தமிழகத்தில் கோயில் உருவாக்கம், தெய்வங்களின் உருவத்தோற்றம் என்பது முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. இனக்குழுச் சமூக வாழ்க்கை முறையில் முன்னோர்களின் சமாதிகள், போரில் சிறந்து விளங்கிய வீரர்கள் – மன்னர்களின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் ஆகியவை மக்களால் வழிபடப்பட்டு நாட்டுப்புறத் தெய்வங்களாகவும் கோயில்களாகவும் வளர்ந்துவந்துள்ளன. இத்தகைய நாட்டார் வழிபாட்டு மரபுமிக்க தமிழகத்தில் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே சைவ, வைணவ பெருங்கோயில்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்டன. போலவே, இறந்துபட்ட மன்னர்களின் நினைவாகக் கட்டப்பட்ட பள்ளிப்படைக் கோயில்கள் பலவும் பிற்காலத்தில் நிறுவப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மன்னர்களால் வழிபட்டுவந்த நிலைமாறி, இறந்த மன்னர்களை வழிபடும் சூழல் தமிழகத்தில் வளரத் தொடங்கியது. பெருங்கோயில்களின் உருவாக்கத்தில் நாட்டுப்புறத் தெய்வங்களையும் முன்னோர் வழிபாட்டு மரபுகளையும் உள்வாங்கி புனைவுகள் மிகுந்த தலவரலாறுகளும் புராணங்களும் பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்டதோடு, புராணங்களுக்கேற்ப கோயில்களும் கோயில் அமைப்பிற்கேற்ப புராணங்களும் உருவாக்கப்பட்டன. சிறு தெய்வக் கோயில்கள் பெருங்கோயில்களாக உருவெடுத்த பின்பு பழமரபின் அடையாளம் திரிக்கப்பட்டும் சமஸ்கிருத புராண வடிவங்களுடன் இணைக்கப்பட்டும் பூர்வீக அடையாளம் அழிக்கப்பட்டது. மேலும், காலங்காலமாகப் பூசகர்களாக இருந்த பூர்வகுடிகளும் வழிபாட்டு மொழியான தமிழும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால் வெளியேற்றப்பட்டனர். சைவ, வைணவம் இணைந்த இந்து மத ஆக்கத்தில் சமண, பவுத்தக் கோயில்களில் மட்டுமன்றிப் பள்ளிப்படைக் கோயில்களிலும் சிவலிங்கங்கள் பொருத்தப்பட்டு சைவக் கோயில்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதனடிப்படையில் தமிழகத்து சைவ, வைணவக் கோயில்களின் தலவரலாறுகளும் புராணங்களும் எதார்த்தத்திற்கு எதிராகப் பழமரபை மறைத்தாலும் அதன் அடையாளங்கள் மிதமிஞ்சியே காணப்படுகின்றன. இவ்வகையில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் மீதான பூர்வகுடிகளின் அடையாளத்தையும் பண்பாட்டு அடையாள அரசியல் மாற்றத்தையும் விளக்கவே இக்கட்டுரை முற்படுகிறது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then