‘இந்தப் பய செஞ்சி முடிச்சிருவானா? எனக்கு என்னவோ இவன நம்பமுடியல.’ வேற யாரையாவது பாப்போம். இவன் வாரன்னும் சொல்ல மாட்டங்கான், வரலன்னும் சொல்ல மாட்டங்கான். காலரைத் தூக்கிவிட்டபடி கழுத்தைச் சொறிந்துகொண்டே பேசினான் தங்கவேலு. கழுத்தில் வடம், வடமாகச் சுற்றப்பட்டிருக்கும் தங்கச்செயினை இழுத்துவிட்டுக் கொண்டான். “என்னா வெயிலு அடிக்கி… ச்சை… உள்ள போயி அவன்கிட்ட கட்டன் ரைட்டா கேட்டுட்டு வா. முடியுமா, முடியாதான்னுட்டு. இல்லன்னா நம்மள்ள யாராவதுதான் செய்யணும்.” “என்னது நம்ம செய்யணுமா, ஒனக்கு அறிவு கிறிவு இருக்கா, இல்லையா? நாம கொன்னுட்டு நிம்மதியா ராத்திரி தூங்க முடியுமா, சும்மா லூசுமாதி பேசுத.” தங்கவேலுவைப் பார்த்து முறைத்தான் தம்பி முத்துவேல். “பின்ன என்னல, எத்தன நாளைக்கு இவன நம்பிகிட்டுக் கெடக்கது. இப்பிடியே இழுத்துக்கிட்டே போனா சரியா இருக்காது. உசுரு இன்னிக்கே போவணும்னா இன்னிக்கே போவணும். இந்தச் சின்னப் பயல நம்பிகிட்டுக் கெடந்தா நாரத்தான் செய்யணும். செரயா இருக்குலா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள அந்தப் பய செஞ்சி முடிப்பானான்னு கேளு, இல்லனா நான் வேற யாரையாவது பாக்கப்போறேன்.”
முத்துவேல் மருத்துவமனையின் உள்ளேயிருக்கும் இரத்தப் பரிசோதனை நிலையத்து வாசலில் வந்து நின்று உள்ளே பார்த்தான். “மகேசே… ஏ மகேசே…” இரத்தப் பரிசோதனை நிலையத்துக்குள் கைகளில் சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டிருந்த மகேசு வெளியே எட்டிப் பார்த்தான். மீனுக்குக் காத்திருக்கும் கொக்கு மாதிரி ஒத்தக்காலில் நின்றுகொண்டிருந்தார்கள் தங்கவேலும் முத்துவேலும். மகேசு அவர்களைப் பார்த்து, “வாரம்ணே நில்லுங்க” எனக் கையசைத்தான். மகேசு அந்த மருத்துவமனையில் இருக்கும் இரத்தப்பரிசோதனை நிலையத்தில் வேலை செய்யும் இளைஞன். இரத்தப் பரிசோதனை நிலையத்திற்கு வரும் நோயாளிகளிடம் இரத்தம் எடுப்பதோடு அப்பப்போ நீரழிவு நோயாளிகளுக்கு ஊசியும் போடுவான்.
சில சமயம் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று இரத்த மாதிரிகளை எடுத்துவரவும் செய்வான். ரோட்டில் விபத்து நடந்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதலுதவி செய்வான். இரத்தச் சகதியில் கிடந்தாலும் எந்தவித முகச்சுழிப்புமில்லாமலும் அடிபட்டுக் கிடப்பவர்களை அப்படியே கைகளில் தூக்கிச் செல்வான். மனித இரத்தம் அவனுக்குப் பழகிப்போயிருந்தது. மருத்துவமனையில் பணிபுரிவதால் அவன் மனித மரணங்கள், பிணங்கள் ஆகியவற்றின் மீதான ஒவ்வாமை இல்லாதவனாக மாறிப் போயிருந்தான். சண்டைகளில் வெட்டு, குத்தாகி மருத்துவமனைக்கு வருகிறவர்கள் பதற்றமான சூழலில் இருக்கும்போது…. ‘வயித்தக் குத்தி கொடஞ்சிருக்கானுவ, கத்திய வயித்துக்குள்ள உட்டு மாவாட்டிருப்பானுவ போல’ என்று சிரித்துக் கொண்டே உறவினர்களிடம் சொல்வான். விபத்தில் அடிபட்டுக் கிடப்பவரின் உடலைத் தொடாமலேயே… “ஏ… ஆளு அவுட்டு, அந்தா ஒன்னுக்குப் போயிருக்கு, வெளிக்கியும் போயிருக்குல்லா.” என்று உடலைப் பார்த்தே சொல்வான். உயிர் உடலைவிட்டுப் பிரியும் நேரத்தில் உடலிலிருந்து மலமும் சிறுநீறும் வெளியேறும். விபத்து நடக்கும் இடத்தில் இது மயக்கமா அல்லது சாவா என்பதை முதலில் தெரிந்துகொள்வது அவனது வழக்கம். மனித இரத்தத்தோடு பழகிப்போன ஆளாக இருப்பதால் ஊரில் எதாவது கொலை விழுந்தாலும் அதிர்ச்சியாக மாட்டான். “செத்தது யாராம், ஓ… அவனா அவன் சாவ வேண்டிய ஆளுதான்” என்று இயல்பாகச் சிரிப்பான். ஒடம்பு முழுக்க நாப்பது வெட்டுப்பா என்றால்… “ஓணான் மாதிரி இருக்குற பயல கொல்ல நாப்பது வெட்டு வெட்டணுமாங்கும். ஓங்கி நெஞ்சில மிதிச்சாலே செத்துருப்பான். இனி நாளைக்கு போட்டோ போட்டு நோட்டீஸ் அடிச்சி ஒட்டுவானுவ. ‘வீரன் மறைந்தாலும் அவன் வீரம் மறையாது’, ‘புதைக்கவில்லை விதைத்திருக்கிறோம்’னு ஊர் முழுக்க ஒட்டிகிட்டுத் திரிவானுவ. இப்பிடித்தான் ஊருக்குள்ள பல ஓணான்கள சண்டியராக்கி உட்டுட்டுத் திரியுதானுவ கிருக்குக்கூயானுவ” என்று கண்டுக்காமல் சென்றுவிடுவான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then