac.in/hCPanel/uploads/elearning/elearning_document/Neither_Man_nor_Woman.pdf

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger