நள்ளிரவில் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி
பேனா மரித்துப் போனது
பழம்பேனாக்கள் அடர்த்தியாய்க் கசிய
குழவிகள் சுவரில் முட்டிக்கொண்டு கிறுக்க
மற்றவூர் பேனாக்கள் முனைகளைக் கழற்றி அனுப்பிவைத்தன.
தங்கமுனை கிரீடத்து உள்வட்டம் மிகப் பெரிது.
பேனாக்களின் பேனா உண்மையில் பென்சிலாக இளைத்திருந்தது.
கிரீடம் மலர் வளையமாகப் பாவிக்கப்பட்டது.
அடிக்கடி காணாமல் போகும் பேனாவுக்கென்று
தனியாக ஒரு பெட்டியில்லை.
கிடைத்த இடங்களில் ஒண்டிக்கொண்டிருந்த அதற்கென்றே
கட்டக் கடைசியில் செய்யப்பட்டது
புத்தம் புதியதான மரப்பெட்டி.
குப்பைக்கிடையே கண்டெடுத்து
கண்ணில் ஒற்றிக்கொள்ளப்படும் கன்னிப்பேனா
பெற்றெடுத்த பொன்னெழுத்தே தேவசிசுவே
தாயை இழந்து தவிப்பாயே என் தங்கமே.
(ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு)